Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, April 9, 2020

PRATHI POOVANKOZHI (2019) – MALAYALAM – சண்டகோழி

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 156.

மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பேசும்கதை. ஒரு ஆறுதல் பாதிக்கபட்ட பெண்ணே அதற்காக தீர்வை நோக்கி செல்வது. இந்தியன் படத்தில் உயிருக்கு போராடும் தன் மகளை காபாற்ற லஞ்சம் தரமறுக்கும் அப்பெண்ணின் தந்தையின் மீது நமக்கு பெரும் கோபம் இருக்கும். அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கான தன்மை. அதுதான் அப்படத்திற்கான வெற்றியும்கூட. அப்படியான ஒரு கோபமோ அல்லது சலிப்போ  பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் மீது நம்மில் சிலருக்கும் வர வாய்ப்புள்ளது. இந்தியன் சேனாதிபதி மீது நமக்கு கோவம் வர சமுதாயத்தை காரணம் சொல்லி நாம் தப்பிகொள்ள வழியுண்டு. ஒருவேளை இப்படத்தில் மாதுரி பாத்திரத்தின் மேல் கோபமோ சலிப்போ உங்களுக்கு ஏற்படுமாயின் தவறு சமுதாயத்தின் மீதல்ல நிச்சயம் உங்களின் மீதே.   


அம்மா மகள் என்ற இருவர் மட்டுமே உள்ள குடும்பம். அருகிலுள்ள சிறுநகரத்தின் ஜவுளிகடைக்கு பணிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகிறாள். ஏற்கனவே வங்கியில் அவர்கள் பூர்வீக நிலத்தின் மீது வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கும் சூழல். ஒரு நாளும் விடுப்பு எடுக்கமுடியாத பணி. இடையில் பெண்களுக்கான துணிமணிகளை தைத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.


இது அந்த கதையின் முக்கிய பாத்திரத்தின் தன்மை மற்றும் அவரின் சூழல் குறித்த தெளிவான முன்கதை ரொம்ப சுருக்கமாக கதையின் துவக்கத்தில் வரும். அதே போன்றே இக்கதையின் வில்லன் பாத்திரத்தின் தன்மையும் ரொம்ப சரியான இடத்தில் சொல்லப்படும். அதை முதல்முறை பார்க்கும் நாமும் நாயகியை போலவே அதிர்ச்சிக்கு செல்வது உறுதி. உடன் பணிபுரியும் தோழி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டே தொலைவில் நாயகி தன்னை நோக்கிவருவதை பார்த்து இணைப்பை துண்டிக்க முயல்வார். இதுவே அவரின் குணநலம்.
இப்படியான சூழலில் பேருந்தில் ஒருவன் அவரிடம் தவறாக நடந்து கொள்கிறான். சட்டென சுதாரிப்பதற்குள் மாயமாகும் அவனை தேடிசென்று பழிதீர்க்கும் கதை. கதை முழுக்கவே பயணப்படும் நாயகி மற்றும் அவரது தோழி. இருவருமே அடிப்படையில் இருவேறு குணாதிசியம் கொண்டவர்கள். அவரது தோழி, உடன் பணிபுரியும் பெண்கள் முதல் அவளது அம்மா மற்றும் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிளை வரை அனைவரும் கூறும் ஒரே பதில். இதெல்லாம் ஒரு விசயமே அல்ல என்பதாகவே இருக்கும்.
இவர்களின் யாரின் சமாதானத்திற்கும் இவரிடமிருந்து எந்த பதிலும் வராது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் தொனியில் பதிலளிக்கும் தனது 
அம்மாவிடம் மட்டும் இப்படி சொல்லுவார். என் உடலின் மீது யாரின் கைபடவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என. ரொம்ப தீர்க்கமான ஒரு காட்சி. இதற்காக ஏன் இவ இவளோ அல்லல்பட்றானு நினைக்கும் ஒரு சிலரையும் இவளின் பக்கம் சட்டென இழுத்துகொள்ளும் காட்சியது.


நகரில் உள்ள ஜவுளிகடையில் பணிபுரிவதால் தினம் ஒரு சீருடை. அதில் மஞ்சு வாரியர் அவ்ளோ அழகு. குறிப்பா லாங் ஷாட்ஸ்ல. வெறும் ஒன்றரை மணிநேரம்தான் முழுபடமும் என்பது படத்தோட பெரிய ப்ளஸ். அதனாலே படத்தோட காட்சிகள் அனைத்தும் கதையை நோக்கி மட்டுமே போகுது. கொஞ்சம் விறுவிறுப்பான கதை விரும்பிகள் மட்டுமில்லாமல் பெரும்பாலோரை கவரும் படம்.  குறிப்பாக பெண்கள் தங்களை இந்த கதையுடன் இணைத்து கொள்ள நிறைய காரணங்கள் உள்ள படைப்பிது. 

4 comments:

  1. அழகான படம் போலவே...

    ReplyDelete
    Replies
    1. சின்ன கன்டென்ட்தான் தலைவா... ஓரளவு அல்லவே முயற்சி பண்ணிருக்காங்க.

      Delete
  2. தவறு சமுதாயத்தின் மீது அல்ல நம் மீதே...

    ReplyDelete

Search This Blog