Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Showing posts with label Malayalam. Show all posts
Showing posts with label Malayalam. Show all posts

Tuesday, June 23, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 167.

நகைச்சுவை படங்களை போலவே இந்த காதல் கதைகளை மையமாக கொண்ட கதைகளிலும் பெரும் சிக்கல், அவை வேறு படங்களையோ, அல்லது ஏதேனும் மற்ற படங்களின் ஒரு காட்சிகளையோ நினைவுபடுத்தாமல் இருப்பது. அதும் சமீபமாக பெரும்பாலோர் தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி படங்களை பார்க்கும் இந்த காலகட்டத்தில் வேறு எந்த படங்களின் சாயல் இல்லாத முழு நீள காதல் படங்கள் பார்க்கும் வாய்ப்பு வெகுவாக குறைவு.


இப்படியான எந்த சிக்கல் திணறல் இல்லாத காட்சி அமைப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில். வேறு எந்த படங்களின் சாயல் துளியும் இல்லாத  ஆனால் வழக்கமான கதைகளத்தில் மீண்டும் கேரளத்தில் இருந்து ஒரு நல்ல சினிமா.


அதே பார்க்காமலே தொலைபேசியில் காதல். அதே ஒருவர் மற்றொருவரின் தோற்றம் பற்றிய சிந்தனை. சதா அவர்களின் நினைவில் மிதப்பது. அதே நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை கைவிடுவதில்லை போன்ற வசனங்கள். அதே இறுதியாக சந்திப்பு. எல்லாமும் அதே. ஆனால் எங்கிருந்து வந்தது இந்த ஈர்ப்பு, ஒரு வசீகரம் இந்த படத்தின்மேல்.


“ANNA BEN” அதே கும்பளாங்கி நைட்ஸ் சுருட்ட தலைச்சி. இதில் முதன்மையான பாத்திரத்தில் வரும் மற்ற இருவருக்கும் கூட சற்று சிந்தித்தால் மாற்று நடிகர்கள் தோன்றலாம். ஆனால் Annaவுக்கு மாற்றாக நாம் வேறு எவரையும் சிந்திக்கவே தற்போது வரை முடியாததே, அவருக்கு கிடைத்த முதல் வெற்றி.


அடுத்து துணை பாத்திரங்கள் ஒரு கதையை உண்மைத்தன்மை பெற எத்தனை முக்கியம் என்பது. குறிப்பாக Annaவின் குடும்பம் மற்றும் அவரது தோழி. இவரை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வரும் வேளையில். அவரது அம்மா சமையல்கட்டில் மும்மரமாக இருக்க. அவரின் அப்பா பாத்திரம் மனைவியிடம் இடுப்பில் இழுத்து சொறுகிருக்கும் நைட்டியை -இறக்கிவிட சொல்லும் காட்சி.

அவன் ஒரு ஆட்டோ ஓட்டுனர். ஒருமுறை இவளிடம் பேசியவாறே மருத்துவமனையில் இறங்கும் பெண்மணியிடம் பணம் வேறு ஒரு சமயம் வாங்கி கொள்வதாக சொன்னதும், இவளது முகத்தில் சட்டென தோன்றி மறையும் பிரகாசம். தான் ஒரு நல்லவனைதான் தேர்ந்தெடுத்து இருப்பதாக ஒரு பெருமையும் அதனுள் இருக்கும் இவை சில சில வினாடிகள் வந்து செல்லும் காட்சிகள்தான். ஆனால் படம் நெடுக இப்படியான காட்சிகள்தான் நம்மை படத்தின் ஊடே பயணப்பட வைப்பது.


அவனின் சகோதரிகளிடம் பேசியபின்பே முதல் முறையாக அவளே அவனுக்கு கால் செய்வது. அதன்பின்னே அவனை நேரில் பார்க்க விரும்புவதாகவும் சொல்வது. அவர்கள் வீட்டிலிருந்து டவுனுக்கு செல்லும் பாதையை வெறும் அழகுக்காக வெவ்வேறு இடங்களை பயன்படுத்தாமல், அந்த ஒரு வழியே காட்சிபடுத்தி இருப்பது. இப்படியான கவனசிதறலை கூடுமானவரை தவிர்த்து இருப்பதும் இந்த கதையின் மீதான சூவாரசியத்திற்க்கு காரணம்.


குறிப்பாக ஆரம்ப காட்சிகளில் கடற்கரையை பற்றிய வசனம் ஒன்றும், கிட்டத்தட்ட படத்தின் பாதிக்குமேல் ஒரு இடத்திலும் வரும். யாரும் எதிர்பாரா இறுதியில் அதை ANNA கேட்கும்காட்சி அதுவரை நம்மையும் அழுத்தியிருந்த அந்த பாரம் குறைந்து சகஜநிலைக்கு அவளுடனே செல்வோம். நெட்டிவிட்டி அழகாக்குவது துணை பாத்திரங்களுடே லோகேஷ்ன்ஸ். .


JIMSHI KHALID இவர்தான் மாயநதி, அனுராக கரிக்கின் வெள்ளம் படங்கள் பண்ணவர். இந்த கதையை சூவாரசியமா நம்மள பாக்கவெச்சதுல ரொம்ப முக்கிய பங்கு இவருது. அதும் படத்தோட முடிவுல கடைசி ஷாட். படத்தில் அதே இடம் இதற்க்கு முன் சிலமுறை வரும். ஆனால் இறுதியாக அந்த இடத்தோட பிரமாண்டத்தை ரொம்ப எளிமையா ஒரு கவிதைமாறி காட்சிபடுத்தி இருப்பார். அதான் இந்த படத்தோட கதையும் கூட.


படம் வெறும் காதல் மட்டுமில்லாம இரண்டாம் பாதி முழுக்க நம்ம -இதயதுடிப்ப எகிறவெச்சிடும். NETFLIXல் காணகிடைக்கிறது.    




Saturday, April 18, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 159.


Crime Thriller கதைகளில் என்ன இருக்கவேண்டும்?.. தொடர் கொலைகள் நடக்க வேண்டும். பொதுவாக அவை ஏதேனும் ஒரு தொடர்போடு இருக்கவேண்டும். கூடுமானவரை கொலைகள் அல்லது அது சம்பந்தமான கடத்தல் இரவில்மட்டுமே நடக்கவேண்டும். இறப்பவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளானதாக உடற்கூறு ஆய்வு நடத்தும் மருத்துவர். அந்த கொலைவழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் குறைந்தது ஒரு நிமிடமேனும் விவரிக்க வேண்டும்.


அந்த அதிகாரிக்கு நெருக்கமான நபர்கள் மீது கொலைமுயற்சி நிகழ்த்தபட வேண்டும். இந்த டெம்ப்ளட்க்கு உள்ள வராத சமீபத்திய நல்ல கிரைம் படங்கள் ஏதும் இருக்க வாய்பிருக்காது. இந்த படமும்கூட இந்த Formulaக்கு உள்ளவே வந்திருக்கு. ஆனா இந்த வருசத்தோட தி பெஸ்ட் படங்கள்ல முதல் ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இது இருக்கும்.

 
புதுவகையான ஒரு முயற்சி எந்தளவு ஒரு கடினமோ. அதை காட்டிலும் பெரும் தலைவலி இப்படியான வழக்கமான Formula உள்ளவே கதை, அதையும் நாம் ரசிக்கும்படியாகவே அமைப்பது. அதே தொடர்கொலைகள். இறந்தவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. இரவு நேரத்தில் மட்டுமே நடப்பது. கொடூரமான முறையில் கொல்லபடுவது. இப்படி எல்லாமும் அதே வழக்கமான விதிகளுக்குள்ளவே பயணபட்டாலும். தனித்து தெரிவது அதன் உருவாக்கத்தில்.
முதல்ல ஒரு போலீஸ் அதிகாரி கடத்தி கொல்லப்படும்வரை இந்த கதையும் ரொம்ப இயல்பாகவே போகும். அந்த கொலைக்கு பின் முடுக்கிவிடப்படும் அத்துறையின் அதிகாரிகளில் இருந்தே அடுத்தடுத்த அதிகாரிகளை கடத்தி, அதேமுறையில் கொல்லபடுவதில் நமக்கு தொடங்கும் பதட்டம், படத்தோட கடைசி ஷாட்வரை கொண்டுபோன மிரட்டல் உருவாக்கல். அதிலும் சின்ன சின்ன யூகங்களை வைத்து ஒருகட்டத்தில் இன்னும் ஒரு அதிகாரி கடத்த கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காட்சி. நம்ம எல்லோரும் மிரண்டு போறமாறியான ஒரு இடம்.


ஏன்னா அதுவரை விசாரணை ஒரு யூகமாதான் போகும். குறிப்பிட்டு எந்த பயனுள்ள சின்ன க்ளுகூட அவங்களுக்கு இருக்காது. என்ன பண்றதுன்னு அங்க மொத்த அதிகாரிங்களும் நிற்கும் அதே சூழ்நிலைதான் பார்வையாளர்கள் நமக்கும் இருக்கும். காட்சியோடு ஒன்றி இதுபோல படபடப்பை உணர்ந்தது சமீபமாக இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் கடத்தப்படும் முன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கபடும். இரண்டாவது அதிகாரி கடத்தல் முதல் இந்த இடங்கள் அனைத்தும் நமக்கு பெரும் கிலியை ஏற்படுத்தும். இதேவகையில் கிட்டத்தட்ட முழுகதையிலும் நம்மை பதட்டபடவைக்க நெறைய விஷயங்கள் பாத்து பாத்து பண்ணிருக்காங்க.


இறுதிவரைக்கும் நன்றாகவே கொண்டுசென்று கடைசிகட்டத்தில் நெறைய சொதப்பிய படங்கள் உண்டு. அனால் இறுதியில் கொலைக்கான காரணகர்த்தாவும் அதற்கான காரணங்கள்வரை விரியும் இறுதிபகுதி வரை சரியான நேர்த்தி. நடந்த சம்பவங்களும் ஏற்றுகொள்ள கூடிய திரைக்கதை. இந்த கதையை துவக்கி வைக்கும் பாத்திரம். அவரின் யூகத்தை கொண்டே விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும். அந்த character இந்த கதைக்குள்ள கொண்டுவந்தது செம்ம ஐடியா. கூடுமானவரை இரவில் பார்க்கவும். SUN NXT ல் உள்ளது.

Wednesday, April 15, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 158.

நம்ம இதயம் முரளி முதல்முறை ஹீராவ பாக்கும்போதே காதலை சொல்லி அவங்களும் அதை ஏற்று இருந்தா என்ன நடந்திருக்கும். அடுத்த 5 வருசத்துல அவங்க மெடிக்கல் முடிச்சி இருப்பாங்க. இல்ல அவங்க அக்காவை போலவே இவங்களும் தற்கொலை பண்ணிருப்பாங்காளா? அதேபோல இந்த படத்தின் முக்கிய பாத்திரமான நாயகிக்கும் ஒரு காதலன் இருக்கான். தான் இப்படி ஆகணும்ங்கற ஆசையோட வளரும் ஒரு சராசரி பெண். தன் காதலால, இல்லல்ல.. காதலனால, அதுமில்ல.. என்றோ தன்னை காதலித்தவனால். தன்னின் அனைத்தும் இழந்து நிற்கும் கதை.


இவங்களை புரியாத புதிர் ரகுவரன், கல்கி பிரகாஷ்ராஜ் கூடலாம் ஒப்பிடவே முடியாது. ஒருமாறி தாழ்வு மனப்பான்மைல ரொம்ப உயர்வுல இருக்கறவங்க. அவங்களால தனக்கு சொந்தம்னு நினைக்கும் காதலன்/ காதலி அவங்களுக்கு கீழ இருக்கும் வரைக்கும்தான் இந்த ரகுவரன், பிரகாஷ்ராஜ்ங்கிற அளவிலே இருப்பாங்க. அவர்களை தாண்டி, அவர்களின் துணையின்றி அடுத்த நிலைக்கோ போககூட வேணாம். அதுக்கான ஒரு முயற்சியில் இருந்தாலே அந்த வில்லன்களின் நிலையை சாதாரணமாக கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் சராசரியில் பெரும்பான்மை ஆண்மகன்கள்.


தன்னுடைய 14 வயதில் மொத்த பள்ளியும் இவளை ஏளனமாக பார்க்ககூடிய சூழல். அந்த சந்தர்பத்தில் அவன் ஒருவன்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாக, அவனை பற்றிய பேச்சு வருகையில் தன்தந்தையிடம் சொல்கிறாள். அதாவது அவன் எப்பொழுதும் இவனின் ஆறுதலில் மட்டுமே அவள் நிம்மதிகொள்பவளாகவே இருக்கவேண்டும்.


அதாலே இவள் கல்லூரி ஆண்டுவிழாவில் நடனம் ஆடும்போதோ, அவளின் லட்சியமான PILOT TRAINING க்காக டெல்லி செல்லும் போதோ. அதை அவனால் இந்த வகையிலும் ஏற்றுகொள்ளவோ, ஏதேனும் சால்ஜாப்பு காரணங்களை சொல்லி தன்மனதை சாந்தபடுத்தி கொள்ளவோ முடிவதில்லை. அதாலே அவளை ஆசிட் வீசி உருகுலைத்த பின்னும். அதிலிருந்து அவள் மீண்டு தன்னை அடுத்த கட்டத்தில் நிலைநிறுத்தி கொண்ட சூழலில். மீண்டும் அதை கெடுத்து குட்டிசுவராக்குவான். தொடக்கம் முதல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்துவந்தாலே, இவனின் ஒவ்வொரு செய்கையும் துவக்கம் முதல் நாம் சராசியாக கடந்து செல்லும் நிலையிலே இருக்கும்.
காரணம் இன்றும் நம்மிடையே இப்படியான நபர்கள் சகஜமாகவே இருந்துகொண்டே இருப்பதுதான். இவன் கொஞ்சம் கட்டுப்பாடு இழந்து ஆசிட் வீச்சுவரை சென்றதால் குற்றவாளி என எளிதாக அடையாளபடுத்திட்டோம். அந்த சூழ்நிலையில் கொஞ்சம் கட்டுபாட்டோட இருந்ததால நம்மில் யாரும் எளிதாக அடையாளபடுத்தபடாம பொதுஜனங்களோட இருந்து அவனை குற்றம் சொல்லிட்டு இருக்கோம் அவ்வளவே. இந்த கதையோட போக்கை ஒவ்வொரு முறை மாற்றி செல்வது இவனோட பாத்திரம் மட்டுமே. அதாலே அந்த ஒரு பாத்திரதன்மை குறித்தே சொல்ல வேண்டியதாயிற்று.


இந்த கதை வலுவா துவக்கம்முதல் சொல்லவந்த இரண்டு விஷயங்கள். அந்த பொண்ணு pilot ஆக ஆசைபட்றதும். அது அவளோட காதலனால எப்படி சீரழிஞ்சி போகுது அப்படிங்கறது மட்டும்தான். இந்த ரெண்டு விசயத்தையும் அதுக்கான காரணங்களோட ரொம்ப தெளிவா கதையோட போக்குலயே சொன்னதுதான். இந்தபடம் முழுசா மொத்த பேருக்கும் பிடிச்சிபோக ரொம்ப பெரிய காரணம். அடுத்து இந்த கதைக்கு இவங்க தேர்ந்தெடுத்த பாத்திரங்கள். அவங்க ஒரே காட்சில வரவங்ககூட கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறத மட்டும்தான் பண்ணிருக்காங்க.



குறிப்பா மொத்த கதைக்கும் அச்சாணி நாயகி பாத்திரமேற்ற பார்வதி. குட்டி குட்டி சீன்ல வசனமே இல்லாம அவங்க மனநிலையை வெறும் கண்ணசைவில், முகபாவத்தில், உடல்மொழியில் போற போக்குல சொல்லிட்டே போறது. அடுத்து அந்தமேக்கப் அது அவங்களுக்கு பொருத்தமா இருக்குனு சொல்றதுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம் இல்லை. அது கொஞ்சம் அவங்க முகத்துக்கு துருத்திகிட்டு இருக்கணும். பார்க்கும் அனைவரும் கொஞ்சமா முகம்சுழிக்கதான் செய்யணும். ஆனா அகோரமா இங்கயும் தெரிஞ்சிடவே கூடாது. அதை படத்தோட கடைசி ஷாட்வரை ரொம்ப கவனமா பாத்து பாத்து பண்ணிருக்காங்க.  பார்வதிக்கு இது இன்னுமொரு படம்னு சொன்னா மட்டுமே போதும். புதுசா அவங்களை பாராட்ட என்ன இருக்கு.

Sunday, April 12, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 157.

கேரளாவில் இருந்து 100+ காவலர்கள் சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில வடமாநிலங்களின் தேர்தல் பணிக்காக அனுப்பபடுகின்றனர். அதற்கான ஆணை பிறபிக்கபட்டு காவலர்கள் தயாராகும் நிமிடங்களில் இருந்து கதை துவங்குகிறது. ஒருபுறம் காவலர்கள் கிட்டத்தட்ட ஒருவார பிரயாணத்திற்கான ஏற்பாடுகளில் இருக்க. மறுபுறம் அவர்கள் எடுத்து செல்ல வேண்டிய உபகரணங்கள் தயார் செய்யும்பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று கிளம்பும்நாள்.


காவலர் வாகனத்தில் ரயில்நிலையம் அனுப்பபட்டு அங்கிருந்து ரயில் மூலம் நான்கு நாள் பிரயாணத்தில் சட்டீஸ்கர் வந்தடைகின்றனர். மேலும் அடுத்தடுத்த மாநில பணிக்கு செல்வோருக்கு விடை கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்புகிறனர். தங்களுக்கு நேரபோகும் ஆபத்தை அறியாமல். இங்கு வந்த அனைவரும் நான்கு மணிநேர காத்திருப்புக்கு பின். அவரவர் தேர்தல்பணி நடக்கும் இடங்களுக்கு அனுப்பபடுகின்றனர். அந்த நான்கு மணிநேரம் தாங்கள் எங்கு பணிக்கு செல்ல போகிறோம் என காத்திருக்கையில் நாயகன் வருகிறார். அதும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல். அங்கு தேர்தல் நெருங்குவதால் எங்கும் உச்சகட்ட பிரச்சார பரபரப்பில் இருக்க. அந்த கூட்டத்தில் ஒருவனது பணத்தை பிக்பாக்கெட் அடித்தவன் யதார்த்தமாக தொலைவில் ஒரு சின்ன மரபெஞ்சில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கும் நாயகனை காண்கிறான்.


மம்மூட்டி மற்றும் மோகன்லால் படங்களில் அவர்களின் அறிமுக காட்சிகளை கொண்டே கூறிவிடலாம் அந்த படங்களின் தரத்தை. எந்த ஆர்பாட்டங்களும் இன்றி இவர்கள் அறிமுகமாகும் இப்படியான படங்கள் நம்மை நிச்சயம் பெரிதும் ஏமாற்றமடைய செய்யாது. இவ்வாறு இவர் மற்றும் இவரின் சீனியர் காவலர் இவர்களின் தலைமையிலின் கீழ் எட்டு நபர்கள் இருவேறு இடங்களுக்கு அனுப்படுகின்றனர். அடுத்து நாம் பார்க்கவிருப்பது நாயகனும் அவர்களின் கீழ் உள்ள காவலர்களும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்த மலை கிராமங்களில் எவ்வாறு இவர்கள் .தேர்தல்பணியை முடித்து திரும்புகின்றனர் என்பதையே.
அந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் வாகனத்தை முன்னால் மெதுவாக செல்லுமாறு அனுப்பிவிட்டு காவலர்களுடன் மம்மூட்டி பின்னால் நடந்துவரும் போது. ஒரு காவலர் இளைஞர் தயங்கியபடி காரணம் கேட்பார். அதற்க்கு நாயகன் இங்கு எங்கே வேண்டுமானாலும் கன்னிவெடி இருக்க வாய்ப்பு உள்ளது என. எந்தவித பெரிய முன்னனுபவங்களும் இல்லாத இந்த காவலர்கள் நமக்கு இவர் பொறுப்பாளராக வாய்த்ததை பெருமையாக நினைத்து கொள்வர். அடுத்துவரும் ஒரு அசாதாரண சூழலில் என்ன செய்வதென இவர்கள் தடுமாறும் சூழலில் இவர் மெளனமாகவே இருக்க.  
  

இதை பொறுத்துகொள்ள இயலாமல் அனைத்து காவலரும் ஒன்று சேர்ந்து இவரை கேள்விகேட்கும் சூழல். இவரின் பதில் இதுவரை எந்த நாயகரும் இந்திய சினிமாவில் குறிப்பாக போலீஸ் பாத்திரமேற்ற எந்த நாயகனும் கண்டிப்பாக சொல்லியிருக்க வாய்ப்பே இல்லாதவை.. என் இத்தனை வருட அனுபவத்தில் ஒரு கொலைகாரனையோ? ஏன்.. ஒரு திருடனை கூட பிடித்தது கிடையாது. எனக்கும் உங்களை போலவே இந்த சூழல் புதிதுதான் என கூறுவார். அதுவரை இவரை நம்பிக்கையாக நினைத்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவர்கள். ஏற்கனவே தங்களுக்கான தோட்டாக்கள், BULLET PROOF JACKETS எதும் இல்லாத சூழலில். வரும் தேர்தல் நாளின் பயங்கரத்தை எதிர்பார்க்க துவங்குவர்.



நல்ல எதிர்பார்ப்பை கொடுக்ககூடிய கதைகளம். படம் துவங்கிய சில நிமிடங்களிலே உண்டான எதிர்பார்ப்பையும் நம்மை பெரிதாக எங்கும் அதிருப்தி அடையசெய்யாமல் பூர்த்தி செய்துள்ளனர். 

Thursday, April 9, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 156.

மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பேசும்கதை. ஒரு ஆறுதல் பாதிக்கபட்ட பெண்ணே அதற்காக தீர்வை நோக்கி செல்வது. இந்தியன் படத்தில் உயிருக்கு போராடும் தன் மகளை காபாற்ற லஞ்சம் தரமறுக்கும் அப்பெண்ணின் தந்தையின் மீது நமக்கு பெரும் கோபம் இருக்கும். அதுதான் அந்த கதாபாத்திரத்திற்கான தன்மை. அதுதான் அப்படத்திற்கான வெற்றியும்கூட. அப்படியான ஒரு கோபமோ அல்லது சலிப்போ  பாதிக்கப்பட்ட இந்த பெண்ணின் மீது நம்மில் சிலருக்கும் வர வாய்ப்புள்ளது. இந்தியன் சேனாதிபதி மீது நமக்கு கோவம் வர சமுதாயத்தை காரணம் சொல்லி நாம் தப்பிகொள்ள வழியுண்டு. ஒருவேளை இப்படத்தில் மாதுரி பாத்திரத்தின் மேல் கோபமோ சலிப்போ உங்களுக்கு ஏற்படுமாயின் தவறு சமுதாயத்தின் மீதல்ல நிச்சயம் உங்களின் மீதே.   


அம்மா மகள் என்ற இருவர் மட்டுமே உள்ள குடும்பம். அருகிலுள்ள சிறுநகரத்தின் ஜவுளிகடைக்கு பணிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகிறாள். ஏற்கனவே வங்கியில் அவர்கள் பூர்வீக நிலத்தின் மீது வாங்கிய கடன் கழுத்தை நெரிக்கும் சூழல். ஒரு நாளும் விடுப்பு எடுக்கமுடியாத பணி. இடையில் பெண்களுக்கான துணிமணிகளை தைத்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.


இது அந்த கதையின் முக்கிய பாத்திரத்தின் தன்மை மற்றும் அவரின் சூழல் குறித்த தெளிவான முன்கதை ரொம்ப சுருக்கமாக கதையின் துவக்கத்தில் வரும். அதே போன்றே இக்கதையின் வில்லன் பாத்திரத்தின் தன்மையும் ரொம்ப சரியான இடத்தில் சொல்லப்படும். அதை முதல்முறை பார்க்கும் நாமும் நாயகியை போலவே அதிர்ச்சிக்கு செல்வது உறுதி. உடன் பணிபுரியும் தோழி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டே தொலைவில் நாயகி தன்னை நோக்கிவருவதை பார்த்து இணைப்பை துண்டிக்க முயல்வார். இதுவே அவரின் குணநலம்.
இப்படியான சூழலில் பேருந்தில் ஒருவன் அவரிடம் தவறாக நடந்து கொள்கிறான். சட்டென சுதாரிப்பதற்குள் மாயமாகும் அவனை தேடிசென்று பழிதீர்க்கும் கதை. கதை முழுக்கவே பயணப்படும் நாயகி மற்றும் அவரது தோழி. இருவருமே அடிப்படையில் இருவேறு குணாதிசியம் கொண்டவர்கள். அவரது தோழி, உடன் பணிபுரியும் பெண்கள் முதல் அவளது அம்மா மற்றும் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிளை வரை அனைவரும் கூறும் ஒரே பதில். இதெல்லாம் ஒரு விசயமே அல்ல என்பதாகவே இருக்கும்.
இவர்களின் யாரின் சமாதானத்திற்கும் இவரிடமிருந்து எந்த பதிலும் வராது. இதை பெரிதுபடுத்த வேண்டாம் தொனியில் பதிலளிக்கும் தனது 
அம்மாவிடம் மட்டும் இப்படி சொல்லுவார். என் உடலின் மீது யாரின் கைபடவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என. ரொம்ப தீர்க்கமான ஒரு காட்சி. இதற்காக ஏன் இவ இவளோ அல்லல்பட்றானு நினைக்கும் ஒரு சிலரையும் இவளின் பக்கம் சட்டென இழுத்துகொள்ளும் காட்சியது.


நகரில் உள்ள ஜவுளிகடையில் பணிபுரிவதால் தினம் ஒரு சீருடை. அதில் மஞ்சு வாரியர் அவ்ளோ அழகு. குறிப்பா லாங் ஷாட்ஸ்ல. வெறும் ஒன்றரை மணிநேரம்தான் முழுபடமும் என்பது படத்தோட பெரிய ப்ளஸ். அதனாலே படத்தோட காட்சிகள் அனைத்தும் கதையை நோக்கி மட்டுமே போகுது. கொஞ்சம் விறுவிறுப்பான கதை விரும்பிகள் மட்டுமில்லாமல் பெரும்பாலோரை கவரும் படம்.  குறிப்பாக பெண்கள் தங்களை இந்த கதையுடன் இணைத்து கொள்ள நிறைய காரணங்கள் உள்ள படைப்பிது. 

Wednesday, July 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 130.

ஒரு படத்தை பார்க்க பலகாரணம் உண்டு. நமக்கு பிடித்த நாயகன், நாயகி, இயக்குனர் இப்படி. அப்படியில்லாம ஒருசில படங்களை பார்க்க குறிப்பிட்டு சொல்ல எந்த காரணமும் இருக்காது. இந்த படத்தை போல. முதலில் இதன் தலைப்பு. நைஜீரியாவுக்கும் கேரளாவுக்கும் எப்படி சம்பந்தபடுத்துவார்கள். இதில் நைஜீரியாவிலிருந்து திரும்பிய மலையாளியபத்தி இருக்கும்னா அப்படியில்லாம அந்த ஊர் பையனே போஸ்டர்ஸ்ல இருக்கான். அவன் இங்க வர என்ன காரணமா இருக்கும். ட்ரைலர்ல நைஜீரியாலாம் வருது இவ்ளோ செலவு பண்ற அளவுக்கு பெரிய நட்சத்திரங்களும் யாரும் இல்ல. IMDB ல 8.5 STARS வேற.


கேரளால பெருசா எந்த வருமானமும் இல்லாம சொந்தமா ஒரு FOOTBALL டீம நடத்திட்டு. சுத்து வட்டாரத்துல எங்க போட்டி நடந்தாலும் அதுல கலந்துகிட்டு, எப்பவும் கையுக்கும், வாய்க்கும் சரியா போயிட்டு இருக்கற முக்கிய பாத்திரம். சரியான எந்த வேலையும் இல்லாத பையனுக்கு எப்படி பொண்ணு அமையும்னு வருத்ததுல இருக்கும் அம்மா. இவங்க ரெண்டு பேரோடவும் சுத்தமா ஒட்டாம எப்பவும் ஒதுங்கியே இருக்கும் அப்பா பாத்திரம். இவங்க இல்லாம ரொம்ப முக்கிய பாத்திரத்துல ஒரு நைஜீரியாவ சேந்த பையன். அதும்போக அக்கம்பக்கத்து ஜனங்க. இவங்க மொத்தமும் சேந்து கொடுத்தது நிச்சயம் ஒரு நல்ல சினிமா.


எப்பவும் துணை பாத்திரத்துலயே வந்தாலும் பெரும்பாலும் அதிக பேருக்கு அறிமுகமான சௌபின் ஷாகிர்தான் அந்த FOOTBALL டீம நடத்தும் முக்கிய பாத்திரத்துல வராரு. ரொம்ப சாதரணமா இந்த இயல்பான கதைக்குள்ள இருக்கும் அத்தனை நெளிவு சுளிவுக்குள்ளும் எந்த வித்யாசமும் நமக்கு துளிகூட உறுத்தல் தெரியாம பொருந்தி போறாரு. அவரு மட்டுமில்லாம இதுல துணை பாத்திரங்களா வரும் அத்தனை பெரும் அப்படியே. அதுதான் இவங்க படம் பெரும்பாலும் ரொம்ப இயல்பா தெரிய மிக முக்கிய காரணம்.


நைஜீரியால நல்ல FOOTBALL ப்ளேயரா இருந்து இந்தியா வந்து. இங்க சௌபின் குழுவில் சேர்ந்து விளையாடி வராரு. அவரு நைஜீரியால இருந்து இங்க வந்ததுக்கான காரணமும். சௌபின் ஷாகிர் அவரோட அப்பாவ எங்கயும் கண்டுக்காம போறதுக்கான காரணமும்...                பெருசா எதும் இல்ல கில்லில விஜயோட தங்கச்சி கடைசிவரை அவர்கூட சண்டையே போட்டுட்டு இருக்கும். கடைசியா அவருக்காக அழுது நம்மளயும் கலங்கவைக்கும்ல அப்படியான அதே தாத்தா காலத்து பழைய ட்ரிக்தான். ஆனாலும் ஓடி ஓடி உலக சினிமா பாத்தாலும் நம்மாள இன்னும் மாயாண்டி குடும்பத்தார ஒதுக்க முடியல்ல. அப்படியான வகை கதையை இன்னும் ரொம்ப யதார்த்தமா, எளிமை அழகியலோட கொடுத்து இருக்காங்க.


அந்த நைஜீரியா பையன நம்பித்தான் அந்த டீமோட பொழப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு நாளு அவன் வழுக்கி விழுந்து கால்ல FRACTURE ஆகிடுது. அவன நம்ம டீம் ஓனர் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே கூட்டி வந்திடறார். ஏற்கனவே நிலையான வருமானம் இல்லாத நிலையில, இவனுக்கும் அடிபட. கூடவே அவனோட மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படும் சூழல்லதான் கதையோட மேலும் அதிகமா நாம் ஒன்றும் நிகழ்வுகள் வருது. சரியான வருமானம் இல்லாம இருக்கும் மகனை கண்டிக்காம, அவனோட வழியிலே விட்டு சற்று தொலைவில் இருந்து வருந்தும் அவனது அம்மாவின் பக்கங்களும். ஒரு பொருட்டாகவும் தனது தந்தையை அவன் நினைக்காததற்க்கான காரணங்களும். இதற்க்கெல்லாம் மேலாக நடக்க இயலாமல் தன் வீட்டிலுள்ள பையனுக்கும் அந்த குடும்பத்திற்குமான நெருக்கத்தை ரொம்ப யதார்த்தமா கொடுத்த விதத்துல படம் நின்னுடுச்சி.



படத்துல தனியா இந்த ஷாட் கேமரா வொர்க் சூப்பர். அந்த BGM அட்டகாசம். இடைவெளியின் போதான எடிட்டிங் ட்விஸ்ட் செம்மனு எதையும் பிரிச்சு சொல்ல முடியாம அனைத்து டெக்னிக்கள் சைடும் கதையோட கதைக்குள்ளவே இருக்கு. படத்தோட எந்த ஒரு ஷாட்லகூட வெளிய தெரியாம இருந்ததுதான் இந்த கதைக்கான மிகப்பெரிய பிளஸ். இவ்ளோ யதார்த்த கதைலயும் ரொம்ப தனியா தெரிஞ்சது படத்தோட வசனம். பணத்தேவைக்கு ரொம்ப குழப்பத்துல இருக்கும் நாயகனிடம் அவரோட நண்பர் சொல்லுவார்.

“இப்பவும் நம்ம டீமே விலைக்கு கொடுத்தா ஒரு ரெண்டரை டூ மூன்றரை லட்சம் வரை கிடைக்கும்னு.

அதுக்கு அந்த குழப்பத்துலயும் ரொம்ப தெளிவா நாயகன் பாத்திரம் சொல்ற வசனம்.

“ரொம்ப இக்கட்டான சூழல்ல நம்ம டீம் கண்டிப்பா தோத்துடும்ற நிலையிலயும் நம்ம என்ன நினைக்கறோம். “எப்படியாது ஒரே ஒரு கோல போட்டு மேட்ச டிரா பண்ணிடமாட்டாங்களானு. அந்த நிமிஷத்துக்குதான காத்துட்டு இருக்கோம். அப்படி இந்த பிரச்சனையில் இருந்தும் வெளிய வர முடியலைனாலும் டிரா பண்ணவாவது எதாவது வழி இருக்கும்னு சொல்லுவாரு.

https://www.youtube.com/watch?v=EHyaTJGmN4k

Wednesday, July 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 129.

நாயகன், கதை, திரைக்கதையை தாண்டி கொஞ்சம் கதைகளங்கள்தான் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். அப்படியான கதைகளங்களில் ஒன்றுதான் சிறைச்சாலையை மையமாக கொண்ட படங்கள். அதும் அங்கமாலி டைரீஸ் போன்ற படைப்பாளியின் அசோசியேட் டைரக்டரின் படைப்பு. ANTONY (அங்கமாலி நாயகன்) மற்றும் விநாயகன் தவிர்த்து பெரும்பாலும் புதுமுகங்களை பயன்படுத்தி வெளிவரும் கதை. அதும் சிறைச்சாலையை மையமாக கொண்டதுனா? அந்த எதிர்பார்ப்பை இவங்க பூர்த்தி செஞ்சாங்களா..

மலையாள படங்களில் பெரும்பாலும் ஸ்பெஷல் எபெக்ட் சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. காரணம் கதையும் களமும் (அவங்க) எளிய மக்களை சார்ந்ததாகவே இருக்கும். இக்கதையும் அதைசார்ந்த களமும் அப்படியே. ஆனா உருவாக்கலில் கதையின் உயிர் எங்கும் சிதையாமல் டெக்னிக்கல் பக்கம் செம்மையா மிரட்டிருக்காங்க. டைட்டில் கார்டில் டெக்னிக்கல் டீம் பெயர்களை பார்த்தாலே தெரியும். குறிப்பா துவக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு குழு எடுக்கும் முயற்சியை சொல்லலாம்.

சிறைன்னு சொன்னதும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் சிறைச்சாலையும், ஆயிரக்கணக்கான கைதிகளும் உள்ள மிகப்பெரும் பட்ஜெட் படங்களை நினைக்க வேணாம்.   ஒரு நாப்பது – ஐம்பது கைதிகள் மட்டுமே உள்ள மத்திய நகரின் ஒரு கிளை சிறைச்சாலையை களமாக கொண்ட கதையில் பிரமாண்ட கதைக்கு சமமான டெக்னிக்கல் சைடு வேலையை இதில் பயன்படுத்தியிருகாங்க. இது போல சிறைச்சாலையை மையமாக கொண்ட கதைகளில் முக்கிய பாத்திரம் அங்கிருந்து தப்பி செல்ல காரணம் ஒரு போர்ஷனா கதையில் வருவது வழக்கம். இதிலும் அவன் தப்பிசெல்ல பெரும்பான்மையான கதைகளில் வரும் காரணமான காதல்தான். அந்த குட்டி போர்ஷன அவ்ளோ இயல்பா கொண்டுபோனதுதான் இந்த கதையில அவங்க தப்பிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் கண்டிப்பா அது நடந்தே ஆகணும்னு நம்மையும் நினக்க வெச்சிருக்கு.

இவனமாறியே இங்கிருந்து வெளிய போய்டனும்னு நெனப்புல இருக்கும் யாரையும் முதல்ல அவனால அங்க பிடிக்கமுடியாம போகவும், அங்கிருக்கும் தோதானவங்கள அவனே முளை சலவை பண்ணி அவங்கள இவன் இருக்கும் ரூமுக்கு மாத்த எடுக்கும் முயற்சியில் நம்ம நிமிர வெச்சிடறாங்க. அந்த எதிர்பார்ப்ப கடைசி வரை எங்குமே தோய்வில்லாம  கொண்டுபோய் முடிச்சிருக்காங்க. அந்த கதை முழுக்க இருக்கும் மழையின் ஈரத்தை, அந்த குளிரை அப்படியே நமக்கும் கடத்திருக்காங்க.  ஒவ்வொரு முறை காலை உணவுக்கு கைதி அறைகளில் இருந்து இவர்கள் வெளியேறும் காட்சியின் அடுத்தகட்டமாக இவர்கள் மூவ் என்னவாக இருக்குமென அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளார்கள்.

இவங்க படங்களை போலவே முக்கிய பாத்திரமான வினாயக்கும் ரொம்ப சாதாரணமாதான்  அறிமுகமாறாரு. ஆனா கதையின் விறுவிறுப்பிற்கு இவரது பாத்திரம் மிகமுக்கிய பங்கு வகிக்குது. இடைவேளையில் ஏற்படும் பெரிய திருப்பமும் இவர மையப்படுத்திதான் நகருது. பெரிய கிளாஸ் படமாகூட இந்த படத்த உருவாக்கியிருக்கலாம். ஆனா இந்த ஒரு ஆள் இந்த முழுபடத்தையும் பெரிய மாஸ் லுக்குக்கு கொண்டுபோறார். அதும் கிளைமாக்ஸ்க்கு முந்தின காட்சில இவரோட என்ட்ரி செம்ம்ம்ம. இவரில்லாம வேற ரொம்ப முக்கிய பாத்திரமா பெரும்பான்மையான கைதிகளின் கைகளிலும் வாயிலும் புகையும் பீடிகளே.    


முக்கிய பாத்திரமா வரும் எல்லாரும் பீடிபிடிக்கறாங்க. அதிலும் அவங்க அடுத்து என்ன பண்ணபோறாங்க, அவங்க மனநிலைய அவங்க புகைக்கும் லாவகத்த வெச்சே யூகிக்க வெச்சிருக்காங்க. முழுக்க ஆண்கள் மட்டுமே நிரம்பிய கதைகளில், வரும் ரெண்டே பெண் பாத்திரங்கள். அவர்களுக்காகவே இக்கதையில் நிகழும் அனைத்து திருப்புமுனைகளும். அவங்க வரும் குட்டி காட்சிகளில் கூட அவங்கள எதும் பண்ணசொல்லாம, அவங்க கண்களுக்கு மட்டும் பெரும்பான்மையான காட்சிகள் அமைத்ததே. கடைசிவரை இந்த மழை, அழுக்கான சிறைச்சாலை, இத்தனை ஆண்கள் மற்றும் இவ்ளோ பீடி புகைக்கு நடுவிலும் நாம அவங்கள மறக்காம இருக்க ரொம்ப முக்கிய காரணம். எடிட்டிங், காமெரா, BGM மூணும் கதையில எங்கயும் இவங்க லைன தாண்டாமயே வரும். அதிலும் சிறைச்சாலையோட துவக்க காட்சில வரும் ஆக்ஷன் ப்ளாக்ல இந்த மூணு டீமோட வொர்த் தெரியும்.  

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=_7tWbhAi4L8   












Sunday, June 10, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 127.

ஒரு கதையில் தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்தல் என்பதுகூட மிக பெரிய விசயமன்று. அதற்கான கதை மற்றும் அப்படியான ஒரு உருவாக்கல் அமைதல் என்பதே பெரும் வரம். அப்படியான வரம் கிடைத்த எந்த நடிகனும் தனது முழு ஈடுபாட்டை அந்த கதைக்காக அர்ப்பணிப்பதே நியாயம். கதைக்கான அச்சாணியே அந்த ஒரு பாத்திரம் என்கிறபோது. அதில் அதிசியமாக அந்த பாத்திரத்தின் அதிமேதாவிதனம் மட்டுமே பளிச்சிடுவது இல்லாமல், அவனது குழந்தைத்தனமும் இருக்க வேண்டும். இரண்டிலும் (அப்பாவி & அதிமேதாவித்தனம்) தனிதனியாகவே இந்த பாத்திரங்களில் பொருந்திபோக கூடிய ஒருவரின் கையில், இப்படியான ஒரு கதை சிக்கும்பட்சத்தில் மட்டுமே ஒரு சாதாரண குடும்பக்கதை அசாதாரணமான படமாக வரலாற்றில் பொறிக்கப்படும் மாயம் நிகழக்கூடும்.


90களில் இந்திய சினிமா மொத்தமும் சுத்தி சுழன்ற அதே குடும்பக்கதைதான். கணவன், மனைவி இரு பிள்ளைகள். தான் பணிபுரியும் இடம். தனது பிள்ளையின் பள்ளி. தனது சொந்த ஊர். தற்பொழுது குடியிருக்கும் பகுதி என மொத்தமாக அறிவுஜீவி, பொறுப்பாளி, நமது அனைத்து குழப்பங்களுக்குமான நிவாரணமாக அறியப்படும் நாயகன். தனது நிதானம், சிந்திக்கும் திறமை, மற்றும் தனது அபரிவிதமான  திறமையாலே மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பில் அவரது நடவடிக்கைகளில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு ஒருவாறு அவரது செயல்பாடுகள் வெகு சில காரியங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட சிறு குழந்தை மனநிலைக்கே சென்று விடுகிறது.


தன்னையே நம்பி உள்ள குடும்பம். பள்ளி இறுதி ஆண்டுக்கு பின் தன்னை போன்றே மகா புத்திசாலி மகனை IAS தேர்வுக்கு தயார்படுத்த ஆயுத்தமாகும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற நிலைகுழையும் குடும்பத்தின் நிலை. இந்த நாயகன் தனது குழப்பங்களில் இருந்து மீண்டு பழைய அறிவுஜீவி ஆனாரா? இந்த ஒரே வரிக்கதையில் இந்த ஒரு பாத்திரம் நிகழ்த்தும் மாயம் வெறும் வார்த்தைகளுக்கும் கண்களுக்குள் மட்டுமே உணர்ந்து வெளிபடுத்த கூடியதன்று. படத்தின் முதல் பாதியில் நாம் அவரை சராசரி மனிதன் என உரைத்தால் பார்வையாளன் நம் புத்தி சுவாதீனத்தை சந்தேகிக்க கூடும். இதே படத்தின் இரண்டாம் பாதியில் இதே நாயகனை நாம் அறிவுஜீவி என உரைத்தால் அப்பொழுதும் அவ்வாறே நினைக்ககூடும். இவ்வாறான இரு வேறு நிலைகளை ஒரே பாத்திரம் ஒரே கதையில் நிகழ்த்துவதென்பது உண்மையில் அசாத்தியம்.
தனது பள்ளி தோழியுடன் காபி ஷாப் சென்றுவிட்டு முதன்முறையாக தாமதமாக வீடு திரும்பும் மகன் குடும்பத்தார் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து குளிப்பதாக பாசாங்கு செய்து குளியலறையில் ஒளிந்து கொள்ள. பெரும் கருத்தாழமிக்க எந்த வசனமும் இல்லாமல், சமையல் அறையில் மனைவிக்கு உதவிகொண்டே தனது இளைய மகளுக்கு கதை கூறுவது போல், தனது பால்ய வயதில் தான் கூறிய பொய்யால் ஏற்பட்ட விளைவுகளை குளியல் அறையில் உள்ள மகனுக்கும் கேட்கும்படி நாயகன் உரைக்க, தானாக மகனே வந்து மன்னிப்பு கேட்க்கும்படியான பழைய காட்சிதான். ஆனால் இந்த நாயகன் பெரும் கூப்பாடு, அடித்தொண்டையில் உறும்பும் வசனங்கள் எதும் இல்லாமல் வெறும் உப்புமாவுக்கு பெறாத வசனத்தை பேசி மட்டுமே மகனை அழவைத்துவிடவில்லை. அந்த இரண்டு நிமிட காட்சியும் அதன் பின்வரும் ஒரு பாடல் காட்சி மட்டுமே போதும் இந்த நடிகனின் மகாதிறமையை பறைச்சாற்ற.


இவரை போன்ற பெரும் சரீரம் கொண்டோருக்கு வேண்டுமானால் தன் தோற்றம் மூலம் தன்னை புத்திசாலியாக எந்தவித பெரிய பாசாங்கும் செய்யாமல் நிருபித்துவிட இயலும். ஆனால் தன்னை மனநிலை சரிஇல்லாத பாத்திரத்திற்கு பொருந்திபோக செய்வது அத்துணை சுலபமன்று. ஏதேனும் ஒரு ஷாட்டில் அவரது நடிப்பின் அளவு சற்று கூடவோ அல்லது குறைவாகவோ வெளிப்படுத்திவிடின் அது பார்வையாளனுக்கு நகைப்பை வரவழைத்துவிடும். அவ்வாறு ஒரு காட்சியில் நிகழ்ந்தாலும் முழு படமும் வீண் என்பதே நிதர்சனம். இந்த நூலிழை அளவு வேறுபாட்டை இரண்டாம் பாதி முழுக்க எவ்வாறு ஒரே சீராக கொண்டு சென்றார் என்பதில் உள்ளது. இவருடைய திறமை அல்ல ஒவ்வொரு ஷாட்டும் அதே அளவான நடிப்பை மட்டுமே ஓகே செய்த இயக்குனர் (PRANAYAM) BLESSY-ன் திறன்.


இது போன்ற கதைகளில் வரும் துணைபாத்திரங்களுக்கு பெரிதும் காட்சிகளோ வசனங்களோ இல்லாததை போன்ற தோற்றம் பார்வையாளனுக்கு ஏற்படுவது இயல்பே. ஆனால் முதன்மை பாத்திரத்தின் அனைத்து அசைவுகளும் பார்வையாளனுக்கு கொடுக்கும் பூரண திருப்திக்கு பெரும் பங்கு இந்த துணைபாத்திரங்களின் மூலமே சாத்தியம். அவ்வாறு தனது பங்களிப்பை தனக்கான அனைத்து காட்சிகளிலும் முழுக்க வழங்கிய தந்தை பாத்திரத்தில் வரும் நெடுமுடிவேணு. லாலின் மாமனார் பாத்திரத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் நிறைவான பங்களிப்பை வழங்கிய இன்னொசென்ட்.


இவர்களைகாட்டிலும் மனைவியாக வரும் மீரா வாசுதேவன் பாத்திரமே இரண்டாம் பாதியில் லால் பாத்திரம் பார்வையாளனின் அடிமனதை வருட செய்த மயிலிறகு. குறிப்பாக இறுதி காட்சியில் பல வருடங்களுக்கு பின் தன் சுயஉணர்வுக்கு திரும்பி மின்சாரம் தடைபட்ட இரவில் மெழுகுவர்த்தியுடன் கணவனை தேடும் மீராவை லால் அழைக்கும் காட்சி. ஜன்னல் அருகில் கண்ணிருடன் அணைக்கும் காட்சியில் லாலின் வலப்புறமும், மீராவின் இடப்புறம் மட்டுமே மெழுகுவர்தியின் ஒளியில் தெரியும். அவர்கள் வாழ்வின் பாதியை மட்டுமே வாழ்ந்துள்ளதாக அர்த்தப்படுத்தும் வகையான உருவாக்கல் நம் மனதை விட்டு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். அனைத்து பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பில் சிறுகுறையும் வைக்கவில்லை எனினும் மோகன்லால் எனும் மலையையும்தாண்டி நம் மனதுள் நுழைந்த இந்த பாத்திரத்தின் பங்களிப்பு இக்கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

Monday, November 20, 2017


பார்த்ததில் மிகவும் ரசித்தது : 083.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசல் பிரதிபலிப்பவர்கள், அதர பழைய கதையை புது பாணியில் கொடுத்து அசத்துபவர்கள் இந்த முறை அதிரி புதிரியாக அசத்தியது கேங்ஸ்டர் களத்தில்.


கேங்ஸ்டர் கதை தான். ஆனால் கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல். வெறி தீர துரத்தும் பழிவாங்கல் இல்லாமல்.சீறி பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் இல்லாமல். மிரட்டும் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் இவர்கள் தந்தது வழக்கத்தைவிட மிரட்டல் சினிமா.


மும்பை ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன். ஒருநாள் தனது பால்ய நண்பன் கங்கா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் நொடியில் பெரும் சப்தத்துடன் அவரது அலைபேசி மறுமுனையில் விழுந்து நொறுங்குகிறது. நண்பனை தேடி தனது சொந்த ஊரான கம்மட்டிபாடதிற்கு கிளம்புகிறான் கிருஷ்ணன் தனது பால்ய நினைவுகளுடன்.


அங்கு ஆசான்தான் பெரிய மனிதர். அவர் நினைப்பதை செய்து முடிக்கும் எதுவாயினும் செய்து முடிப்பவன் பாலன். அவனுக்கு கீழ் அவனது தம்பி கங்கா, அவனது நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் அவர்களது என சில பதின்பருவத்து பசங்க. பாலனோட சேந்து ஒரு பெருமைக்கு, கெத்து காட்ட கங்கா & கிருஷ்ணா நண்பர்கள் குழு செய்யும் சிறு சிறு தவறுகள் மேல் இவர்களுக்கு ஏற்படும் அதீத ஈடுபாட்டால் அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே.!!



குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது திரைக்கதை மட்டுமே. நிறைய பாத்திரங்கள் உள்ள கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தி சென்ற விதம் மகா துல்லியம். சுமாரான கதையை அசாத்திய பாத்திரங்களை கொண்டு அவர்களையும் மொக்கையாக்குவதும். அசாதரணமான கதையை சுமாரான பாத்திரங்களை கொண்டு அக்கதையையும் சுமாராக மாற்றுவது எல்லாம் நிறைய நாம் இங்கு பார்த்தது.


அனைவரின் பங்களிப்பும் நிறைவாக இருப்பினும் இக்கதையின் உயிர்நாடியான இந்த இரு பாத்திரங்களின் பங்களிப்பு.!!


ஒவ்வொரு பாத்திரதிற்க்கும் மூன்று மூன்று நடிகர்கள். குழந்தைபருவம், பதின்பருவம், 40+ வயதிற்கான பருவம் என இவர்களின் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு.!! இதுப்போல பத்து பொருத்தமும் கூடி வரும் ஜாதகத்தை மிக சமீபத்தில் பார்த்ததாக நிச்சயம் நினைவில் இல்லை.
1.இவர்கள் வாழ்க்கையில் ஜாலிக்கு தொடங்கி பணத்திற்காக இந்த அடிதடியை தொடரும் தருணம்.!!
2.படத்தின் துவக்கத்தில் இவர்கள் பயன்படுத்திய பாதையும் நிலஆக்ரமிப்புக்கு பின் மிககுறுகிய பாதையின் வழியே இவர்கள் பிணத்தை தூக்கி செல்லும் காட்சி .!!
வசனங்கள் ஏதுமற்று திரைக்கதையின் உழைப்பிற்கு இந்த இரு காட்சிகளே சான்று.


https://www.youtube.com/watch?v=B-m13AJMxW4

Monday, August 14, 2017






பார்த்ததில் மிகவும் ரசித்தது: 117.

ஒரு கதை அது ஒரு பாத்திரத்தின் மீது கொடுக்கும் அழுத்தத்தை, நியாயமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதை மற்றும் தேர்ந்த நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட முழுமையான திரைப்படம். 2௦14 ல் இராக் யுத்தத்தில் அங்கு மாட்டிகொண்ட 2௦க்கு மேற்ப்பட்ட மலையாளி நர்ஸ்கள் மீட்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு. 

உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்படும் படைப்புகள் எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக இருக்கவேண்டுமோ. அதே அளவு அந்த முக்கிய பாத்திரத்தை சுற்றி புனையப்படும் கிளைகதைகள் உண்மையாக இல்லாவிடினும் சுவாரசிய குறைவாக இருக்ககூடாது. நாம் எந்தளவு சுவாரசிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படைப்பை எடுப்பினும் அதை சுற்றி பின்னப்படும் கதைகளில் சுவாரசிய குறைவாக இருப்பின் அந்த படைப்பு நிச்சயம் பார்வையாளனுக்கு முழு திருப்தியை கொடுக்காது.

இக்கதை இராக்கில் துவங்குவதற்கு முன்னே அங்கு பணிக்கு செல்லும் பெண்ணாக வரும் பார்வதியை சுற்றி பின்னப்பட்ட கிளைக்கதையை கொண்டே உணர்வுபூர்வமான ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க இயலும். இந்த நாயகி தான் ஏற்கும் பாத்திரங்களை தேர்வு செய்யும் முறையிலும் அதில் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதை இம்முறையும் நிருபித்துள்ளார்.

தான் விரும்பி மணமுடிக்கும் கணவனிடம் தனது குடும்ப சூழலை எடுத்து சொல்லி திருமணத்திற்கு பின்னும் பணிக்கு செல்ல சம்பந்தம் பெறுகிறார் நாயகி சமீரா. கட்டுகோப்பான முஸ்லீம் குடும்பத்தில் அது சாத்தியப்படாததால் திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பெறுகிறார். தனது பெற்றோர்களுக்காக தனது நான்கு வயது மகனையும் பிரிகிறார். மேலும் மகனிடம் அவர்களது விவாகரத்தை பற்றி கூறாமல் தான் வெளிநாட்டிற்கு பணிக்கு வந்துள்ளதாக தொலைபேசி வருகிறார். மேலும் தனது மகனை தன்னிடமே அனுப்பிவிடும்படி தனது முன்னாள்  கணவனையும் வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில் இராக்கிற்கு பணிக்கு செல்லும் வாய்ப்பு வர தனது குடும்பத்திற்காக செல்ல முடிவெடுக்கும் சூழலில் தனியாக அவரை வெளிநாடு அனுப்ப அவர் குடும்பம் தயங்க. சில வருடங்களாக அவருடன் மருத்துவமனையில் உடன் பணிபுரியும் குஞ்சக்கோ போபனின் காதலை ஏற்று மணமுடிக்கிறார்.
விசா வரும் வேளையில் கர்ப்பமுற்று தன் கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தலால் மீண்டும் வெளிநாடு செல்ல தடை ஏற்படுகிறது. இவ்வாறான சூழலில் மூன்று மாத கர்ப்பத்துடன் ஈராக் சென்று சேரும் சூழலில், தனது முன்னாள் கணவன் தனது வியாபாரம் நலிவுற்று இவர்களது மகனை நிரந்தரமாக இவரிடமே ஒப்படைத்து செல்கிறார். தனது கர்ப்பம் மற்றும் இந்நாள் கணவனை தனது பத்து வயது மகனிடமிருந்து மறைக்க முயன்று வரும் சூழலில் தனது கணவனை உள்நாட்டு யுத்தத்தில் தொலைக்கிறார்.

இவ்வாறான எளிதில் எந்த தேர்ந்த நடிகர்களாலும் எளிதில் சமாளிக்க இயலாத பாத்திரத்தை தனது ஆத்மார்த்தமான நடிப்பால் ஒவ்வோறு காட்சியிலும் பூர்த்தி செய்கிறார்.

1. “விவாகரத்திற்கு பின்னே நானே மறுமணம் பண்ணிக்கல, நீ அதுக்குள்ளே பண்ணிட்ட”. இந்த கேள்வியை தொலைபேசி வழியே எதிர்கொண்டாலும் நிலைகுலைந்து அமர்கையில் நாயகியின் செய்கை.

2. உணவை தட்டிவிடும் மகனை கண்டிக்கும் தாயிடம், “நீ இந்த மாமா கூட நீ இருப்பதாலதான் அப்பா உன்ன விட்டு போயிட்டாருனு” சொல்லும் பொழுது அதிர்ச்சியில் நாயகியின் பார்வை.

3.  மனைவி மற்றும் அவரது மகனை பிரிந்து மருத்துவமனையில் இருந்து அந்நாட்டின் எல்லை மருத்துவ முகாமிற்கு செல்லும் கணவனை சமாதானப்படுத்தும் நாயகியிடம் “அப்படியே இந்த குழந்தையும் பார்த்துக்கோ” என்று அவளது வயிற்றை சுட்டிக்காட்டுகையில் நெகிழும் நாயகியின் வெளிப்பாடு.

மேற்கூறிய காட்சிகள் மட்டுமின்றி படம் முழுக்க உணர்ச்சிமயமான அனைத்து காட்சிகளிலும் நாயகியிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும் பார்வையாளனை நிச்சயம் நிலைகுலைய செய்வதுடன். அவர்பால் நம்மையும் ஈர்க்கும் வல்லமை பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நாயகர்களுக்கு சமமானது. 

மேலும் இப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு உறுதுணையாக, ஈராக் எம்பஸியில் பணிபுரியும் சிறு வேடத்தை ஏற்று நடித்து கொடுத்த பகத்பாசில். இந்த வேடத்தில் இதே நிறைவுடன் நடித்து கொடுக்க பல நாயகர்கள் உண்டு அங்கே. மேலும் இதுபோன்ற சிறு வேடங்களில் நடிக்க இரண்டாம் நிலை நடிகர்கள் கூட தயாரில்லை இங்கே என்பதே நிதர்சனம்.

மொத்தத்தில் முழு நிறைவான நம் அனைவருக்குமே பிடித்த திரைப்படம் நமக்கு பக்கத்து ஊரிலிருந்து...

இப்படத்தின் ட்ரைலர்: 

https://www.youtube.com/watch?v=vzYSKjxtKNg

Friday, July 28, 2017


OZHIVUDIVASATHE  KALIi – இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் படம்.


ஒரு கதை அது தாங்கி வரும் கருவை முழுபடத்தில் ஒரு ஷாட்கூட நேரடியாக கூறாமல் ஆங்காங்கே மறைமுகமாக மட்டுமே கூறி. அது பார்வையாளர்களையும் சலிப்பேர்ப்படுத்தாமல் முழுதாக சென்று சேரும்படியான மிகச்சரியான படைப்பு.


கிட்டதட்ட நாற்பது வயதிலுள்ள ஐந்து நண்பர்கள் அவர்கள் மாநிலத்தின் தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை தினமானமானதால் (வாக்காளர் கடமையை கூட நிறைவேற்றாமல்) ஒன்றாக குடிக்க தங்களுக்கு சௌகர்ய இடம் ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் உதவிக்கு சமைத்து பரிமாற ஒரு ஆண் மற்றும் பெண் இருக்கிறார்கள். படம் துவங்கி பதினைந்து நிமிடத்தில் அங்கு செல்லும் இந்த ஐந்து நண்பர்கள் மேலும் அந்த இரண்டு பணியாளர்கள் இந்த ஏழு நபர்களின் அடுத்த ஒன்றரை மணிநேர வாழ்க்கையே இப்படம்.


நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிப்பது. அருகிலுள்ள குளத்தில் குளிப்பது. பலாபழம் பறிப்பது. அவர்கள் தங்களுக்குள் நடத்தும்   உரையாடல். அவர்களின் சந்தோசம், கோபம், வஞ்சம், காமம் இதை மட்டுமின்றி இவர்கள் நடவடிக்கையின் ஒவ்வொரு அசைவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியல் பேசவேண்டும். ஒரே லொகேஷனில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்ப்படுத்தாமல் சொன்னதில் உள்ளது இவர்களின் சிறப்பு.


அவர்களில் இருவர் அந்த பெண்ணிடம் தவறாக அணுக முயற்சிக்கின்றனர். அதில் அதிக செல்வாக்கானவர் அப்பெண்மணியிடம் அரை வாங்குவது. மேலும் இலவசமாக கிடைத்த பலாபழத்தை தங்களில் செல்வாக்கானவருக்கு அதிக பங்கும் அதில் குறைந்தவருக்கு சிறு பங்கும் மற்றவருக்கு ஏதும் இல்லாமல் பாகம் பிரிப்பது. சமைக்க கொண்டுவரும் கோழியை என்னால் கொல்ல இயலாது என சமைக்கும் பெண்மணி கூறுவதால், அவர்களில் மிக எளிமையானர் தலையில் அந்த பாவச்செயல் கட்டப்படுவது. பின்னால் அந்த பாவமே அவரது தலையில் விடிவது.
அவர்களிடையிலான உரையாடல் வாக்குவாதமாகி அந்த வீட்டை விட்டு வெளியேறும் நண்பர் ஒருவரை அதற்க்கு காரணமானவர் தவிர மற்றவர்கள் (குறிப்பாக அந்த எளியவர்) சமாதானப்படுத்துவது. இறுதியில் அவர் மூலமே இவர் வாழ்க்கை முடிவது. இக்கதையின் ஒவ்வொரு காட்சியும் நமக்கு வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியே செல்லும்படியான திரைக்கதை அபாரம். மேலும் கதையின் அனைத்து காட்சிகளும் மறைமுகமாக பேசும் உள்ளார்ந்த அரசியல் நிலையை பற்றி சிந்திக்காமல் மேலோட்டமாக பார்த்தாலும் அந்த நண்பர்களிடயேயான இந்த ஒன்றரை மணிநேர கதை மிக சூவாரசியமாகவே செல்வதும் இதன் சிறப்பம்சம். ஆதலால் பொழுதுபோக்கிற்கு படம் பார்க்கும் ரசிகர்களையும் இக்கதை கவரும்.


இந்த நண்பர்கள் மற்றும் பணியாட்கள் மட்டுமின்றி மிக முக்கிய கதாபாத்திரமாக மழை மற்றும் அவர்கள் தங்கியுள்ள வீட்டின் அருகிலுள்ள குளத்தின் நீர் காற்றில் ஏற்ப்படுத்தும் சலனத்தையும் கதையின் போக்கோடு இணைத்து வைக்கப்பட்ட அனைத்து ஷாட்ஸ்ம் அட்டகாசம். உதாரணமாக நண்பர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று ஒருவர் வெளியேறி மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வரும் காட்சியில்,  அவர்கள் வாதத்தின் போது துவங்கும் மழை. அவர்களின் வாதம் உச்சநிலையை அடைகையில் வலுபெருவதும். ஒருவர் வெளியேறி மற்ற நண்பர்கள் சமாதானப்படுத்துகையில் மிதமாகி, பின் அவரை அறைக்கு அழைத்து வந்து சமாதானபடுத்துகையில் தூறலாக மாறுவதும். அவரின் வெளியேற்றத்திற்கு காரணமானவரே வந்து கட்டியணைத்து பேசுகையில் தூறலும் சுத்தமாக நின்றுவிடுவது என அற்புத உருவாக்கல்.


படத்தின் இறுதி காட்சிவரை இக்கதையை அரசியல் படமாக எந்த சராசரி சினிமா ரசிகனாலும் உணர இயலாத வகையில் அமையப்பெற்ற நல்ல குதூகல படம். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் கவரும். இதில் பணியாளர்களை பொதுமக்களாகவும், இலவசமாக கிடைத்த பலாவை லஞ்ச பணமாகவும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் ஒரு அரசியல் கட்சியாகவும் (யார் எந்த கட்சி என நீங்களே யூகித்துகொள்ளவும்). இறுதி காட்சிக்கு பின் தொலைகாட்சியில் ஒலிக்கும் கம்யூனிசம் குறித்த வாதத்தை தவறவிட வேண்டாம். நமக்கு கேரள அரசியல் குறித்த பார்வை எவ்வளவவு அதிகமோ அதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இப்படத்தை ரசிக்க இயலும்.

Search This Blog