AUG’1944 நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மன்
கட்டுபாட்டில் உள்ள பாரிஸ் நகரமே கதைக்களம்.
ஜெர்மானியரின் கட்டுப்பாடு மெல்ல தளர்ந்து சுதந்திர பாரிஸ் உதயத்திற்கு
வெகு சில நாட்களே மீதம் உள்ள நிலையில் நடைபெறும் சம்பவங்களே இப்படம்.
உலக
பிரசித்தி பெற்ற பாரிசின் பொக்கிஷங்களாக கருதப்படும் அவர்களின் விலைமதிப்பற்ற ஓவியங்களை ஜெர்மானிய ராணுவ
உயர் அதிகாரி பாரிசிலிருந்து ரயில் மூலம் ஜெர்மன் கொண்டு செல்ல முயற்சிக்கறார்.
இன்னும் சில நாட்களில் சுதந்திர பாரிஸ் உதயமான பின் ஓவியங்கள் கொண்டு செல்ல
சாத்தியம் இல்லாதபடியால், உடனடியாக எடுத்து செல்ல முயல்கிறார். இதை அறிந்து கொண்டு அவரது முயற்சியை முறியடித்து, அந்த
ஓவியங்களை காப்பாற்றும் முயற்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிஸ் ரயில்வே
துறையினர் ஜெர்மானிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக
கொண்டு 1964 ல் ஆங்கிலம் மற்றும்
ஜெர்மானிய மொழிகளில் வெளிவந்தது இப்படம்.
அந்த காலகட்டத்தில் வெளிவந்து இன்றும் நான் சிலாகித்து
கூறும் FIVE MAN ARMY (1969) மற்றும் GUNS OF NAVARONE (1961) படங்களை விட பிரமாண்ட உருவாக்கலும், ACTION காட்சிகளும் இன்றும் காண்போரை
ஆச்சர்யபடுத்தும். அதற்க்கு மிக முக்கியகாரணி நமக்கு இன்றும் ஆச்சர்யமாக விளங்கும்
ரயிலை கதை முழுக்க பயன்படுத்திய விதம். இன்றும் ரயில் சம்பந்தப்பட்ட கதைகளில்
காட்டப்படாத பல விஷயங்கள் என்ஜின் பழுதுபார்க்கும் கேரேஜ், ஒவ்வொரு ஸ்டேசனிலும்
ஸ்டேசன் மாஸ்டர், TRACKMAN, கேட் கீப்பர் உட்பட அனைவரின் வேலை முறையை மிக
துல்லியமாக பதிவு செய்த வகையில் இது மிக முக்கிய சினிமா.
பழுதடைந்த என்ஜின் ராணுவ அதிகாரியின் உத்தரவுக்கு பயந்து
பிரித்து பழுது பார்க்கும் ரயில்வே துறையின் கேரேஜ் இதற்க்கு முன் சினிமாவில்
பார்த்ததாக நினைவில்லை. சரிசெய்த என்ஜினை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ரயில்
நிலையம் கொண்டுவரும் வழியில் இங்கிலாந்தின் போர் விமானம் தாக்குதல் நடத்தும்
காட்சி(யில் மரங்களடர்ந்த காட்டு பகுதியில் விமானத்திலிருந்து ரயில்வே ட்ராக்கை
காட்டும் ஒரு ஷாட் “மெக்கனஸ் கோல்ட்” படத்தில் முதல் ஷாட் தரும் சிலிர்ப்பிற்கு
ஒப்பானது) மேலும் அந்த ரயிலை தாமதப்படுத்த இரண்டு என்ஜின்களை மோதவிட்டு ட்ராக்கை
சேதப்படுத்த எடுக்கும் முயற்சிகள் என பெரும்பாலான காட்சிகள் நிச்சயம்
பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.
அந்த கால திரைப்படங்கள் பெரும்பாலானவை தற்போது காண
நேர்கையில் அவர்கள் பயன்படுத்திய யுக்திகள்யாவும் இப்பொழுது நமக்கு பெரும் சலிப்பை
ஏற்படுத்தினாலும் “அந்த காலத்திலேயே எப்படி எடுதிருக்கான்யா” சொல்லி கடந்து போவது
மட்டுமே பெரும்பாலான படங்களில் நிகழும். ஆனால் இது போன்ற அறிய சில படங்கள் மட்டுமே
காலத்தையும் கடந்து இன்றும் இதன் உருவாக்கல் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தும்.
அக்ஷன் & சேஸிங் விரும்பிகளுக்கு மட்டுமின்றி ரயிலை காதலிப்பவர்கள் தவறவிடகூடாத
படம்.