Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, March 24, 2017

Land of Mine - ஒரு பார்வை






1945 – MAY,  இரண்டாம் உலக யுத்தம் ஐந்து வருடங்களுக்கு பின் முடிவுறும் காலகட்டம். ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடும் டென்மார்க்கே கதைக்கான களம். 2௦௦௦-க்கும் மேற்பட்ட இளம் வயது ஜெர்மானிய மாணவர்களை கட்டாயப்படுத்தி 1.5 மில்லியனுக்கு மேற்ப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
இவ்வாறு கதைக்கான சூழல் போர்க்களம், கண்ணிவெடி, என பயணப்பட்டாலும் திரையில் மரண ஓலம், ரத்தம் (ஓரிரு காட்சிகளை தவிர) என நிரப்பாமல் அம்மாணவர்கள் மற்றும் அவர்களின் “CHIEF SARGENT” அவர்களிடையேயான எண்ண ஓட்டங்களை ஒரு துளியும் சிதறாமல் பதிவு செய்த வகையில் நிச்சயம் இது கவனிக்கத்தக்க சினிமா.


தமது தேசத்தை விட்டு (டென்மார்க்) சில வருடங்களுக்கு பின் வெளியேறும் மற்றொரு தேசத்து (GERMAN) வீரர்களில் ஒருவன் டென்மார்க்கின் கொடியை வைத்திருப்பதை கண்டு அவர்களின் வீரர்கள் ஆயிரக்கணக்காணோர் சூழ்ந்திருக்கும் சூழலிலும் தான் ஒருவனாக அந்த வீரனை அடித்து நொறுக்கும் படத்தின் ஆரம்ப காட்சி. அது கூறும் இத்தனை வருடங்கள் ஜெர்மானியரின் அடக்குமுறைகளையும், தனது பணியின் மீது அவருக்கு இருக்கும் பற்றையும்.


இவ்வாறான ஒரு CHIEF பத்திற்கும் குறைவான எந்த முன் அனுபவமும் இல்லாத (கண்ணி வெடிகளை அகற்றுவதில்) மாணவர்களை கொண்டு ஒரு பெரிய கடற்பரப்பில் புதையுண்டிருக்கும் கண்ணிவெடிகளை எவ்வாறு செயலிளக்க செய்கிறார். அவரிடம் சிக்குண்டு இம்மாணவர்கள் படும் அவதி. பின் அவர்களிடையே ஏற்ப்படும் பற்றுதல். இம்மாணவர்களுக்காக அவரது தியாகம். இவ்வாறான சினிமா பாணி கதையில் துளியும் சினிமாத்தனம் இல்லாத வசனங்கள் மற்றும் காட்சியமைப்பின் மூலம் அதீத கவனம் ஈர்க்க செய்த இயக்குனர் “MARTIN ZANDVLIET”.


துவக்கத்தில் அத்தனை வீரர்கள் மத்தியில் தன் தேசத்து கொடி வைத்திருந்தவரை தாக்கும் முரட்டு அதிகாரிதான் இந்த மாணவர்களுக்கு தலைமை ஏற்க போகிறார் என்ற காட்சியே நமக்குள் கிலி ஏற்ப்படுத்தும்.



உணவுக்காக அம்மாணவர்கள் இறைஞ்ச அவர்களுக்கான உணவை அவர்களிடத்தில் கடமைக்கு வீசிவிட்டு செல்லும் காட்சிகளும், அவர்களில் ஒருவன் கண்ணி வெடி தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்து தனது தாயை நினைத்து கதறும் நிலையில். உடனடியாக மருத்துவ வாகனத்தை தருவித்து அவனை அனுப்பிய பின் அவனது கதறல் மற்ற மாணவர்களையும் சூழும் நொடியில் அவர்களை மீண்டும் பணிக்கு செல்ல கட்டளையிடும் தோணி, பின் அவர்களுடன் கால் பந்து ஆடும் காட்சிகளில் முதன்முறை அவரது புன்னகை என முழுக்க CHIEF ஆக வரும் “ROLAND MOLLER” ராஜ்ஜியம் மட்டுமே.


ஒரே இரவில் அவரிடம் ஏற்படும் மாற்றம். அவர் அம்மாணவர்களிடம் காட்டும் கரிசனம் இதற்க்கு காரணமாக வைக்கப்பட்ட காட்சி முழுதும் ஏற்புடையது இல்லை எனினும், அதன் பின்னான அவரின் நடவடிக்கைகளிலும் அவ்வளவு கட்சிதமாக பொருந்துகிறார். மேலும் அவர் அம்மாணவர்களுடன் இணக்கமான பின் அவர் இதற்க்கு முன் கண்டிப்புடன் நடந்ததும் அம்மாணவர்களின் நலன் கருதி மட்டுமே என நினைக்க சொல்கிறது இந்த இந்தியனின் மனம்.

No comments:

Post a Comment

Search This Blog