Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, November 23, 2023

THE RAILWAY MEN – TV MINI SERIES – 4 EPISODES

 



WEB SERIES 11.

காற்றிலே பரவும் அந்த விஷத்தை சுவாசித்தவுடனே மூச்சு திணறல், பார்வை கோளாறு, சில நிமிடங்களில் நுரையீரல் மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அந்த பகுதி முழுக்க மக்கள் இறந்து கொண்டிருக்கும் இரவில், அந்நகரத்தின் மிக முக்கிய ரயில்வே ஜங்க்ஷனான போபாலை கடந்து செல்லும் ரயில்களில் பயணம் செய்யும் ஆயிரகணக்கான மக்கள். குறுகிய நேரத்தில் நீண்ட தொலைவை கடந்து உயிர் பிழைக்க ரயில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், அதை நம்பி வரும் இந்நகரத்தின் நூற்றுக்கணக்கான மக்கள் என அந்த ஒரு இரவில் அந்த ரயில்வே ஜங்க்ஷனில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உயிர் பிழைத்த சொற்ப ஊழியர்களை கொண்டு எவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினார் என்பதே களம்.    

 

நம் மூளை ஏற்கமறுக்கும் கொடுமைகள் அரங்கேறிகொண்டே துவங்கும் கதை. அதிவேகமாக செல்லும் தொடரின் இடையிலும் இவை வெறும் பரபரப்பிற்காக மட்டுமே சேர்க்கப்பட்ட கதைகளாக நினைக்கும் மனம்.   ஆனால் இத்தொடர் முடிவில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர், அந்த ஸ்டேஷன் மாஸ்டர் என இந்த தொடரின் முக்கிய பாத்திரங்களின் உண்மையான நபர்களின் புகைப்படங்கள் மற்றும் அப்போது வெளியான உலகின் முக்கிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் வீடியோ கொண்டே இந்த தொடரை நிறைவு செய்ததும், கற்பனையை மீறிய இந்த அவலத்தின் உண்மை முகம் நம்மை நிலைகுலையசெய்யும்.

 

விஷவாய்வு கசியும் அந்த தொழிற்சாலை மற்றும் இந்த ரயில்வே ஜங்ஷன் இந்த கதையின் முழுபகுதியும் நடைபெறும் களம். காலகட்டம் 1980. அப்பொழுது பயன்படுத்தபட்ட ரயில்வே உபகரணங்கள் முதல் அந்த தொழிற்சாலை அமைப்பு, அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களின் உடைகள் வரை மிக நேர்த்தியாக கொண்டுவந்துள்ளார்கள். இக்கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் அவர்களின் பின்புலம் இந்நிகழ்வில் அவர்களது முடிவு. இவை நாம் இன்னும் அதிகமாக அந்த கதையினுள் ஒன்ற மிகமுக்கிய காரணம். 8-10 எபிசோட் வரையும் கொண்டு செல்ல நல்ல கதை இருந்தும் அதை மிக அழகாக நான்கு அத்யாயங்களுக்குள் முடித்தது கூடுதல் சிறப்பு. தவறவிட கூடாத மிகமுக்கிய தொடர்.

 

எடிட்டர் தவிர இதன் இயக்குனர், திரைக்கதையாளர், காமெரா, உடைவடிவமைப்பாளர் என அனைவருமே சரியான தொடரின் மூலம் அறிமுகமாகறாங்க. இவர்கள் பங்குபெறும் அடுத்தடுத்த படைப்புகள் நிச்சயம் பேசப்படும்.


No comments:

Post a Comment

Search This Blog