Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Showing posts with label Hollywood. Show all posts
Showing posts with label Hollywood. Show all posts

Tuesday, December 5, 2023

 பார்த்ததில் மிகவும் ரசித்தது – 178


ஹாரர் படங்களோட வெற்றியே அவங்க நம்மை அந்த திகிலோடவே படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை வெச்சி இருக்காங்களா அப்படிங்கறது மட்டும்தான். லாஜிக் கதையோட ஓரளவு பொருந்தி வந்தாகூட போதும். இங்க இந்த போஸ்டர்ல மணிக்கட்டோடு பைபரில் செய்யப்பட்ட அந்த கைதான் கதையோட முக்கிய பாத்திரம்.


வீக்எண்ட்ல் நண்பர்கள் ஒன்று கூடும் சந்தோஷ தருணங்களில் அவங்களோட முக்கிய விளையாட்டே இந்த கையை வெச்சிதான். ஒரு டேபிளில் அந்த கையை நிறுத்திவெச்சி எதிரில் அமர்ந்திருக்கும் நபர் இந்த கையோடு அவரோட கையை பொருத்தி சொல்ல வேண்டியது “டாக் டூ மீ” மட்டுமே. பின்னால நடப்பது எல்லாமே அதகளம்தான்.


ஒரு சில நிமிட அந்த எக்ஸ்சைட்மெண்ட்டுகாக வரிசையா அந்த கேங்ல இருக்கும் எல்லோருமே விளையாட போக, இறுதியா கதையோட முக்கிய பாத்திரத்தோட தம்பியை வெச்சி முயற்சி பண்றாங்க. அங்க அடுத்த கட்டத்துக்கு போற கதை கடைசி வரை கொஞ்சம் திகில்லயே நம்மள வெச்சி இருக்காங்க. இதோட முக்கிய விதியே அதிகபட்சம் 90 வினாடிகளுக்கு உள்ள அந்த கையை பிடிச்சி இருக்கறவங்களை விடுவிச்சிடனும் அவ்ளோதான்.


ஏன்னா, அந்த கையை பிடிச்சவங்க அவங்களா தானா அதை விடுவிக்க முடியாது. இந்த வகையறா கதைகள் நம்மை கட்டிபோட பெரிய காரணமே படத்தோட டெக்னிகல் பக்கம்தான். ரொம்ப சரியா எதுமட்டும் வேணுமோ அதுல ஒரு ப்ரேம் கூட அதிகமா இல்லாத எடிட்டிங். அப்பறம் சவுண்ட் டிசைன் பேசும் தோணி அதுக்கான வால்யூம் முதல் பொருட்களோட அசைவுகள் வரை அட்டகாச அவுட்புட் கொடுத்து இருக்காங்க.   


தெரிஞ்சே ஜெயின்ட் வீல், ரோலர் கோஸ்டர்ல போறது இல்லையா, அப்படி நம்மள ஓரளவு பதைபதைப்புலையே வெச்சிருக்குற படம். கண்டிப்பா தனியா பாக்க முயற்சி பண்ணுங்க. ப்ரைம்ல இருக்கு.

Friday, November 17, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 177.

Gran Turismo 1997-ல் வெளியாகி உலகம் முழுக்க மிக பிரபலமான கார் ரேசிங் கேம். இந்த வீடியோ கேமை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட சரியான படம்.  விளையாட்டை மையபடுத்தி எடுக்கபடும் எந்த படத்திற்கும் அடிப்படை விதி ஒன்றுதான். இந்த விதிகளுக்குள் மட்டுமே எடுக்கபட்டிருந்தாலும் இந்த படம் நமக்கு தனித்து தெரியும்.  

ஒரு முக்கியமான பந்தயம் அதில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சர்வதேச ரேசருக்கான லைசன்ஸ் கிடைக்கும். என்னதான் வீடியோ கேம்ல இதே லேப்பில் பல நூறு முறை விளையாடி இருந்தாலும், நிஜத்தில் அவனால் பத்து இடங்களுக்குளே கண்டிப்பாக வரஇயலாத சூழலை சில நிமிடங்களில் பந்தயம் முடியும் முன்னமே உணர்கிறான். சிறுவயது முதல் தனக்கான மொத்த நேரத்தையும் அவன் செலவு செய்தது இந்த விளையாட்டில் மட்டுமே.


அதன் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து இன்று நிஜத்தில் உண்மையான வீரர்களுடன் பந்தய களத்தில் சென்று கொண்டிருக்கிறான். இதை தவறவிட்டால் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லை. தனக்கு மற்ற எந்த வேலையும் தெரியாது. வீட்டில் தனது தம்பியும் அப்பாவை போல கால்பந்து விளையாட்டில் சிறு சிறு போட்டிகளில் வென்று ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டான். இந்த நிலையில் தான் வீடு திரும்பி என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பார்க்ககூட முடியாத சூழல்.


 இத்தனை இக்கட்டிலும் தன்னை அரவணைத்தே வைத்திருக்கும் தாயும், சிறு சிறு புத்திமதிகளை தவிர்த்து வேறு ஏதுமே சொல்லாத தந்தையையும் நினைத்து ஒரே வினாடி கண்களை மூட அவனது அறையில் இதே பந்தயத்தை திரையில் ஆடும் கனத்தை நினைத்து பார்க்கிறான். தனது அறையை கடந்து செல்ல முற்படும் தந்தை சில வினாடிகள் கவனித்து இப்படி கேட்பார். 

நீ மட்டும் ஏன் உனது லைனை விட்டு வெளியே சென்றே விளையாடுகிறாய்?

அனைத்து வீரர்கள் தனது வாகனங்களை அவர்களது லைனிற்குள் செல்வதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த உரையாடல் நடைபெற்று கொண்டிருக்கும் கணமே பந்தய களத்தில் அவனது வாகனம் அனைத்து பாகங்களும் அப்படியே இங்கு அவனது அறையில் நாற்காலியில் விளையாடி கொண்டிருப்பவனுக்கு காரில் அமர்ந்து திரையை பார்த்து விளையாடுவதை போன்ற ஒரு CG வொர்க் வரும். அதுவரை எந்த நெருடலும் இல்லாமல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளனும், ஒரே நொடியில் இந்த கதைக்குள் தன்னை இழந்து விடுவான். ஒரு அட்டகாசமான யுக்தி, அதை ரொம்ப அருமையா கதைக்குள் ப்ளேஸ் பண்ணிருப்பாங்க.


டெனிக்கலா ரொம்ப மிரட்டலான படம். DONT MISS IT WITH FAMILY..!    


Friday, March 27, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 151.


விசாலமான ஒரே அறை. அறைக்கு இருவர். மொத்தம் 300+ அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடம். ஆங்கில படமென்றதால் நாம் நினைக்கும் மற்ற எந்த சமாச்சாரங்களும் அங்கு இல்லை. அறைக்கு இரு படுக்கைகள். மற்றும் ரசம் போன பழைய கண்ணாடியும். ஒரே ஒரு சிங்க் மட்டுமே. நாம் அணிந்திருக்கும் ஒற்றை ஆடையை கூட அதிலே துவைத்து கொள்ள வேண்டும். மற்ற சிறைசாலையை போல பகல் பொழுதில் வெளியே சூரிய வெளிச்சத்தில் விளையாட்டு போன்ற பொழுதை கழிக்கும் சமாச்சாரங்கள் ஏதும் இருக்காது.

காவலர்கள், சக கைதிகளுடன் அரட்டை ஏதுமில்லை. நம் அறையில் நம்முடன் இருக்கும் அந்த ஒரே நபர் மட்டுமே. நாளுக்கு ஒருமுறை மட்டுமே உணவு. அதற்காக அறையின் நடுவில் ஒரு பெரிய செவ்வக இடைவெளி இருக்கும். உதாரணமாக நாம் 10மாடியில் இருப்பதாக வைத்து கொண்டால். நம் அறையில் உள்ள அந்த பெரிய செவ்வக இடைவெளியில் அனைவருக்குமான உணவு முதல் தளத்தில் இருந்து ஒவ்வொரு தளமாக அந்த இடைவெளி வழியே வரும். அந்தந்த தளங்களில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். நமக்கான உணவை அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்குள் உண்ண வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்கு பின் அந்த 600+ நபர்களுக்கான உணவு அடங்கிய பெரிய மேஜை தானாக நமக்கு கீழ் உள்ள அடுத்த தளத்திற்கு செல்லும். யாரும் உணவை எடுத்து வைத்து கொள்ள அனுமதி இல்லை. அந்த சில நிமிடங்களில் நாம் உண்ணும் உணவு மட்டுமே நமக்கான அன்றைய ஆகாரம். இதில் குறிப்பிட தகுந்த ஒரே விஷயம் அங்குள்ள அனைத்து நபர்களுக்கும் வேண்டிய உணவு இருக்கும். அதாவது ஒரு நபர் இன்று புதிதாக வருகிறார் எனில் அவரது விருப்ப உணவு குறித்து கொள்ளப்பட்டு. அவை எந்த நாட்டின் உணவு வகையோ அதற்கான தேர்ந்த நபர்களின் மூலம் மிக கவனமாக தயாரிக்கப்பட்டு அந்த பிரமாண்ட உணவு மேஜையில் அன்றிலிருந்து இணைக்கபடும்.

பெரும் சூவாரசியம் நாம் இருக்கும் தளத்தில் ஒரு மாதம் மட்டுமே இருக்க முடியும். அடுத்த நாள் நாம் கண்விழிக்கையில் அடுத்த ஒரு மாதம் நாம் இருக்க போகும் தளத்தில், நம்முடன் பழைய தளத்தில் இருந்த அதே நபரோடு கண்விழிப்போம். அந்த சூவாரிசியம் கடந்த மாதம் நாம் 10வது தளத்தில் இருந்திருந்தால் இம்முறை உதாரணத்திற்கு 200வது தளத்தில் இருப்போம். அடுத்த மாதம் 35வது, 54வது அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் 6வது தளம் கூட கிடைக்கலாம். அதென்ன குறைவான எண்ணிக்கை உள்ள தளங்களில் உள்ள அதிர்ஷ்டம் என்றால்.
     
துவக்கத்தில் அந்த தினம் ஒரு முறை மட்டுமே வரும் உணவு மேஜை பற்றி குறிப்பிட்டேன் அல்லவா. அது 0,1,2,3 என மேலிருந்து துவங்கி இறுதியாகவே அந்த 300+ தளத்தை வந்தடையும். நாம் 200வது தளத்தில் இருக்கிறோமெனில் நமக்கு முன்பாக அந்த உணவு மேஜையில் கிட்டத்தட்ட 400 நபர்கள் உணவருந்தி இருப்பார்கள். அதனால் என்ன நமக்கான உணவும். அதும் விருப்ப உணவையே அவர்கள் அனுப்பி இருப்பார்களே. ஆம் கண்டிப்பாக நமக்கான உணவும் அதில் இருக்கும். ஆனால் உணவை எடுத்துவைத்து கொள்ளகூடாது, உணவருந்தவும் சில நிமிடங்கள் மட்டுமே அந்த மேஜை ஒவ்வொரு தளத்திலும் இருக்கும். மற்றும் அனைவரின் மொத்த உணவும் அந்த ஒரே மேஜையில் இருப்பதால்.

முதல் தளத்தில் இருந்தே அவரவர் தன்பக்கம் இருந்தது. தன் பார்வையில் ருசிக்க விரும்பியது என வரைமுறை இல்லாமல் உண்ண துவங்கினால் கிட்டத்தட்ட 10-15 தளங்களுக்கு முன்னமே அந்த முழு மேஜையும் அலங்கோலமாகும். அதற்கடுத்த தளங்களில் மேலும் சிதையுண்டு ஒரு 50-55வது தளங்களை எட்டும்போது எவ்வளவு தேடினாலும் மருந்துக்கும் அதில் உணவிருக்க வாய்பிருக்காது. எனில் அதன் கீழ் உள்ள தளங்களில் உள்ளோர் அந்த ஒரு மாத உணவிற்கு என்ன செய்வார்கள்? இதுதான் இந்த படத்தின் கதையா என்றால் அதுமட்டுமல்ல. அந்த சிறைச்சாலையை நாம் வசிக்கும் இந்த உலகமாக கணக்கிட்டு கொண்டால் இந்த படம் இன்னும் ஆழமாக பல விசயங்களை பேசுவதை நம்மால் உணரமுடியும்.

ஒரு திரைப்படத்திற்கு களம் எந்தளவு முக்கியம் என்பதற்கு இந்த படம் மிகச் சிறந்த எடுத்துகாட்டு. அவ்வாறு யூகித்து இப்படம் பேசும் அரசியல் தேவையில்லை என்போரும் மேம்போக்காக பார்க்கவும் சலிப்பில்லாத சமாச்சாரங்கள் உள்ள படமிது.

Monday, November 20, 2017




 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 076.

சவுண்ட் மிக்சிங்... நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து ஆஸ்கார் வரை சென்று இந்த பிரிவில் விருது வாங்கியவர் கூட உண்டு. ஆனால், என(நம)க்கு இந்த துறை பற்றி பெரிய பரிட்சயமேதுமில்லை. சவுண்ட் மிக்சிங் ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் துணை புரியும் அல்லது ஒரு படம் முழுமையடைய இந்த துறையின் பங்களிப்பு என்ன?


இந்திய அளவில்! ஏன் உலகளவில்!! வெற்றிபெற்ற பெரும் பட்ஜெட் படங்களில் கூட உணரமுடியாத இந்த துறையின் மதிப்பை. வெறும் நான்கு பாத்திரங்கள் அதிலும்.. இரு பாத்திரங்கள் மட்டுமே பெரும்பான்மை வகிக்கும் ஒரு ஒன்றரை மணிநேர கதையில் உணரமுடிந்தது. திரையில் மைக்ரோ செகண்ட் வந்து போகும் காட்சிகளில் கூட, இவர்களது உழைப்பும் நுண்ணிய செயல்பாடுகளும் பெரிதும் ஈர்த்தது.


திடும்... என பெரும் சப்தத்துடன் டைட்டில் கார்ட். ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த வனத்தின் உள்ள சிறிய வீட்டில் துவங்குகிறது. முதல் நான்கு நிமிட படம்... அடுத்த ஒன்றரை மணிநேர கதைக்கான அடித்தளம். காது கேளாத ஒரு பெண் எழுத்தாளர் தனது எழுத்து பணிக்காக தனிமை வேண்டி தங்கியுள்ள வீட்டில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் தனிமையில் சிக்கி கொள்கிறார்.
இதே பாணியில் ரத்தமும் சதையுமாக நிறைய கதைகளை பார்த்திருந்தாலும் எழுத்தாளர் & கொலைகாரன். என இரண்டே பாத்திரங்கள் மட்டுமே கொண்டு சிறிதும் பார்வையாளருக்கு சலிப்பும் ஏற்படுத்தாமல் பெரும் எதிர்பார்பையும் ஏற்படுத்தும் அதிவேக திரைக்கதை.


கதைக்களமாக ஓரே வீடு, பாத்திரங்களாக இருவர், காலம் ஓரே இரவு. என அனைத்தும் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு. மிக பிரமாண்டமான திரைக்கதையும், சுவாரசிய சம்பவங்களை கொண்டு காண்போரை சிறிதும் நகரா வண்ணம் அமைந்த செம்ம திர்ல்லர் வகையறா சினிமா.



https://www.youtube.com/watch?v=Q_P8WCbhC6s

Saturday, April 22, 2017



இரவு நேரம் ஆள்ஆரவமட்டற்ற சாலையில் செல்லும் காரில் செல்போன் பேசியபடியே நபர் வண்டியை செலுத்தும் நேரம் 11.13 மிதமான போதையில் அவனது உரையாடல் அடுத்த அரை நிமிடத்திற்கும் நீள செல்போன் அணைத்து பாதையில் கவனம் செலுத்தும் நேரம் காரின் எலக்ட்ரானிக் கடிகாரம் 11.14 க்கு மாறிய வினாடி காரின் பானேட்டின் மீது படாரென ஏதோ பொருள் விழ அதிர்ச்சியில் வாகனத்தை சுதாரித்து வனப்பகுதியை ஒட்டிய சாலையோரத்தில் நிறுத்திய கணம் கண்ணில்படும் அறிவிப்பு பலகை மான் சாலையை கடக்கும் பகுதி வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட மேலும் அதிர்ச்சியுடனே மெதுவாக கிழிறங்கி வாகனத்தின் மறுபுறம் சென்று பார்ப்பவன் முழுதுமாக நிலைக்குலைகிறான் காரணம் அங்கே விழுந்து கிடந்தது மானல்ல மனிதன்.


தன்னை சற்றே திடப்படுத்திகொண்டே அவனை எழுப்ப முயல முகம் முழுக்க சிதைந்த சடலத்தை கண்டவுடன் முழுதும்உறைந்துபோனவனுக்கு தூரத்தில் தெரியும் வாகனத்தின் ஒளி மேலும் கிலியை கிளப்ப அவசரமாக உடலை வாகனத்தை ஒட்டி மறைக்க எதிர்பார்த்தபடியே அந்த வாகனம் முன்புறம் சேதமடைந்த இந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி மான் கடந்து சென்றதாக உரையாடமுயல இவனது பதட்டமான நடவடிக்கையால் 911 எமெர்ஜென்சிக்கு இவன்முன்பே அழைத்தபடியே அந்த வாகனத்தில் வந்த பெண் கடக்க, அதிர்ச்சியில் எப்படியும் இன்னும் சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வருவது உறுதியானதால் வேகமாக தனது வாகனத்தின் பின்புறம் அந்த உடலை மறைக்கமுயன்று இயலாமல் பெரும் சிரமத்தினூடே டிக்கியினுள் துருத்தி அவசரமாக வாகனத்தை கிளப்ப முயன்ற நொடி போலீஸ் வாகனம் தன்னருகே சைரன் ஒலியுடன் நிற்க வாழ்வின் பெரும் அபாயத்தை சந்தித்த மனதுடன் வாகனத்திலிருந்து தன்னை நோக்கி வரும் காவலரை சந்திக்க ஆயத்தமாகிறான்.


மான்தான் சாலையை கடந்து சென்றதாகவும் அதற்கும் தனக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லையெனவும் வாகனம் மட்டுமே சிறிது சேதமடைந்த தாக கூறவும் காவலர் வாகனத்தின் பதிவு மற்றும் ஓட்டுனர் உரிமம் கேட்க்க வாகன பதிவு மட்டுமே இருப்பதாக காவலரிடம் கொடுக்க காவலர் அவனை வாகனத்தில் இருந்து இறங்கி பின்புறம் வருமாறு அழைக்க தனது முழு வாழ்வும் இந்த கணமே எந்த பிழையும் இளைக்காமலே முடிவுக்கு வந்ததாக நடக்க சில பல கேள்விகளுடன் காவலரிடம் விடைபெறும் நொடியில் நிறுத்தப்படுகிறான்.


சென்றவன் காரணமறிய நின்று காவலரின் முகத்தை பார்க்க அதிர்ந்த பார்வையுடன் அவரது பார்வைபோன பகுதியை இவன் காண காவலரின் பார்வை அவனது காரின் டிக்கி பகுதியில் ஒட்டியுள்ள ரத்தத்தின் மீது...
மேற்கூறிய காட்சிகள் அனைத்தும் ஒன்றரை மணிநேர படத்தில் முதல் நான்கு நிமிடம் மட்டுமே இந்த நான்கு நிமிட சிறு அதிர்வையும் அப்படியே பார்வையாளருக்கு கடத்திய அதிவேக திரைக்கதை படத்தின் இறுதி நிமிடம் வரை தொடர்கிறது.


இந்த விபத்து அதை ஒட்டிய மேலும் நான்கு கிளை கதைகள் இந்த ஐந்து கதைகளும் சந்திக்கும் புள்ளி இந்த விபத்துக்கான காரணம் புரிபடும் இடம், ஐந்தாவது கிளை கதை தொடங்கும் நிமிடம் வரை கதையின் போக்கை யூகிக்க இயலா வண்ணம் அமையபெற்ற திரைக்கதை. விபத்து நடந்த சரியான நேரத்தில் இருந்து அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு முந்தய சம்பவங்களே ஏனைய நான்கு கிளை கதைகளுக்கும் என அமையப்பெற்ற மிக துல்லிய திரைக்கதை.

Monday, April 17, 2017







WHEN YOU LOVE SOMEONE YOU CAN’T JUST THROW IT AWAY.

உங்களுக்கு நெருக்கமான எழுத்தாளருடைய புத்தகத்தின் முதல் பிரதியை ஒரு வீக்கெண்டில் தனிமையில் வாசிக்க துவங்குகிறீர்கள். அதன் முதல் அத்தியாயமே உங்களை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தினால், தொடர்ந்து வாசிப்பீர்களா? அல்லது மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு சிறிது கால இடைவெளிக்கு பின் தொடர்வீர்களா? 
   

இந்த கதையில் நாயகி பாத்திரம் இருவது ஆண்டுகளுக்கு முன் பிரிந்த  தனது முன்னாள் கணவர். அவர் எழுதி வெளியீட்டுக்கு தயாராக உள்ள புத்தகத்தின் முதல் பிரதியை இவருக்கு அனுப்புகிறார். தனது இந்நாள் கணவரும் அலுவல் தொடர்பாக வெளியூர் சென்றுவிடுகிறார். மகளும் வார விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் சென்றுவிட, தனிமையில் அந்த புத்தகத்தை வாசிக்க துவங்குகிறார்.


நாம நினைத்தது போல அந்த கதையில் தனது முன்னாள் கணவர், மனைவியாக இவர், மற்றும் தனது மகள் பாத்திரங்களாக திரையில் வருகிறார்கள். அதில் சுவாரசியம் அந்த கதை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பார்வையாளனுக்கு என்ன உணர்வை கொடுக்குமோ? அதே உணர்வை அந்த நாயகியும் வெளிப்படுத்துவது, ஒரு கதையை படிக்கும் வாசகனின் அந்த நொடி “REACTION” நான் இதுவரை திரையில் பார்த்ததாக நினைவில்லை. அதும் முழு கதைக்கும் கதையின் ஒவ்வொரு திருப்பதிற்க்கும் அந்த புத்தகத்தை வாசிக்கும் நாயகியாக “SUSAN MORROW” பாத்திரத்தில் வரும் “AMY ADAMS”   உடல்மொழி அட்டகாசம்.     


தற்போதைய கணவர் மற்றும் மகளுடனான AT PRESENT கதை. தனது முதல் கணவருடனான அறிமுகம், காதல் பூத்த தருணங்கள்,  அவர்களின் பிரிவு என போகும் பழைய கதை. முன்னால் கணவரின் புத்தகத்தில் இவர் படிக்கும் கதை என இந்த மூன்று கதைகளும் அடுத்தடுத்து வரும்படியான துளியும் குழப்பமில்லாத திரைக்கதை.
இவ்வாறு அடுத்தடுத்து வரும் இரண்டு மூன்று கதைகள் கொண்ட படங்களில் அந்த கதைகள் ஒவ்வொரு அத்தியாயமாக அதன் தொடர்ச்சி விடுபடாமலே வந்தாலும் பெரும்பாலும் பார்வையாளனை குழப்பாத வகையில் அமைவது வெகுசொற்பமே. ஆனால் இந்த படத்தில் நாயகி புத்தகத்தில் படிக்கும் கதை மற்றும் இந்நாள் கணவன் & மகளுடனான கதைகள் மட்டுமே அதன் தொடர்ச்சி விடுபடாமல் அமையப்பெற்றிருக்கும். ஏனெனில் அவை தற்பொழுது நிகழுபவை.
தனது முன்னால் கணவனுடனான கதை அவ்வாறு தொடர்ச்சியாக அமையாததற்கு காரணம். நமது பழைய எந்த சம்பவங்களை நினைத்தாலும் அவை நமக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் இது இது நடந்ததென கோர்வையாக வராது. அதே போல இந்த கதை மட்டும் நாயகியின் நினைவடுக்கில் இருந்து வெளிப்படுவதால் அவையும் தொடர்ச்சியாக வராது.


இருப்பினும் இந்த மூன்று கதைகளில் பெரும்பான்மை பார்வையாளனை கவர்ந்தது நாயகியின் முன்னால் கணவருடனான கதையே. காட்சிகளில் தொடர்பின்மை இருப்பினும் எந்த இடத்திலும் நம் முகத்தில் குழப்ப ரேகை உருவாகாமல் செய்தது எடிட்டிங்.                                
இவரது முன்னாள் கணவனுடனான காதல் அத்தியாயங்களே நாம் இளைப்பாறும் பூந்தோட்டம். ஏனெனில் அவர் புத்தகத்தில் படிக்கும் கதை நம்மை வரட்சியான பொட்டல் காட்டில் திகிலுடன் அலையசெய்யும். “JAKE GYLLENHAAL” அமியின் முன்னால் கணவனாகவும், அந்த புத்தகத்தின் நாயகன் பாத்திரத்திலும் பிரமாதபடுத்தியுள்ளார்.   

Tuesday, April 11, 2017




படம் துவங்கிய முதல் நொடியில் வரும் இசை ஏதோ அமானுசிய கதையோ என நிறுத்த முற்ப்படுகையில்.  கிட்டத்தட்ட ஐந்தாவது நொடியில் வரும் பியானோவின் பின்னணி ஒலி ஒன்று போதும் அடுத்த இரண்டு மணிநேரமும் கடைசி ஷாட் வரை இந்த கதையை ரசிக்க.
 
1986 - KHANDWA வட இந்தியாவிலுள்ள சிறு நகரில் துவங்கும் கதை. 10  மற்றும் 6 வயது வயதுடைய (காக்கா முட்டை) சிறுவர்கள்.  அதே போல இரயிலில் நிலக்கரி திருடி அதில் வரும் சிறு தொகையை குவாரியில் கல் உடைத்து பிழைக்கும் தனது தாயிடம் கொடுப்பது என ஏழ்மையிலும் நிறைவாக தனது குட்டி தங்கையுடன் நாட்களை கழிக்கின்றனர்.
 
எல்லாம் நல்லவிதமா போனாதான் சினிமாகாரங்களுக்கு பிடிக்காதே. ஒரு நாள் தங்கையை பார்த்து கொள்ளும் படி சொல்லி தாய் பணிக்குசெல்கிறார். அருகில் சில கிலோமீட்டரில் உள்ள ரயில்வே ஜங்ஷனில் கிடைக்கும் வேலைக்கு கிளம்பும் அண்ணனிடம் அடம் பிடித்து கிளம்புகிறான் தம்பி சரூ. அங்கு தூங்கி வழியும் சரூவை பிளாட்பாரமில் படுக்கவைத்து விட்டு பணிக்கு செல்கிறான்.
குளிர் அதிகமாக அருகில் நின்று கொண்டிருக்கும் ரயிலில் ஏறி படுத்துகொள்ளும் சரூவிற்கு தெரியாது அந்த காலி ரயில் வழியில் எங்கும் நிற்காமல் அடுத்த இருநாட்கள் 1600 கிலோமீட்டர் பயணித்து கொல்கத்தா சென்றடைய போவது. அவ்வாறே நடக்க தனது பாசமான தாய், தங்கை, அண்ணனை பிரிந்த இந்த சிறுவனது அடுத்த 25 ஆண்டு கால வாழ்க்கையே இந்தப்படம். 
 
இதே போல சிறு வயதில் தொலைந்த சிறுவன் சமூக அமைப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டு. பின் 25 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்தை சந்தித்த உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்ட அற்புத சினிமா. கடந்த வருட ஆஸ்காரில் ஆறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு “BEST SUPPORTING ACTOR” விருதை தட்டி சென்ற படம். GOLDEN GLOBE மற்றும் BAFTA விழும் இதே விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
 
பிரிவு, சோகம், ஏமாற்றம் என அனைத்தையும் கலந்து பார்வையாளனின் மனதை வெகு எளிதில் கணமாக்க அனைத்து இலக்கணங்களும் அமையப்பெற்ற கதை. ஆனால் மிகநேர்மையாக கதையின் போக்கை எந்த இடத்திலும் வளைக்காமல், அதன் இயல்பிலிருந்தே சொன்ன வகையில் நம் மனதில் இக்கதையின் பால் மிகப்பெரும் ஈர்ப்பு ஏற்படுத்துகிறது. கதைத்தளம் இந்தியாவில் நடப்பதால் நாம் பார்ப்பது மராத்தி போன்ற ஏதோ ஒரு இந்தியபடம் என்ற நினைவே வருமன்றி ஹாலிவுட் படத்திற்கான வண்ணம் ஒரு ஷாட்டில் கூட வெளிப்படுத்தாததே இதன் உருவாக்களுக்கான மிகப்பெரும் வெற்றி.

 சரூ ஆஸ்திரேலியா அடைந்து அந்த தம்பதியர் அவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டு, அந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு மனம் பழகியபின்னும் தனது ரத்த சொந்தங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டுமெனில் அவர்களுடனான காட்சிகளில் அந்த சிறுவன் இருக்கும் முதல் 20 நிமிட காட்சிகளை பற்றி மட்டுமே தனியே ஒரு பதிவு எழுதலாம். 

ஏழ்மையிலும் அந்த தாய் தனது குழந்தைகளிடத்தில் நடந்துகொள்ளும்  பாங்கு. ஒரே காட்சிதான் என்ற போதிலும் தனது வருமானத்தில் வீட்டுக்கு பால் வாங்கிவரும் சகோதரனுடன் ஒரு பூவை கொண்டுவந்து தனது குட்டி சகோதரிக்கு கொடுக்கும் காட்சி. ஒரு வேலை உணவிற்காக கொல்கத்தா வீதிகளில் அலையும் பொழுதில் கிடைக்கும் சிறு உணவையும் தனது தாயுடன் பகிர்ந்து கொள்வதாக நினைத்து சிலாகித்து கொள்வது. தனக்கு எல்லாமுமாக இருந்த அண்ணனை நினைத்து அனைத்து நிகழ்வுகளிலும் நினைத்து கொள்வது, குறிப்பாக இந்திய நண்பனது வீட்டில் நடக்கும் விருந்தில் ஜிலேபியை பார்த்து கலந்குமிடம் என படம் முழுக்க சோபிக்கிறார் DEV PATEL. 

SLUM வகையறா கதை அனைத்துமே அவர்களை அதிக அழுக்குடனும், அந்த பகுதியை எவ்வளவு அருவருப்பாக காட்டபடுகிறதோ அதுவே நேர்மையான, யதார்த்தமான கதை என எடுத்து கொள்வார்களோ என்னவோ? ஆனால் சரு என்ற சிறுவனது பார்வையில் இந்த அனைத்து பகுதிகளையும் அதற்கே உரிய அழகியலுடன் காண்பித்த வகையில் GREIG FRASTER காமெராவுக்கு கைகுலுக்கல்கள்.

Sunday, April 9, 2017






ஓவியம் வரைவதை தொழிலாக கொண்ட மனமொத்த தம்பதிகள்.  தங்களது ஓவியத்திற்கான அங்கீகாரதிற்க்கான போராட்டத்தில் தனது கணவனையே பெண் மாடலாக்கி வரைந்த ஓவியத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தால் அவளின் கனவான பாரிஸ் வரை செல்லும் வாய்ப்பு.  இதனிடையே தனது சிறு வயதில் மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த அவனது பெண் உணர்வு மெல்ல மேலேலகிறது. முழுதாக தன்னை பெண்ணாக உணர அவனது மனைவியின் அதற்க்கு பின்னான செயல்பாடுகள்??


எந்த படமும் ஆரம்பித்த  முதல் சில நொடிகளே தீர்மானிக்கும் நான் முழுதும்  பார்க்க  தகுதியானவனா? இல்லையா? என்பதை.  இப்படத்தின் மீதான எனது ஈர்ப்பு  முதல் நொடி டைட்டில் கார்ட்டில் இருந்தே  துவங்குகிறது. சமீபத்திய எந்த திரைப்படத்திலும் இந்த அனைத்து அம்சங்களும் உள்ள டைட்டில் கார்ட் நான் பார்த்ததில்லை.




நாயகன்: EDDIE REDMAYNE 

 வீட்டில் தனது மனைவியின் உள்ளாடையை முதல் முறை தனது குழந்தையை தொடும் ஒரு தாயின் பாசத்தோடு கையாள்வதும், மனைவியின் உதட்டு சாயத்தை காதலுடன் தனது விரல்களால் சரிசெய்யும் போதும், தன் மனைவியின் உடையை போர்த்தியபடி ஓவியத்திற்கு அமரும் இடத்தில் அவனது விரல்கள் அந்த உடையுடன் ஒரு (ஊமை) காதல் அத்யாயமே நிகழும் நொடிகளில், தான் பெண்ணாகவே வாழ விரும்புவதை தனது மனைவிக்கு உணரவைக்க துடிக்கும் நிமிடங்கள், மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணியை காணும் போது தன்னை அறியாமல் தனது கைகளால் வயிற்றை தடவும் மைக்ரோ நொடிகள் என உடலில் உள்ள ஒவ்வொரு அனுவிலும் பெண்மை நிரம்பிய ஒருத்தி அல்லது ஒருவனால் கூட இந்த பாத்திரத்திற்கு இவ்வளவு முழுமை சேர்க்க இயலாது என்பது சத்தியம்.

நாயகி : ALICA VIKANDER

முழுக்க நாயகனுடனே பயணிக்கும் கதையில் சிறு சிறு மாற்றம் முதல் அவரை சார்ந்தே இயங்கும் திரைக்கதை ஆனாலும் நம்மை அனைத்து காட்சியிலும் கவனிக்கவைத்த ஒன்றே இவரின் உழைப்பிற்கான சான்று
மொத்தத்தில் இது உண்மையான வேற லெவல் சினிமா.

Thursday, April 6, 2017





 பதினேழு வயதில் கடத்தப்பட்டு ஒரு சிறு அறையில் சிறைவைக்கப்பட்ட பெண்/  ஏழு வருடங்களாக வெளி உலகையே காணாமல் கடத்தப்பட்டவனால் குழந்தைக்கும் தாயாகி அச்சிறுவனும் தனது வாழ்வின் ஐந்து வருடங்களும் வெளி உலகென்ற ஒன்றையே  தனது தாய் எவ்வளவு எடுத்து கூறியும் நம்பாமல் அந்த அறை மட்டுமே உண்மை உலகமென நம்பி இருக்கிறான். கடத்தப்பட்டவனிடம் இருந்து தப்பித்து தனது மகனுக்கு உண்மை உலகை அறிமுகப்படுத்த போராடும் அபலை தாயின் உணர்ச்சி போராட்டமே இந்த திரைப்படம்.


அந்த அறையில் காலை கண்விழிக்கும் மகன் எழுந்தவுடன் அந்த அறையில் உள்ள TV,  WASH BASIN, TEDDY BEAR க்கு  Good Morning சொல்லும் ஆரம்ப காட்சியே நம்மையும் அந்த குட்டி அறைக்குள்ளே சிறைப்படுத்தும்.  படத்தின் முதல்பாதி முழுதும் அந்த சிறு அறைக்குள்ளே வெறும் இரு பாத்திரங்களை கொண்டே நகர்ந்தாலும் நம்மால் சிறு சோர்வும் சலிப்பும் ஏற்படுத்தாத காட்சிகளும் வசனங்களும் இப்படத்திற்கு ஆகபெரும் பலம்.


ஜன்னல்களற்ற அந்த அறையின் மேல் பகுதியல் சிறு கண்ணாடியின் மேல் விழுந்த காய்ந்த சருகை தன் மகனுக்கு காட்டி வெளிஉலகை உண்மை என நிருபிக்கமுயலும் இடம், பதினேழு வயதில் தொலைந்த மகள் ஏழு வருடங்களுக்கு பின் ஐந்து வயது மகனுடன் காணும் தந்தை முகத்தை திருப்ப கலங்கிய விழி கனத்த இதயத்தோடு தனது தந்தையை காணவைக்கும் இடம் என பிரமாதப்படுத்தும் தாய் பாத்திரம்.


Friday, March 31, 2017








 AUG’1944 நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மன் கட்டுபாட்டில் உள்ள பாரிஸ் நகரமே கதைக்களம்.  ஜெர்மானியரின் கட்டுப்பாடு மெல்ல தளர்ந்து சுதந்திர பாரிஸ் உதயத்திற்கு வெகு சில நாட்களே மீதம் உள்ள நிலையில் நடைபெறும் சம்பவங்களே இப்படம்.

உலக பிரசித்தி பெற்ற பாரிசின் பொக்கிஷங்களாக கருதப்படும் அவர்களின் விலைமதிப்பற்ற ஓவியங்களை ஜெர்மானிய ராணுவ உயர் அதிகாரி பாரிசிலிருந்து ரயில் மூலம் ஜெர்மன் கொண்டு செல்ல முயற்சிக்கறார். இன்னும் சில நாட்களில் சுதந்திர பாரிஸ் உதயமான பின் ஓவியங்கள் கொண்டு செல்ல சாத்தியம் இல்லாதபடியால், உடனடியாக எடுத்து செல்ல முயல்கிறார். இதை அறிந்து கொண்டு அவரது முயற்சியை முறியடித்து, அந்த ஓவியங்களை காப்பாற்றும் முயற்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரிஸ் ரயில்வே துறையினர் ஜெர்மானிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1964 ல் ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழிகளில் வெளிவந்தது இப்படம்.


அந்த காலகட்டத்தில் வெளிவந்து இன்றும் நான் சிலாகித்து கூறும் FIVE MAN ARMY (1969) மற்றும் GUNS OF NAVARONE (1961) படங்களை விட பிரமாண்ட உருவாக்கலும், ACTION காட்சிகளும் இன்றும் காண்போரை ஆச்சர்யபடுத்தும். அதற்க்கு மிக முக்கியகாரணி நமக்கு இன்றும் ஆச்சர்யமாக விளங்கும் ரயிலை கதை முழுக்க பயன்படுத்திய விதம். இன்றும் ரயில் சம்பந்தப்பட்ட கதைகளில் காட்டப்படாத பல விஷயங்கள் என்ஜின் பழுதுபார்க்கும் கேரேஜ், ஒவ்வொரு ஸ்டேசனிலும் ஸ்டேசன் மாஸ்டர், TRACKMAN, கேட் கீப்பர் உட்பட அனைவரின் வேலை முறையை மிக துல்லியமாக பதிவு செய்த வகையில் இது மிக முக்கிய சினிமா.


பழுதடைந்த என்ஜின் ராணுவ அதிகாரியின் உத்தரவுக்கு பயந்து பிரித்து பழுது பார்க்கும் ரயில்வே துறையின் கேரேஜ் இதற்க்கு முன் சினிமாவில் பார்த்ததாக நினைவில்லை. சரிசெய்த என்ஜினை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் ரயில் நிலையம் கொண்டுவரும் வழியில் இங்கிலாந்தின் போர் விமானம் தாக்குதல் நடத்தும் காட்சி(யில் மரங்களடர்ந்த காட்டு பகுதியில் விமானத்திலிருந்து ரயில்வே ட்ராக்கை காட்டும் ஒரு ஷாட் “மெக்கனஸ் கோல்ட்” படத்தில் முதல் ஷாட் தரும் சிலிர்ப்பிற்கு ஒப்பானது) மேலும் அந்த ரயிலை தாமதப்படுத்த இரண்டு என்ஜின்களை மோதவிட்டு ட்ராக்கை சேதப்படுத்த எடுக்கும் முயற்சிகள் என பெரும்பாலான காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.


அந்த கால திரைப்படங்கள் பெரும்பாலானவை தற்போது காண நேர்கையில் அவர்கள் பயன்படுத்திய யுக்திகள்யாவும் இப்பொழுது நமக்கு பெரும் சலிப்பை ஏற்படுத்தினாலும் “அந்த காலத்திலேயே எப்படி எடுதிருக்கான்யா” சொல்லி கடந்து போவது மட்டுமே பெரும்பாலான படங்களில் நிகழும். ஆனால் இது போன்ற அறிய சில படங்கள் மட்டுமே காலத்தையும் கடந்து இன்றும் இதன் உருவாக்கல் நமக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தும். அக்ஷன் & சேஸிங் விரும்பிகளுக்கு மட்டுமின்றி ரயிலை காதலிப்பவர்கள் தவறவிடகூடாத படம்.

Search This Blog