Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, June 30, 2020


WEB SERIES – 007.

PAATAL LOK – SEASON 01 – EPISODES 09 – பாதாள உலகம்

தனக்கான வாய்ப்புக்காக  காத்திருந்து அதில் தனது முழுத்திறனையும் செலுத்தி வெற்றிபெறுபவர்  குறைந்த சதவிகிதத்தில் உள்ள ஒரு வகையினர். தனக்கு கிடைத்த பணி அல்லது தனது வருமானத்திலேயே திருப்தி அடைந்து, வேறு எந்த புதிய முயற்சியும் இல்லாமல் அதிலேயே காலம் தள்ளும் அதிக சதவிகிதத்தில் உள்ளோர். நாம் திரைப்படங்களில் அதிகம் பார்ப்பது இந்த குறைந்த சதவிகித பாத்திரங்களையே. காரணம் அவர்கள் வெற்றிபெற சந்தித்த சவால்கள். அதை எவ்வாறு எதிர்கொண்டு அவர்கள் வெற்றி பெற்றார்கள் போன்ற அதிக சூவாரசிய பக்கங்கள் இருப்பதால் இருக்கலாம்.


இங்கு அதிகம் பேசப்படாத, நம்மில் பெரும்பான்மை சதவிகிதத்தினர், அதாவது தனக்கான எந்த வருங்கால திட்டங்களும் இல்லாமல். தன் பணியில் எந்த புதிய வழிமுறைகளையும் சோதிக்காமல். மற்றவர்களுக்கு மட்டும் உபதேசங்கள் செய்தபடியே தனக்கு விதிக்கப்பட்டது இதுமட்டுமே என்ற வகையை சார்ந்தவரே இந்த கதையின் மூலபாத்திரம்.


குடும்ப பஞ்சாயத்துக்களே அதிகம் நடைபெறும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியம் அதிகாரி இவர். ஒரு கொலைக்கு திட்டமிட்டு அதை செயல்படுத்த செல்லும் நால்வரை வழியிலேயே மடக்கி CBI அதிகாரிகள் கைது செய்கின்றனர். அப்பகுதி இவரின் எல்லைக்கு உட்பட்டு வருவதால். இவரே நேரடியாக சென்று அவர்களை காவல் நிலையம் அழைத்து வருகிறார்.


இவரின் கீழ் பணியில் சேர்ந்து இன்று இவருக்கு உயர்அதிகாரியாக இருப்பவரே, இவருக்கு பதில் வேறு அதிகாரிகளை பரிந்துரைக்க. அதற்கான அவகாசம் இல்லாததால் இவரே இந்த வழக்கை எடுத்துகொள்ள CBI நிர்பந்திக்கிறது. முதல் எபிசோடின் கால்பகுதிகளிலே இந்த வழக்கு இவரின் கைக்கு வந்துவிடுகிறது.


வெறும் கொலை முயற்சியாக இல்லாமல் இவ்வழக்கு இவரின் மொத்த திறனையும் வெளிக்கொண்டு வந்தாலும் அனைத்து பக்கங்களும் பெரும் மர்மங்கள் மட்டுமே நிறைந்தது என தெரியாமல், இவர் பாணியில் முதல் கட்ட விசாரணையை துவக்குகிறார். ஆங்காங்கே இவரால் யூகிக்கமுடிந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்க. இதில் தொடர்புடைய ஒருவனும் தப்பித்து விடுகிறான்.

அவனின் பிணத்தை கைப்பற்றிய பின்னே இவ்வழக்கின் கணமும். அதன் மர்மபின்னணி குறித்தும் முதல்முறை லேசாக உணர துவங்குகிறார். தனக்கு கீழ் பணிபுரிந்து. இன்று அவருக்கு உயரதிகாரியாக உள்ளவர்க்கு இவரின் மேல் உள்ள அலட்சிய மனோபாவம். தற்பொழுது இவரிடம் பயிற்சி அதிகாரியாக இருப்பவர் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்று. பணி நியமனத்திற்க்கு  காத்திருக்கிறார். இதுபோக இவரின் மகன் மற்றும் இவரின் மனைவியிடமும் சமூகஉறவு இல்லாத இந்த சூழலில். தற்போது தனக்கு ஒரே பிடிமானமாக உள்ள இந்த வழக்கில் எப்படியும் வென்றே தீரவேண்டிய சூழல்.


இது இந்த சீரீஸ்ன் முழுகதையல்ல கிட்டத்தட்ட இதுதான் இந்தகதையின் துவக்கம். இரண்டாம் எபிசோடிலே இந்த கதை சூடுபிடிக்க துவங்கிடும். மேலே குறிப்பிட்ட பாத்திரங்களின் நடவடிக்கைகளும். கைதுசெய்யபட்ட அந்த நால்வரின் தனித்தனி முன்கதைகளும். அதை கண்டுபிடிக்க இந்த அதிகாரியின் முயற்சிகளும். அதால் இவர் சந்திக்கும் சவால்கள் என இதன் எந்த பாகமும் நாம் பாதியில் நிறுத்தி பின் தொடரலாம் என்ற உணர்வை இதன் இறுதிவரை தராது.


நடிகை அனுஷ்கா ஷர்மாவோட தயாரிப்பு. மும்பை மகாராஷ்டிரா சுத்தி கிட்டத்தட்ட 100+ நகரங்கள்ல படபிடிப்பு நடத்திருக்காங்க. அதை நம்ம ஸ்க்ரீன்ல பாக்கும்போதே. அமேசான் ப்ரைம்ல காண கிடைக்கிறது.

Tuesday, June 23, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 167.

நகைச்சுவை படங்களை போலவே இந்த காதல் கதைகளை மையமாக கொண்ட கதைகளிலும் பெரும் சிக்கல், அவை வேறு படங்களையோ, அல்லது ஏதேனும் மற்ற படங்களின் ஒரு காட்சிகளையோ நினைவுபடுத்தாமல் இருப்பது. அதும் சமீபமாக பெரும்பாலோர் தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி படங்களை பார்க்கும் இந்த காலகட்டத்தில் வேறு எந்த படங்களின் சாயல் இல்லாத முழு நீள காதல் படங்கள் பார்க்கும் வாய்ப்பு வெகுவாக குறைவு.


இப்படியான எந்த சிக்கல் திணறல் இல்லாத காட்சி அமைப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில். வேறு எந்த படங்களின் சாயல் துளியும் இல்லாத  ஆனால் வழக்கமான கதைகளத்தில் மீண்டும் கேரளத்தில் இருந்து ஒரு நல்ல சினிமா.


அதே பார்க்காமலே தொலைபேசியில் காதல். அதே ஒருவர் மற்றொருவரின் தோற்றம் பற்றிய சிந்தனை. சதா அவர்களின் நினைவில் மிதப்பது. அதே நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை கைவிடுவதில்லை போன்ற வசனங்கள். அதே இறுதியாக சந்திப்பு. எல்லாமும் அதே. ஆனால் எங்கிருந்து வந்தது இந்த ஈர்ப்பு, ஒரு வசீகரம் இந்த படத்தின்மேல்.


“ANNA BEN” அதே கும்பளாங்கி நைட்ஸ் சுருட்ட தலைச்சி. இதில் முதன்மையான பாத்திரத்தில் வரும் மற்ற இருவருக்கும் கூட சற்று சிந்தித்தால் மாற்று நடிகர்கள் தோன்றலாம். ஆனால் Annaவுக்கு மாற்றாக நாம் வேறு எவரையும் சிந்திக்கவே தற்போது வரை முடியாததே, அவருக்கு கிடைத்த முதல் வெற்றி.


அடுத்து துணை பாத்திரங்கள் ஒரு கதையை உண்மைத்தன்மை பெற எத்தனை முக்கியம் என்பது. குறிப்பாக Annaவின் குடும்பம் மற்றும் அவரது தோழி. இவரை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வரும் வேளையில். அவரது அம்மா சமையல்கட்டில் மும்மரமாக இருக்க. அவரின் அப்பா பாத்திரம் மனைவியிடம் இடுப்பில் இழுத்து சொறுகிருக்கும் நைட்டியை -இறக்கிவிட சொல்லும் காட்சி.

அவன் ஒரு ஆட்டோ ஓட்டுனர். ஒருமுறை இவளிடம் பேசியவாறே மருத்துவமனையில் இறங்கும் பெண்மணியிடம் பணம் வேறு ஒரு சமயம் வாங்கி கொள்வதாக சொன்னதும், இவளது முகத்தில் சட்டென தோன்றி மறையும் பிரகாசம். தான் ஒரு நல்லவனைதான் தேர்ந்தெடுத்து இருப்பதாக ஒரு பெருமையும் அதனுள் இருக்கும் இவை சில சில வினாடிகள் வந்து செல்லும் காட்சிகள்தான். ஆனால் படம் நெடுக இப்படியான காட்சிகள்தான் நம்மை படத்தின் ஊடே பயணப்பட வைப்பது.


அவனின் சகோதரிகளிடம் பேசியபின்பே முதல் முறையாக அவளே அவனுக்கு கால் செய்வது. அதன்பின்னே அவனை நேரில் பார்க்க விரும்புவதாகவும் சொல்வது. அவர்கள் வீட்டிலிருந்து டவுனுக்கு செல்லும் பாதையை வெறும் அழகுக்காக வெவ்வேறு இடங்களை பயன்படுத்தாமல், அந்த ஒரு வழியே காட்சிபடுத்தி இருப்பது. இப்படியான கவனசிதறலை கூடுமானவரை தவிர்த்து இருப்பதும் இந்த கதையின் மீதான சூவாரசியத்திற்க்கு காரணம்.


குறிப்பாக ஆரம்ப காட்சிகளில் கடற்கரையை பற்றிய வசனம் ஒன்றும், கிட்டத்தட்ட படத்தின் பாதிக்குமேல் ஒரு இடத்திலும் வரும். யாரும் எதிர்பாரா இறுதியில் அதை ANNA கேட்கும்காட்சி அதுவரை நம்மையும் அழுத்தியிருந்த அந்த பாரம் குறைந்து சகஜநிலைக்கு அவளுடனே செல்வோம். நெட்டிவிட்டி அழகாக்குவது துணை பாத்திரங்களுடே லோகேஷ்ன்ஸ். .


JIMSHI KHALID இவர்தான் மாயநதி, அனுராக கரிக்கின் வெள்ளம் படங்கள் பண்ணவர். இந்த கதையை சூவாரசியமா நம்மள பாக்கவெச்சதுல ரொம்ப முக்கிய பங்கு இவருது. அதும் படத்தோட முடிவுல கடைசி ஷாட். படத்தில் அதே இடம் இதற்க்கு முன் சிலமுறை வரும். ஆனால் இறுதியாக அந்த இடத்தோட பிரமாண்டத்தை ரொம்ப எளிமையா ஒரு கவிதைமாறி காட்சிபடுத்தி இருப்பார். அதான் இந்த படத்தோட கதையும் கூட.


படம் வெறும் காதல் மட்டுமில்லாம இரண்டாம் பாதி முழுக்க நம்ம -இதயதுடிப்ப எகிறவெச்சிடும். NETFLIXல் காணகிடைக்கிறது.    




Sunday, June 7, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 166.


2016 மும்பையில் ஒரு நடுத்தரவர்க்கத்திற்கான அடுக்குமாடி குடியிருப்பு. இந்த கதைக்கான பிரதானகளம். அந்த பழைய கட்டிடத்தின் பாதிப்பு ஏதேனும் ஒரு வகையில் அனைத்து வீடுகளிலும் இருக்கும். சீலிங்கில் நீர் கசிவது. பாத்திரம் துலக்கும் சிங்க்கில் தண்ணீர் போகாமல் இருப்பது இந்தமாறி. இந்த கதைக்கான மொத்த பெரும்பான்மையான பாத்திரங்களும் இந்த குடியிருப்பை சேர்ந்தவங்கதான்.


முக்கிய பாத்திரங்களான நாயகி வங்கியில் கேஷியர். கான்வெண்ட்டில் படிக்கும் ஒரே மகன். அவர் கணவர் நிரந்தர வேலை ஏதும் இல்லாமல் சில வேலைகள் செய்து வருகிறார். கிதார் வாசிப்பாளர் அது சம்பந்தமான பணிகளே அவருக்கு பிரதானம். ஆதலால் வருமானம் பெரிதாக ஏதும் இல்லை. KINGDOM சீரீஸ்க்கு பின்னால் காத்திருந்து நேற்று NETFLIXல் வந்ததும் பார்த்த திரைப்படம்.


இந்த கதையின் பிரதான திருப்பம் இந்த பழைய குடியிருப்பின் மூலமே நிகழ்வதால், காட்சிகள் பெரும்பாலும் அதைசுற்றியே. அதிலும் இவர்களுக்குள் வரும் வாதங்கள் அனைத்துக்கும் துவக்கபுள்ளி அந்த வீட்டிலுள்ள குறைகளால்தான் இருக்கும். இப்படி அதிகம் காட்சிக்கும், விவாதத்துக்கும் உள்ளாகும் அந்த திருப்பம். இதன் இயக்குனர் தவிர்த்து, ட்ரைலரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காட்சி.


குளியல்அறையில் நீர் வெளியேறும் குழாயில் ஏதும் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க. சல்லடை போன்ற வட்டவடிவ சிறுதுளைகள் உள்ள ஒன்றை பொருத்துவார்களே. அதை நீக்கினால் நீர் நேரடியாக அந்த குழாயில் செல்லும். இப்பொழுது அந்த குழாயுக்குள் செல்லும்படியான நீண்ட கூண்டு போன்ற அமைப்பில், சிறு பாலிதீன் பைகளில் சுற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் பதுக்கிவைக்கபடுகிறது. அந்த தளத்தின் நேர்கீழே நாயகியின் வீடு. அவரின் வீட்டில் அடிக்கடி பாத்திரம் துலக்கும் சிங்கின் குழாய் அடைத்துக்கொள்ளும்.


எதிர்பாராவிதமாக ஒரு அதிகாலை அந்த குழாயின் வழியே அடைபட்ட நீர் பீறிட்டு இவரின் சமையலறையை நனைக்க. அதன்வழியே சில பணம் சுற்றப்பட்ட சில பாலிதீன் பைகள் இவருக்கு கிடைக்கிறது. இவ்வாறே சிலமுறை நிகழ்ந்து பல பைகள் இவர் வசமாகிறது.
இந்த சூழலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வருகிறது. இவரோ வங்கியில் கேஷியர். இப்படி அனைத்து சம்பவங்களும் அடுத்தடுத்த பெரும் சூவாரசியங்களை உள்ளடக்கியவை. ஆனால் திரைக்கதை ஒரு நிதானத்தோடு நகர்கிறது இக்கதையின் நாயகனை போன்றே. 

தன் ஒருவரின் வருமானத்தில் பற்றாகுறையாக குடும்பம் இருந்தும். தன்கணவரின் கடன்சுமையையும் தானே சுமக்கும் சூழலிலும், வீட்டு வேளைகளில் எந்த சிறுஉதவியும் அவர் செய்யாதபோதும் பெரிதாக அலட்டி கொள்ளாதவள். அவனுடன் இந்த சிறுசிறு உரசல்கள் மட்டுமின்றி, அவனது வேலையில்லாத, அவனால் எந்த உபகாரங்களும் இல்லாத குறையை என்றும் சொல்லி காட்டாதவளாய் தன்வரும்படியில் குடும்பம் நடத்துபவள். தன் ஒரே குறையான பண பற்றாக்குறையை தீர்க்கும் பணமும் கிடைத்ததும். இவளின் நடவடிக்ககளில் ஏற்படும் மாற்றம். இப்படி முழுகதையும் இவங்களையும், அந்த குடியிருப்பையும் மட்டுமே சுத்தி நகரும்.
முழுகதையும் அவளை மட்டுமே பிரதானமாக சுழலும் பாத்திரத்திற்கு பொருத்தமான அந்த பேசும் விழிகள். பாவங்களை அந்த இதழின் வரிகளில் நாட்டியமாடவிடும் கனிந்த இதழ்கள். இப்படி எந்த வார்த்தைகளுக்குள் எவராலும் பொருத்திடஇயலாதவள். முழுநேரம் அலுவலகத்திலும், இடைப்பட்ட வீட்டிலும் இவள் வெறுமனே அமர்ந்திருக்கும்படியான ஒரே ஒரு ஷாட்கூட இருக்காது. முழுக்க வெறுமை மட்டுமே சூழ்ந்த உலகம் இவளுடையது. இவளும் நமக்காக ஒப்பனையுடனும், சற்று கீழ்இறக்கிய சேலையும் அணிந்த காட்சி ஒன்று இந்த கதையில் உள்ளது. அதுவரை பகலில் முழுக்க புடவையும், இரவில் பாதங்கள் கூட பார்வையில் படாத நைட்டி உடைகளில் மட்டுமே அவள் எத்தனை அழகானவள் என நம்மை உணரவைக்கும் காட்சிஅது. 


வேறு எந்த இயக்குனரும் இப்படியான எந்த பெரும் வசீகரமும், ஒப்பனைகள் பொருந்தா நாயகியை இந்த கதைக்கு தேர்வுசெய்ய வாய்ப்பே இல்லை. இந்த திரைகதையிலும் அவரின் இயக்கமும், அவருடைய நிறைய ஷாட்ஸ் இந்த முழுகதையையும் நாம் எங்கும் பாதியில் நிறுத்திடாமல் கொண்டுபோக மிகமுக்கிய காரணம். அதிலும் இரவு படுக்கையில் மகனின் இருபுறமும் அமர்ந்து கணவன், மனைவிக்குள் நடக்கும் அந்த சிங்கள் டேக் விவாதம். இரவில் பிரிட்ஜ்யை திறந்து தண்ணீர் கேனை எடுக்கும் காட்சியில் அவரின் கடந்த காலத்தோடு இணைப்பது.


ஒரு பொறுப்பில்லா தந்தை. அவரோட முதல் காட்சி எழுந்து படுக்கையை கூட சரிசெய்யாமல் கையில் மொபைலுடன் வந்து பிஸ்கட் பாக்ஸ் ஓப்பன் பண்ணி எடுத்திட்டு மூடாமலே, முகம்கழுவி துண்டையும் மகனின் மீது வீசி சென்றிடுவார். கதையோடு பார்க்கையில் சில பாத்திரங்கள் மற்றும் சில சம்பாஷனைகளோடு இருக்கும். அதனால் இவரின் செய்கைகள் மீது நம் கவனம் செல்லாது. இதற்கான அடுத்த காட்சியில் இயக்குனர் அவரின் மகனை கொண்டு நமக்கு உணர்த்திட செய்வார்.



இதுபோக DEMONETIZATION இந்த கதையினுள்ளே வருவதால் அரசை அசால்ட்டாக பல இடங்களிலும். கதையோடே சில இடங்களிலும் தொம்சம் பண்ணிருக்கார். NETFLIXல் காணகிடைக்கிறது.  

Thursday, May 14, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 165.

1989 களில் அதுவரை இல்லாதவகையில் பெரும்மழைக்கு முந்தைய கருமேகங்கள் மற்றும் இடி மின்னலும் சூழ்ந்த சிறுநகரம். கிடார் வாசிப்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறுவன்.  ஒவ்வொரு முறையும் தான் வாசிப்பதை வீடியோவாக பதிவு செய்து தொலைகாட்சியில் அதை கண்டுகளிப்பது அவனது பிரதான பொழுதுபோக்கு. அப்படியான ஒரு நாளில்  தனது பக்கத்து வீட்டிலிருந்து  ஏதோ வழக்கத்துக்கு மாறான ஓசை கேட்க. அங்கு செல்பவன், அந்த வீட்டு பெண்மணி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்கிறான். உடன் அவள் கணவன் கையில் ஆயுதத்துடன் இருப்பதையும் கண்டு, அங்கிருந்து தப்பிசெல்ல விரைகிறான். அந்த வீட்டிலிருந்து வெளியேறி சட்டென சாலையை கடக்கையில் எதிர்பாராவிதமாக வாகனத்தில் மோதி இறந்துவிடுகிறான்.


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் இப்படியான ஒரு அசாதாரண சூழல். 1989களுக்கு பின் இப்படியான Strom மீண்டும் நம்நகரில் FM எங்கோ ஒலித்துகொண்டிருக்க. அதே இடி மின்னலுடன் கருமேகம் சூழ்ந்த அந்த நகருக்கு குடிவந்த ஒரு தம்பதியர் தங்களது பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தங்களது பக்கத்து குடித்தனகாரர்களை இரவு விருந்துக்கு அழைக்க. அவர்கள் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் இவர்களது வீட்டில் குடியிருந்த சிறுவன் இறந்ததகவலை அறிகின்றனர். அடுத்த நாளே அந்த சிறுவன் பயன்படுத்திய வீடியோ கேமரா மற்றும் அதே தொலைக்காட்சியும் அந்த வீட்டிலிருந்து அப்பெண்ணிற்கு கிடைக்கிறது.


நாம் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கும் போதே, அட யாருங்க இந்த இயக்குனர்னு தோணும்ல. அப்படி இவர் யாரென ஆராய்ந்ததில்  Oriol Paulo. இவருடையதே  Invisible Guest, The Body, மற்றும் Juliyas Eyes படங்கள். வெவ்வேறு சூழல்களில் இந்த படங்களை பார்த்து சிலாகித்து இருந்தாலும், தற்போது இந்த படங்களின் தனித்துவம் மற்றும் ஒற்றுமைகளை ஒப்பிட்டு பார்க்க தோண்றுகிறது. இதில் இறுதி இரண்டு படங்களும் இங்கு ரீமேக் செய்யபட்டு நல்ல வரவேற்பை பெற்றவையே. முதல் படம் தற்போதுவரை நிறைய படங்கள் அல்லது சில காட்சிகள் இந்த படத்தின் பாதிப்பில் வெளிவந்துள்ளது.
இவரது படங்கள் மற்ற நல்ல த்ரில்லர் கதைகளை போன்றே இருந்தாலும், அனைத்து கதைகளிலும் ஒரு கூடுதல் சூவரசியத்தை காணமுடியும். The Body யில் தொலைந்து போன ஒரு பிரேதத்தை தேடும் கதையில், அந்த பிரேதம் கிடைக்கவிடாமல் செய்யும் ஒரு கூடுதல் கதையும். Julias Eyes ல் பார்வையற்ற ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில். அதுகொலை என விசாரிக்கதுவங்கும் இறந்தவளின் சகோதரி. அந்த கூடுதல் சுவாரசியம் இந்த பெண்ணும் படிப்படியாக பார்வையை இழந்து வருபவள். அதாவது கொலையாளியை நெருங்க நெருங்க இவளின் பார்வை திறனும் குறையதுவங்கும். 

  
Invisible Guest ல் யாருமற்ற சாலையில் நிகழ்ந்த விபத்தை மறைக்கமுயலும் தம்பதியர். அந்த எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் இறந்தவனின் தந்தை இந்த கதைக்குள் வருவது. அப்படியான கூடுதல் சுவாரசியம் இந்த கதையிலும் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுவனின் கேமரா & தொலைக்காட்சியை கொண்டு அவனுக்கு நடந்த விபத்திலிருந்து அவனை காப்பற்றிவிடுகிறார். அடுத்த விடியலில் இருந்து அவனது வாழ்க்கை மற்றும் இறந்த அந்த பெண்மணி பற்றிய கிளைக்கதை.


இதுமட்டுமல்லாது அந்த கூடுதல் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவனை அந்த காலத்தில் சென்று மீட்டுவந்தபின் இவளது வாழ்கையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களும். அதை அந்த சிறுவனை கொண்டே மீட்டிட இவளின் முயற்சிகளும் என வெகுசூவாரசிய கதைகளம். துவக்கத்தில் அந்த ஸ்ட்ரோம். நம்மை இந்த கதையோடு பயணபட பெரும் பங்குவகிப்பது. சற்று கவனகுறைவாக இருந்தாலும். அடுத்தடுத்து நிகழும் மாற்றங்களில் சில சூவாரசியங்களையும், கதையின் தொடர்ச்சியையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம். NETFLIXல் காண கிடைக்கிறது.

Wednesday, May 6, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 164.

முன்பொரு காலத்திலே என துவங்கும் கதை. நகரில் இருந்து வெகுதொலைவில் காடுகளை ஒட்டி ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கும் சிப்பாய்கள் மற்றும் அவர்களை பயிற்றுவிக்கும் உயரதிகாரிகளுக்கான விடுதி. அதில் அவர்களை மகிழ்விக்க பாடல்களை பாடவும் அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய. உயரதிகாரியின் குதிரையை பராமரிப்பவரின் மனைவி பணியமர்த்தபடுகிறாள்.


தங்கள் பணிக்கான எந்த அடிப்படை வரவுகளோ, கடந்த சில வருடங்களாக இங்கேயே இருப்பதால் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வர அனுமதியோ இதுவரை கிடைக்கவில்லை. அந்த அதிகாரியிடம் அதை பற்றி கேட்க, நடக்கும் வாதம் கைகலப்பில் முடிகிறது. அவளின் கண்முன்னே அவள் கணவன் கொலைசெய்யபட்டு, அவளின் கை குழந்தையும் கொலை செய்யபடுகிறது. மயக்கம் தெளிந்து அடுத்தநாள் விடியலில் இறந்த கைகுழந்தையுடன் நியாயம் கேட்க விடுதிக்கு வருபவளுக்கு அதிர்ச்சி.


அந்த அதிகாரிகள் தொலைவில் உள்ள நகரத்திற்கு சென்றதை அறிகிறாள். மேலும் அங்கு ராணுவத்தில் லேப்டினன்டாக பதவிஉயர்வு பெறபோவதால், இனி அவன் இங்கு வருவதற்கான சாத்தியங்கள் இருக்காது. தனது மொத்தமும் இழந்து, அதற்கு காரணமானவனை ஒரு கேள்விகூட கேட்கவழியில்லாத அந்த நொடியில் அவள் எடுக்கும் முடிவும், அதற்கு பின்னான கதையும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவை.


அந்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், அந்த பெரும் வனத்தை கடந்தே நகரத்திற்கு செல்லவேண்டும். அதற்கு அங்கு உள்ள ஆதிவாசிகள் யாரேனும் துணையில்லாமல் செல்லமுடியாது. இவளுடன் பணிபுரியும் பெண்ணின் கணவன் மூலம் ஒருவனை துணைக்கு அமர்த்திகொண்டு தனியொருவளாக அவனை பழிவாங்க முடிவெடுக்கிறாள். இந்த காடுகளின் இடையே ஆட்கள் மரங்களை வெட்டி நகரத்திற்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கும்.
தட்பவெப்பநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை எடுத்துகொள்ளும் அந்த பயணம். பணிவிடை செய்ய ஆட்கள். பாதுகாப்பிற்கு இரு வீரர்கள் என பயணிக்கும் அந்த அதிகாரியை, தனியொருத்தியாக பழிவாங்க கிளம்பும் கதை. இதைமட்டுமே கொண்டு பார்த்தால் ஒரு சராசரி கதைபோலவே தோன்றும்.


ஆனால் இதைதாண்டி இவளது பயணம் சொல்லி செல்லும் சங்கதிகள் ஏராளம். அந்த பழங்குடி வகுப்பை சேர்ந்த இவளது வழிகாட்டியுடன் வெள்ளையர்களுக்கு எதிரான இவர்களது சம்பாசனைகள். குறிப்பாக எந்த பெரிய துரத்தலோ, ஆயுதங்களுடன் மோதல், ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து ரத்தமும் இல்லாத கதை. அன்று இந்த கறுப்பினத்தவர்கள் அங்கு எந்த வகைகளில் சிறுமைபடுத்தபட்டனர் என்பதை கொஞ்சம் (கோரமாக) நிஜமாகவும் தந்துள்ளனர்.



ஏதோ உலகப்படம். அரசியல் நிறைய உள்ள கதை வெறும் வார்த்தைகளிலே கதை முடிந்திடும் என நினைக்கும் அக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள். இக்கதையின் மூலம் பழிவாங்கல் என்பதால் நிச்சயம் ரசித்து பார்க்க நிறைய சங்கதிகள் உள்ளன.

Sunday, May 3, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 163.

காதலர்கள் அவரவர் கணவன்/மனைவிக்கு தெரியாமல் ஒரு Trip முடித்து மகிழ்ச்சியாக திரும்பி கொண்டிருக்கின்றனர். ஒரு மைக்ரோ வினாடியில் சட்டென பாதையை கடக்கும் மானை தவிர்க்க, இடபக்கம் நின்றிருத்த வாகனத்தில் மோதுகிறார். அதிவேகத்தில் மோதியதால் அதிலிருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிறிழக்கிறார்.


போக்குவரத்து ஏதுமில்லா சாலை. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், அவரவர் குடும்பங்களுக்கு இவர்களது உறவு தெரியவரும். இந்த சூழலில் காதலர்கள் அங்கிருந்து எந்த சுவடும் இல்லாமல் கிளம்ப முடிவெடுக்கிறார்கள். அவர்களது வாகனம் கிளம்ப மறுக்க, உச்சகட்ட படபடப்பில் இந்த சூழ்நிலைக்கு காரணமாக ஒருவர் மற்றவரை குறைகூறி அவர்களது வாதம் வலுக்கும் சூழலில். அந்த மலைபாதையில் கீழிருந்து ஒரு வாகனம் மேல்நோக்கி வருவதை இருவரும் பார்கின்றனர்.


ஹோட்டல் அறையில் ஏதோ ஒலிகேட்க்க. ஊழியர்கள் நீண்டநேரம் அழைத்தும் உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கபடுகிறது. உள்ளே ஒரு பெண் இறந்துகிடக்க, அவளது காதலன் கைது செய்யபடுகிறான். தான் இந்த கொலையை செய்யவில்லை எனவும். தன்னை யாரோ தாக்கியதாகவும். தான் மயக்கம் தெளிந்து பார்க்கையில் தனது காதலி இறந்தது தெரியவந்ததாகவும் உறுதியாக கூறுகிறார். ஆனால் அறையின் எந்த ஜன்னல் மற்றும் கதவும் இவர்களது சாவியை கொண்டே திறக்கயியலும். AC வெண்டிலேட்டர் மற்றும் ட்ரைனேஜ்வரை சோதித்த காவல்துறை உறுதியாக இந்த அறைக்கு யாரும் வந்து செல்லவில்லை என அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
முதல் பத்தியில் குறிப்பிட்ட அந்த திடுக்கிடல் சம்பவத்திலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பது மட்டுமல்ல இந்த கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவர்கள் செய்த சம்பவங்கள். நிச்சயம் இவர்கள் மீளவே முடியாது என்ற சூழலையும் கதையின் துவக்கத்திலே நமக்கு உணர்த்திவிடும். சரி, அனைத்து பக்கங்களும் அடைபட்ட இதிலிருந்து வெளியேவர முதலில் தாங்கள் சந்தித்து கொள்வதையும், தொலைபேசி உரையாடலையும் தவிர்க்கின்றனர்.



இதுவரை ஒரு நல்லபடம் பார்க்கும் உணர்விலிருக்கும் நமக்கு அடுத்தடுத்த காட்சிகள் வேறொரு தளத்திற்கு எடுத்து சென்றிடும். அதாவது மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்தே ஆகவேண்டிய சூழல். இதுவரை இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பியதும். இந்த இக்கட்டான நிலையில் மீண்டும் இவர்கள் சந்திக்கவேண்டிய திரைக்கதையும் பிரமிப்பு. இங்கு பகிரப்பட்டது கிட்டத்தட்ட முழு கதையும். ஆனால் நாம் திரையில் பார்க்கையில் இந்த அனைத்து காட்சிகளும் மீண்டும் நமக்கு அதே பிரமிப்பை ஏற்படுத்தும். காரணம் கதை இதோடு மட்டுமில்லாமல் தொட்டு செல்லும் இதர சம்பவங்களால். சமீபமாக இந்த இயக்குனரின் படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருவதற்கு மிகமுக்கிய காரணம் இவரின் இந்த படைப்பே. Netflix ல் கிடைக்கிறது.

Thursday, April 30, 2020

WEB SERIES – 006.

கடலில் கரையைதாண்டி இடுப்பு, மார்பு, கழுத்தளவு நீருக்குள் சென்று அலைகளை ரசிப்பதும், அதில் அமிழ்வதும் எப்படியான ஒரு த்ரில்லிங் அனுபவமோ. அப்படியான ஒரு அனுபவம் நாம் பார்க்கும் க்ரைம், ஆக்ஷன் படங்கள் மற்றும் தொடர்கள். இப்படியான எதற்குள்ளும் நுழையாமல், கரையில் அலை தொடும் எல்லையில் அமர்ந்து, எப்போதேனும் நம் பாதம் மட்டும் நனைத்து செல்லும் அலையையும், எட்டும் தூரத்தில் பரந்துவிரிந்த கடலையும்  ரசிப்பது எப்படியான ஒரு ஏகாந்த நிறைவை தருமோ அப்படியான ஒரு அனுபவம் இந்த தொடர். காதலும் கடந்து போகும், சார்லி போன்று எப்பொழுதேனும் நடக்கும் மேஜிக்.

குறிப்பு : இது காதோல் கதையல்ல.

தன்னுடன் இஞ்சினியரிங் பயின்ற ஒரே நண்பனும் லட்சங்களில் சம்பாதிக்க. இந்திய வரைபடத்தில் எங்கோ ஒரு புள்ளியாக கூட இல்லாத ஒரு கீழ்மட்ட கிராமத்தில் கிடைத்த பஞ்சாயத்து செக்ரேட்ரரி பணிக்கு செல்வதில் இருந்து கதை துவங்குகிறது.  சட்டென நம்மால் யூகித்திட முடியும் அவர் அங்கே பல இன்னல்களுக்கு ஆளாகி, இறுதியாக அந்த குக்கிராமத்தை இந்தியாவின் சிறந்த மாதிரி கிராமமாக உருவாக்குகிறார். இதற்கான விருதையும் முதலமைச்சர் அல்லது பிரதமரிடம் ஒரு விழாவில் பெறுகிறார். கூடுதலாக அந்த கிராமத்தில் ஒரு காதலையும்.


இப்படியான எந்த வழக்கமான சங்கதிகளும் மருந்துக்கும் கூட இந்த கதையில் இல்லாமல் பார்த்து செய்ததே இதன் சிறப்பு. இந்த கதைக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த களம். அதை இந்த கதையின் மொத்த காட்சிகளிலும் எத்தனை தூரம் ஒன்றி பிணைத்து உள்ளார்கள் என்பதே இதன் வெற்றி. அடுத்து இதில் பங்குபெற்ற பாத்திரங்கள். பிரசிடன்ட், அவரின் கணவர், மற்றும் நாயகனின் உதவியாளர் என இந்த பிரதான பாத்திரங்கள் மட்டுமின்றி. இந்த மொத்த தொடரில் ஓரிரு காட்சிகள் மட்டுமே வரும் அத்துணை துணை பாத்திரங்களும் (பெரும்பாலும் புதுமுகங்கள் என்றே யூகம்) தனக்கான பணியை மட்டுமே செய்தது.


நாயகன் தான் பெரிய எந்த விருப்பமும் இல்லாமலே இந்த பணிக்கு வருகிறார். மேலும் தனது மேற்படிப்பிற்கு உண்டான ஆயத்தங்களில் மட்டுமே அதிக நேராம் செலவிடுகிறார். தொடரின் எந்த இடத்திலும் ஒரு அரசு அதிகாரி தான் உண்டு தனது வேலை உண்டு என்ற நிலையிலேயே இருக்கிறார். ஒரு காட்சியில் தனது ஏழ்மை நிலையை எடுத்து கூறி, தனது குழந்தைகளின் பசிக்கு ஆவணசெய்யும்படி அந்த பெரியவர் இறைஞ்சும் காட்சியில்கூட. கையில் அவரது மணிபர்ஸ் இருக்கும். சட்டென அந்த இடத்தைவிட்டு விலகிவிடுவார்.
பின் தனது பணியில் ஏதேனும் ஊழல் தவறை கண்டுபிடித்து எதிர்த்து அந்த கிராமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல், தானே ஏதேனும் தவறிழைத்து அதிலிருந்து மீண்டுவரவேண்டும். இது ஏதுமில்லையெனில் அந்த ஊரின் பெரிய மனிதர் பெண்ணையாவது காதலிக்க வேண்டும். ஆனால் இவை ஏதுமில்லாமல் கதையில் என்ன சுவாரசியம் என்கிறீர்களா? இந்த கதை காலத்துக்கும் ஒரே வேகத்தில் சுழலும் ஒரு மின்விசிறியை போல, ஒரே அளவில் அதே  பணியை செய்யும் நொடி முள்ளை போல முழுக்கவும் ஒரே சமஅளவில் எந்த பரபரப்பும் இல்லாமல் நகரும் கதை.  

      

ஆனால்ச ட்டென நம்மை உள்ளிழுத்து கொள்ளும் கதை.  இறுதிவரை எங்குமே அது நம்மை சலிப்படையவோ அடுத்த எபிசோடை தாமதமாக பின்னொரு நேரம் பார்த்து கொள்ள சம்மதிக்காது. இதுவரை நாம் பார்த்த அனைத்து இந்திய சீரீஸ்களில் இதுவே சிறந்தது என உறுதியாக கூறிடயியலாது. அது அவரவர் ரசனை சார்ந்தது. ஆனால் இது தரும் அனுபவம், இதுவரை நீங்கள் பார்த்த எந்த இந்திய தொடர்களிலும் உணர்ந்திடாதது.     AMAZON PRIME ல் கிடைக்கிறது. 

Tuesday, April 28, 2020


WEB SERIES – 005 - II

ஒரு chemistry professor ஒரு உதவாக்கரை டிரக் சப்ளையரை வெச்சி, இவரே டிரக் தயாரிச்சி பணத்தாசைல அவர் பாட்னர் அந்த சப்ளையர் மூலமா பணம் பண்ண ஆரமிக்கறாரு. மார்கெட்ல இதோட குவாலிட்டிக்கு செம்ம டிமாண்ட். சரி அப்ப நல்ல பார்டிக்கு மொத்தமா கைமாத்தி விட்டா, இன்னும் நல்ல லாபம் பாக்க பாக்கலாம். இந்த நினைப்பில் அவங்க எடுத்து வைக்கும் முதல் அடியே அவங்களுக்கு பெரிய வினையாக மாறி இரண்டு கொலைகளில் முடியுது. அதையும் தன்னோட கெமிக்கல் மூளையை பயன்படுத்தி சரிபன்றார்.


இப்ப கையில் காசு பாத்துட்டு சும்மா இருக்க முடியாம. வேறொரு பெரிய ட்ரக் சப்ளையரை அவர் பாட்னர் சந்திக்க. திரும்ப அவன் மூலமே வேறொரு பிரச்சனை முளைக்குது. அதையும் இவரே சமாளிச்சி, அவன் மூலமா நல்ல லாபம் பாக்கறாங்க. அங்கயும் ஒரு பெரிய பிரச்சனை இவரோட அந்த பாட்னர் மூலமே. வியாபாரம் கொஞ்சம் பெரிய நபரிடம் பண்றதால, பிரச்சனையும் இந்த முறை பெருசு. கண்டிப்பா உயிர்போகும் நிலை. ரொம்ப சரியா அந்த இடத்தோட முதல் சீசன் முடியுது.


முதல் சீசனிலே இவங்க ரெண்டு முக்கிய பாத்திரம் இல்லாம, இவர் மனைவியுடைய சகோதரி கணவர் இருப்பார். அவர் ஆன்டி ட்ரக் டிபார்ட்மென்ட்ல முக்கிய அதிகாரியாக இருப்பார். இவர் professor அதுக்கேத்த upper middle class life.  அவர் மனைவி உட்பட யாருக்குமே தெரியாது. அதிலும் அந்த அதிகாரி இவங்க குடும்பத்துல ஒருவர் போல ரொம்ப நெருக்கம். முன்பே குறிப்பிட்ட அந்த பெரிய ட்ரக் டீலருடைய பிரச்சனை அங்கே வருவோம்.
அந்த ட்ரக் முக்கிய புள்ளியை இவங்க டிபார்ட்மென்ட்ல கண்காணிச்சிட்டே இருப்பாங்க. 
ரொம்ப சரியான நேரத்துல அவன் நாயகனையும் அவரோட பாட்னரையும் ஒரு சந்தேகத்துல கடத்திடுவான். கண்டிப்பா உயிர் போகக்கூடிய சூழல். ஒருபக்கம் அவர் சகலை வில்லனை தேடி வர. மாட்டினால் கர்ப்பிணி மனைவி, மகன், பணிபுரியும் பள்ளி தனது மொத்த கௌரவமும் சிதையும் சூழல். பெரிய பரபர ஆக்க்ஷன்கதை போலவே தோன்றும். ஆனால் கதை முதல் சீசன் முதலே ஒரு நிதானத்துடனே பயணிக்கும். இத்தனை பரபரப்பிலும் இவரின் குடும்ப பின்னணியே பிரதானம் வகிக்கும். துவக்கம் முதல் இந்த நிதானமே நம்மை கட்டிபோடும். தள்ளிபோட்டு பின் பார்த்துக்கொள்ள கூடிய சந்தர்பங்களை அவை நமக்கு வழங்காது.



அந்த கடத்தல் எனும் பரபரப்பு சூழலில் முடிவுற்ற முதல் சீசனின் இந்த பாகமும் மிகபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன். அடுத்த எபிசோடின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தே உள்ளது. இந்த சீசன் முழுக்க கதை நாம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நம்மை பெரிதும் திருப்திபடுத்தியே உள்ளது. சொற்ப பாத்திரங்களை கொண்டே  இத்தனை சீசன் சலிப்பில்லாமல் நகர்த்தும் சரியான திரைக்கதை.

Saturday, April 25, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 162.

சொல்லவரும் கதைக்குள் துவக்கத்திலே நுழைந்து அங்கிருந்து அந்த கதையை பரபரபாக்குவது ஒருவகை. தான் சொல்லவரும் கதைக்கான காராணத்தை முதலில் அழுத்தமாக பதித்து, அதன்பின் நிகழும் சம்பவங்களை நெகிழ்ச்சியாக சொல்வதும் ஒருவகை. முதல்வகையில் நிச்சயம் பரபரப்பு இருந்தாலும் அந்த அழுத்தமோ அல்லது நெகிழ்ச்சியோ ஏதோ ஒன்றில் முழுமை இருக்காது. ஆனால் அந்த பரபர திரைக்கதையால், இந்த கதைக்கு இவை தேவையில்லை என நமக்கும் தோன்ற செய்யும்.


ஆனால் இந்த இரண்டாம் வகை கதையில் அந்த முழுமையை நாம் முழுக்க உணரசெய்வதும். குறிப்பிட்ட அந்த பாத்திரங்களுடன் நம்மை ஒன்றசெய்து, அவர்களின் நெகிழ்ச்சியான தருணங்களில் நமக்கு முழுமையை உணரசெய்வதும். இந்தபடம் இரண்டாம் வகையை சார்ந்தது.

     
நாயகனின் சிறு வயதிலிருந்தே கதை துவங்குகிறது. அவன் துவக்கம் முதலே எந்த முடிவையும் தானே எடுப்பதில்லை. அதில் அவனுக்கு அன்றில் இருந்தே பெரும் குழப்பங்கள் உண்டு. திருமணமும் முடிந்து ஒரு மகளுக்கு பின் மனைவியும் தவறிட்றாங்க. இந்த நிலையில் மகள், தந்தையிடம் தன் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லண்டன் பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தான் நிச்சயம் நல்ல மதிப்பெண்களுடன் லண்டன் செல்லபோவதாக கூறுகிறாள்.
சராசரி மாணவியான அவள். அதற்காக கடினமாக படிக்க துவங்கி அதற்கான தகுதியும் பெறுகிறாள். அதில் நாயகன் செய்யும் சிறுகுழப்பத்தில் அந்த வாய்ப்பு அவர் மகளுக்கு கிடைக்காமல் போகிறது. 2.30 மணிநேர கதையில் இந்த காட்சிகள் 40-50 நிமிடங்கள் வரும்.  இதற்கு பின்னே கதையின் மிகமுக்கிய தருணங்கள். அதாவது துவக்கத்தில் கூறியது போல், கதைக்கான கருவை அழுத்தமான காட்சிகளின் மூலம் பதித்து அங்கிருந்து பின் நிகழும் சம்பவங்கள் என செல்லும் முறை.
ஆனால் இந்த கதையில் ஆரம்ப 40-50 நிமிடங்கள் எந்த அழுத்தமான நிகழ்வுகளும் இல்லாமல் கலகலப்பாக மட்டுமே நகரும். ஆனால் அதன்பின் கதையில் நிகழும் பெரும்பாலான அழுத்தமான காட்சிகளுக்கும் முன்னுரை இந்த ஆரம்ப கலகல பகுதியில் இருந்தே எடுக்கபட்டிருக்கும். குறிப்பாக தனது தவறால் மகளின் கனவான லண்டன் சென்று படிப்பது இயலாததாகிறது. தனது முழுசெலவில் படிக்கவைப்பதாக மகளிடம் சொல்லவேண்டும் இது சுட்ச்வேஷன். கதையின் துவக்கத்தில் ஒரே ஷாட் மட்டுமே அவரின் மனைவி வருவார்.


அதில் ஒருசில வரி வசனங்கள் மட்டுமே இருவருக்கும் இருக்கும். அதை இந்த இடத்தில் சொல்லி தன்மகளை தேற்றும்போதுதான் துவக்கத்தில் அந்த ஷாட் அவசியம் நமக்கு புரியவரும். ரொம்பவே எமோஷனலான சீன் அது. படம் முழுக்க இப்படியான நிறைய அழுத்தமான காட்சிகள். ரசிக்கவைக்கும்படியான நகைச்சுவை கதை முழுக்கவே. அதிலும் லண்டன் இமிக்ரேஷன் பகுதியும், அதை தொடர்ந்த இடைவேளை காட்சியும். அதிலும் அங்குபோய் மகள் வெற்றியுடன் திரும்புவதாக வழக்கமாக படத்தை முடிக்காமல். இரண்டாம் பாதி முழுக்க அங்கு (LONDON) உள்ள சிரமங்களையும் கலகலப்பாக அங்கிருந்தே சொன்னது நச்.


நமது பெரும்பான்மையான கதை தேர்வுகள் க்ரைம், ஆக்க்ஷன் சுற்றியே இருப்பதால், இந்த படம் எளிதில் நம்மை இலகுவாக்கும். HOTSTARல் கிடைக்கிறது. தவறாமல் பார்க்க முயற்சிக்கவும்.

Wednesday, April 22, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 161.

பெரும் தொழிலதிபர் அம்மாநிலத்தின் அடையாளம். ஒரு நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அங்கிருக்கும் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் துவங்குவதற்கான அதிரடி இசை வாடிக்கையாளர் அனைவரின்  கவனத்தையும் ஈர்க்கிறது. அதில் பிரபல வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் CCTV காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. அதில் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கும் அம்மாநிலத்தின் அடையாளமான அந்த  தொழிலதிபர்தான் இருக்கிறார். மேலும் அவரை தடுக்கும் அவ்வங்கியின் பாதுகாவலரையும் தனது துப்பாக்கியில் சுடுகிறார்.


மேலும் அவரின் வக்கீல் காவல்துறையிடம் அவரால் இதை போன்றே நான்கு வங்கிகளை ஒரே சமயத்தில் வாங்கமுடியும். அவர் எதற்காக இந்த சிறுதொகைக்காக கொள்ளையில் ஈடுபடவேண்டும் என வாதாடுகிறார். சமீபத்தில்தான் இவர் 2500 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் நிரபராதியென நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. எனில் இத்தனை பெரிய மனிதர் இந்தகொள்ளையில் ஈடுபட காரணம் என்ன? முக்கிய குறிப்பு இது இரட்டைவேட கதையும் அல்ல.


ஒரு ஒப்பனை கலைஞன். அவரின் தந்தை சினிமாவில் புகழ்பெற்ற ஒப்பனையாளர். அதலால் சிறுவயது முதலே தன் தந்தையிடம் அதன் முழுமையும் கற்கிறார். உடன் ஒப்பனை குறித்த புத்தகங்கள் முதல், அதன் இறுதி அப்டேட் வரை இணையத்திலும் படித்து தேர்கிறார். தனது தந்தை இறந்ததும். அவரின் நண்பரின் மூலம் சில சினிமாக்களில் பணிபுரிகிறார். ஆனால் தனது பனியின் நேர்மை காரணமாக. காட்சிக்காக எந்த Compromise செய்து கொள்ளாததால் அவரால் தொடர்ந்து எங்கும் பணிபுரிய முடியவில்லை. வேறு எந்த தொழிலும் தெரியாத இந்த சூழலலிலும் தன்தொழிலில் தான்கொண்ட உறுதியுடனே இருக்கிறார். அவருள் அந்த முழுமையான கலைஞன் உயிர்ப்புடனே இருக்கிறார்.


ஒரு வக்கீல். அந்த ஒப்பனை கலைஞனை போன்றே சிறுவயது முதல் சட்டத்தின் மீது ஈர்ப்பு உள்ளவன். சட்டம் முதல் வருடம் பயின்று வருகிறான். எதிர்பாரா சூழலில் தன் தந்தையை கொலை செய்கிறான். அதையும் ரசித்தே செய்கிறான். சிறுவர் சீர்திருத்த பள்ளியில், முழுநேரத்தையும் சட்டத்தை படிப்பதிலே செலவிடுகிறான். வெளியே வந்ததும் நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு ஒரு வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என தீவிரமாக கற்கிறான்.
முதல் வருடத்திற்கு பின் தன் சட்டபடிப்பை தொடரமுடியாதவன். அங்கிருக்கும் வக்கீல்களிடம் தன்னை தற்போது பயிற்சியில் இருக்கும் வக்கீலாகவே அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்களின் வழக்குகளில் உள்ள நுண்ணிய தவறுகளை சுட்டிக்காட்டி அதை எவ்வாறு கையாள வேண்டுமென கூறிவருகிறான். நீதிமன்றத்திற்கு வெளியே தனி அலுவலகமும் வைத்து இந்த யோசனையை செயல்படுத்தியே நல்ல பொருள் ஈட்டி வருகிறான். ஆனால் அவனுள் இருந்த கொலைகாரன் அதே ரசனையுடன் விழித்தே இருக்கிறான்.


இந்த இருவேறு பாத்திரங்களும் கதையில் இணையும் ரொம்ப முக்கிய காட்சி ஒன்று உள்ளது. அதுவரைக்குமான கதைக்கும். அதன்பின் இந்தக்கதை செல்லும் விதமும் நம்மை பெரிய ஆச்சர்யத்திற்கு உட்படுத்தும். சமீபமா இந்தளவு அடர்த்தியான வசனங்களை முழுகதையிலும் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படம் ப்ரைம்ல் தமிழ் சப்டைட்டிலுடனே கிடைக்கிறது.



இந்த இரு பாத்திரங்களும் சம்மந்தமில்லாத முதல்பத்தியில் குறிப்பிட்ட அந்த தொழிலதிபரின் அசம்பாவிததிற்கும் காரணமாகின்றனர். அவர்மட்டுமல்ல இன்னும் சிலரின் வாழ்கையிலும். இந்திய சினிமாவின் உண்மையான சைக்லாஜிக்கல் திர்ல்லர். ஒரு உண்மையான புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.             

Search This Blog