Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, May 14, 2020


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 165.

1989 களில் அதுவரை இல்லாதவகையில் பெரும்மழைக்கு முந்தைய கருமேகங்கள் மற்றும் இடி மின்னலும் சூழ்ந்த சிறுநகரம். கிடார் வாசிப்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறுவன்.  ஒவ்வொரு முறையும் தான் வாசிப்பதை வீடியோவாக பதிவு செய்து தொலைகாட்சியில் அதை கண்டுகளிப்பது அவனது பிரதான பொழுதுபோக்கு. அப்படியான ஒரு நாளில்  தனது பக்கத்து வீட்டிலிருந்து  ஏதோ வழக்கத்துக்கு மாறான ஓசை கேட்க. அங்கு செல்பவன், அந்த வீட்டு பெண்மணி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்கிறான். உடன் அவள் கணவன் கையில் ஆயுதத்துடன் இருப்பதையும் கண்டு, அங்கிருந்து தப்பிசெல்ல விரைகிறான். அந்த வீட்டிலிருந்து வெளியேறி சட்டென சாலையை கடக்கையில் எதிர்பாராவிதமாக வாகனத்தில் மோதி இறந்துவிடுகிறான்.


கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் இப்படியான ஒரு அசாதாரண சூழல். 1989களுக்கு பின் இப்படியான Strom மீண்டும் நம்நகரில் FM எங்கோ ஒலித்துகொண்டிருக்க. அதே இடி மின்னலுடன் கருமேகம் சூழ்ந்த அந்த நகருக்கு குடிவந்த ஒரு தம்பதியர் தங்களது பொருட்களை ஒழுங்குபடுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தங்களது பக்கத்து குடித்தனகாரர்களை இரவு விருந்துக்கு அழைக்க. அவர்கள் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் இவர்களது வீட்டில் குடியிருந்த சிறுவன் இறந்ததகவலை அறிகின்றனர். அடுத்த நாளே அந்த சிறுவன் பயன்படுத்திய வீடியோ கேமரா மற்றும் அதே தொலைக்காட்சியும் அந்த வீட்டிலிருந்து அப்பெண்ணிற்கு கிடைக்கிறது.


நாம் ஒரு படம் பார்த்துகொண்டிருக்கும் போதே, அட யாருங்க இந்த இயக்குனர்னு தோணும்ல. அப்படி இவர் யாரென ஆராய்ந்ததில்  Oriol Paulo. இவருடையதே  Invisible Guest, The Body, மற்றும் Juliyas Eyes படங்கள். வெவ்வேறு சூழல்களில் இந்த படங்களை பார்த்து சிலாகித்து இருந்தாலும், தற்போது இந்த படங்களின் தனித்துவம் மற்றும் ஒற்றுமைகளை ஒப்பிட்டு பார்க்க தோண்றுகிறது. இதில் இறுதி இரண்டு படங்களும் இங்கு ரீமேக் செய்யபட்டு நல்ல வரவேற்பை பெற்றவையே. முதல் படம் தற்போதுவரை நிறைய படங்கள் அல்லது சில காட்சிகள் இந்த படத்தின் பாதிப்பில் வெளிவந்துள்ளது.
இவரது படங்கள் மற்ற நல்ல த்ரில்லர் கதைகளை போன்றே இருந்தாலும், அனைத்து கதைகளிலும் ஒரு கூடுதல் சூவரசியத்தை காணமுடியும். The Body யில் தொலைந்து போன ஒரு பிரேதத்தை தேடும் கதையில், அந்த பிரேதம் கிடைக்கவிடாமல் செய்யும் ஒரு கூடுதல் கதையும். Julias Eyes ல் பார்வையற்ற ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில். அதுகொலை என விசாரிக்கதுவங்கும் இறந்தவளின் சகோதரி. அந்த கூடுதல் சுவாரசியம் இந்த பெண்ணும் படிப்படியாக பார்வையை இழந்து வருபவள். அதாவது கொலையாளியை நெருங்க நெருங்க இவளின் பார்வை திறனும் குறையதுவங்கும். 

  
Invisible Guest ல் யாருமற்ற சாலையில் நிகழ்ந்த விபத்தை மறைக்கமுயலும் தம்பதியர். அந்த எக்ஸ்ட்ரா சர்ப்ரைஸ் இறந்தவனின் தந்தை இந்த கதைக்குள் வருவது. அப்படியான கூடுதல் சுவாரசியம் இந்த கதையிலும் உண்டு. 25 ஆண்டுகளுக்கு முன் இறந்த சிறுவனின் கேமரா & தொலைக்காட்சியை கொண்டு அவனுக்கு நடந்த விபத்திலிருந்து அவனை காப்பற்றிவிடுகிறார். அடுத்த விடியலில் இருந்து அவனது வாழ்க்கை மற்றும் இறந்த அந்த பெண்மணி பற்றிய கிளைக்கதை.


இதுமட்டுமல்லாது அந்த கூடுதல் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவனை அந்த காலத்தில் சென்று மீட்டுவந்தபின் இவளது வாழ்கையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களும். அதை அந்த சிறுவனை கொண்டே மீட்டிட இவளின் முயற்சிகளும் என வெகுசூவாரசிய கதைகளம். துவக்கத்தில் அந்த ஸ்ட்ரோம். நம்மை இந்த கதையோடு பயணபட பெரும் பங்குவகிப்பது. சற்று கவனகுறைவாக இருந்தாலும். அடுத்தடுத்து நிகழும் மாற்றங்களில் சில சூவாரசியங்களையும், கதையின் தொடர்ச்சியையும் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம். NETFLIXல் காண கிடைக்கிறது.

Wednesday, May 6, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 164.

முன்பொரு காலத்திலே என துவங்கும் கதை. நகரில் இருந்து வெகுதொலைவில் காடுகளை ஒட்டி ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கும் சிப்பாய்கள் மற்றும் அவர்களை பயிற்றுவிக்கும் உயரதிகாரிகளுக்கான விடுதி. அதில் அவர்களை மகிழ்விக்க பாடல்களை பாடவும் அவர்களுக்கான பணிவிடைகளை செய்ய. உயரதிகாரியின் குதிரையை பராமரிப்பவரின் மனைவி பணியமர்த்தபடுகிறாள்.


தங்கள் பணிக்கான எந்த அடிப்படை வரவுகளோ, கடந்த சில வருடங்களாக இங்கேயே இருப்பதால் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வர அனுமதியோ இதுவரை கிடைக்கவில்லை. அந்த அதிகாரியிடம் அதை பற்றி கேட்க, நடக்கும் வாதம் கைகலப்பில் முடிகிறது. அவளின் கண்முன்னே அவள் கணவன் கொலைசெய்யபட்டு, அவளின் கை குழந்தையும் கொலை செய்யபடுகிறது. மயக்கம் தெளிந்து அடுத்தநாள் விடியலில் இறந்த கைகுழந்தையுடன் நியாயம் கேட்க விடுதிக்கு வருபவளுக்கு அதிர்ச்சி.


அந்த அதிகாரிகள் தொலைவில் உள்ள நகரத்திற்கு சென்றதை அறிகிறாள். மேலும் அங்கு ராணுவத்தில் லேப்டினன்டாக பதவிஉயர்வு பெறபோவதால், இனி அவன் இங்கு வருவதற்கான சாத்தியங்கள் இருக்காது. தனது மொத்தமும் இழந்து, அதற்கு காரணமானவனை ஒரு கேள்விகூட கேட்கவழியில்லாத அந்த நொடியில் அவள் எடுக்கும் முடிவும், அதற்கு பின்னான கதையும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குபவை.


அந்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், அந்த பெரும் வனத்தை கடந்தே நகரத்திற்கு செல்லவேண்டும். அதற்கு அங்கு உள்ள ஆதிவாசிகள் யாரேனும் துணையில்லாமல் செல்லமுடியாது. இவளுடன் பணிபுரியும் பெண்ணின் கணவன் மூலம் ஒருவனை துணைக்கு அமர்த்திகொண்டு தனியொருவளாக அவனை பழிவாங்க முடிவெடுக்கிறாள். இந்த காடுகளின் இடையே ஆட்கள் மரங்களை வெட்டி நகரத்திற்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கும்.
தட்பவெப்பநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை எடுத்துகொள்ளும் அந்த பயணம். பணிவிடை செய்ய ஆட்கள். பாதுகாப்பிற்கு இரு வீரர்கள் என பயணிக்கும் அந்த அதிகாரியை, தனியொருத்தியாக பழிவாங்க கிளம்பும் கதை. இதைமட்டுமே கொண்டு பார்த்தால் ஒரு சராசரி கதைபோலவே தோன்றும்.


ஆனால் இதைதாண்டி இவளது பயணம் சொல்லி செல்லும் சங்கதிகள் ஏராளம். அந்த பழங்குடி வகுப்பை சேர்ந்த இவளது வழிகாட்டியுடன் வெள்ளையர்களுக்கு எதிரான இவர்களது சம்பாசனைகள். குறிப்பாக எந்த பெரிய துரத்தலோ, ஆயுதங்களுடன் மோதல், ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து ரத்தமும் இல்லாத கதை. அன்று இந்த கறுப்பினத்தவர்கள் அங்கு எந்த வகைகளில் சிறுமைபடுத்தபட்டனர் என்பதை கொஞ்சம் (கோரமாக) நிஜமாகவும் தந்துள்ளனர்.



ஏதோ உலகப்படம். அரசியல் நிறைய உள்ள கதை வெறும் வார்த்தைகளிலே கதை முடிந்திடும் என நினைக்கும் அக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள். இக்கதையின் மூலம் பழிவாங்கல் என்பதால் நிச்சயம் ரசித்து பார்க்க நிறைய சங்கதிகள் உள்ளன.

Sunday, May 3, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 163.

காதலர்கள் அவரவர் கணவன்/மனைவிக்கு தெரியாமல் ஒரு Trip முடித்து மகிழ்ச்சியாக திரும்பி கொண்டிருக்கின்றனர். ஒரு மைக்ரோ வினாடியில் சட்டென பாதையை கடக்கும் மானை தவிர்க்க, இடபக்கம் நின்றிருத்த வாகனத்தில் மோதுகிறார். அதிவேகத்தில் மோதியதால் அதிலிருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிறிழக்கிறார்.


போக்குவரத்து ஏதுமில்லா சாலை. காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், அவரவர் குடும்பங்களுக்கு இவர்களது உறவு தெரியவரும். இந்த சூழலில் காதலர்கள் அங்கிருந்து எந்த சுவடும் இல்லாமல் கிளம்ப முடிவெடுக்கிறார்கள். அவர்களது வாகனம் கிளம்ப மறுக்க, உச்சகட்ட படபடப்பில் இந்த சூழ்நிலைக்கு காரணமாக ஒருவர் மற்றவரை குறைகூறி அவர்களது வாதம் வலுக்கும் சூழலில். அந்த மலைபாதையில் கீழிருந்து ஒரு வாகனம் மேல்நோக்கி வருவதை இருவரும் பார்கின்றனர்.


ஹோட்டல் அறையில் ஏதோ ஒலிகேட்க்க. ஊழியர்கள் நீண்டநேரம் அழைத்தும் உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கபடுகிறது. உள்ளே ஒரு பெண் இறந்துகிடக்க, அவளது காதலன் கைது செய்யபடுகிறான். தான் இந்த கொலையை செய்யவில்லை எனவும். தன்னை யாரோ தாக்கியதாகவும். தான் மயக்கம் தெளிந்து பார்க்கையில் தனது காதலி இறந்தது தெரியவந்ததாகவும் உறுதியாக கூறுகிறார். ஆனால் அறையின் எந்த ஜன்னல் மற்றும் கதவும் இவர்களது சாவியை கொண்டே திறக்கயியலும். AC வெண்டிலேட்டர் மற்றும் ட்ரைனேஜ்வரை சோதித்த காவல்துறை உறுதியாக இந்த அறைக்கு யாரும் வந்து செல்லவில்லை என அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
முதல் பத்தியில் குறிப்பிட்ட அந்த திடுக்கிடல் சம்பவத்திலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பது மட்டுமல்ல இந்த கதை. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவர்கள் செய்த சம்பவங்கள். நிச்சயம் இவர்கள் மீளவே முடியாது என்ற சூழலையும் கதையின் துவக்கத்திலே நமக்கு உணர்த்திவிடும். சரி, அனைத்து பக்கங்களும் அடைபட்ட இதிலிருந்து வெளியேவர முதலில் தாங்கள் சந்தித்து கொள்வதையும், தொலைபேசி உரையாடலையும் தவிர்க்கின்றனர்.



இதுவரை ஒரு நல்லபடம் பார்க்கும் உணர்விலிருக்கும் நமக்கு அடுத்தடுத்த காட்சிகள் வேறொரு தளத்திற்கு எடுத்து சென்றிடும். அதாவது மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்தே ஆகவேண்டிய சூழல். இதுவரை இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பியதும். இந்த இக்கட்டான நிலையில் மீண்டும் இவர்கள் சந்திக்கவேண்டிய திரைக்கதையும் பிரமிப்பு. இங்கு பகிரப்பட்டது கிட்டத்தட்ட முழு கதையும். ஆனால் நாம் திரையில் பார்க்கையில் இந்த அனைத்து காட்சிகளும் மீண்டும் நமக்கு அதே பிரமிப்பை ஏற்படுத்தும். காரணம் கதை இதோடு மட்டுமில்லாமல் தொட்டு செல்லும் இதர சம்பவங்களால். சமீபமாக இந்த இயக்குனரின் படங்கள் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருவதற்கு மிகமுக்கிய காரணம் இவரின் இந்த படைப்பே. Netflix ல் கிடைக்கிறது.

Thursday, April 30, 2020

WEB SERIES – 006.

கடலில் கரையைதாண்டி இடுப்பு, மார்பு, கழுத்தளவு நீருக்குள் சென்று அலைகளை ரசிப்பதும், அதில் அமிழ்வதும் எப்படியான ஒரு த்ரில்லிங் அனுபவமோ. அப்படியான ஒரு அனுபவம் நாம் பார்க்கும் க்ரைம், ஆக்ஷன் படங்கள் மற்றும் தொடர்கள். இப்படியான எதற்குள்ளும் நுழையாமல், கரையில் அலை தொடும் எல்லையில் அமர்ந்து, எப்போதேனும் நம் பாதம் மட்டும் நனைத்து செல்லும் அலையையும், எட்டும் தூரத்தில் பரந்துவிரிந்த கடலையும்  ரசிப்பது எப்படியான ஒரு ஏகாந்த நிறைவை தருமோ அப்படியான ஒரு அனுபவம் இந்த தொடர். காதலும் கடந்து போகும், சார்லி போன்று எப்பொழுதேனும் நடக்கும் மேஜிக்.

குறிப்பு : இது காதோல் கதையல்ல.

தன்னுடன் இஞ்சினியரிங் பயின்ற ஒரே நண்பனும் லட்சங்களில் சம்பாதிக்க. இந்திய வரைபடத்தில் எங்கோ ஒரு புள்ளியாக கூட இல்லாத ஒரு கீழ்மட்ட கிராமத்தில் கிடைத்த பஞ்சாயத்து செக்ரேட்ரரி பணிக்கு செல்வதில் இருந்து கதை துவங்குகிறது.  சட்டென நம்மால் யூகித்திட முடியும் அவர் அங்கே பல இன்னல்களுக்கு ஆளாகி, இறுதியாக அந்த குக்கிராமத்தை இந்தியாவின் சிறந்த மாதிரி கிராமமாக உருவாக்குகிறார். இதற்கான விருதையும் முதலமைச்சர் அல்லது பிரதமரிடம் ஒரு விழாவில் பெறுகிறார். கூடுதலாக அந்த கிராமத்தில் ஒரு காதலையும்.


இப்படியான எந்த வழக்கமான சங்கதிகளும் மருந்துக்கும் கூட இந்த கதையில் இல்லாமல் பார்த்து செய்ததே இதன் சிறப்பு. இந்த கதைக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த களம். அதை இந்த கதையின் மொத்த காட்சிகளிலும் எத்தனை தூரம் ஒன்றி பிணைத்து உள்ளார்கள் என்பதே இதன் வெற்றி. அடுத்து இதில் பங்குபெற்ற பாத்திரங்கள். பிரசிடன்ட், அவரின் கணவர், மற்றும் நாயகனின் உதவியாளர் என இந்த பிரதான பாத்திரங்கள் மட்டுமின்றி. இந்த மொத்த தொடரில் ஓரிரு காட்சிகள் மட்டுமே வரும் அத்துணை துணை பாத்திரங்களும் (பெரும்பாலும் புதுமுகங்கள் என்றே யூகம்) தனக்கான பணியை மட்டுமே செய்தது.


நாயகன் தான் பெரிய எந்த விருப்பமும் இல்லாமலே இந்த பணிக்கு வருகிறார். மேலும் தனது மேற்படிப்பிற்கு உண்டான ஆயத்தங்களில் மட்டுமே அதிக நேராம் செலவிடுகிறார். தொடரின் எந்த இடத்திலும் ஒரு அரசு அதிகாரி தான் உண்டு தனது வேலை உண்டு என்ற நிலையிலேயே இருக்கிறார். ஒரு காட்சியில் தனது ஏழ்மை நிலையை எடுத்து கூறி, தனது குழந்தைகளின் பசிக்கு ஆவணசெய்யும்படி அந்த பெரியவர் இறைஞ்சும் காட்சியில்கூட. கையில் அவரது மணிபர்ஸ் இருக்கும். சட்டென அந்த இடத்தைவிட்டு விலகிவிடுவார்.
பின் தனது பணியில் ஏதேனும் ஊழல் தவறை கண்டுபிடித்து எதிர்த்து அந்த கிராமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல், தானே ஏதேனும் தவறிழைத்து அதிலிருந்து மீண்டுவரவேண்டும். இது ஏதுமில்லையெனில் அந்த ஊரின் பெரிய மனிதர் பெண்ணையாவது காதலிக்க வேண்டும். ஆனால் இவை ஏதுமில்லாமல் கதையில் என்ன சுவாரசியம் என்கிறீர்களா? இந்த கதை காலத்துக்கும் ஒரே வேகத்தில் சுழலும் ஒரு மின்விசிறியை போல, ஒரே அளவில் அதே  பணியை செய்யும் நொடி முள்ளை போல முழுக்கவும் ஒரே சமஅளவில் எந்த பரபரப்பும் இல்லாமல் நகரும் கதை.  

      

ஆனால்ச ட்டென நம்மை உள்ளிழுத்து கொள்ளும் கதை.  இறுதிவரை எங்குமே அது நம்மை சலிப்படையவோ அடுத்த எபிசோடை தாமதமாக பின்னொரு நேரம் பார்த்து கொள்ள சம்மதிக்காது. இதுவரை நாம் பார்த்த அனைத்து இந்திய சீரீஸ்களில் இதுவே சிறந்தது என உறுதியாக கூறிடயியலாது. அது அவரவர் ரசனை சார்ந்தது. ஆனால் இது தரும் அனுபவம், இதுவரை நீங்கள் பார்த்த எந்த இந்திய தொடர்களிலும் உணர்ந்திடாதது.     AMAZON PRIME ல் கிடைக்கிறது. 

Tuesday, April 28, 2020


WEB SERIES – 005 - II

ஒரு chemistry professor ஒரு உதவாக்கரை டிரக் சப்ளையரை வெச்சி, இவரே டிரக் தயாரிச்சி பணத்தாசைல அவர் பாட்னர் அந்த சப்ளையர் மூலமா பணம் பண்ண ஆரமிக்கறாரு. மார்கெட்ல இதோட குவாலிட்டிக்கு செம்ம டிமாண்ட். சரி அப்ப நல்ல பார்டிக்கு மொத்தமா கைமாத்தி விட்டா, இன்னும் நல்ல லாபம் பாக்க பாக்கலாம். இந்த நினைப்பில் அவங்க எடுத்து வைக்கும் முதல் அடியே அவங்களுக்கு பெரிய வினையாக மாறி இரண்டு கொலைகளில் முடியுது. அதையும் தன்னோட கெமிக்கல் மூளையை பயன்படுத்தி சரிபன்றார்.


இப்ப கையில் காசு பாத்துட்டு சும்மா இருக்க முடியாம. வேறொரு பெரிய ட்ரக் சப்ளையரை அவர் பாட்னர் சந்திக்க. திரும்ப அவன் மூலமே வேறொரு பிரச்சனை முளைக்குது. அதையும் இவரே சமாளிச்சி, அவன் மூலமா நல்ல லாபம் பாக்கறாங்க. அங்கயும் ஒரு பெரிய பிரச்சனை இவரோட அந்த பாட்னர் மூலமே. வியாபாரம் கொஞ்சம் பெரிய நபரிடம் பண்றதால, பிரச்சனையும் இந்த முறை பெருசு. கண்டிப்பா உயிர்போகும் நிலை. ரொம்ப சரியா அந்த இடத்தோட முதல் சீசன் முடியுது.


முதல் சீசனிலே இவங்க ரெண்டு முக்கிய பாத்திரம் இல்லாம, இவர் மனைவியுடைய சகோதரி கணவர் இருப்பார். அவர் ஆன்டி ட்ரக் டிபார்ட்மென்ட்ல முக்கிய அதிகாரியாக இருப்பார். இவர் professor அதுக்கேத்த upper middle class life.  அவர் மனைவி உட்பட யாருக்குமே தெரியாது. அதிலும் அந்த அதிகாரி இவங்க குடும்பத்துல ஒருவர் போல ரொம்ப நெருக்கம். முன்பே குறிப்பிட்ட அந்த பெரிய ட்ரக் டீலருடைய பிரச்சனை அங்கே வருவோம்.
அந்த ட்ரக் முக்கிய புள்ளியை இவங்க டிபார்ட்மென்ட்ல கண்காணிச்சிட்டே இருப்பாங்க. 
ரொம்ப சரியான நேரத்துல அவன் நாயகனையும் அவரோட பாட்னரையும் ஒரு சந்தேகத்துல கடத்திடுவான். கண்டிப்பா உயிர் போகக்கூடிய சூழல். ஒருபக்கம் அவர் சகலை வில்லனை தேடி வர. மாட்டினால் கர்ப்பிணி மனைவி, மகன், பணிபுரியும் பள்ளி தனது மொத்த கௌரவமும் சிதையும் சூழல். பெரிய பரபர ஆக்க்ஷன்கதை போலவே தோன்றும். ஆனால் கதை முதல் சீசன் முதலே ஒரு நிதானத்துடனே பயணிக்கும். இத்தனை பரபரப்பிலும் இவரின் குடும்ப பின்னணியே பிரதானம் வகிக்கும். துவக்கம் முதல் இந்த நிதானமே நம்மை கட்டிபோடும். தள்ளிபோட்டு பின் பார்த்துக்கொள்ள கூடிய சந்தர்பங்களை அவை நமக்கு வழங்காது.



அந்த கடத்தல் எனும் பரபரப்பு சூழலில் முடிவுற்ற முதல் சீசனின் இந்த பாகமும் மிகபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன். அடுத்த எபிசோடின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தே உள்ளது. இந்த சீசன் முழுக்க கதை நாம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நம்மை பெரிதும் திருப்திபடுத்தியே உள்ளது. சொற்ப பாத்திரங்களை கொண்டே  இத்தனை சீசன் சலிப்பில்லாமல் நகர்த்தும் சரியான திரைக்கதை.

Saturday, April 25, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 162.

சொல்லவரும் கதைக்குள் துவக்கத்திலே நுழைந்து அங்கிருந்து அந்த கதையை பரபரபாக்குவது ஒருவகை. தான் சொல்லவரும் கதைக்கான காராணத்தை முதலில் அழுத்தமாக பதித்து, அதன்பின் நிகழும் சம்பவங்களை நெகிழ்ச்சியாக சொல்வதும் ஒருவகை. முதல்வகையில் நிச்சயம் பரபரப்பு இருந்தாலும் அந்த அழுத்தமோ அல்லது நெகிழ்ச்சியோ ஏதோ ஒன்றில் முழுமை இருக்காது. ஆனால் அந்த பரபர திரைக்கதையால், இந்த கதைக்கு இவை தேவையில்லை என நமக்கும் தோன்ற செய்யும்.


ஆனால் இந்த இரண்டாம் வகை கதையில் அந்த முழுமையை நாம் முழுக்க உணரசெய்வதும். குறிப்பிட்ட அந்த பாத்திரங்களுடன் நம்மை ஒன்றசெய்து, அவர்களின் நெகிழ்ச்சியான தருணங்களில் நமக்கு முழுமையை உணரசெய்வதும். இந்தபடம் இரண்டாம் வகையை சார்ந்தது.

     
நாயகனின் சிறு வயதிலிருந்தே கதை துவங்குகிறது. அவன் துவக்கம் முதலே எந்த முடிவையும் தானே எடுப்பதில்லை. அதில் அவனுக்கு அன்றில் இருந்தே பெரும் குழப்பங்கள் உண்டு. திருமணமும் முடிந்து ஒரு மகளுக்கு பின் மனைவியும் தவறிட்றாங்க. இந்த நிலையில் மகள், தந்தையிடம் தன் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லண்டன் பிரபல பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தான் நிச்சயம் நல்ல மதிப்பெண்களுடன் லண்டன் செல்லபோவதாக கூறுகிறாள்.
சராசரி மாணவியான அவள். அதற்காக கடினமாக படிக்க துவங்கி அதற்கான தகுதியும் பெறுகிறாள். அதில் நாயகன் செய்யும் சிறுகுழப்பத்தில் அந்த வாய்ப்பு அவர் மகளுக்கு கிடைக்காமல் போகிறது. 2.30 மணிநேர கதையில் இந்த காட்சிகள் 40-50 நிமிடங்கள் வரும்.  இதற்கு பின்னே கதையின் மிகமுக்கிய தருணங்கள். அதாவது துவக்கத்தில் கூறியது போல், கதைக்கான கருவை அழுத்தமான காட்சிகளின் மூலம் பதித்து அங்கிருந்து பின் நிகழும் சம்பவங்கள் என செல்லும் முறை.
ஆனால் இந்த கதையில் ஆரம்ப 40-50 நிமிடங்கள் எந்த அழுத்தமான நிகழ்வுகளும் இல்லாமல் கலகலப்பாக மட்டுமே நகரும். ஆனால் அதன்பின் கதையில் நிகழும் பெரும்பாலான அழுத்தமான காட்சிகளுக்கும் முன்னுரை இந்த ஆரம்ப கலகல பகுதியில் இருந்தே எடுக்கபட்டிருக்கும். குறிப்பாக தனது தவறால் மகளின் கனவான லண்டன் சென்று படிப்பது இயலாததாகிறது. தனது முழுசெலவில் படிக்கவைப்பதாக மகளிடம் சொல்லவேண்டும் இது சுட்ச்வேஷன். கதையின் துவக்கத்தில் ஒரே ஷாட் மட்டுமே அவரின் மனைவி வருவார்.


அதில் ஒருசில வரி வசனங்கள் மட்டுமே இருவருக்கும் இருக்கும். அதை இந்த இடத்தில் சொல்லி தன்மகளை தேற்றும்போதுதான் துவக்கத்தில் அந்த ஷாட் அவசியம் நமக்கு புரியவரும். ரொம்பவே எமோஷனலான சீன் அது. படம் முழுக்க இப்படியான நிறைய அழுத்தமான காட்சிகள். ரசிக்கவைக்கும்படியான நகைச்சுவை கதை முழுக்கவே. அதிலும் லண்டன் இமிக்ரேஷன் பகுதியும், அதை தொடர்ந்த இடைவேளை காட்சியும். அதிலும் அங்குபோய் மகள் வெற்றியுடன் திரும்புவதாக வழக்கமாக படத்தை முடிக்காமல். இரண்டாம் பாதி முழுக்க அங்கு (LONDON) உள்ள சிரமங்களையும் கலகலப்பாக அங்கிருந்தே சொன்னது நச்.


நமது பெரும்பான்மையான கதை தேர்வுகள் க்ரைம், ஆக்க்ஷன் சுற்றியே இருப்பதால், இந்த படம் எளிதில் நம்மை இலகுவாக்கும். HOTSTARல் கிடைக்கிறது. தவறாமல் பார்க்க முயற்சிக்கவும்.

Wednesday, April 22, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 161.

பெரும் தொழிலதிபர் அம்மாநிலத்தின் அடையாளம். ஒரு நெடுஞ்சாலை உணவகத்திற்கு வருகிறார். அங்கிருக்கும் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் துவங்குவதற்கான அதிரடி இசை வாடிக்கையாளர் அனைவரின்  கவனத்தையும் ஈர்க்கிறது. அதில் பிரபல வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தின் CCTV காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. அதில் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கும் அம்மாநிலத்தின் அடையாளமான அந்த  தொழிலதிபர்தான் இருக்கிறார். மேலும் அவரை தடுக்கும் அவ்வங்கியின் பாதுகாவலரையும் தனது துப்பாக்கியில் சுடுகிறார்.


மேலும் அவரின் வக்கீல் காவல்துறையிடம் அவரால் இதை போன்றே நான்கு வங்கிகளை ஒரே சமயத்தில் வாங்கமுடியும். அவர் எதற்காக இந்த சிறுதொகைக்காக கொள்ளையில் ஈடுபடவேண்டும் என வாதாடுகிறார். சமீபத்தில்தான் இவர் 2500 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் நிரபராதியென நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. எனில் இத்தனை பெரிய மனிதர் இந்தகொள்ளையில் ஈடுபட காரணம் என்ன? முக்கிய குறிப்பு இது இரட்டைவேட கதையும் அல்ல.


ஒரு ஒப்பனை கலைஞன். அவரின் தந்தை சினிமாவில் புகழ்பெற்ற ஒப்பனையாளர். அதலால் சிறுவயது முதலே தன் தந்தையிடம் அதன் முழுமையும் கற்கிறார். உடன் ஒப்பனை குறித்த புத்தகங்கள் முதல், அதன் இறுதி அப்டேட் வரை இணையத்திலும் படித்து தேர்கிறார். தனது தந்தை இறந்ததும். அவரின் நண்பரின் மூலம் சில சினிமாக்களில் பணிபுரிகிறார். ஆனால் தனது பனியின் நேர்மை காரணமாக. காட்சிக்காக எந்த Compromise செய்து கொள்ளாததால் அவரால் தொடர்ந்து எங்கும் பணிபுரிய முடியவில்லை. வேறு எந்த தொழிலும் தெரியாத இந்த சூழலலிலும் தன்தொழிலில் தான்கொண்ட உறுதியுடனே இருக்கிறார். அவருள் அந்த முழுமையான கலைஞன் உயிர்ப்புடனே இருக்கிறார்.


ஒரு வக்கீல். அந்த ஒப்பனை கலைஞனை போன்றே சிறுவயது முதல் சட்டத்தின் மீது ஈர்ப்பு உள்ளவன். சட்டம் முதல் வருடம் பயின்று வருகிறான். எதிர்பாரா சூழலில் தன் தந்தையை கொலை செய்கிறான். அதையும் ரசித்தே செய்கிறான். சிறுவர் சீர்திருத்த பள்ளியில், முழுநேரத்தையும் சட்டத்தை படிப்பதிலே செலவிடுகிறான். வெளியே வந்ததும் நீதிமன்றங்களுக்கு சென்று அங்கு ஒரு வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள் என தீவிரமாக கற்கிறான்.
முதல் வருடத்திற்கு பின் தன் சட்டபடிப்பை தொடரமுடியாதவன். அங்கிருக்கும் வக்கீல்களிடம் தன்னை தற்போது பயிற்சியில் இருக்கும் வக்கீலாகவே அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்களின் வழக்குகளில் உள்ள நுண்ணிய தவறுகளை சுட்டிக்காட்டி அதை எவ்வாறு கையாள வேண்டுமென கூறிவருகிறான். நீதிமன்றத்திற்கு வெளியே தனி அலுவலகமும் வைத்து இந்த யோசனையை செயல்படுத்தியே நல்ல பொருள் ஈட்டி வருகிறான். ஆனால் அவனுள் இருந்த கொலைகாரன் அதே ரசனையுடன் விழித்தே இருக்கிறான்.


இந்த இருவேறு பாத்திரங்களும் கதையில் இணையும் ரொம்ப முக்கிய காட்சி ஒன்று உள்ளது. அதுவரைக்குமான கதைக்கும். அதன்பின் இந்தக்கதை செல்லும் விதமும் நம்மை பெரிய ஆச்சர்யத்திற்கு உட்படுத்தும். சமீபமா இந்தளவு அடர்த்தியான வசனங்களை முழுகதையிலும் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படம் ப்ரைம்ல் தமிழ் சப்டைட்டிலுடனே கிடைக்கிறது.



இந்த இரு பாத்திரங்களும் சம்மந்தமில்லாத முதல்பத்தியில் குறிப்பிட்ட அந்த தொழிலதிபரின் அசம்பாவிததிற்கும் காரணமாகின்றனர். அவர்மட்டுமல்ல இன்னும் சிலரின் வாழ்கையிலும். இந்திய சினிமாவின் உண்மையான சைக்லாஜிக்கல் திர்ல்லர். ஒரு உண்மையான புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்.             

Tuesday, April 21, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 160.

Pixar, Walt Disney, Dream Works போன்ற பிரபல நிறுவனங்களின் பரவலாக அனைவராலும் அறியப்பட்ட அனிமேஷன் படங்களாக இல்லாமல். அதேபோல் தொழில்நுட்பத்தில் சிறந்த அனிமேஷன் படங்களை தேடியதில் சட்டென வசீகரித்த அட்டகாச ப்ரெஞ்ச் திரைப்படம் இது.  


முதல் ஷாட் ஒரு மலைவாசதலத்தில் கதிரவனின் வெப்பம் முழுதும் ஆட்கொள்ளாத ரம்மியமான சூழலில் ஒரு தம்பதியர் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் காட்சி. அப்பெண்ணிற்கு சட்டென பிரசவவலி ஏற்பட. அவர்களின் உணவு பொருட்கள், பழங்கள், தின்பண்டங்கள் வரை அனைத்தையும் அங்கேயே விட்டு அவர்கள் வாகனம் கிளம்புகிறது.


ஒன்றரை மணிநேர திரைப்படத்தில் இந்த காட்சியானது ஒரு மூன்று நிமிடங்கள் (டைட்டில் கார்டும் சேர்த்து) இருக்கும். அந்த நிமிடம் வரை எந்தவித சிறு ஒலியும், அதாவது பறவைகளின் கிரீச்சிடல் கூட இல்லாமல் இருந்த பேரமைதி சூழலை கிழித்துகொண்டு நிறைய வாகனங்கள் செல்வதை போன்ற பெரும்சப்தம். ஆனால் நிமிடங்களில் நாம் உணரமுடியும் அவை அங்கிருக்கும் சிறுபூச்சி, வண்டுகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற சிறு பறவை இனங்களின் ஒலியென. கதை இங்கிருந்து நம்மை அவர்களின் உலகிற்குள் கூட்டிசென்றிடும். அவ்வழியே உணவு சேகரிக்க வரும் எறும்புகுழு, புதிதாக ஏதோ நறுமணம் கவர. அந்த தம்பதியர் விட்டுசென்ற தின்பண்டங்கள் இருக்கும் இடம்தேடி வருகிறது. ஜாக்பாட் அடித்ததை போல அவர்களுக்கு கிடைப்பது ஒரு டின் நிறைய சக்கரை கட்டிகள். அதுவரை அப்படியான ஒரு சுவையை உணர்ந்தே இல்லாத அந்த எறும்புகள். அதுவரை சேகரித்த பொருட்களை அங்கேயே விட்டு, சக்கரை கட்டிகளை அந்த பாக்ஸ்ஸுடனே (டின்) எடுத்து செல்ல துவங்குகிறது அந்த அப்பாவி கருப்பு எறும்புகள்.
வழியில் அவை சந்திக்கும் தடங்கல்களை கடந்து அவை எவ்வாறு தனது இருப்பிடம் சென்று சேர்கிறது என்பது மட்டுமல்ல இந்த கதை. அவை கொண்டு சேர்த்த அந்த அந்த கட்டிகளால் அந்த முழுஎறும்பு கூட்டமும் சந்திக்கபோகும் பெரும் ஆபத்துகளை கடந்து எவ்வாறு மீண்டன என்பதே.


இதில் அந்த கட்டிகளை தன் இருப்பிடத்திற்கு அவை கொண்டும் செல்லும் காட்சிகளை APOCALYPTO வில் நாயகன் நரபலியில் மீண்டு, அந்த குழுவின் துரத்தல்களுக்கு இடையே தன் இருப்பிடம் நோக்கி விரையும் காட்சியுடன் ஒப்பிடலாம். இது உங்களை நகைப்பிற்கு உள்ளாக்கலாம். அப்படியான ஒரு காட்சியை அனிமேஷன் கதையில் அதும் வெறும் எறும்புகளுக்கு இணையாக ஒப்பிடுவதால். காட்சியாக பார்க்கையில் அதன் பிரமாண்டத்தை நம்மால் உணரமுடியும்.


ஒரு குட்டி பொன்வண்டு ஒன்று முக்கிய பாத்திரத்தில் வரும். அதன் குட்டி கதை அத்தனை உயிர்ப்புடன் இருக்கும். மேலும் அதன் சாகசங்கள் படம் முழுதும் பரபரப்புடன் இருக்க மிகமுக்கிய காரணம். எறும்புகளின் வசிப்பிடம் அந்த புற்றும் அதனுள் பணிபுரியும் எறும்புகளும். நமக்கு பெரிய அரண்மனையில் போருக்கு தயாராகும் வீரர்களை நினைவூட்டும். இதன் எதிரிகள் யார்? இந்த எறும்புகளுக்கும் அந்த பொன்வண்டுக்குமான சம்பந்தம் என படம் முழுக்க நிறைய பரபர & நெகிழ்ச்சியான நிகழ்வுகள்.


ரொம்ப முக்கியமான விஷயம் பிரெஞ்ச் படத்திற்கு சப்டைட்டில் தேடி அலைய வேண்டியது இருக்காது. இது சைலென்ட் மூவி. ஆனா பெரிய சினிமா ஞானம் இல்லாத சராசரி ரசிகனும். இந்த படத்தோட பேக் கிரௌண்ட் ஸ்கோர் புகழ்ந்து சொல்லாம இருக்கவே முடியாது. இந்த நேரத்தில் குட்டீஸ்ங்களோட பாக்க ரொம்ப சரியான படம்.                  

Saturday, April 18, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 159.


Crime Thriller கதைகளில் என்ன இருக்கவேண்டும்?.. தொடர் கொலைகள் நடக்க வேண்டும். பொதுவாக அவை ஏதேனும் ஒரு தொடர்போடு இருக்கவேண்டும். கூடுமானவரை கொலைகள் அல்லது அது சம்பந்தமான கடத்தல் இரவில்மட்டுமே நடக்கவேண்டும். இறப்பவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளானதாக உடற்கூறு ஆய்வு நடத்தும் மருத்துவர். அந்த கொலைவழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் குறைந்தது ஒரு நிமிடமேனும் விவரிக்க வேண்டும்.


அந்த அதிகாரிக்கு நெருக்கமான நபர்கள் மீது கொலைமுயற்சி நிகழ்த்தபட வேண்டும். இந்த டெம்ப்ளட்க்கு உள்ள வராத சமீபத்திய நல்ல கிரைம் படங்கள் ஏதும் இருக்க வாய்பிருக்காது. இந்த படமும்கூட இந்த Formulaக்கு உள்ளவே வந்திருக்கு. ஆனா இந்த வருசத்தோட தி பெஸ்ட் படங்கள்ல முதல் ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இது இருக்கும்.

 
புதுவகையான ஒரு முயற்சி எந்தளவு ஒரு கடினமோ. அதை காட்டிலும் பெரும் தலைவலி இப்படியான வழக்கமான Formula உள்ளவே கதை, அதையும் நாம் ரசிக்கும்படியாகவே அமைப்பது. அதே தொடர்கொலைகள். இறந்தவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. இரவு நேரத்தில் மட்டுமே நடப்பது. கொடூரமான முறையில் கொல்லபடுவது. இப்படி எல்லாமும் அதே வழக்கமான விதிகளுக்குள்ளவே பயணபட்டாலும். தனித்து தெரிவது அதன் உருவாக்கத்தில்.
முதல்ல ஒரு போலீஸ் அதிகாரி கடத்தி கொல்லப்படும்வரை இந்த கதையும் ரொம்ப இயல்பாகவே போகும். அந்த கொலைக்கு பின் முடுக்கிவிடப்படும் அத்துறையின் அதிகாரிகளில் இருந்தே அடுத்தடுத்த அதிகாரிகளை கடத்தி, அதேமுறையில் கொல்லபடுவதில் நமக்கு தொடங்கும் பதட்டம், படத்தோட கடைசி ஷாட்வரை கொண்டுபோன மிரட்டல் உருவாக்கல். அதிலும் சின்ன சின்ன யூகங்களை வைத்து ஒருகட்டத்தில் இன்னும் ஒரு அதிகாரி கடத்த கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காட்சி. நம்ம எல்லோரும் மிரண்டு போறமாறியான ஒரு இடம்.


ஏன்னா அதுவரை விசாரணை ஒரு யூகமாதான் போகும். குறிப்பிட்டு எந்த பயனுள்ள சின்ன க்ளுகூட அவங்களுக்கு இருக்காது. என்ன பண்றதுன்னு அங்க மொத்த அதிகாரிங்களும் நிற்கும் அதே சூழ்நிலைதான் பார்வையாளர்கள் நமக்கும் இருக்கும். காட்சியோடு ஒன்றி இதுபோல படபடப்பை உணர்ந்தது சமீபமாக இல்லை. ஒவ்வொரு அதிகாரியும் கடத்தப்படும் முன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கபடும். இரண்டாவது அதிகாரி கடத்தல் முதல் இந்த இடங்கள் அனைத்தும் நமக்கு பெரும் கிலியை ஏற்படுத்தும். இதேவகையில் கிட்டத்தட்ட முழுகதையிலும் நம்மை பதட்டபடவைக்க நெறைய விஷயங்கள் பாத்து பாத்து பண்ணிருக்காங்க.


இறுதிவரைக்கும் நன்றாகவே கொண்டுசென்று கடைசிகட்டத்தில் நெறைய சொதப்பிய படங்கள் உண்டு. அனால் இறுதியில் கொலைக்கான காரணகர்த்தாவும் அதற்கான காரணங்கள்வரை விரியும் இறுதிபகுதி வரை சரியான நேர்த்தி. நடந்த சம்பவங்களும் ஏற்றுகொள்ள கூடிய திரைக்கதை. இந்த கதையை துவக்கி வைக்கும் பாத்திரம். அவரின் யூகத்தை கொண்டே விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும். அந்த character இந்த கதைக்குள்ள கொண்டுவந்தது செம்ம ஐடியா. கூடுமானவரை இரவில் பார்க்கவும். SUN NXT ல் உள்ளது.

Wednesday, April 15, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 158.

நம்ம இதயம் முரளி முதல்முறை ஹீராவ பாக்கும்போதே காதலை சொல்லி அவங்களும் அதை ஏற்று இருந்தா என்ன நடந்திருக்கும். அடுத்த 5 வருசத்துல அவங்க மெடிக்கல் முடிச்சி இருப்பாங்க. இல்ல அவங்க அக்காவை போலவே இவங்களும் தற்கொலை பண்ணிருப்பாங்காளா? அதேபோல இந்த படத்தின் முக்கிய பாத்திரமான நாயகிக்கும் ஒரு காதலன் இருக்கான். தான் இப்படி ஆகணும்ங்கற ஆசையோட வளரும் ஒரு சராசரி பெண். தன் காதலால, இல்லல்ல.. காதலனால, அதுமில்ல.. என்றோ தன்னை காதலித்தவனால். தன்னின் அனைத்தும் இழந்து நிற்கும் கதை.


இவங்களை புரியாத புதிர் ரகுவரன், கல்கி பிரகாஷ்ராஜ் கூடலாம் ஒப்பிடவே முடியாது. ஒருமாறி தாழ்வு மனப்பான்மைல ரொம்ப உயர்வுல இருக்கறவங்க. அவங்களால தனக்கு சொந்தம்னு நினைக்கும் காதலன்/ காதலி அவங்களுக்கு கீழ இருக்கும் வரைக்கும்தான் இந்த ரகுவரன், பிரகாஷ்ராஜ்ங்கிற அளவிலே இருப்பாங்க. அவர்களை தாண்டி, அவர்களின் துணையின்றி அடுத்த நிலைக்கோ போககூட வேணாம். அதுக்கான ஒரு முயற்சியில் இருந்தாலே அந்த வில்லன்களின் நிலையை சாதாரணமாக கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் சராசரியில் பெரும்பான்மை ஆண்மகன்கள்.


தன்னுடைய 14 வயதில் மொத்த பள்ளியும் இவளை ஏளனமாக பார்க்ககூடிய சூழல். அந்த சந்தர்பத்தில் அவன் ஒருவன்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாக, அவனை பற்றிய பேச்சு வருகையில் தன்தந்தையிடம் சொல்கிறாள். அதாவது அவன் எப்பொழுதும் இவனின் ஆறுதலில் மட்டுமே அவள் நிம்மதிகொள்பவளாகவே இருக்கவேண்டும்.


அதாலே இவள் கல்லூரி ஆண்டுவிழாவில் நடனம் ஆடும்போதோ, அவளின் லட்சியமான PILOT TRAINING க்காக டெல்லி செல்லும் போதோ. அதை அவனால் இந்த வகையிலும் ஏற்றுகொள்ளவோ, ஏதேனும் சால்ஜாப்பு காரணங்களை சொல்லி தன்மனதை சாந்தபடுத்தி கொள்ளவோ முடிவதில்லை. அதாலே அவளை ஆசிட் வீசி உருகுலைத்த பின்னும். அதிலிருந்து அவள் மீண்டு தன்னை அடுத்த கட்டத்தில் நிலைநிறுத்தி கொண்ட சூழலில். மீண்டும் அதை கெடுத்து குட்டிசுவராக்குவான். தொடக்கம் முதல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்துவந்தாலே, இவனின் ஒவ்வொரு செய்கையும் துவக்கம் முதல் நாம் சராசியாக கடந்து செல்லும் நிலையிலே இருக்கும்.
காரணம் இன்றும் நம்மிடையே இப்படியான நபர்கள் சகஜமாகவே இருந்துகொண்டே இருப்பதுதான். இவன் கொஞ்சம் கட்டுப்பாடு இழந்து ஆசிட் வீச்சுவரை சென்றதால் குற்றவாளி என எளிதாக அடையாளபடுத்திட்டோம். அந்த சூழ்நிலையில் கொஞ்சம் கட்டுபாட்டோட இருந்ததால நம்மில் யாரும் எளிதாக அடையாளபடுத்தபடாம பொதுஜனங்களோட இருந்து அவனை குற்றம் சொல்லிட்டு இருக்கோம் அவ்வளவே. இந்த கதையோட போக்கை ஒவ்வொரு முறை மாற்றி செல்வது இவனோட பாத்திரம் மட்டுமே. அதாலே அந்த ஒரு பாத்திரதன்மை குறித்தே சொல்ல வேண்டியதாயிற்று.


இந்த கதை வலுவா துவக்கம்முதல் சொல்லவந்த இரண்டு விஷயங்கள். அந்த பொண்ணு pilot ஆக ஆசைபட்றதும். அது அவளோட காதலனால எப்படி சீரழிஞ்சி போகுது அப்படிங்கறது மட்டும்தான். இந்த ரெண்டு விசயத்தையும் அதுக்கான காரணங்களோட ரொம்ப தெளிவா கதையோட போக்குலயே சொன்னதுதான். இந்தபடம் முழுசா மொத்த பேருக்கும் பிடிச்சிபோக ரொம்ப பெரிய காரணம். அடுத்து இந்த கதைக்கு இவங்க தேர்ந்தெடுத்த பாத்திரங்கள். அவங்க ஒரே காட்சில வரவங்ககூட கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறத மட்டும்தான் பண்ணிருக்காங்க.



குறிப்பா மொத்த கதைக்கும் அச்சாணி நாயகி பாத்திரமேற்ற பார்வதி. குட்டி குட்டி சீன்ல வசனமே இல்லாம அவங்க மனநிலையை வெறும் கண்ணசைவில், முகபாவத்தில், உடல்மொழியில் போற போக்குல சொல்லிட்டே போறது. அடுத்து அந்தமேக்கப் அது அவங்களுக்கு பொருத்தமா இருக்குனு சொல்றதுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம் இல்லை. அது கொஞ்சம் அவங்க முகத்துக்கு துருத்திகிட்டு இருக்கணும். பார்க்கும் அனைவரும் கொஞ்சமா முகம்சுழிக்கதான் செய்யணும். ஆனா அகோரமா இங்கயும் தெரிஞ்சிடவே கூடாது. அதை படத்தோட கடைசி ஷாட்வரை ரொம்ப கவனமா பாத்து பாத்து பண்ணிருக்காங்க.  பார்வதிக்கு இது இன்னுமொரு படம்னு சொன்னா மட்டுமே போதும். புதுசா அவங்களை பாராட்ட என்ன இருக்கு.

Search This Blog