Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, February 17, 2018

















முதன்மை பாத்திரங்களின் கொடூர மரணமோ, உருகும் காதலில் நிரந்தர பிரிவோ அல்லது தானோ அல்லது தன்னை சார்ந்தவர்களின் பாதிப்பிற்கு ஆளாகியவனை கொடூரமாக வஞ்சிப்பதை போன்ற காட்சிகளை காட்டிலும். சந்தோஷ தருணங்களில் மென் சோகத்துடன் வெளிப்படும் கண்ணீரே பார்வையாளனின் மனதில் நெடுநாட்கள் நீடித்திருக்கும். நீண்ட இடைவெளிக்கு பின் இப்படியான ஒரு உணர்வை தனது படைப்பில் மீண்டும் கொண்டுவந்த பாலாவிற்கு ஆரத்தழுவல். 


எளிய மனிதர்களின் சிறு வெகுளிதனங்களையும் பெரும் சோகங்களையும் கிராமம் அல்லது சிறு நகரங்களின் பின்னணியில் கொடுத்து வந்தவர். இம்முறை தமது களமாக தேர்ந்தெடுத்தது சென்னையை. எடுத்த கதையும் இதுவரை அவர் தொடாத வகையை சார்ந்தது. மைனர் பெண் ஒருவரின் கர்பத்திற்கு காரணமானவனை பற்றிய தேடல் மட்டுமே இக்கதை. அதில் அவர்களின் காதலை மட்டுமே வைத்து இப்படத்தை மிகசிறந்த பொழுது போக்கு படைப்பாக சுமாரான எந்த இயக்குனனாலும் வழங்கயியலும்.


ஆனால் தான் சொல்ல நினைத்தது எதுவோ அதையும் அதனை சுற்றிய அவரின் கோர்வையாக மட்டுமே காதலை பயன்படுத்தியிருப்பது மட்டுமே இதில் அவர்பாணி. மற்ற எந்த பாலா சமாச்சாரங்களும் பெரிதும் காட்சிகளில் தெரியப்படுத்தாத இவரின் புதுமுயற்சி அபாரம். எப்பொழுதும் தனது கதைகளில் ஒற்றை பாத்திரத்தை சுற்றியே காட்சிகள் நகரும். இதிலும் ஜோதிகா பாத்திரம் அப்படிப்பட்டதே. ஆனால் கதையை படமாக்கையில் அவரின் பாத்திரத்தை மிஞ்சும் அல்லது நம் மனங்களை வெகுஎளிதில் வென்ற ஒரு புதுமுக பாத்திரம் ஒன்று உள்ளது.


தனது வெகுளி சிரிப்பில், போலி அதட்டலில், நாணிய நடையில், காதல் பார்வையில், பிரிவின் பரிதவிப்பில்  அப்பாத்திரம் வெகு எளிதில் ஜோ பாத்திரத்தை விஞ்சுகிறது. கதை முழுக்க தனக்கான காட்சிகள் அதிகமிருக்கும் கதைகளை காட்டிலும் தனக்கான காட்சிகளில் பளிச்சென நிருபிக்கும் வெகுசில நடிகர்களுக்கு இணையாக ஜோ.  பல வருடங்களுக்கு பின் ஒரு நடிகைக்கு அவ்வாறான பாத்திரம். அதில் பிரமாதபடுத்துவது வேறு. அப்பாத்திரத்தின் குணநலன்களுக்கு பொருந்தி போவது என்பது வேறு. ஜோ செய்தது இரண்டாம் வகை. இவரின்  உண்மையான குணநலனே இதுதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்.


தமது படங்களில் பிரதான பாத்திரங்களின் குணாதிசியத்தை அறிமுககாட்சிகளிலே வசனங்கள் ஏதுமின்றி பார்வையாளனுக்கு உணரவைப்பதில் வல்லவர். இதிலும் ஜோவிற்கு அப்படியான முதல் காட்சி. அதிலேயே அவரையும், அடுத்த பத்தாவது நிமிடம் கதையின் போக்கையும் யூகித்திட முடியும். பெரிதும் திரைக்கதையில் எந்த மர்ம முடிச்சிகள் இன்றி அக்கதை எதை நோக்கி பயனிக்கிறதோ. அதனுடன் மட்டுமே செல்பவர். இம்முறை ஒரு குட்டி சஷ்பண்ஸ் முழு கதையிலும் வரும்படியான திரைக்கதை. அதை முழுதும் அவ்வாறே கையாண்டு டிடக்டிவ் வகையான படமாக மாற்றி தனது முழு அடையாளத்தையும்  இழக்காமல். தனது பாணியில் இருந்தும் வேறுவகையான படைப்பாகவும் கொண்டு வர முயன்றுள்ளார். திரைகளில் அதிகம் பார்த்திராத சென்னையை தேடி பிடித்ததே. இக்கதை களம் ரொம்ப புதுசா பார்வையாளனை உணரவெச்சது.



இன்றைய நாயகர்கள் திருடன் பாத்திரத்தை ஏற்றாலும் ஏழைகளுக்கு உதவி செய்து தான் நல்லவன் என்ற பிம்பத்துடன் மட்டுமே நடித்துவரும் சூழல். ஆனால் அதற்க்கான எந்த பாசாங்கும் இல்லாத நான் இப்படிதான் நல்லவள்னு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்லுபடியான பாத்திரத்தை வெகு சாதாரணமாக கையாண்டுள்ளார். ஒரு காட்சியில் வசனமில்லாமல் வேகமாக சோபாவில் அமர்ந்து டீப்பாயின் மேல் கால்களை போடவேண்டும். உண்மையில் இந்த அசால்ட்டு கெத்து. பெரும்பான்மையான நடிகர்களுக்கு எத்தனை ரீடேக் போனாலும் வருவது கஷ்டம் சூர்யாவையும் சேர்த்து. ரெண்டே ஆண் பாத்திரங்களை மட்டுமே லேசாக தொட்டு பேசும் காட்சிகள். தனக்கு கீழ் பணிபுரியும் பாதிக்கபட்ட பெண்ணிற்காக வருந்தி புலம்பும் காவல்துறை அதிகாரியையும். இறுதி காட்சியில் ஜி.வி யையும் அந்த இருகாட்சிகள் போதும் மொத்த பெண்களின் சார்பாக இந்த முரட்டு மனுஷி மூலம் ஆண்களுக்கு கொடுக்கும் மரியாதை. ரொம்ப பெரிய பாலா படமும் இல்லாத வெகு சாதரணமா கடக்கவும் முடியாத ஒரு நல்ல படம். இளையராஜா டைட்டில் கார்ட் பார்த்தாலே போதும். முன்னணி இசையில் பல இடங்களில் கலங்கடிக்க முயல்கிறார். ஜி.விக்கு இதுவே அறிமுகபடம் இதைகொண்டு அவர் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் படங்கள் பொறுத்தே இனி அவருக்கான வருங்காலம்.

Saturday, January 27, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.


குடும்பம், பிள்ளைகள், ஏன் சொந்தமென்று கூட யாருமில்லாமல் தனிமையில் வசிக்கிறிர்கள். பேருக்கு உடன் பணிபுரியும் ஒரு தோழி. இப்படியான சூழலில் பணிபுரியுமிடத்தில் ஒரு பிராணி மிகவும் துன்புறுத்தபடுவதை தினமும் காண்கிறிர்கள். நிராதரவான உங்களுக்கு அதன் மீதும். தன்னையும் பாசத்துடன் அணுகும் ஒரே ஜீவனான உங்கள் மீது அதற்கும் பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அதை உங்கள் வசிப்பிடத்திற்கும் கொண்டுவந்து விடுகிறிர்கள். இப்பொழுது நீங்கள் இருப்பது 195௦களின் காலக்கட்டம் எனவும். பணிபுரிவது அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய ரகசிய அறிவியல் ஆய்வுகூடம் எனவும். நீங்கள் எடுத்து வந்த பிராணி மனித உருவில் கடலில் கண்டெடுத்த வேற்றுகிரகவாசியா என இன்னும் உறுதி செய்யபடாத ஜீவன் எனவும் கொண்டால் இதுவே THE SHAPE OF WATER திரைப்படம்.


STEVEN SPILBERG ன் E.T படத்தின் ஞாபகம் இப்பொழுது உங்களுக்கும் வருவது சரியே. ஆனால் மணிசார் இதன் சாயலின்றி அஞ்சலி எடுத்தது போலவே இப்படமும் ஒரு அசாதாரண முயற்சி. இவ்வாறாக பெரும்பாலும் தனிமையில் மட்டுமே வாழ்பவர்கள் எதிலும் தன்னை முன்னிலை படுத்திகொள்வதோ தானே பழகியவர்களிடம் கூட வழிய சென்று உரையாடுவதோ செய்ய மாட்டார்கள் . அவர்களின் முகம் பெரும்பாலும் ஒருவித இருக்கத்துடனே காணப்படும். அவர்களின் நடையில் ஒரு கம்பீரம் காணப்பட்டாலும் ஒருவித சோர்வான மனநிலையிலே காணப்படுவர். அதிலும் பேசயியலாத ஊமைபாத்திரம் வேறு. இவ்வாறாக ஒரு பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் கதைகளில் வெகு நுணுக்கமாக அவர்களின் அனைத்து குணாதிசியங்களும் ஏதோ சிலகாட்சிகளுக்கு மட்டுமின்றி முழு படத்திலும் இயல்பிலே இப்பாத்திரத்தின் குணாதிசயம் இதுதானோ என நினைக்கும்படியான ஒரு வாழ்கையே வாழ்ந்துள்ளார் SALLY HAWKINS.


பெரிதாக எந்தவிதமான வசீகரமும் இல்லாத இவ்வாறான பெண்ணை முழு கதையும் அவர்களை சுற்றி மட்டுமே நடக்கும் கதையில் தேர்வு செய்ததன் காரணமே பாதிபடத்தின் பின்னேதான் பார்வையாளனால் உணரயியலும். அதுவரை அனைத்தும் பொருந்தி போகிற படத்தில் சற்று கூடுதல் அழகான பெண்ணை தேர்வு செய்திருக்கலாமோ என்ற சிறு குறைபாட்டையும் அப்பாத்திரத்தை கொண்டே இயக்குனர் சமன் செய்திருப்பார். தங்கள் ஆய்வுகூடத்தில் சோதனை என்ற பெயரில் அந்த உயிரினத்தின் மீது நடக்கும் கொடுமையிலிருந்து அதை காப்பாற்ற முடிவெடுக்கும் காட்சி. அதை தன் குடியிருப்பின் அருகில் வசிக்கும் எப்போதேனும் அவள் தனது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு வயதான ஓவியருடன் விவாதிக்கும் காட்சி. அதில் இப்பெண்ணிற் க்குள்ளும் இவ்வளவு உறுதியா என ஆச்சர்யபடுத்துபவர். தன் இருப்பிடத்திற்கே அதை கொண்டு வந்தபின் பேசயியலாத தான் சைகையின் மூலம் தன்னை பற்றி விளக்கும் காட்சியில் அவளுக்குள் உள்ள மென்மனதை தன் உடல் அசைவுகளின் மூலம் நமக்கும் உணரசெய்வார். இதற்க்கு பின்னான அந்த உயிரினத்தின் பால் காதலுறும் காட்சியில் அந்த கண்களும் இதழ்களும் நம்மையும் அவள்பால் ஈர்க்கசெய்யும். இதுதான் இவள் என்று நாம் நினைத்திருந்த அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி நம்மையும் அவளை நேசிக்க செய்யும் பேரனுபவம் நிகழும்.


கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம். எந்த கதையும் கடந்த காலத்தையோ, வருங்காலத்தையோ களமாக தீர்மானித்தது சரியா என  முடிவுசெய்வது அவர்கள் தேர்ந்தெடுத்த களத்தில் அவர்களின் சரியான உருவாக்கலே அதாவது (கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம்.) என்ற பார்வையாளனின் கருத்தே தீர்மானிக்கும். அக்காலகட்டத்திற்கு பொருந்தாத இல்லாத விஷயங்கள் ஏதேனும் ஒரு காட்சியில் தென்ப்பட்டால் அதுவே அந்த மொத்த கதையையும் சிதைத்திடும். PACIFIC RIM, HELL BOY இயக்குனரிடமிருந்து இப்படியான படைப்பு பெரும் ஆச்சர்யம். அதிலும் அக்காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அவர்களுக்கிடையேயான அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அதன் சூத்திரங்களை தாங்கள் அறிந்துகொள்ளவோ அல்லது அதை அழிக்கவோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இக்கதைக்கு எந்தஅளவில் மட்டுமே தேவையோ அதை மட்டுமே கொடுத்த இத்திரைக்கதைக்குள் சேர்த்த அதிபுத்திசாலிதனம் கனகட்சிதம்.



பின்னணி இசை மட்டுமின்றி இவர்களிடையேயான ஈர்ப்பை உணர்த்தும் காட்சிகளில் ஒலிக்கும் பாடல்களும் அதியர்புதம். அடுத்து குறிப்பிட்டு சொல்லவேண்டியது படத்தின் CG மற்றும் CINEMATOGRAPHY. சிறந்த இயக்குனர் மற்றும் நடிகை உட்பட நான்கு GOLDEN GLOBE விருதை வென்றதுடன். இவ்வருட ஆஸ்கரில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கபட்டுள்ளது இப்படம்.

இப்படத்திற்கான ட்ரைலர் லிங்க்:

https://www.youtube.com/watch?v=RQw9P8Fpyc4

Tuesday, January 16, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 122.

சினிமாவில் மற்ற துறையினரை காட்டிலும் நடிகர்கள் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவது சமீபமாக  அதிகரித்துள்ளது. தங்கள் சம்பளத்திற்கு பதில் படத்தின் வசூலில் வரும் லாப சதவிகிததிற்கே தயாரிப்பு நிறுவனம் நடத்தலாம். அல்லது தாங்கள் நடிக்க தேர்ந்தெடுக்கும் கதைகள் நினைத்த படி காட்சிகள் வெளிவர ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்களே தயாரிப்பாளர்களாகவும் இருப்பதே சரியெனவும் நினைத்திருக்கலாம். ஆனால் தாங்கள் பங்குபெறாத படங்களையும் தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ முன்வருவதற்கு இரண்டு பிரதான காரணங்களே இருக்க இயலும். ஒன்று அக்கதையின் மீது கொண்ட நம்பிக்கை. இரண்டு இவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த படங்களில் இணை இயக்குனராக அந்த நபர்களின் உருவாக்களின் மீது கொண்ட நம்பிக்கை. காரணங்கள் எதுவாவாக இருப்பினும் இது போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளிவருவது சினிமாவிற்கு மிகப்பெரும் பலம். இப்படம் ஒரு பெரும் நடிகனின் வெளியீடு என்பதே இப்படத்தை பார்ப்பதற்கு போதுமான காரணமாக இருந்தது.


தமிழில் பாலசந்தர் முதல் கமல்ஹாசன் வரை பெரும் இயக்குனர்கள் ஏற்கனவே முயற்சித்த திரைக்கதைதான். ஒரு சம்பவம், இரு பாத்திரங்கள் அந்த சம்பவத்தை இருவேறு நிகழ்வுகளாக கூறும் யுக்தி. இதில் இரு கொலை அதில் இரண்டாவது கொலையை இவர்தான் செய்ததாக இரு நபர்களும் ஒரே சம்பவத்தை பற்றி இரு வேறு நிகழ்வுகளாக காவல்துறை வசம் விளக்குவது. அப்படியானால் முதல் கொலை?


தன் மனைவியை கொன்றதாக காவல்துறை ஒரு நபரை விரட்டுகிறது. அவன் ஓடிஒளியும் வீட்டில் உள்ள பெண்ணின் கணவர் இறந்துவிடுகிறார். அந்த கொலையை அப்பெண் இவன்தான் செய்ததாக கூற. அவனோ தான் அங்கு செல்லும் முன்னே அப்பெண் தன்கணவனை கொன்றதாகவும் மேலும் தன் மனைவியையும் தான் கொலை செய்யவில்லை எனவும் விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் இறந்த நேரம் தெரிந்துவிடுமே. இவ்வாறு பிரதானமாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு திரைக்கதை மூலம் நேர்மையான விளக்கமும் கொடுத்துள்ளனர்.

 
மேலும் ஒரே சம்பவத்தை இருவர் வெவ்வேறு நிகழ்வுகளாக விளக்க முற்படும் காட்சிகளில் வெறும் இரு பாத்திரங்கள் மட்டுமே பங்குபெறுவதில் பார்வையாளர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஆனால் துளியும் சலிப்பெற்படுத்தாமல் இறுதிவரை பெரும் எதிர்பார்ப்புடன் கொண்டு செல்லும் அதிவேக திரைக்கதை. இது போன்ற கதைகளில் CONTINUTY மிகமுக்கியம். உதாரணமாக முதல் கைகலப்பில் ஏதேனும் பொருள் சேதாரமடைந்தால். மற்ற கதைகளை போல் அடுத்த காட்சிகளில் அப்பொருட்கள் இல்லாமலோ அல்லது வேறு மாற்று பொருளை அதற்க்கு பதில் வைக்கஇயலாது.


காவல்துறையால் தேடப்படும் நபர் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ள வீட்டில் உள்ள பெண் மற்றும் குற்றவாளியாக கருதப்படும் நபர் என இருவர் மட்டுமே முழு கதையிலும் உள்ள நிலையில் நாமே தொடர்ச்சியற்ற காட்சிகளுக்கு சமாதான யூகங்கள் செய்துகொள்ள இயலாது. “அந்த பொண்ணே சுத்தம் பண்ணிருப்பா”. அவனே சட்டை கிழிஞ்சதால வேற சட்டை மாத்தியிருப்பானு”. என்ன காட்சியோ அதை முழுதாக காட்டவேண்டிய கதை. அதில் துளியும் பார்வையாளனை ஓரவஞ்சனை செய்யாத திரைக்கதை. முழு பாராட்டையும் இயக்குனரை மீறி எடிட்டர் மற்றும் கொலைகாரனிடம் வீட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண் பாத்திரத்தில் நடித்த SONAKSHI SINHAவும் தான் பெறுகிறார்கள்.


ஒரு சாதாரண பார்வையாளன் பார்வையில் ஒரு சுவாரசிய படத்தின் பின்னால் ஒளிந்துள்ள பெரும் உழைப்பிற்கு சொந்தகாரர்களை பற்றிய கவலை ஏதுமில்லை. அவர்கள் முழு படமும் திரைக்கதையில் எந்தவித எடஞ்சலும், சறுக்கல்களும் இல்லாமல் ஓடி முடியும் வேலையில் மிகசாதாரணமாக இந்த சூவாரசிய கதைக்கு காரணமாக தோன்றுவரை பற்றி மட்டுமே சிந்திக்கவோ, அடுத்தவர்களிடம் இப்படத்தை பற்றி பகிர்கையில் கூறுவர். இப்படத்தை பற்றி மற்றவரிடம் பகிர்ந்தவர்களில் பெரும்பாலோர் நிச்சயம் இந்த இருவரை பற்றியுமே பேசியிருப்பர். அந்த உருண்ட கண்களில் கலவரத்தை வெகு இயல்பாக காட்ட முடிவதால்கூட இருக்கலாம். இவருக்கு பின்னே நடிகர்களில் பார்வையாளன் பெரும்பாலோர் கண்கள் மொய்ப்பது விசாரணை அதிகாரியாக AKSHAY KHANNA மீதே.


இது போன்ற கதைகளில் வரும் அதிகாரிகளை அதிபுத்திசாலிகளாகவும் திறமையாளர்களாகவுமே பார்த்து பழகிய நமக்கு. ஒரு சராசரி அதிகாரியாக நம்மில் ஒருவர் போல் காட்சியளிக்கும் இவர் நம்மை  ஆட்கொண்டதில் பெரிய வியப்பேதும் இல்லை. கொலை நடந்த அபார்மெண்டின் செக்யூரிட்டிகளை காவல்நிலையத்தில் விசாரிக்கையில் கான்ஸ்டபிள் ஒருவர் மழையில் சேறு அப்பிய சூவுடன் உள்ளே வந்தவர்களை சத்தமிடுவார். அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தே குற்றவாளியை AKSHAYKHANNA இறுதியில் கண்டுகொள்வார். அதே போன்று வெகு சாதாரணமாக இந்த வழக்கை பற்றி தன் மனைவி கூறும் தனது அபிப்பிராயத்தின் மூலமே இறுதி முடிவெடுப்பார். இப்படியான கதைகளில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை சுற்றி மட்டுமே பிரதான கதை நிகழும் சூழலில் ஓரத்தில் அதிகாரியாக வளம்வரும் இவரின் பாத்திர வடிவமைப்பிற்க்கு இவர்களின் உழைப்பை கொண்டே நம்மால் யூகிக்கஇயலும் பிரதான சம்பவத்திற்கான திரைக்கதைக்கு இவர்கள் உழைப்பை. DIL CHATHA HAI, BORDER போன்ற படங்களில் கும்பலில் ஒருவராக நம்மை சற்று ஈர்த்திருந்தாலும். இப்பாத்திரம் பொருந்தியளவு இதற்கு முன் இவர் ஈர்த்ததில்லை.



இதே போன்ற கதைகளை பெரும்பாலான மொழிகளில் நாம் பார்த்திருந்தாலும். இத்திரைக்கதையில் ஒரு கூடுதல் இணைப்பை சிறிதாக சேர்த்தே பெரும் சுவாரசியத்தை கொடுத்துள்ளார் திரைக்கதையாளர் மற்றும் அறிமுக இயக்குனர் ABAYCHOPRA.

https://www.youtube.com/watch?v=mvfvoCdPrII

Monday, December 25, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 098.
நமது புறச்சூழல் காரணமாக அல்லது வேறொரு நபரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து குறிப்பிட்ட ஹீரோ தானும் மீண்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுவதுதான் சினிமாக்களின் கருப்பொருள் என்பதான புரிதல் நமக்கு எப்பொழுதோ வந்துவிட்டது. இதனாலேயே நாம் பார்க்கும் படங்கள் முதல் யோசிக்கும் கதைகள் வரை இவ்வாறே உள்ளது.
நமது அகச்சூழல் குறித்த கதைகளையும், சினிமாக்களும் பெரும்பாலும் நாம் நிராகரிக்க கூறும் காரணம். அவை மிக மெதுவாக நகர்வது போன்ற நமது எண்ணம். பெரும்பாலும் தங்கள் சினிமாக்களில் அகச்சூழல் குறித்த கதைகளை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இயங்கும் சினிமா துறையிலிருந்து ஒரு படம் இப்பொழுது...

குடும்ப நண்பர்கள் (மூன்று ஜோடிகள்) தங்களது நண்பர் ஜெர்மனிலிருந்து தனக்கு பெண் பார்க்க வருபவரை, இவர்கள் பார்த்த பெண்ணோடு சேர்த்து வார விடுமுறையை கொண்டாட, ஒரு கடற்கரையை ஒட்டியுள்ள வில்லாவில் தங்குகிறார்கள். உடனே அங்கு ஒருவர் கொலை செய்யப்படுவார், அல்லது அந்த வில்லாவில் அமானுசிய சம்பவங்கள் நடைபெறும் போன்ற கற்பனை வருதுனா நேரா முதல் பத்திக்கு திரும்ப போய்டுங்க.
கடற்கரையில் விளையாடும் குழந்தை ஒன்றை காப்பாற்ற கடலில் குதிக்கும் அந்த எல்லி என்ற பெண் பாத்திரம் இறந்துவிடுகிறாள். இதன்பின் வரும் நடைமுறை சிக்கல்களை மட்டுமே முழுக்க முழுக்க அலசும் கதை.
முழுக்க அந்த கடற்கரையும், அதை ஒட்டியுள்ள அந்த பழைய வீட்டிலும் முழு இரண்டு மணிநேர கதையும் நிகழ்கிறது. வெறும் இவர்களது வாதங்களோடே கடந்தாலும், உள்ள சொற்ப பாத்திரங்களை கொண்டு எங்கும் நம்மை சோம்பல் முறிக்கவிடாமல் செய்த உருவாக்கல்.
கதையின் துவக்கம் முதல் இறுதிவரை நம்முடனே பயணிப்பது அந்த கடல் அலையின் ஒலி மட்டுமே. துவக்கத்தில் அவர்களது களிப்புகளுடன் அந்த அலைகள் சந்தோசமாகவும். கடலில் தொலைந்த எல்லியையும், அந்த குழந்தையையும் தேடும் கணங்களில் மிக பயங்கரமாகவும். எல்லியின் காதலனின் வருகைக்கு பின் அதே அலையின் ஒலி மிகத்துயரமாக நமக்கு கேட்கும்படியான (மோனோலிசா ஓவிய கோட்பாட்டின் படியான) உருவாக்கல்.
ஆண் பாத்திரங்களின் துயரம், ஏமாற்றம், அழுகைகளை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருந்தாலும். இறந்த காதலியை தேடி வரும் ஒரு ஆண் பாத்திரம். துளி கண்ணீரும் இல்லாமல் வெறும் சோகத்தை மட்டுமே சுமந்து வரும் அந்த முகம் நமக்குள் ஏற்ப்படுத்தும் துயரத்தை மறக்க பல நாட்கள் ஆகலாம். மேலும் #Sepideh எனும் பாத்திரத்தில் வரும் பேரழகியும்..
இதன் இயக்குனர் #Asghar_Farhadi இவரே தற்போது ஆஸ்கார் பரிந்துரையில் இறுதி சுற்றுவரை எட்டி உள்ள #The_Salesman படத்தின் இயக்குனர். மேலும் 2011-ல் “Best Foreign Language Film of the Year” #A_Separation படத்திற்கு ஆஸ்கர் வென்றவரும் இவரே.

Thursday, December 21, 2017


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 121


முதல் மூன்று நிமிடம் இயற்கை எழில் கொஞ்சும் வனங்களும், பனி பொழியும் நீரோடை வழியாகவும். எந்த பின்னணி இசையோ, பறவைகளின் ஒலியோ, ஓடும் நீரின் சத்தமோ இல்லாமல் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் நமக்கு உணரவைத்தது ஒன்றைத்தான். அதாவது நாம் மிக ரசிக்கும் அனைத்தும் நம் அருகில் இருப்பினும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற வெறுமையை.  இப்படியான ஒரு கதைக்கும் அது தாங்கிவரும் இந்த கனத்த வெறுமையையும் துவக்கம் முதலே பார்வையாளனுக்கு பழக்க வறண்ட நிலத்தையோ, அழும் குழந்தயையோ படமாக்காமல், கதை நிகழும் களத்தை ஒட்டிய இயற்கை காட்சிகளை கொண்டே இந்த வெறுமையை நமக்குள் புகுத்திய இயக்குனரை இந்த மூன்று நிமிட காட்சிகளுக்குள்ளே புகழ்ந்திட எண்ணுவோர் எண்ணிவிடவும். ஏனெனில் இந்த நிமிடங்களுக்கு பின்னே இந்த கதையின் கனத்த வெறுமையை நமக்கும் கொடுத்து நம்மையும் இக்கதையின் பாத்திரங்களை போல் அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா வெறுமை நிலைக்கு ஆட்படுத்த இருக்கிறார்.


அந்த மூன்று நிமிடங்களுக்கு பின்னாக கதையின் துவக்கம். பள்ளியில் இருந்து வெளியேறும் சிறுவர் கூட்டம். இதில் எந்த சிறுவனின் பின்னால் கேமரா செல்லுமோ அவனே நமது அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான எஜமானன். அப்பொழுது தெரியாது அடுத்த நம் அடுத்த சில நாட்களையும் இச்சிறுவனும் அவனது வெறுமையும் ஆட்கொள்ள போகிறதென்று. ஒரு கணவன் & மனைவி சட்டப்படி விவாகரத்துக்கு காத்திருக்க அவர்களது பன்னிரண்டு வயது மகனின் நிலையை, உணர்வை, அவனது எதிர்காலம் பற்றிய பயத்தை பார்வையாளர் அனைவருக்கும் கடத்திய வகையில் கவனிக்க வேண்டிய சினிமா.


ஒருவரிடமிருந்து நாம் ஒதுங்க நினைக்கும் சூழலில், பிடிமானம் இல்லாத நமக்கு ஒரு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் நமது வெறுப்பின் அளவு அவர்களின் பால் சற்று அதிகமாகவே இருக்கும். நாம் ஒதுங்க நினைத்தது நம் கணவனிடமோ, மனைவிடமிருந்தோ எனில்? நமக்கென மற்றொரு இணையும் இருக்கும்பட்சத்தில். பரஸ்பரம் புரிதலுடன் விவாகரத்திற்கு காத்திருக்கும் இவர்களின் மிகப்பெரும் தலைவலி அவர்களது குழந்தை. அத்தலைவலிக்கான காரணத்தை ஆராயாமல், இவர்கள் இருவருக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய தினம் அச்சிறுவன் விட்டைவிட்டு வெளியேறுகிறான்.


உடனே அலைந்து திரிந்து அச்சிறுவனை கண்டடைந்து தங்களின் கீழ்மைநிலைக்கு வருந்தி கண்ணிருடன் மூவரும் இணையும் வழக்கமான கதையாக இல்லாமல், துவக்கம் முதலே அச்சிறுவனிடம் வெறுப்பை உமிழும் தாயாகவும். தன் மகன் மாயமானத்தின் பின் அவனை கண்டடைவதில் காட்டும் முனைப்பிலும். தற்போதும் அவன் மீதிருந்த அதே நிலையிலேயே அவனை தேட துவங்கும் இடங்களிலேயே இக்கதையும் அப்பெண் பாத்திரமும் தனிபெரும் கவனம் பெறுகிறது. கதையின் துவக்கத்தில் மாயமாகும் சிறுவன் பின் எந்த இடத்திலும் காட்சிகளில் தேவைபடாத கதை. ஆனால் கதை முழுக்க இல்லாத அந்த சிறுவனை பற்றியே.


மிக சரியாக இக்கதை துவங்கும் இடம் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலிருந்தே. அதற்கான காரணமாக இக்கதை சொல்வது அவன் பெற்றோர்கள் இடையேயான வாக்குவாதம் எனில். முழு கதைக்கும் அச்சாணியான அக்காட்சி பார்வையாளனுக்கும் அந்த தம்பதியரின்மேல் எவ்வாறான எண்ணத்தை விதைக்க வேண்டும். இக்காட்சி மட்டுமே அச்சிறுவனே அதற்க்கு பின் முழு கதையிலும் இல்லாவிடினும் அவனின் மேல் இறுதிவரை பச்சாதாபத்தை விதைக்க செய்யும் ஒரே காட்சி. இவ்வாறான காட்சிக்கு ஆழ்ந்த வசனங்களும் தேர்ந்த நடிகர்கள் மட்டுமே போதாது. வாதம் நடைபெறும் சூழல், நாம் பார்க்கும் கோணம் முதற்கொண்டு அவசியமாகிறது. அப்படியான ஒரு காட்சியும் அரங்கேறுகிறது.. அவர்களின் முழு வாதமும் நிறைவுறும் சூழல்வரை தென்படாத அச்சிறுவன் கழிவறையின் இருளில் நின்று ஒலி எழுப்பாமல் கதறுவது போன்ற ஒரு ஷாட் இரு வினாடிகள் மட்டுமே. ஆனால் அந்த இரு வினாடி பார்வையாளனுக்கு கொடுக்க போகும் வலி அவ்வளவு சுலபமாக வார்த்தைபடுத்த இயலாது.



இறுதியான  ஷாட் அத்துடன் படம் நிறைவடையும் அதன் பின்னே பார்வையாளன் அனைவருக்கும் படம் நெடுகிலும் எழுந்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அந்த ஒரே ஷாட்டில் உள்ளது. அதும்போக அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். வெறும் வார்த்தைகளுக்கான வீரியத்தை அந்த தம்பதியரின் வாதத்தில் கவனிக்கலாம். இறுதியில் TREAD MILL ல் ஓடும் தாய்பாத்திரம் வரும் ஷாட் சொல்லும் செய்தி. இவ்வளவு தேடலுக்கு பின்னும் தான் தனது நிலையிலிருந்து மாறாமல் அதே இடத்தில் நிற்ப்பது என முழுநீள படத்தின் இறுதி காட்சிவரை இயக்குனரின் தனி சாம்ராஜ்யமே.    


படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8

Saturday, December 9, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 120.

COMPETING BEST FOREIGN LANGUAGE FILM - HUNGARY - OSCARS #1

ON BODY AND SOUL (2017) – HUNGARY  - நம் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

ஒரு படம் எத்தனை தூரம் பார்வையாளர் மனங்களை கவரும் என்பதற்கு மிகமுக்கிய பங்கு அக்கதை தேர்ந்தெடுக்கும் களத்திற்கும் உண்டு. வெறும் களங்களால் மட்டுமே காலத்திற்கும் நின்ற சாதாரண கதைகளும் உண்டு. இரு பாத்திரங்களுகிடையேயான நேசத்தை கதைப்படுத்த எத்தனையோ களங்களை கற்பனைகளில் பொருத்தி பார்க்கலாம். ஆனால் கதைபடுத்துதல் எளிதல்ல. காரணம் அது மொத்த படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டிலும் தனித்து தெரியாமல் கதையுடன் பொருந்தி போகவே வேண்டும். மேலும் அக்களம் அந்த கதையையும் அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அப்படியான உருவாக்கமே அக்களத்திற்கு அந்த படைப்பாளி கொடுக்ககூடிய அதிகபட்ச மரியாதை. தனிமையை  துணையாக கொண்ட இரு பாத்திரங்களுக்கிடையேயான வெறும் நேசம் கொண்ட சராசரி கதையை காலத்திற்கும் நிற்கும்படியான களத்தை பொருத்தி, கதைப்படுத்தி, அதையே காட்சியும்படுத்தி பார்வையாளர்களை பரவசம் தாண்டிய வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது.!!


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் உயர் பதவிவகிக்கும் தனக்கென யாருமற்ற ஆண் மற்றும் பெண் என்ற இந்த இரு பாத்திரங்களே இக்கதையின் பிரதானம். இந்த எளிய கதையை மட்டுமே குறைந்தது நூறு சினிமாக்களில் பல்வேறு தளங்களில், மொழிகளில் கண்டு ரசித்திருப்போம். நாம் இதற்க்கு முன் கண்டிராத எந்த வகையான களம் தெளிந்த நீரோடை போன்ற இந்த எளிய கதையில் கலக்கப்பட்டுள்ளது என்பதிலே இக்கதை கூடுதல் சிறப்பு பெறுகிறது.  


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் பணியில் இருப்பினும் மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து தெரியும் நாயகியின் பால் நாயகனுக்கு துவக்கம் முதலே சிறு ஈர்ப்பு இருக்கும். பின் ஒரு கட்டத்தில் தங்கள் இருவரின் கனவுகளும் (தூக்கத்தில் வருவது லட்சியமல்ல) ஒன்றே என தெரியவரும் கட்டத்தில் இவர்களுக்கிடையே துவங்கும் பழக்கம் தங்களது முதல் நாள் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் கட்டத்தில் சற்று நெருக்கம் ஏற்பட்டு அவர்களுள் அப்படின்னு எந்த வழக்கமான யூகங்களுக்கும் நம்மை கொண்டு செல்லாமல் அவர்கள் உறவு அங்கேயே சிறு முன்னேற்றம் அல்லது பின்னடைவுடளுடன் இருக்கும். அப்படினா படம் பூரா இவங்க மட்டுமே பேசி நம்மளை கொல்லபோறங்களா என்றால் கிட்டத்தட்ட சரிதான். ஆனால் இந்த அனுபவம் நிச்சயம் நம்மில் பெரும்பாலோர் எந்த திரைப்படங்களிலும் இதற்க்கு முன் அனுபவித்திடாதது.


தங்கள் கனவுகளை சோதித்து பார்க்க இருவரும் ஒரே அறையில் தங்க முடிவெடுப்பது. அவை கைகூடாமல் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயல்வது. இவ்வாறாக நம்மையும் அவர்களுடனே பயணப்பட வைத்து இறுதியில் இவர்கள் இருவரும் இணையும் இரவிற்கு அடுத்த பகலில் தங்களது கனவும் அந்த இரவுடனே முடிந்ததாக அவர்கள் அறிந்துகொள்ளும் நிமிடத்தில் நிறைவுறும் இந்த படம் சொல்லும் செய்தி என்ன.?


ஒரே கனவு இருவருக்கும் என்பதில் துவங்கும் நட்பின் அடுத்த கட்டமாக நாம் இருவரும் ஒரே அறையில் தூங்கி பார்க்கலாம் என்ற இடம் இக்கதையின் மிகமுக்கிய காட்சியாகும். அதுவரை தினமும் கனவு+உறக்கங்களுடன் இரவுகளை கழித்தவர்களுக்கு அன்று சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சல்.அடுத்த வீட்டு தொலைக்காட்சி ஓசை என அதுவரை இரவில் அவர்கள் உணர்ந்திடாத ஒலிகள். அவர்களை தூங்கவிடாமல் ஒரு அளவுக்கு மேல் பொறுக்காத நாயகி வீட்டிற்க்கே திரும்ப முடிவெடுப்பாள்.


ஒரே கனவு இருவருக்கு சாத்தியம் இல்லை. அதை இயக்குனரும் ஒரு காட்சியில் தெளிவுபடுத்தியிருப்பார். பின் இதில் கனவுகளாக சித்தரிக்கபடுபவை? அவர்களின் உணர்ச்சிகளையே கனவுகளாக சித்தரிக்க படுவதாலே இருவரும் ஒரே அறையில் ஒன்றான பின்னும் அங்கு நமது கனவுகளுக்கு இடமில்லாமல் போவது. இவ்வாறான ஒரே உணர்ச்சிகளில் உந்தப்படுவோரின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளதே இவர்கள் இருவரும் தற்கொலை முடிவு ஒரே நேரத்தில் எடுப்பதும் என முழு படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டும் இக்கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத வகையில் அமையபெற்றதே இவ்வாறான உளவியல் சார்ந்த திரைப்படங்களை நம்மில் பெரும்பாலோர் துணிந்து முழுதும் ரசிக்கமுடியும்.


கூடல் ஒன்றே மையகருவாக கொண்ட கதையின் ஒரே ஒரு காட்சியில் கூட நேரடியாக அது சம்பந்தமான எந்த ஒரு காட்சியும் இல்லாமல். கதையும் அந்த மையகருவை தாண்டி செல்லாமல் ஒரு படம். நீலபடமொன்றை நாயகி தொலைகாட்சியில் பார்க்கும் காட்சியில் அவள் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உணவருந்தி கொண்டே ஏதோ செய்திகள் பார்ப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பதும். பின்னொரு காட்சியில் ஒரு காதல் பாடலை கேட்க்க நேர்கையில் நிலை கொள்ளாமல் தவிப்பதும். காதல் இல்லாத வெறும் கூடல் எந்த வகையிலும் நமக்கு நிறைவை தராது என்ற வகையில் அமையபெற்ற காட்சி. இவ்வாறான முழு படமும் நம்மை இதேபோன்று ஏதோ ஒன்றுடன் பொருத்தி பார்க்க செய்யும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் மீது கொள்ளும் காதலே நாம் இறக்கும் தருணம் வரை நம்முடன் வரும் கூடல் ஒரு வயதிற்கு பின்னாக அத்யாவசியமாகாது என்பதாலே தான் தற்கொலை முடிவேடுத்தவள். அந்த காதல் பாடலை கேட்டுகொண்டே இறக்கலாம் என அப்பாடலை ஒலிக்கவிடுகிறாள். தனது மணிக்கட்டை அறுத்துகொண்டு பாத்டப்பில் படுத்திருப்பவள் முகத்தில் ஏற்ப்படும் மனநிறைவும். திடீரென ஏற்படும் கோளாறில் அப்பாடல் பாதியில் நின்றுவிட அவள் முகத்தில் ஏற்படும் சஞ்சலங்களையும் முழுக்க எழுத்து வடிவமாக்க சாத்தியமில்லை.


இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே இக்கதையின் உயிர்நாடி. ஏனெனில் இப்படம் முழுக்க நிறைவுறும் வரையில் ஒரு காட்சியில் கூட நாம் இந்த இசை மற்றும் எடிட்டிங்கை பற்றி நிச்சயம் தனித்து உணரமாட்டோம். அவை காட்சிகளுடனே அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும்.


காதல் செய்வோம்.

Monday, November 20, 2017

 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 082.

அலமாரியில் உள்ள புத்தாடையை அணியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள சிறார்களை போல், பெரும்பான்மை இரவுகள் தன்னால் கொடூரமாக கொலை செய்யப்படும் நபர்களை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கும் இக்கதையின் பிரதான பாத்திரம்.


தானோ அல்லது தனது குடும்பத்தார், நண்பர்கள், காதலி இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டர்களோ அவர்களை ஆக்ரோசமாக பழிவாங்கும் அல்லது இறுதியில் அவர்களை மன்னித்து செல்லும் பாத்திரங்களை மட்டுமே பார்த்து மகிழ்ந்த நம்மை செவிட்டில் அறையும் சினிமா.


இலக்கே இல்லாமல் தன் மனதுக்குப்பட்ட, தனக்கு மிகப்பிடித்த நபர்களாக தேர்ந்தெடுத்து. சாதாரணமாக இல்லாமல் கொடூரமாக பெரும்பாலும் இரும்பு ராட்டில் அடித்தே கொல்வதை மிக இயல்பாக, ரசித்து மகிழும் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும். என எந்த வரைமுறையும் அற்று மிகச்சாதரணமாக நவசுதின். இந்த முறை அவர் தொட்டது உச்சம்.


அவரின் நடை, பாவனை, நக்கல் பேச்சின் லாவகம், போலீசாரிடம் சிகரட் கேட்க்கும் பாங்கு. முதல் கொலையில் தென்படும் பதற்றம், தனது இயல்பிலிருந்து சட்டென மாரும் நொடியில் கொலை புரிய துவங்குவது. கொல்ல யாருமற்று நடுஇரவில் சாலையில் செல்கையில் கடக்கும் தெருநாய் தன்னை கேலி செய்வதாக எண்ணி அதை விரட்டும் இடத்தில் தென்படும் கோபம்.  விரக்தியுடன் செல்லும் வழியில் கைக்குழந்தையுடன் வெட்ட வெளியில் சமைத்து கொண்டிருக்கும் பெண்ணை காணும் நொடியில் அவன் கண்களில் தென்படும் பரவசம். பெரும் ஆனந்தத்துடன் அவளை கொல்ல அவசரத்தில் ஒரு செங்கலை எடுத்து ஓடிவரும் வேலை, அங்கு பத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தி கொண்டிருப்பதை கண்ட வினாடி அவன் முகத்தில் சடாரென பரவும் வெறுமையும், ஏமாற்றத்தையும்.... என இவ்வளவு உணர்ச்சிகளையும் வார்க்கப்பட்டது போல நவசுதின்.


தனிமனிதனை மட்டுமே சுற்றி சுழல கூடிய கதையில் அகன்ற ஈர விழியும், உலர்ந்த உதட்டின் சொந்தக்காரி அசிஸ்டன்ட் கமிஷனர் காதலியும், தனது அண்ணனை சந்தித்த பதட்டத்தை உடலின் அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தி நம்மையும் தொற்றிக்கொள்ள வைத்த நவசுதினின் தங்கை பாத்திரமும், பெரும் சத்தத்தால் திடும்மென கதவை திறந்து பார்க்கையில், தனது கணவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க அருகில் பெரும் இரும்பு ஆயுதத்துடன் நிறுக்கும் கொலையாளியை காண்கையில் ஏற்ப்படும் மரண பீதியை நமக்கும் கடத்திய வேலைக்காரி பாத்திரம். இந்த கொடூர, இலக்கு ஏதுமற்ற, வரைமுறைக்கு சற்றும் ஒவ்வாத இந்த சினிமாவின் திருப்பங்களும், சுவாரசியமும் பெண்களை கொண்டே ....

https://www.youtube.com/watch?v=xq1cEmhVa68



 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 076.

சவுண்ட் மிக்சிங்... நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து ஆஸ்கார் வரை சென்று இந்த பிரிவில் விருது வாங்கியவர் கூட உண்டு. ஆனால், என(நம)க்கு இந்த துறை பற்றி பெரிய பரிட்சயமேதுமில்லை. சவுண்ட் மிக்சிங் ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் துணை புரியும் அல்லது ஒரு படம் முழுமையடைய இந்த துறையின் பங்களிப்பு என்ன?


இந்திய அளவில்! ஏன் உலகளவில்!! வெற்றிபெற்ற பெரும் பட்ஜெட் படங்களில் கூட உணரமுடியாத இந்த துறையின் மதிப்பை. வெறும் நான்கு பாத்திரங்கள் அதிலும்.. இரு பாத்திரங்கள் மட்டுமே பெரும்பான்மை வகிக்கும் ஒரு ஒன்றரை மணிநேர கதையில் உணரமுடிந்தது. திரையில் மைக்ரோ செகண்ட் வந்து போகும் காட்சிகளில் கூட, இவர்களது உழைப்பும் நுண்ணிய செயல்பாடுகளும் பெரிதும் ஈர்த்தது.


திடும்... என பெரும் சப்தத்துடன் டைட்டில் கார்ட். ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த வனத்தின் உள்ள சிறிய வீட்டில் துவங்குகிறது. முதல் நான்கு நிமிட படம்... அடுத்த ஒன்றரை மணிநேர கதைக்கான அடித்தளம். காது கேளாத ஒரு பெண் எழுத்தாளர் தனது எழுத்து பணிக்காக தனிமை வேண்டி தங்கியுள்ள வீட்டில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் தனிமையில் சிக்கி கொள்கிறார்.
இதே பாணியில் ரத்தமும் சதையுமாக நிறைய கதைகளை பார்த்திருந்தாலும் எழுத்தாளர் & கொலைகாரன். என இரண்டே பாத்திரங்கள் மட்டுமே கொண்டு சிறிதும் பார்வையாளருக்கு சலிப்பும் ஏற்படுத்தாமல் பெரும் எதிர்பார்பையும் ஏற்படுத்தும் அதிவேக திரைக்கதை.


கதைக்களமாக ஓரே வீடு, பாத்திரங்களாக இருவர், காலம் ஓரே இரவு. என அனைத்தும் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு. மிக பிரமாண்டமான திரைக்கதையும், சுவாரசிய சம்பவங்களை கொண்டு காண்போரை சிறிதும் நகரா வண்ணம் அமைந்த செம்ம திர்ல்லர் வகையறா சினிமா.



https://www.youtube.com/watch?v=Q_P8WCbhC6s

பார்த்ததில் மிகவும் ரசித்தது : 083.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசல் பிரதிபலிப்பவர்கள், அதர பழைய கதையை புது பாணியில் கொடுத்து அசத்துபவர்கள் இந்த முறை அதிரி புதிரியாக அசத்தியது கேங்ஸ்டர் களத்தில்.


கேங்ஸ்டர் கதை தான். ஆனால் கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல். வெறி தீர துரத்தும் பழிவாங்கல் இல்லாமல்.சீறி பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் இல்லாமல். மிரட்டும் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் இவர்கள் தந்தது வழக்கத்தைவிட மிரட்டல் சினிமா.


மும்பை ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன். ஒருநாள் தனது பால்ய நண்பன் கங்கா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் நொடியில் பெரும் சப்தத்துடன் அவரது அலைபேசி மறுமுனையில் விழுந்து நொறுங்குகிறது. நண்பனை தேடி தனது சொந்த ஊரான கம்மட்டிபாடதிற்கு கிளம்புகிறான் கிருஷ்ணன் தனது பால்ய நினைவுகளுடன்.


அங்கு ஆசான்தான் பெரிய மனிதர். அவர் நினைப்பதை செய்து முடிக்கும் எதுவாயினும் செய்து முடிப்பவன் பாலன். அவனுக்கு கீழ் அவனது தம்பி கங்கா, அவனது நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் அவர்களது என சில பதின்பருவத்து பசங்க. பாலனோட சேந்து ஒரு பெருமைக்கு, கெத்து காட்ட கங்கா & கிருஷ்ணா நண்பர்கள் குழு செய்யும் சிறு சிறு தவறுகள் மேல் இவர்களுக்கு ஏற்படும் அதீத ஈடுபாட்டால் அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே.!!



குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது திரைக்கதை மட்டுமே. நிறைய பாத்திரங்கள் உள்ள கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தி சென்ற விதம் மகா துல்லியம். சுமாரான கதையை அசாத்திய பாத்திரங்களை கொண்டு அவர்களையும் மொக்கையாக்குவதும். அசாதரணமான கதையை சுமாரான பாத்திரங்களை கொண்டு அக்கதையையும் சுமாராக மாற்றுவது எல்லாம் நிறைய நாம் இங்கு பார்த்தது.


அனைவரின் பங்களிப்பும் நிறைவாக இருப்பினும் இக்கதையின் உயிர்நாடியான இந்த இரு பாத்திரங்களின் பங்களிப்பு.!!


ஒவ்வொரு பாத்திரதிற்க்கும் மூன்று மூன்று நடிகர்கள். குழந்தைபருவம், பதின்பருவம், 40+ வயதிற்கான பருவம் என இவர்களின் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு.!! இதுப்போல பத்து பொருத்தமும் கூடி வரும் ஜாதகத்தை மிக சமீபத்தில் பார்த்ததாக நிச்சயம் நினைவில் இல்லை.
1.இவர்கள் வாழ்க்கையில் ஜாலிக்கு தொடங்கி பணத்திற்காக இந்த அடிதடியை தொடரும் தருணம்.!!
2.படத்தின் துவக்கத்தில் இவர்கள் பயன்படுத்திய பாதையும் நிலஆக்ரமிப்புக்கு பின் மிககுறுகிய பாதையின் வழியே இவர்கள் பிணத்தை தூக்கி செல்லும் காட்சி .!!
வசனங்கள் ஏதுமற்று திரைக்கதையின் உழைப்பிற்கு இந்த இரு காட்சிகளே சான்று.


https://www.youtube.com/watch?v=B-m13AJMxW4

Saturday, November 18, 2017




எந்த விறுவிறுப்பான திரைக்கதையும் அதன் முடிவை நெருங்கும் வேளையில் கதையில் ஏற்படும் வேகம், அதற்க்கு முந்தைய காட்சிகளை விட சற்று கூடுதலாக இருக்கும். அவ்வாறான படங்களே அரிதான சூழலில் ஒரு கதை அதன் இடைவேளையிலேயே கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட. அதற்க்கு பின்னான இரண்டாம் பாதி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் முழுக்க அந்த கூடுதல் வேகத்துடன் அதே வேகத்துடன் நகர்த்திசென்று முடிப்பது என்பது சாத்தியமா? அல்லது அவ்வாறான ஒரு தமிழ் படம் இறுதியாக எப்பொழுது பார்த்தோம் என நினைவில் உள்ளதா? எனக்கு நினைவிற்கு ஏதும் வரவில்லை. அவ்வாறான ஒரு அதிவேக திரைக்கதை அமையப்பெற்ற படம் தீரன்.

போலீஸ் படங்களை செய்து தங்களின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நாயகர்கள் வரிசையில், இந்த முறை நாயகனுடன் சேர்த்து மிகப்பெரும் உயர்விற்கு செல்லவிருப்பது இயக்குனர் வினோத்தும். இதுவரையான போலீஸ் கதைகளில் அவர்களின் துறைசார்ந்த டீடைலிங்கே இப்படம் அளவு சொல்லப்பட்டதில்லை என்பதே இப்படத்தை பார்க்கும் பெரும்பாலோருக்கு தோன்றும். அந்த கொள்ளையர்களை பற்றிய டீடைலிங்கை திரைக்கதையில் நிறுவிய வகையில் வினோத் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்த அனைவரின் கவனத்திற்கும் உரியவராகிறார்.
இக்கதையில் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட ஹைவேக்களில் தனியாக உள்ள வீடுகளில் உள்ளவர்களை கொடூரமாக கொன்று. பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்களையும். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவர்களின் துல்லிய வரலாற்றையும், மற்றும் துவக்க காட்சியிலே அவர்களின் மீதான பயத்தையும் வெறுப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்திய இடங்களிலே வினோத் கிட்டத்தட்ட பாதிக்குமேல் ஜெயித்துவிட்டார். அதன்பின்னான காவல்துறை ஒரு குற்றத்தை விசாரிக்கும் அவர்களின் போக்கை விரிவாகவும் குறிப்பாக இவ்வளவு துல்லியமாகவும் காட்டிய வகையில் தனது மீதி வெற்றியையும் தக்கவைத்து கொண்டார். அதும் 1995களில் எந்த தொழில் நுட்பமும் அரசாங்கதுறைகளை எட்டாத காலங்களில் வெறும் கைரேகைகளை கொண்டு இந்தியா முழுக்க பயணித்த நம் காவல்துறையினரையும், அதன் சாதக பாதகங்களை துளிபிசகாமல் மிக நேர்த்தியாக படைக்கப்பட்ட திரைக்கதையும் காலத்திற்கும் நிற்கும். இனி போலீஸ் சப்ஜெக்ட் தொட முயற்சிக்கும் எந்த இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியின் கதைக்களம் நிகழும் காட்சிகள் இடைவேளைக்கு முன்பான இருபது நிமிட சேஸிங்ஸ் அபாரம்.

சதுரங்க வேட்டை வினோத்தின் மிகப்பெரும் பலம் அவரது வசனங்கள். கார்த்தியை இந்த கொள்ளையர்களை தேடும் பணியிலிருந்து உயரதிகாரி நீக்கியபின் அவரிடம் இவர்கூறும் வசனம் காவல்துறையின் மீது அனைத்து பார்வையாளனுக்கும் மிகபெரும் மதிப்பை ஏற்ப்படுத்தும். அக்கொள்ளையர்களின் மீதான பயத்தை ஆரம்பகாட்சியிலே ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் சத்யசூர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரின் உழைப்பு படம்நெடுகிலும் தனித்து தெரியும். குறிப்பாக வில்லனின் ஆரம்பகாட்சி பின்னணி இசை பட்டாசு. இது போன்ற கதைகளில் காதல் காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் நீளம் குறைந்து இன்னும் விறுவிறுப்பான படம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுபோன்ற பரவலாக அறியப்பட்ட நாயகர்களை முன்னிருத்தையில் இதுபோன்ற அட்ஜஸ்மென்ட் தவிர்க்கஇயலாதது. இல்லேன்னா ஒரு ரெண்டு சீன் சத்யனுக்கு கொடுக்கும் நிலையெல்லாம் வந்திருக்குமா?


எந்த வழக்கையும் காவல்துறை மிககண்ணியமாகவும், நேர்மையாகவும் கண்டிப்பாக அணுகும் என்று சொல்லப்படும் கதையில் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பமே நேரடியாக பாதிக்கபடுவது போல் அமைக்கப்பட்ட மிகச்சில சமாச்சாரங்களை நீக்கிபார்த்தால் நீண்ட இடைவெளிக்கு பின்னான கெத்து போலீஸ் கதை. படம் பார்த்த அனைவருக்கும் காவல்துறையின் மேல் மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்திய இயக்குனருக்கு ராயல் சல்யுட்.  

Search This Blog