Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, February 17, 2018

நாச்சியார் (2018) – பாசாங்கில்லாத பாசக்காரி

















முதன்மை பாத்திரங்களின் கொடூர மரணமோ, உருகும் காதலில் நிரந்தர பிரிவோ அல்லது தானோ அல்லது தன்னை சார்ந்தவர்களின் பாதிப்பிற்கு ஆளாகியவனை கொடூரமாக வஞ்சிப்பதை போன்ற காட்சிகளை காட்டிலும். சந்தோஷ தருணங்களில் மென் சோகத்துடன் வெளிப்படும் கண்ணீரே பார்வையாளனின் மனதில் நெடுநாட்கள் நீடித்திருக்கும். நீண்ட இடைவெளிக்கு பின் இப்படியான ஒரு உணர்வை தனது படைப்பில் மீண்டும் கொண்டுவந்த பாலாவிற்கு ஆரத்தழுவல். 


எளிய மனிதர்களின் சிறு வெகுளிதனங்களையும் பெரும் சோகங்களையும் கிராமம் அல்லது சிறு நகரங்களின் பின்னணியில் கொடுத்து வந்தவர். இம்முறை தமது களமாக தேர்ந்தெடுத்தது சென்னையை. எடுத்த கதையும் இதுவரை அவர் தொடாத வகையை சார்ந்தது. மைனர் பெண் ஒருவரின் கர்பத்திற்கு காரணமானவனை பற்றிய தேடல் மட்டுமே இக்கதை. அதில் அவர்களின் காதலை மட்டுமே வைத்து இப்படத்தை மிகசிறந்த பொழுது போக்கு படைப்பாக சுமாரான எந்த இயக்குனனாலும் வழங்கயியலும்.


ஆனால் தான் சொல்ல நினைத்தது எதுவோ அதையும் அதனை சுற்றிய அவரின் கோர்வையாக மட்டுமே காதலை பயன்படுத்தியிருப்பது மட்டுமே இதில் அவர்பாணி. மற்ற எந்த பாலா சமாச்சாரங்களும் பெரிதும் காட்சிகளில் தெரியப்படுத்தாத இவரின் புதுமுயற்சி அபாரம். எப்பொழுதும் தனது கதைகளில் ஒற்றை பாத்திரத்தை சுற்றியே காட்சிகள் நகரும். இதிலும் ஜோதிகா பாத்திரம் அப்படிப்பட்டதே. ஆனால் கதையை படமாக்கையில் அவரின் பாத்திரத்தை மிஞ்சும் அல்லது நம் மனங்களை வெகுஎளிதில் வென்ற ஒரு புதுமுக பாத்திரம் ஒன்று உள்ளது.


தனது வெகுளி சிரிப்பில், போலி அதட்டலில், நாணிய நடையில், காதல் பார்வையில், பிரிவின் பரிதவிப்பில்  அப்பாத்திரம் வெகு எளிதில் ஜோ பாத்திரத்தை விஞ்சுகிறது. கதை முழுக்க தனக்கான காட்சிகள் அதிகமிருக்கும் கதைகளை காட்டிலும் தனக்கான காட்சிகளில் பளிச்சென நிருபிக்கும் வெகுசில நடிகர்களுக்கு இணையாக ஜோ.  பல வருடங்களுக்கு பின் ஒரு நடிகைக்கு அவ்வாறான பாத்திரம். அதில் பிரமாதபடுத்துவது வேறு. அப்பாத்திரத்தின் குணநலன்களுக்கு பொருந்தி போவது என்பது வேறு. ஜோ செய்தது இரண்டாம் வகை. இவரின்  உண்மையான குணநலனே இதுதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்.


தமது படங்களில் பிரதான பாத்திரங்களின் குணாதிசியத்தை அறிமுககாட்சிகளிலே வசனங்கள் ஏதுமின்றி பார்வையாளனுக்கு உணரவைப்பதில் வல்லவர். இதிலும் ஜோவிற்கு அப்படியான முதல் காட்சி. அதிலேயே அவரையும், அடுத்த பத்தாவது நிமிடம் கதையின் போக்கையும் யூகித்திட முடியும். பெரிதும் திரைக்கதையில் எந்த மர்ம முடிச்சிகள் இன்றி அக்கதை எதை நோக்கி பயனிக்கிறதோ. அதனுடன் மட்டுமே செல்பவர். இம்முறை ஒரு குட்டி சஷ்பண்ஸ் முழு கதையிலும் வரும்படியான திரைக்கதை. அதை முழுதும் அவ்வாறே கையாண்டு டிடக்டிவ் வகையான படமாக மாற்றி தனது முழு அடையாளத்தையும்  இழக்காமல். தனது பாணியில் இருந்தும் வேறுவகையான படைப்பாகவும் கொண்டு வர முயன்றுள்ளார். திரைகளில் அதிகம் பார்த்திராத சென்னையை தேடி பிடித்ததே. இக்கதை களம் ரொம்ப புதுசா பார்வையாளனை உணரவெச்சது.



இன்றைய நாயகர்கள் திருடன் பாத்திரத்தை ஏற்றாலும் ஏழைகளுக்கு உதவி செய்து தான் நல்லவன் என்ற பிம்பத்துடன் மட்டுமே நடித்துவரும் சூழல். ஆனால் அதற்க்கான எந்த பாசாங்கும் இல்லாத நான் இப்படிதான் நல்லவள்னு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்லுபடியான பாத்திரத்தை வெகு சாதாரணமாக கையாண்டுள்ளார். ஒரு காட்சியில் வசனமில்லாமல் வேகமாக சோபாவில் அமர்ந்து டீப்பாயின் மேல் கால்களை போடவேண்டும். உண்மையில் இந்த அசால்ட்டு கெத்து. பெரும்பான்மையான நடிகர்களுக்கு எத்தனை ரீடேக் போனாலும் வருவது கஷ்டம் சூர்யாவையும் சேர்த்து. ரெண்டே ஆண் பாத்திரங்களை மட்டுமே லேசாக தொட்டு பேசும் காட்சிகள். தனக்கு கீழ் பணிபுரியும் பாதிக்கபட்ட பெண்ணிற்காக வருந்தி புலம்பும் காவல்துறை அதிகாரியையும். இறுதி காட்சியில் ஜி.வி யையும் அந்த இருகாட்சிகள் போதும் மொத்த பெண்களின் சார்பாக இந்த முரட்டு மனுஷி மூலம் ஆண்களுக்கு கொடுக்கும் மரியாதை. ரொம்ப பெரிய பாலா படமும் இல்லாத வெகு சாதரணமா கடக்கவும் முடியாத ஒரு நல்ல படம். இளையராஜா டைட்டில் கார்ட் பார்த்தாலே போதும். முன்னணி இசையில் பல இடங்களில் கலங்கடிக்க முயல்கிறார். ஜி.விக்கு இதுவே அறிமுகபடம் இதைகொண்டு அவர் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் படங்கள் பொறுத்தே இனி அவருக்கான வருங்காலம்.

No comments:

Post a Comment

Search This Blog