எந்த விறுவிறுப்பான
திரைக்கதையும் அதன் முடிவை நெருங்கும் வேளையில் கதையில் ஏற்படும் வேகம், அதற்க்கு
முந்தைய காட்சிகளை விட சற்று கூடுதலாக இருக்கும். அவ்வாறான படங்களே அரிதான சூழலில்
ஒரு கதை அதன் இடைவேளையிலேயே கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட. அதற்க்கு
பின்னான இரண்டாம் பாதி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் முழுக்க அந்த கூடுதல் வேகத்துடன்
அதே வேகத்துடன் நகர்த்திசென்று முடிப்பது என்பது சாத்தியமா? அல்லது அவ்வாறான ஒரு
தமிழ் படம் இறுதியாக எப்பொழுது பார்த்தோம் என நினைவில் உள்ளதா? எனக்கு நினைவிற்கு
ஏதும் வரவில்லை. அவ்வாறான ஒரு அதிவேக திரைக்கதை அமையப்பெற்ற படம் தீரன்.
போலீஸ் படங்களை
செய்து தங்களின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நாயகர்கள் வரிசையில், இந்த முறை நாயகனுடன்
சேர்த்து மிகப்பெரும் உயர்விற்கு செல்லவிருப்பது இயக்குனர் வினோத்தும். இதுவரையான
போலீஸ் கதைகளில் அவர்களின் துறைசார்ந்த டீடைலிங்கே இப்படம் அளவு சொல்லப்பட்டதில்லை
என்பதே இப்படத்தை பார்க்கும் பெரும்பாலோருக்கு தோன்றும். அந்த கொள்ளையர்களை பற்றிய
டீடைலிங்கை திரைக்கதையில் நிறுவிய வகையில் வினோத் பார்வையாளர்கள் மட்டுமின்றி
திரைத்துறையை சார்ந்த அனைவரின் கவனத்திற்கும் உரியவராகிறார்.
இக்கதையில் பிரதான
பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட ஹைவேக்களில் தனியாக உள்ள வீடுகளில் உள்ளவர்களை கொடூரமாக
கொன்று. பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்களையும்.
ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவர்களின் துல்லிய வரலாற்றையும், மற்றும் துவக்க
காட்சியிலே அவர்களின் மீதான பயத்தையும் வெறுப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்திய
இடங்களிலே வினோத் கிட்டத்தட்ட பாதிக்குமேல் ஜெயித்துவிட்டார். அதன்பின்னான
காவல்துறை ஒரு குற்றத்தை விசாரிக்கும் அவர்களின் போக்கை விரிவாகவும் குறிப்பாக
இவ்வளவு துல்லியமாகவும் காட்டிய வகையில் தனது மீதி வெற்றியையும் தக்கவைத்து
கொண்டார். அதும் 1995களில் எந்த தொழில்
நுட்பமும் அரசாங்கதுறைகளை எட்டாத காலங்களில் வெறும் கைரேகைகளை கொண்டு இந்தியா முழுக்க
பயணித்த நம் காவல்துறையினரையும், அதன் சாதக பாதகங்களை துளிபிசகாமல் மிக நேர்த்தியாக
படைக்கப்பட்ட திரைக்கதையும் காலத்திற்கும் நிற்கும். இனி போலீஸ் சப்ஜெக்ட் தொட
முயற்சிக்கும் எந்த இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இப்படம் விளங்கும் என்பதில்
சந்தேகமில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியின் கதைக்களம் நிகழும் காட்சிகள்
இடைவேளைக்கு முன்பான இருபது நிமிட சேஸிங்ஸ் அபாரம்.
சதுரங்க வேட்டை
வினோத்தின் மிகப்பெரும் பலம் அவரது வசனங்கள். கார்த்தியை இந்த கொள்ளையர்களை தேடும்
பணியிலிருந்து உயரதிகாரி நீக்கியபின் அவரிடம் இவர்கூறும் வசனம் காவல்துறையின் மீது
அனைத்து பார்வையாளனுக்கும் மிகபெரும் மதிப்பை ஏற்ப்படுத்தும். அக்கொள்ளையர்களின்
மீதான பயத்தை ஆரம்பகாட்சியிலே ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் சத்யசூர்யன் மற்றும்
இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரின் உழைப்பு படம்நெடுகிலும் தனித்து தெரியும்.
குறிப்பாக வில்லனின் ஆரம்பகாட்சி பின்னணி இசை பட்டாசு. இது போன்ற கதைகளில் காதல்
காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் நீளம் குறைந்து இன்னும் விறுவிறுப்பான படம்
கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுபோன்ற பரவலாக அறியப்பட்ட நாயகர்களை
முன்னிருத்தையில் இதுபோன்ற அட்ஜஸ்மென்ட் தவிர்க்கஇயலாதது. இல்லேன்னா ஒரு ரெண்டு
சீன் சத்யனுக்கு கொடுக்கும் நிலையெல்லாம் வந்திருக்குமா?
எந்த வழக்கையும்
காவல்துறை மிககண்ணியமாகவும், நேர்மையாகவும் கண்டிப்பாக அணுகும் என்று சொல்லப்படும்
கதையில் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பமே நேரடியாக பாதிக்கபடுவது போல்
அமைக்கப்பட்ட மிகச்சில சமாச்சாரங்களை நீக்கிபார்த்தால் நீண்ட இடைவெளிக்கு பின்னான
கெத்து போலீஸ் கதை. படம் பார்த்த அனைவருக்கும் காவல்துறையின் மேல் மிகப்பெரும்
மதிப்பை ஏற்படுத்திய இயக்குனருக்கு ராயல் சல்யுட்.
No comments:
Post a Comment