பார்த்ததில் மிகவும் ரசித்தது: 121
முதல் மூன்று நிமிடம் இயற்கை எழில் கொஞ்சும் வனங்களும்,
பனி பொழியும் நீரோடை வழியாகவும். எந்த பின்னணி இசையோ, பறவைகளின் ஒலியோ, ஓடும்
நீரின் சத்தமோ இல்லாமல் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் நமக்கு உணரவைத்தது ஒன்றைத்தான்.
அதாவது நாம் மிக ரசிக்கும் அனைத்தும் நம் அருகில் இருப்பினும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற
வெறுமையை. இப்படியான ஒரு கதைக்கும் அது
தாங்கிவரும் இந்த கனத்த வெறுமையையும் துவக்கம் முதலே பார்வையாளனுக்கு பழக்க வறண்ட
நிலத்தையோ, அழும் குழந்தயையோ படமாக்காமல், கதை நிகழும் களத்தை ஒட்டிய இயற்கை
காட்சிகளை கொண்டே இந்த வெறுமையை நமக்குள் புகுத்திய இயக்குனரை இந்த மூன்று நிமிட
காட்சிகளுக்குள்ளே புகழ்ந்திட எண்ணுவோர் எண்ணிவிடவும். ஏனெனில் இந்த நிமிடங்களுக்கு
பின்னே இந்த கதையின் கனத்த வெறுமையை நமக்கும் கொடுத்து நம்மையும் இக்கதையின்
பாத்திரங்களை போல் அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா வெறுமை நிலைக்கு ஆட்படுத்த
இருக்கிறார்.
அந்த மூன்று நிமிடங்களுக்கு பின்னாக கதையின்
துவக்கம். பள்ளியில் இருந்து வெளியேறும் சிறுவர் கூட்டம். இதில் எந்த சிறுவனின்
பின்னால் கேமரா செல்லுமோ அவனே நமது அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான எஜமானன்.
அப்பொழுது தெரியாது அடுத்த நம் அடுத்த சில நாட்களையும் இச்சிறுவனும் அவனது
வெறுமையும் ஆட்கொள்ள போகிறதென்று. ஒரு கணவன் & மனைவி சட்டப்படி விவாகரத்துக்கு
காத்திருக்க அவர்களது பன்னிரண்டு வயது மகனின் நிலையை, உணர்வை, அவனது எதிர்காலம்
பற்றிய பயத்தை பார்வையாளர் அனைவருக்கும் கடத்திய வகையில் கவனிக்க வேண்டிய சினிமா.
ஒருவரிடமிருந்து நாம் ஒதுங்க நினைக்கும் சூழலில்,
பிடிமானம் இல்லாத நமக்கு ஒரு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் நமது வெறுப்பின் அளவு
அவர்களின் பால் சற்று அதிகமாகவே இருக்கும். நாம் ஒதுங்க நினைத்தது நம் கணவனிடமோ,
மனைவிடமிருந்தோ எனில்? நமக்கென மற்றொரு இணையும் இருக்கும்பட்சத்தில். பரஸ்பரம்
புரிதலுடன் விவாகரத்திற்கு காத்திருக்கும் இவர்களின் மிகப்பெரும் தலைவலி அவர்களது
குழந்தை. அத்தலைவலிக்கான காரணத்தை ஆராயாமல், இவர்கள் இருவருக்கிடையேயான வாக்குவாதம்
முற்றிய தினம் அச்சிறுவன் விட்டைவிட்டு வெளியேறுகிறான்.
உடனே அலைந்து திரிந்து அச்சிறுவனை கண்டடைந்து தங்களின்
கீழ்மைநிலைக்கு வருந்தி கண்ணிருடன் மூவரும் இணையும் வழக்கமான கதையாக இல்லாமல்,
துவக்கம் முதலே
அச்சிறுவனிடம் வெறுப்பை உமிழும் தாயாகவும். தன் மகன் மாயமானத்தின் பின் அவனை
கண்டடைவதில் காட்டும் முனைப்பிலும். தற்போதும் அவன் மீதிருந்த அதே நிலையிலேயே அவனை
தேட துவங்கும் இடங்களிலேயே இக்கதையும் அப்பெண் பாத்திரமும் தனிபெரும் கவனம்
பெறுகிறது. கதையின் துவக்கத்தில் மாயமாகும் சிறுவன் பின் எந்த இடத்திலும்
காட்சிகளில் தேவைபடாத கதை. ஆனால் கதை முழுக்க இல்லாத அந்த சிறுவனை பற்றியே.
மிக சரியாக இக்கதை துவங்கும் இடம் அச்சிறுவன் வீட்டை
விட்டு வெளியேறும் காட்சியிலிருந்தே. அதற்கான காரணமாக இக்கதை சொல்வது அவன்
பெற்றோர்கள் இடையேயான வாக்குவாதம் எனில். முழு கதைக்கும் அச்சாணியான அக்காட்சி
பார்வையாளனுக்கும் அந்த தம்பதியரின்மேல் எவ்வாறான எண்ணத்தை விதைக்க வேண்டும்.
இக்காட்சி மட்டுமே அச்சிறுவனே அதற்க்கு பின் முழு கதையிலும் இல்லாவிடினும் அவனின்
மேல் இறுதிவரை பச்சாதாபத்தை விதைக்க செய்யும் ஒரே காட்சி. இவ்வாறான காட்சிக்கு
ஆழ்ந்த வசனங்களும் தேர்ந்த நடிகர்கள் மட்டுமே போதாது. வாதம் நடைபெறும் சூழல், நாம்
பார்க்கும் கோணம் முதற்கொண்டு அவசியமாகிறது. அப்படியான ஒரு காட்சியும் அரங்கேறுகிறது..
அவர்களின் முழு வாதமும் நிறைவுறும் சூழல்வரை தென்படாத அச்சிறுவன் கழிவறையின்
இருளில் நின்று ஒலி எழுப்பாமல் கதறுவது போன்ற ஒரு ஷாட் இரு வினாடிகள் மட்டுமே.
ஆனால் அந்த இரு வினாடி பார்வையாளனுக்கு கொடுக்க போகும் வலி அவ்வளவு சுலபமாக
வார்த்தைபடுத்த இயலாது.
இறுதியான
ஷாட் அத்துடன் படம் நிறைவடையும் அதன் பின்னே பார்வையாளன் அனைவருக்கும் படம்
நெடுகிலும் எழுந்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அந்த ஒரே ஷாட்டில் உள்ளது.
அதும்போக அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். வெறும்
வார்த்தைகளுக்கான வீரியத்தை அந்த தம்பதியரின் வாதத்தில் கவனிக்கலாம். இறுதியில்
TREAD MILL ல் ஓடும் தாய்பாத்திரம் வரும் ஷாட் சொல்லும் செய்தி. இவ்வளவு தேடலுக்கு
பின்னும் தான் தனது நிலையிலிருந்து மாறாமல் அதே இடத்தில் நிற்ப்பது என முழுநீள படத்தின்
இறுதி காட்சிவரை இயக்குனரின் தனி சாம்ராஜ்யமே.
படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8
படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8
No comments:
Post a Comment