Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, October 18, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 137.


BIOGRAPHY அப்படின்னு தமிழ் சினிமால யோசிச்சா சில விநாடிகள்ல ஞாபகம் வர படம் நாயகன். அதுக்கு பின்னால ரொம்ப யோசிச்சா (கொஞ்சம் தயக்கமாவே) தவமா தவமிருந்துதான். ரெண்டுக்கும் நடுவுல கிட்டத்தட்ட இருவது வருஷம் தமிழ் சினிமாவும் இருந்திருக்கு. இதே BIOGRAPHY லையே ஒரு களத்தை பத்தின கதையை யோசிச்சா எதுமே இருந்ததா நினைவில் வரவேஇல்ல. ஏன்? “அதான் சுப்ரமணியபுரம் வந்ததேனு நண்பர்கள் சிலரும் வாதத்திற்கு வந்தனர்.’ அந்த களம் அந்த கதைக்கானது மட்டுமே. இங்குயாரும் தனியாக எந்த களத்தின் வரலாறையும் சினிமாவில் கொண்டு வந்ததாக நினைவில் இல்லை. இது வடசென்னை எனும் மீனவகிராமத்தின் வரலாறை, அதே உப்பு காற்றும், கருவாட்டு வாசனையும். அந்த முரட்டு மனிதர்களின் வாழ்வின் போராட்ட  பக்கங்களின் சரித்திரம்.

எனது பதிவுகளில் பெரும்பாலும் சொல்வது ஒரு கதைக்கு அவர்கள் தீர்மானிக்கும் களமே அந்த கதையின் உணமைதன்மையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிக்கும் என்பதே. காரணம் அவர்கள் தீர்மானிக்கும் களம் குறித்த ஆய்வை நிச்சயம் அந்த இயக்குனர் மேற்கொண்டே ஆகவேண்டும். அதை தனது கதையில் பொருத்துகையில் அவர்களின் பேச்சு வழக்கு, உடை, பின் அதே அந்த கதைக்கான உண்மைத்தன்மையை கொண்டுவந்து விடும். நமது அரசாங்கம் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மீனவ கிராமங்களை நகர விரிவாக்கம். தூய்மை இந்தியா இப்படி ஏதேனும் திட்டத்தின் கீழ் அவர்களை காலி செய்ய முயல்வதும். அவை இன்று வரை பெரும்பாலும் தோல்வியிலே இழுத்துகொண்டு செல்வதும் வரலாறு. இதை 1987 லில் ஒரு கொலையில் துவக்கி NON LINEAR முறையில் 2000 வரை திரைக்கதை வடித்துள்ளார் வெற்றிமாறன்.

ராஜன் (அமீர்), குணா (ச.கனி), செந்தில் (கிஷோர்), தம்பி (டேனியல்), வேலு (பவன் – பொல்லாதவன் அவுட்) சந்திரா (ஆண்ட்ரியா), பத்மா (ஐஸ்வர்யா ராஜேஷ்), முக்கிய கதாபாத்திரங்களில். மூன்று பாகங்களாக வரவிருக்கும் வரலாறு இந்த படம். தன் கதைக்கான பாத்திரங்களை வடிவமைப்பதில் இவரை அடித்துக்கொள்ள சமகாலத்தில் எந்த இயக்குனரும் கிடையாது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளத்தில் தான் பயன்படுத்திய பாத்திரங்கள்தான் பெரும்பாலும் எனினும் இதில் முற்றிலும் வேறு களம். வேறு பேச்சு மொழி, நடை, உடை என முற்றிலும் அனைத்தும் வேறு. அதை அப்பாத்திரங்கள் வெளிப்படுத்திய விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஆனால் அதை நீங்கள் அனைவரும் இந்த குப்பத்து மக்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி ஒரே வரிசையில் கொண்டுவந்த விதம்.

தனி ஒருவராக திரையில் யாருக்கும் எந்த காட்சியும் இல்லை. அனைத்து காட்சிகளிலும் குறைந்தது நான்கு முதல் பத்து நபர்கள் வரை. அந்த கூட்டத்திலும் குட்டி குட்டி பாத்திரங்களில் வரும் அன்புவின் மச்சினன், “என் உயிரை காப்பாத்தி கொடுத்து அண்ணனை யாரு போட்டாங்கனு சொல்ல முடியாம பண்ணிடியேடானு அழும் அன்புவின் ஜெயில் சிநேகிதன். செந்தில் உடன் ஜெயிலில் இருக்கும் திடகாத்திர நபர். குணாவோட இடது கழுத்து, தோள்பட்டை வழியே வலது மார்புவரை இருக்கும் வெட்டு தழும்புனு நெறைய நெறைய பேர் அந்த கூட்டத்திலும் நம் கவனத்தை ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து இழுத்து கொண்டே வருகின்றனர்.

நண்பர்கள் பலரின் பதிவுகளில் படித்ததுபோல் இந்த பாத்திரங்களை நினைவுபடுத்தி கொள்வதில் எந்த சிரமமோ, குழப்பங்களோ இல்லை. ஒரே நிமிடம் நம் மனதுள் நிதானித்து நிறுத்தினால் காலத்திற்கும் நம்முடன் பயணிக்க போகும் நபர்கள் இவர்கள். இப்பாத்திரங்களை உள்வாங்கி கொண்டால் மட்டுமே இக்கதையின் வீரியத்தை முழுதும் உங்களால் அனுபவிக்க எதுவாக இருப்பதால் முதல் முப்பது நிமிட படத்தை மட்டுமேனும் மொபைல் நோண்டல், பக்கத்து சீட்டு பல்லிளிப்பு ஏதும் இல்லாமல் சற்று கவனத்துடன் நோக்கினால். அதே உங்களுக்கு பழகிடும். முதல் மூன்று படங்களில் இருந்து இது வெற்றிமாறனுக்கு மட்டும் அசுர பாச்சல் இல்லை. வேல்முருகன் (கேமரா), SREESAN (SOUND DEPT), DHILIP SUBBURAAYAN க்கு மட்டுமில்லாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிக முக்கிய இருநபர்கள் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் வெங்கடேஷ் அவர்கள்.

UNDERPLAY ல இன்றைய நடிகர்கள்ல அடிச்சிக்கவே முடியாத ஒரே நபர் அன்பு. அதை திரும்ப திரும்ப அவர் நிருபிச்சி மேல மேல போயிட்டே இருக்கார். அடுத்த பாகம் முழுக்க அன்புவின் எழுச்சியே பிரதானம் என்பதால் இப்பொழுதே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பும் படம் முடியும் நிமிடம் முதல் தானாக எழுந்துவிடுகிறது. ஒரே நபர மட்டும் இந்த மூணு பாகத்திலும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் என்னுடைய ஒரே தேர்வு சந்திரா மட்டுமே. அமீரின் COOLERS எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியில் வரும் ஒரே ஷாட் அவங்களுக்கு போதுமானது. வரும் மாதங்களில் அனைத்து பத்திரிகை, வார இதழ்களிலும் நிரப்பும் செய்தியாக மட்டும் இல்லாமல் இப்படமும், இதன் technical டீம் அனைவரும் செல்லவிருக்கும் உயரம் மிகப்பெரியது.


ஹோட்டலில் அந்த கொலைக்கு முன் அமீர் பேசும் அரசியல் வசனங்கள் இதுவரை தமிழ் சினிமா காணாதது. அது அடுத்தடுத்த பாகங்களில் மிக வீரியமாக வெளிப்படும் என்பதில் துளியும் ஐய்யமில்லை. காரணம் இக்கதை பேசும் களவரலாறு அவ்வாறானது .

Wednesday, October 17, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 136.

இந்திய சினிமாக்களில் NATIONAL SECRET FORCE, SECRET OPERATION இப்படியான MISSION IMPOSSIBLE வரையறா கதைகளில் அதே தேசத்தை காப்பது. அதற்க்கு எதிராக செயல்படும் இயக்கத்தை அழிப்பது. இந்த SECRET OPERATIONல் ஏதேனும் தவறு நடந்தால், அந்த இயக்கத்தின் மீது அரசாங்கமே நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்வது என இவை ஒரே பாணி JAMESBOND கதைகளே. இதில் சுவாரசியம் இதன் திரைகதையில் மட்டுமே ஒளிந்துள்ளது. இப்படியான கதைகளை இந்திய சினிமாக்களில் முயற்சிப்பதில் பெரும் சிக்கலே அவை பல ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் படி இருப்பதுவே.

இதும் அதே CBI ல் இணைந்து பணியாற்ற துடிக்கும் நாயகன். அவனை அவர்கள் தேர்ந்தெடுத்து. பயிற்சி கொடுக்கும் விதம் பல படங்களை நினைவூட்டினாலும் இந்த 3௦ நிமிட காட்சிகளை தவிர்த்து படத்தின் இறுதிவரை கதை எங்கையும் வேறு படங்களை நினைவுபடுத்தாததே இப்படத்திற்கான வெற்றி. ஒரு ஹெட். மார்சியல் ஆர்ட் கற்றுதரும் பெண், கம்ப்யூட்டர் ஹக்கிங் பயிற்சிதரும் நபர் என மொத்தம் மூன்றே நபர்கள் இந்த TRINETHRA எனும் இக்குழுவை வழிநடத்த. அனைவரும் பயிற்சி முடித்து ஒவ்வொரு துறைக்கு செல்கிறார்கள். பயிற்சியின் போதே தீவிரவாத இயக்கம் இவர்களை பின்தொடர. பயிற்சி முடித்த முதல் நாள்  நாயகன் TARGET செய்யபடுகிறான். அதும் சாதாரணமாக இல்லாமல் அவனுக்கும் அவன் குழுவுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்த அதன் நிறுவன தலைவரை தீர்த்துகட்டுதல் வாயிலாக.

அதும் அவரை கொன்றது நாயகன்தான் எனும் பக்கா ஆதாரங்களுடன் அக்கொலை அரங்கேறுகிறது. அவரை கொன்ற துப்பாக்கியில் நாயகனின் கைரேகை. கொன்றவர்கள் செல்லும் வாகனம் நாயகனின் அப்பார்ட்மென்ட் வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் நாளில் பாகிஸ்தானில் இருந்து அவனது வங்கி கணக்கிற்கு ருபாய் இரண்டு கோடி TRANSFER செய்யபடுகிறது. இதும் போக இந்த விழாவிற்கு வரும் நாயகன் தனது CHIEF ற்க்கு கொண்டுவரும் ஸ்காட்ச்ல் விஷம் கலக்கப்பட்டு அதை அருந்தி அவரும் உயிர் துறக்கிறார்.

நாயகன் இந்த கொலையை செய்யவில்லை என்பதற்கான ஒரே ஆதாரம் அந்த தாக்குதல் அரங்கேற இருக்கும் கடைசி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் மொபைல் அழைப்பு ஒன்றே. அவர்களும் இறந்துவிட மொத்த தேசத்தின் பார்வைக்கும் தீவிரவாதியாக அடையாளம் காட்டபடுகிறான். இதில் அந்த தாக்குதல் நடைபெறுவதை நாயகன் இறுதி நிமிடத்தில் எவ்வாறு கணித்தான் என்பதற்கு படத்தின் துவக்கம் முதல் சிறு சிறு காட்சிகளின் வாயிலாக க்ளு கிடைத்து கொண்டே வருவதும். தன் மீதும் தாக்குதல் நடக்கும் இறுதி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் தெரிவிக்க அழைப்பதும் கூடுதல் சூவரசிய காட்சிகள்.

மேலும் இந்த துறையில் சேர எதற்காக இவ்வளவு வெறியாக உள்ளான் என்பதை கதையின் துவக்கத்திலே வரும் கதையும். இறுதி காட்சியில் வரும் திருப்பங்களும் இந்திய சினிமாவிற்காக என்றாலும், நிச்சயம் ரசிக்கும்படியான காட்சிகளே. மேலும் நாயகன் அனைத்து விதங்களிலும் குற்றவாளியாக்கப்பட்டது முதல் ஒரு மணிநேர படத்தில். அதற்க்கு பின்னான அதே குற்றவாளியை பின்தொடர்ந்து தான் நிரபராதி என நிருபிக்கும் கதையில் பரபர திரைக்கதை மூலம் நம்மை அசத்தயுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.


தெலுங்கு சினிமாவை பற்றி துளியும் தெரியாததால் இதன் TECHNICAL TEAM  DIRECTOR பற்றி எந்த வரலாறும் பதியபடவில்லை. மேலோட்டமான ஒரே காட்சியை பற்றிய பார்வையை பற்றி மட்டுமே பதிவிட்டு உள்ளேன். இதனுள் பல கிளைகதைகள் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வேறு சிந்திக்க விடாமல் முழு படத்தையும் ரசிக்க வைக்கும்.

TRALIER LINK:

https://www.youtube.com/watch?v=lysoF97MOMk

Saturday, October 6, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 135.

பொதுவாக இப்படிபட்ட பொண்ணு கிடைச்ச இவன் உண்மையிலே ரொம்ப அதிர்ஷ்டசாலிங்கற எண்ணத்தை தான் அதிக முறை உணர்ந்திருப்போம். அல்லது நண்பர்களிடம் சொல்லிக்கூட இருப்போம். ஆனால் இப்படியான ஒரு பையன் கிடைச்ச இந்த பொண்ணுதான்ப்பா ரொம்ப கொடுத்து வெச்சவனு சொல்லிகொள்ளும் படியான ஒரு பாத்திரப்படைப்பு பரியனுக்கு. அதுதான் இந்த கதைக்கான சாராம்சமும். சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு பரஸ்பர அறிமுகத்தில்
“உங்க பேரு..
அதான் அப்பவே சொன்னனே “ஜோதி மகாலக்ஷ்மி”
ஓ.. உங்களுக்கு ரெண்டு பேரா?
இல்ல.. மூணு பேரு. வீட்ல “ஜோ”/
ஜோ பாத்திரம் இத சொல்லிக்கொண்டே வகுப்பறையில் இருந்து வெளியேறும் போது. பரியன் சொல்லுவான். ஏங்க ஜோவா, ஜோதிகா பேருங்க. குஷி 19 தடவ பாத்திருக்கேன். ஜோதிகானா எனக்கு அவ்ளோ பிடிக்கும்னு அவன் சொல்லிமுடிக்கும் போது. ஜோ முழுக்க வகுப்பறைய விட்டு வெளியேறி அவங்க தலைகூட மறைஞ்சிருக்கும். அவன் சொன்னதமட்டும் மனசுல வாங்கிட்டே போனவங்க. தலைய மட்டும் உள்ள நீட்டி அதே புன்னகை முகத்துல கூடுதல் பிரகாசத்த மட்டும் பரியன்கிட்ட காமிச்சிட்டு மீண்டும் நடக்க ஆரமிப்பங்க அவங்களோட முழு வெக்கத்தையும் கொஞ்ச கொஞ்சமா முழுங்கிகொண்டே...

இதுவரை வெறும் பரியன் அப்படிங்கற ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பி போன அத்தனை பார்வையாளனையும் தன்னை கவனிக்க வெச்சிடும் இந்த ஜோ பாத்திரம். படம் துவங்கிய முதல் பதினைந்தாவது நிமிடத்தில் வரும் இப்பாத்திரமே நம்மை எந்த அசௌகர்யத்திற்கும் உட்படுத்தாமல் முதல்பாதி கதை முழுக்க மனநிறைவோடு கொண்டு செல்லும். தான் சொல்லும் எல்லா கதைகளிலும் தனது சொந்த எண்ண ஓட்டத்தை புகுத்தாமல். தன் கதை அது செல்லும் பாதையின் உள்ள அனைத்து கீழ் சாதி துவேசங்களையும் துளியும் மிச்சமில்லாமல் கதையின் வழியே நமக்கு குறியீடு போன்ற எந்த மேதாவிதனமும் இல்லாமல் மூலம் வெகு இயல்பாகவும். அதே வலியுடனும் காண்பித்த இயக்குனருக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள்.

வீட்டுபாடம், டீச்சர், BABL மேல ஒரு கொடுன்னு அதே தன் கிராமத்து பேச்சு வழக்கிலேயே ரொம்ப அப்பாவியான சட்டகல்லூரி மாணவன் பரியனனுக்கு. தன் சாதி .குறித்த சீண்டல்களை மட்டும் பொறுத்து கொள்ளாமல் கோவப்படுவதற்கான அனைத்து காரணங்களையும்  கதையில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ரொம்ப அழுத்தமாக சொல்லபட்டிருக்கும். அதுவே அவனின் ஆக்ரோஷத்தை எந்த இடத்திலும் ஒரு பார்வையாளருக்கும் தவறாக நினைக்க தோன்றாது. ஜோ உள்ள பரியனின் ஆவேச காட்சிகளில் ஜோவை எத்தனை சதவிகிதத்தினர் கவனித்தனர் என்று தெரியாது. ஆனால் இயற்கையிலே அந்த பெரிய கண்களில் தோன்றும் கூடுதல் மிரட்சியும். அந்த ஒடிசல் தேகத்தில் ஏற்படும் நடுக்கமும் அவனின் மேல் உள்ள பிரியத்தின் மொத்த சாட்சி.

முதல் முறை அவனது கோவத்தை பார்த்து, பின் அவனிடம் ரொம்ப தயக்கமா.. ENGLISH சுத்தமா தெரியாம எப்படி 1௦, +2 லாம் பாஸ் பண்ணிங்கன்னு கேக்கும் போது.. அந்த கதை FLASHBACK போகும். (அத  அவ்ளோ சுவாரசியமா பண்ணிருப்பாங்க) போது ஜோ அந்த கதைய ரொம்ப சரியா ஒரு குறிப்பிட்ட இடத்துல பரியன DIVERT பண்ணி அடுத்த கதைக்கு கூட்டிபோய்டுவாங்க. அவனும் கதை சொல்ற சுவாரசியத்தில் அடுத்தடுத்து சொல்லி முடிச்சதும். ப்பா... நான்லாம் ஸ்கூல் பாஸ் பண்ணேன். அப்ப “லா” படிக்க சொன்னாரு படிக்கறேன் அவ்ளோதான். ஆனா உங்களுக்கு உள்ள இவ்ளோ கதைகளானு கேப்பாங்க.

இப்படி வாழ்கையில் தனக்கான கதைகள் இல்லாத மனிதர்கள் நிரம்ப அதிர்ஷடசாலிகள். அவர்களாலே வெறும் கதைகளோடு மட்டுமே அலையும் பரியன்களின் கதைகளை வெகு ஆர்வமாக ரசிக்க இயலும். ரொம்ப கணக்கும் இதயத்தோடு இறுதி காட்சியில் நாம் கிளம்பும் ஒரு 1.3௦ நிமிடங்களுக்கு முன்ன பரியன ஜோ அப்பா பாத்திரம் சந்திக்க வருவார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுக்க நாம ஜோவ மறந்தே போய் இருப்போம்.  பரியன் மட்டுமே ரொம்ப ஆழமா நமக்குள்ள இருப்பான். அந்த நேரத்துல அவங்க அப்பாவையும், பரியனையும் உக்கார வெச்ச்சிட்டு ஜோ ஏதாவது வாங்கிவர CANTEEN போவாங்க. அப்ப அவங்க அப்பாகிட்ட ஏதாவது பேசசொல்லி சைகை பண்ணுவாங்க. இந்த ஆனந்தி பொண்ணு இன்னும் இருவது வருஷம் இங்க இருந்தாலும் இப்படியான ஒரு காட்சி திரும்ப கிடைக்காது. ஆனா அதுக்கு அப்பறமும் அது எல்லார் மனசிலையும் நிக்கும்படி அந்த சில வினாடி காட்சிகளில் அவ்ளோ அட்டகாசபடுத்தி இருக்காங்க.

இந்த படம் காதல மட்டும் சொல்லையே. இது சொன்ன விசயமே வேற. ஆனா இந்த படம் அனைத்து பார்வையாளரும் ஏற்று வெற்றி படமானதுக்கு மிகபெரிய காரணம் அந்த பெரிய கண்ணும், ஒரே வெக்க சிரிப்பையே அனைத்து காட்சிக்கும் பொருந்திபோற போல கொடுத்த ஜோதான். தமிழ் சினிமா தொடாத பாத்திரபடைப்புகள் இந்த படத்தில் உண்டு. இப்படியான படங்களை பார்க்கும் போதுதான். பாவம் அவனும் எத்தனை கதைதான் எடுத்துட்டே இருக்கமுடியும். எல்லா கதையும்தான் சொல்லியாச்சேனு நாம அடிக்கடி சமாதானம் சொல்லிகிட்டது. எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நமக்கு தெரியும். இன்னும் சொல்லபடாத கதைகளும். அறிமுகபடுத்தபடாத பாத்திரங்களும் லட்சகணக்கில் நம்மள சுத்தி இருப்பது நமக்கே உரைக்கும். முதல் கதையில் இப்படியான எதிர்பார்ப்பை சமீபமா எந்த புது இயக்குனரும் ஏற்படுத்தல. தன்னோட முதல் படைப்பிலே இப்படியான வலியயும் யாரும் சமீபமா தரல. இந்த ஒரே படத்துக்கு மட்டும் தான் அடுத்து இன்னொரு பதிவும் எழுத தோணுது. இதே மாரிசெல்வத்துக்கு பெரிய வெற்றிதான!..

Tuesday, September 18, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 134.


9௦ களில் GULF நாடுகளை நோக்கி படையெடுக்கும் கலாசாரம் துவங்கிய காலகட்டமே இப்படத்திற்கான களம். கணவன் பிழைப்பிற்கு வெளிநாடு செல்ல, மும்பையில் பெரும் இரைச்சல்களுக்கிடையே வெறும் தனிமையை மட்டுமே துணையாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். தன் ஆடைகளை தைய்க்கும் தையல்கார இளைஞன் மீது ஏற்படும் ஈர்ப்பையும் தாண்டிய ஒரு உணர்வு. தன்னில் வயதிலும் தோற்றத்திலும் சற்று மூத்தவள். அதற்க்கான இடைவெளியுடனும் படத்தின் துவக்கத்தில் ஆரம்பமாகும் வெறும் சம்பாசனைகள் இறுதிவரை வெறும் சம்பாசனைகளாகவே இருந்தும், இவர்கள் ஒரு முழு காதல் கதையின் அனைத்து உணர்வுகளையும் நம்முள் கடத்தியது எப்படி??..

வெறும் தனக்கான ஆடையை தைக்கும் விதம் குறித்த பேச்சில் துவங்குகிறது இக்கதை. தனது வாடிக்கையாளர் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் குடும்பத்தாருடன் பழக்கமான பெண். இந்த அளவுகோலிலே அவனது பேச்சும் இதனில் அவளது சிறு தடுமாற்ற பார்வைகளும், சிறு தினரல்களுடன் அவளது பேச்சும் முதல் நிமிடத்திலே துவங்கிவிட. அவனது பேச்சிலும் அந்த தடுமாற்றம் தொற்றி கொள்கிறது. பின் அவளது நடுக்கத்திற்கு இடையே அரைகுறை புரிதலுடன் தேனீர் அருந்த சம்மதிக்கிறான். தேநீர் தயாரிப்பிற்காக அவள் உள்ளே செல்ல அவள் அருகமையில் இருந்து விடுபட்டு தன்னை அந்த சில நிமிடங்களில் ஆசுவாசபடுத்தி கொண்டவனின் அதன் பின்னான பேச்சில் துளியும் நடுக்கமோ, தயக்கமோ இருக்காது.

தேநீரையும் ரசித்து குடித்தவன். தனது சகோதரன் அடுத்த வாரங்களில் RIYADH செல்லவிருப்பதால் தங்கள் கணவருக்கு ஏதேனும் கொடுத்து அனுப்புமாறும் தெரிவித்து விட்டு நகர்கிறான். அவனுக்கு பின்னே சென்று கதவடைத்தவள். மீண்டும் தன் தனிமை உலகத்திற்குள் நுழைகிறாள்.  தனது தடுமாற்றத்தை அவன் கண்கூடாக கண்டுகொண்டதை உணர்கிறாள். எப்பொழுதும் சற்று வேகமாக எந்த பணியையும் செய்பவள். சிறு குழந்தையை குளிப்பாட்டுவது போல அவன் தேநீர் அருந்திய கோப்பையை சுத்தம் செய்கிறாள். தன் நிலையை தினமும் நடுநிசி வரை ஓயாமல் கேட்கும் இரைச்சல் இடையே நினைத்தபடியே தனது தொழுகையை துவக்குகிறாள். பின்னணியில் மெலிதாக துவங்கும் வயலின் அவளின் தொழுகை நிறைவடையும் பொழுதில், நம் மனம் முழுக்க அதனுள் லயிக்கும் நொடியில் அவளின் விசும்பல் பெரும் அழுகையாக மாற நாம் அந்த பின்னணி வயலினை நிறுத்தி அவளை எப்படியேனும் காத்திட இயலாதா என எண்ணவைக்கும். நம்மை லயிக்க செய்த அந்த இசை. நமக்கு இது நாம் வேறுவிதமாக நாம் கணித்த கதையல்ல என்பதை ஆணித்தரமாக கூறி செல்லும்.

தன் கணவனுக்கானதை வாங்க கடைவீதிக்கு செல்பவள். அவன் தன்னை பின் தொடர்வதை உறுதிபடுத்தி கொண்டு பதறி மீண்டும் கூடடைகிறாள். பின்னும் அவன் பின்னே தொடர்கிறானா எனும் எதிர்பார்ப்பும், தன் நினைப்பை அவன் அறிந்திட நேருமோ என்ற தயக்கமும். மிக மெலிதாக நம் நிலையை அவன் உணர்ந்திட மாட்டானா என்றும் எதிர்பார்கிறாள்.. தான் அவளை பின்தொடர்ந்ததும், தன்னை அவள் கண்டுகொண்டதையும் உணர்ந்தவன். அவனுக்கான அடுத்த சந்திப்பிற்கு ஆயத்தமாகிறான். ஆம் அவளுக்காக ஆடையை மிக நேர்த்தியாக அப்பொழுதே தைய்க்க துவங்குகிறான். ஒரு வாரத்திற்குள் கொடுக்க வேண்டிய ஆடையை ஒரே இரவில் முடித்து அடுத்த நாள் விடியலில் அவளுக்கான காலை சிற்றுண்டியுடனும் ஆடையுடனும் அவளை சந்திக்க இருக்கிறான். இந்த யோசனை ஏதுமின்றி அவள் அந்த இரவிலே கரைந்திருக்கிறாள். இது இப்படத்தின் முதல் பத்து நிமிடத்திற்கான காட்சி மட்டுமே.

முழுக்க இந்த இரு கதாபாத்திரங்களும், அந்த இரைச்சலான பம்பாய் நகர வீதியும். இவர்களுடனே நம்மை பிடித்து வைத்திருக்கும் வயலின் மற்றும் புல்லாங்குழலின் பிண்ணனியும். எந்த காதல் ரசம் பூசிய பாசாங்கில்லாத வெறும் உரையாடல்கள் மட்டுமே. அதன் வழியே அவர்களின் எண்ண ஓட்டங்களை உணர்வுகளாக்கி நமக்கும் கடத்தியது என சராசரியாக நாம் பார்த்த, ரசித்த கதைகளில் உணர்ந்த பல... இப்படத்தில். அதில் விசேஷம் அவற்றை எந்த அலங்காரங்களும் அழகிய நாயகிகள் அறிந்த முகங்கள் என எதுமில்ல ஏதோ நாடக ஒத்திகை போன்ற இப்படத்தில் உணர்செய்தது ஒன்றே இப்படத்தை ரசிக்க போதுமானதாகும்.


TANUJA CHANDRA இயக்குனர். DIL TO PAGAL HAI படத்திக்கு திரைக்கதை இவர்தான். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படம். ஆனால் அதை உணர செய்யாத முழு காதல் படம் பார்த்த உணர்வை கொடுக்கும் . 

Sunday, September 2, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 133.

எந்த திறமையான இயக்குனரும் அனைத்து களங்களிலும் தனது  பாணியில் படைப்புகளை கொடுக்கயியலும் சில களங்களை தவிர. அதில் மிக முக்கிய களம் SPORTS GENRE. காரணம் அவை இதற்க்கு முன் நம்மிடையே உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம். ஏழ்மையான இளமை காலம். தனது முயற்சிக்கு தனது குடும்பமும் சமூகமும் எதிராக இருப்பது. இடையில் வரும் காதல். (பெரும்பாலும்) அதை தனது லட்சியத்திற்காக தியாகம் செய்வது. உயிரை வருத்தி தனது லட்சியத்திற்காக உடலையும், மனதையும் தயார் செய்வது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து இறுதியில் வெற்றி பெறுவது. இந்த வகைகளில் ஏதேனும் மூன்று, நான்கு கண்டிப்பாக அனைத்து SPORTS GENRE கதைகளிலும் இருந்தே ஆகவேண்டும். அப்படிப்பட்ட களத்தை தனக்கான பாணி கதை சொல்லல் மூலம் இந்திய சினிமாவை கவனம் ஈர்த்த ஒருவர் தொடுகிறார். இவரும் இவ்விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இக்கதையை கையாள முடியும் என்ற எண்ணத்தை கதை துவங்கிய முதல் நிமிடத்திலேயே அடித்து நொறுக்குகிறார்.

இந்த பாணி கதையில் இவருக்கான STYLE கொண்டு வர வாய்ப்பே இருக்காதே. அதையும் கதையின் போக்கை எங்கேயும் மாற்றாமல் வெகு இயல்பாக உள்நுழைக்கிறார். சொல்லப்போனால் துவக்க அந்த கலவர காட்சிகளில் இருந்தே படம் துவங்குகிறது. இதுவரை அவர் அதிகம் பயன்படுத்தாத காதலை அதன் பின் இக்கதையினுள் கொண்டுவருகிறார். அதன் பின்னான கதை அந்த சாதிய கலவரமும், குறுகுறு காதலுடனும் + BOXING உடனும். இந்த பாணி கதைகளுக்கே துளியும் சம்பந்தம் இல்லாத திடுக் கிளைமாக்ஸ் உடன் முடிகிறது. இதில் அவர் எங்குமே தனது பாணியையும் SPORTS GENRE க்காக விட்டு தரவில்லை. அதே போல இந்த விளையாட்டிற்கு உண்டான மரியாதையையும் குலைக்கவில்லை. சொல்ல போனால் அதே பழைய பாணியை காட்டிலும் இவ்விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவமே கொடுத்துள்ளார்.

அதே நடுத்தர வர்கத்தை சேர்ந்த நாயகன். தனது ஒரே கனவான NATIONAL LEVEL BOXING TOURNAMENT ல் வெற்றி பெற வேண்டி தன்னை தயார் செய்கிறான். ஜாதி வெறி பிடித்த தனது பயிற்சியாளரிடம் ஏற்படும் சிறு மோதலால் அங்கிருந்து வெளியேறுகிறார். இதில் அவரின் குடும்ப பெண்ணுடனே காதல். அதன் பின் DISTRICT TOURNAMENT முதல் NATIONAL வரை அவர் சந்திக்கும் பிரச்சனைகள். அதில் அவர் வெற்றி வாகை சூடினாரா? என்பது  மட்டுமே கதையல்ல. அந்த பயிற்சியாளரால் ஏற்படும் தடைகளும் அதிலிருந்து இவர் அடுத்தடுத்த படிகளுக்கு செல்வதுமே இக்கதையின் சுவாரயசித்திற்கு மிக முக்கிய காரணம்.
மற்ற வகை கதைகளை காட்டிலும் அதிகபட்ச உழைப்பை இவ்வகை கதைகள் நாயகனிடமிருந்து எடுத்து கொள்ளும். அதை GANGS OF WASSEPPUR மற்றும் UGLY படங்களில் தலை காட்டிய VINEETH KUMAR SINGH இப்படத்திற்காக சற்று கூடுதலாகவே வழங்கியுள்ளார். இயல்பிலே நல்ல கட்டுமஸ்த்தான தோற்றம். இதில் BOXING கதைக்காக கூடுதல் முருக்கேறியவர். அவரை ஒரு சிறு சிரிப்பில், ஒரு தெனாவட்டு பார்வையில், தெற்று பல் தெரிய முகம் சுளிக்கும் அழகில் காதலில் விழவைத்தால் அது பார்வையாளனால் நம்பமுடியாது என நினைத்தாரோ என்னவோ ZOYA HUSSAIN எனும் அழகியை தருவித்திருக்கிறார். இயல்பிலே அந்த கண்களில் திமிரும், எகத்தாளமும் நிரம்பி வழிகிறது. இப்பொழுது நம் நாயகன் முதல் பார்வையிலே காதலில் விழுகிறான்.

தனியே தன் சகோதிரியின் கணவரோடு உரையாடுகையில் தன்னை எதிர்த்து பேசினார் என்பதற்காக வஞ்சம் வைத்து பழிவாங்கும் வில்லனாக அந்த பயிற்சியாளர் வேடத்தில் JIMMY SHEIRGIL. இதற்க்கு முன் A WEDNESDAY, MY NAME IS KHAN, MUNNABHAI போன்ற பெரிய படங்களில் தலை காட்டினாலும் பெரிதும் வெளியில் சோபிக்காதவ்ர். அஞ்சாதே மூலம் தன்னை வேறு பாணியில் நிலைநிறுத்தி கொண்ட பாண்டியராஜனை போன்று. இந்த படம் இவரை வேறு தளத்திற்கு அழைத்து செல்லும். இக்கதையின் அனைத்து சுவாரசிய காட்சிகளுக்கும் சொந்தகாரனாக. மொத்த பார்வையாளனின் கவனமும் நாயகனை தாண்டி இவர் மீதே நிலைத்திருக்க செய்யும் உழைப்பை (எனக்கு தெரிந்து) முதன்முறை இக்கதைக்காக வழங்கிஉள்ளார்.

இப்படியான கலவர கதையில் SPORTS GENRE களமாக தேர்ந்தெடுத்ததற்கே இயக்குனருக்கு மிகபெரும் பாராட்டு. அதிலும் காதலை இந்த களத்தில் பயன்படுத்திய அளவு இந்த வகை படங்களில் இதற்க்குமுன் பார்த்ததில்லை. வழக்கமான இந்த இயக்குனரின் படங்களில் LIGHTING, மிரட்டல் CAMERA ANGLES, SHARP EDITING, BGM என TECHNIAL சங்கதிகள் அனைத்தும் இப்படத்திலும் மிகசிறப்பாக கையாளப்பட்டுள்ளது. அந்த இயக்குனர். (இந்த பயிற்சியாரின் நடவடிக்கைகளும், இப்படத்தின் காதல் காட்சிகளும் திட்டமிட்டே விவரிக்கபடவில்லை.)


“அனுராக் காஷ்யப்”

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=fl3gun0J8XM

Saturday, August 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 132.

எந்த படமும் பார்ப்பதற்கு முன் அந்த படத்தை பற்றிய அபிப்பிராயம் நம் மனதில் பெரும்பாலும் இருக்கும். அதாவது இதன் கதை இவ்வாறே இருக்கும் என்ற யூகம். அல்லது படம் துவங்கிய சில நிமிடங்களில் இந்த கதையை இவ்வாறே நகர்த்தி செல்ல இயலும் என்பது போல அந்த படமும் அவ்வாறே அமையும் பட்சத்தில் கொஞ்சம் தோய்வான திரைக்கதையோடே இருப்பினும் அவை நம் மனதுக்கு சற்று நெருக்கமானதாக உணர செய்யும். மாறாக அப்படம் நம் யூகங்களுக்கு அப்பாற்பட்டு வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் மாய விந்தைகள் நிகழ்த்தினாலும் அவை பார்வையானின் மனதிற்கு நெருக்கமாவது சற்று கடினம். இக்கதையும் அவ்வாறே நம்யூகத்திலிருந்து வெளியேறி தலையில் நடந்து காட்டும் பிரயாத்தனங்கள் ஏதும் பண்ணாமலே சட்டென நம் மனதிற்கு நெருக்கமானது.


வேறெந்த எதிர்பார்ப்பில் வரும் பார்வையாளனை விட காமம் மேலோங்கிய கதையென வருபவனுக்கு ஒரு மூன்று காட்சிகளேனும் அவனுக்கானதாக இருந்தே ஆகவேண்டும். அதைதவிர்த்து`எந்த குட்டி கரணமும் அங்கு செல்லுபடியாகாது. அவ்வாறான பார்வையாளனாகவே இக்கதைக்குள் நானும் நுழைந்தேன். என்னுடைய எந்த யூகங்களையும் ஒரு பத்து சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்யாத இக்கதை மனதிற்கு நெருக்கமானது மட்டுமின்றி. மனதில் சம்மணமிட்டு அமர என்ன காரணம்.


சிறைச்சாலை நோக்கி விரையும் வாகனம். கைதிகளின் பெரும் கூச்சளுக்கிடையே நீலத்தையே வெப்பமான வண்ணமாக்கிய (BLUE IS THE WARMEST COLOUR – நாயகி) அந்த அரூப அழகி ADELE யின் அறிமுகம். அது பழைய நினைவுகளுடன் நம் யூகங்களை மேலும் பலமடங்காக்குகிறது. அவ்வாகனம் ஒரு சிறைச்சாலைக்குள் விரைகிறது. அதே வழக்கமான சம்பிரதாயங்களுடன் சோதனைக்கு பின் சீருடை வழங்கபடுவது. தனது அறையில் சககைதிகளுடனான ஆரம்பகட்ட மோதல் பின்வரும் காட்சிகளில் அவர்களுடனான நட்பு. அந்த சிறையில் உள்ள மோசமான கைதிகளுடனான கைகலப்பு. இதில் பெரும்பான்மையான எந்த யூகங்களும் இல்லாமல் முழுகதையும் சிறைச்சாலை உள்ளேயே.


அச்சிறைசாலையின் கடைசி அறைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். அவளுடனே பயணிக்கும் நமக்கும் அவ்வளாகத்தின் யதார்த்த சூழல் அனைத்து இடங்களையும் நமக்கும் பரிச்சயமாக்குகிறது. அவ்வளாகம் மற்ற சிறைச்சாலையை போன்றே வடிவங்களை கொண்டிருப்பினும், அங்குள்ள யதார்த்த சூழல் இப்படத்தை மற்ற வகையிலும் தரமான நல்ல படைப்பாக்க விளைகிறது. நீண்ட இந்த துவக்க காட்சியே நமது யூகங்களை தாண்டிய வேறொரு எதிர்பார்ப்பு இக்கதையின் மேல் ஏற்பட முதல் புள்ளி இடுகிறது. இப்படியான துவக்க காட்சியிலேயே இதன் இயக்குனர் யார் என்ற கேள்விகள் நம்முன் எழவைத்ததும் அவரின் வெற்றியே.


அவர் MR. NOBODY படத்தின் இயக்குனர் PIERRE GOFEAU என்றதும். நம் யூகங்களை வேறொரு ரசனைக்கு நம்மை அறியாமல் மாறும் இரண்டாம் புள்ளி இது. அவளுக்கு ஒதுக்கப்படும் சமையல் பணியில், எதிர்பாரா நொடியில் அவனை சந்திக்கிறாள். அவன் அச்சிறைசாலையின் முக்கிய அதிகாரி. கைதிகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகள் குறித்தி அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பணியில் உள்ளவன். அவனிடம் தன் ஒரே உறவான தாயால் அதிக தொலைவின் காரணமாக தன்னை சந்திப்பதில் உள்ள சிரமங்களை கூறி வேறு சிறைக்கு மாற்ற கூறிவருகிறாள். அவனும் அதற்க்கான ஆவணம் செய்வதாக உறுதி அளிக்கிறான்.


இதில் பார்த்ததும் வரும் காதல் கொள்ளும் காட்சிகளில்லை. காமமும் உடனடியாக கசிந்தொலுகும் சூழல் இல்லை. இப்படியான நாயகியையும், சிறைச்சாலை என்ற களத்தையும் கொண்டு வெகு எளிதாக பார்வையாளனை நிறைவடைய செய்திருக்க இயலும். ஆனால் இக்கதைக்காகவும், இவர்களுக்கிடையேயான அந்த ஈர்ப்பை மிக யதார்த்தமாக வெளிக்கொண்டுவர எடுத்து கொண்ட முக்கியத்துவமும். கைதி மற்றும் அதிகாரி என்ற நிலையில் இருந்து எங்கும் விலகாமல், அவர்களின் முதல் கூடல் வரையான உருவாக்கல் தான். தனது யூகங்கள் பொய்த்து போனாலும் இக்கதையின்பால் பார்வையாளன் ஆர்வமேற்ப்பட மிக முக்கிய காரணியாகும்.



துவக்க காட்சி முதல் சிறிது சிறிதாக மாறிவரும் இவர்களின் எண்ண ஓட்டத்தை மிக அழகாக நமக்கு கடத்திய பின்னணி இசையும். துவக்கத்தில் அவனுடன் இணைந்து, பின் அடுத்த காட்சிகளிலே அவனது குடும்பம் குறித்து கோபத்துடன் வினவும் இடங்களில், வீக்கென்ட் குடும்பத்துடன் செலவழிக்க செல்பவனை ஆத்திரத்துடன் அணுகும் இடங்கள் மற்றும் இறுதியில் அவனுடன் விடுதியில் கழிக்கும் பொழுதுகள் என அனைத்து காட்சிகளுக்குமான லைட்டிங்கை இவர்கள் இருவரின் மனநிலைக்கு ஏற்ப அமைக்கபட்டிருக்கும். அவை நம்மையும் வெகு இயல்பாக அவர்களுடன் பயணிக்க செய்யும். இவை அனைத்திற்கும் மேல் நாயகி ADELE முழுக்க இந்த ஒரு பாத்திரத்தின் மாற்றங்களை கொண்டே கதை நகரும் என்ற சூழல் உணர்ந்த அவரின் பங்களிப்பே இக்கதைக்கான முக்கிய புள்ளியாகும்.

http://www.distribfilmsus.com/our-movies/down-by-love-eperdument/

Saturday, August 11, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 131.

இந்திய சினிமாவில் பெரும்பான்மை நடிகைகளால என்ன செஞ்சிட முடியும். தன் அழகால ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கலாம். தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமா கொஞ்சம் நல்ல பெயர் கூட வாங்கலாம். அடுத்த வருடங்களில் வாய்ப்பு குறையும் நேரத்துல கொஞ்சம் கவர்ச்சி வேடங்களை ஏற்கலாம். பின் நாளாவட்டத்தில் அவங்க பேர் மட்டும் கொஞ்சமா ஞாபகத்துல இருக்க. அவங்கள திரையில பாக்கமுடியாது . இதுதான் பெரும்பான்மை நாயகியரின் நிலமை. இதிலும் தன்னோட அபிமான நடிகைனு எந்த ரசிகனும் ஒரு படத்தை பார்க்க போறதில்ல. தன் விருப்ப நாயகன். இயக்குனர் இல்லனா அந்த படத்தை பற்றிய பாசிடிவ் ரிசல்ட். இதுல ஏதாவது காரணம்தான் இருக்கும். அவன் பாக்கும் படத்தில அவன் விருப்ப நாயகி  இருந்தா ரசிப்பாங்க. அடடா இந்த நல்ல படத்துல நம்ம நாயகி இல்லைன்னு வருந்தமெல்லாம் யாருக்கும் இல்ல. இதுதான் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் நிலை. இப்படி ரொம்ப நல்ல நடிகைகளுக்கும் நிரந்தரமில்லாத இந்ததுறைல 19 வயதில் நடிக்க தொடங்கி, இந்த ஆறு வருடங்களில் 14 படங்கள். அப்படங்களின் TEASER இல்ல, அதோட FIRST LOOK லயே தெரிஞ்சிக்கலாம் இந்த படத்துல அவங்க பண்ற பாத்திரத்த பத்தி. இன்னைக்கு இவர் ஒரு படத்தில் இருக்கறது ஒன்னே போதும் நல்ல சினிமா அபிமானிகளுக்கு. இந்தப்படம் கூட அவரோட திரைபயணத்தில ரொம்ப முக்கியமானதுதான்.


1971 ல நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்கு முன்னாடி ரெண்டு வருஷம்தான் இந்த படத்துக்கான கதைக்களம். ஜம்முகாஷ்மீரிலிருந்து தொழில் விஷயமா பாகிஸ்தான் போயிட்டு வரும் நாயகியோட அப்பா. இந்தியா பாகிஸ்தான் மீதான ரகசிய நடவடிக்கை பத்தி அங்க உளவு சொல்லிட்டு இருக்கார். அவரோட தகவல்கள் பெரும்பாலும் உண்மையாவே இருக்க. அவங்க ராணுவத்தில ரொம்ப பெரிய அதிகாரிகளோட பழக்கம் எற்படுது. அதுல உயர் பதவில இருக்கற ஒரு அதிகரியோட இளைய மகனுக்கு தன்னோட பொண்ண நிக்கா பண்ணி வைக்கறார். இந்த கதையே கொஞ்சம் சுவாரசியமாக இருக்கில்ல.  ஆனா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவந்த நாயகியோட அப்பாவே ஒரு டபுள் ஏஜண்ட். அவர் பொண்ண நிக்கா பண்ணிவெக்கறதே அவளும் இந்தியாவுக்காக பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கறதுக்குதான். இப்ப கதையும் டபுள் சுவாரசியமாகுதா. இப்ப இந்த திர்ல்லிங் கதைகளத்தில நம்மள கடைசிவரைக்கும் எதிர்பார்போடவே வெச்சிக்க அவங்க கதையில சேர்த்த எல்லா சமாச்சாரமும் செமசுவாரசியம்.


தன் திருமணத்திற்கு ஒரு மாசம் மட்டுமே இருக்கும் சூழல்ல சிபிஐ-ன் சிறப்பு பயிற்சிக்கு நாயகி போறார். மேற்சொன்ன சங்கதிகள்தான் படம்னு நினைக்க வேணாம். இக்காட்சிகள் படம் துவங்கிய முதல் 15-2௦ நிமிடங்களுக்குள் வரும் காட்சிகளே. பயிற்சிக்கு போகும் நாயகிக்கு நம்ம நினைக்கற போல COMPUTER HACKING வேலையெல்லாம் கிடையாது. ஏன்னா கதை எழுபதுகளில் நடக்குது. அந்த காலத்திலயே நம் உளவுதுறையில உள்ள சங்கதிகள், சங்கேத வார்த்தை பரிமாற்றங்கள்னு சொல்லப்படும் சமாச்சாரங்கள் பூரா நாயகியோட சேர்த்து நம்மையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துது. அத கொஞ்சம் கொக்கு மாக்கு இருந்தாலும் கடைசி வரை கொண்டு வந்து முடிச்சிருக்காங்க. கல்லூரிக்கு போற ரொம்ப இளகிய மனம் படைச்ச பொண்ணாதான் நாயகி அறிமுகமாறாங்க. அப்பா மாறியே நம்ம தேசத்துக்கு ஏதாவது செய்ய நினைச்சிதான் இந்த நிக்காக்கும் சம்மதிக்கறாங்க. ஆனா அந்த பயிற்சி சமயத்துல தான் பெரிய தப்பு பண்ணிட்டத உணர்றாங்க. பயிற்சில நெறைய விசயங்கள தப்பா செஞ்சி பயிற்சியாளர்கிட்ட மன்னிப்பு கேக்கும்போது சொல்லுவாரு.

“நான் இங்க மன்னிச்சு எதும் ஆகபோறதில்ல. அங்க உன்ன மன்னிக்க யாரும் இருக்க மாட்டாங்க.” நீ பண்ற ஒரே ஒரு சின்ன தப்பு உன் வாழ்க்கை அதோட முடிஞ்சிடும். அதனால கவனமா இருனு சொல்லுவாரு.”

அப்ப நம்மள மாறியே அந்த பொண்ணுக்குள்ளவும் ஒரு பயம் படரும். அத கதையோட எல்லா எடத்துலயும் அந்த பொண்ணோட கண்ல அப்படியே இருக்கும். அவ கணவனோட காதல் காட்சில கூட அந்த குற்ற உணர்வோடவே இருப்பா. இதுல அதிக திர்லிங்கே பாகிஸ்தான்லதான். அவ கணவனை சின்ன வயசில இருந்தே தூக்கி வளர்த்த சீனியர் வேலையாள்தான் அந்த வீட்டில் எல்லாமும். தற்செயலா ஆலியா சொதப்பும் சின்ன சின்ன விசயமெல்லாம் அவனுக்கு இவமேல சந்தேகமாவே இருக்க. ஒரு காட்சில கையும், களவுமா அவன்கிட்ட மாட்ட. அவனை கொல்ல வேண்டிய சூழல். ராணுவத்தின் முக்கிய முடிவு எடுக்கற அதிகாரியோட அந்தரங்க வேலையாள் மர்ம மரணம்.  அந்த அரசாங்கத்தையும், அந்த குடும்பத்தையும் விழிக்க வெச்சிடும்.


ஒவ்வொரு முடிச்சாக விலகி மாட்டிகொள்ளும் சூழல் நெருங்க, நெருங்க அதிலிருந்து எப்படி தப்பிகறா இதுதான் கதை. இதற்கிடைல அவங்களோட ராணுவ தகவல்கள வேற இங்க பாஸ் பண்ணனும். இன்னும் தல போற நேரத்துல அவளுக்கு உதவ அந்த நாட்டில் பஜாரில் ஒரு மளிகைகடைகாரர், ஒரு பூ வியாபாரி, ஒரு ரிக்க்ஷாகாரர் இருப்பாங்க.  ஆனா அவங்கள நேரடியாக மட்டுமேதான் சந்திக்க முடியும். ஆனால் புகுந்த வீட்டிலும் காரணமில்லாமல் வெளியே போக முடியாது. யோசனையும் யார்கிட்டவும் கேக்கவும் முடியாது. அவகிட்ட இருக்கும் உபகரணங்கள வெச்சி வெறும் தகவல்களை சங்கேத வார்த்தைகளா அங்க அனுப்ப மட்டும்தான் முடியும். நம்ம பக்கமிருந்து எந்த தகவலும் அவளுக்கு சொல்ல முடியாது.


இவளுக்கு உதவ இருந்தவங்களும் ஒவ்வொருதரா பாகிஸ்தான் உளவுதுறைல மாடிக்கறாங்க. அந்த நேரத்துலதான் அவங்க கடல் வழியா நம்ம நாட்டுமேல போர் தொடுக்க போறதா உறுதியான தகவலும் இவளுக்கு கிடைக்கும். ஆனா அத சொல்ல எந்த வழியும் இருக்காதுன்னு. படம் முழுசாவே ரொம்ப திர்ல்லிங்காவே போவும். சின்ன சின்ன ரியாஷன்லையே செம்மதையா ஸ்கோர் பண்ற பொண்ணுக்கு இந்த படம் பூரா மொத்த ஷாட்ஸ்யும் தன்னோட கன்ட்ரோல்லயே வெச்சி அதகளம் பண்ணிடுச்சி. அவகூடவே நம்மளையும் பயந்து, லேசா சிரிச்சி, அழவெச்சினு. இப்பவும் நான் கதையா சொன்னது ஒரு பத்து சதவீதம்தான். .

காதலால கடமைல வரும் தடுமாற்றங்கள நமக்கு அருமையா சின்ன சின்ன முகபாவங்கள்ளயே சொல்லிருக்கு. எல்லாத்தையும் விட ரொம்ப முக்கிய விஷயம் பாகிஸ்தானி பூரா இந்த படத்த ரொம்ப பெருமையா பாக்கலாம். அவங்கள அவ்ளோ கௌரவமா காட்டி இருக்காங்க.


“ஒரு சின்ன பொண்ணுகிட்ட இப்படி ஒரு அரசாங்கமே ஏமாந்துடுச்சேனு ஆலியா மாமனார் கோவப்பட ஆரமிக்கற நொடியிலேயே, ஆலியா கணவன் சொல்லுவான். “ அவள தப்பா பேசாதிங்கப்பா அவளும் இதெல்லாம் அவ நாட்டுக்காகதான செஞ்சானு.” கூடுதல் சுவாரசியம் இது உண்மை கதையாம். உண்மையா இப்படி போன ஒரு பொண்ணு கொடுத்த தகவலாலதான் அந்த போர்ல நம்மால ரொம்ப சுலபமா வெற்றி அடைய முடிஞ்சிதாம். TALVAAR, DRISHYAM பண்ண MEGNA GULZAR தான் இந்த படம் பண்ணிருக்காங்க. அங்க இருந்தும் இன்னும் ஒருபடி இப்ப மேலதான் வந்திருக்காங்க. 

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=YjMSttRJrhA

Wednesday, July 25, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 130.

ஒரு படத்தை பார்க்க பலகாரணம் உண்டு. நமக்கு பிடித்த நாயகன், நாயகி, இயக்குனர் இப்படி. அப்படியில்லாம ஒருசில படங்களை பார்க்க குறிப்பிட்டு சொல்ல எந்த காரணமும் இருக்காது. இந்த படத்தை போல. முதலில் இதன் தலைப்பு. நைஜீரியாவுக்கும் கேரளாவுக்கும் எப்படி சம்பந்தபடுத்துவார்கள். இதில் நைஜீரியாவிலிருந்து திரும்பிய மலையாளியபத்தி இருக்கும்னா அப்படியில்லாம அந்த ஊர் பையனே போஸ்டர்ஸ்ல இருக்கான். அவன் இங்க வர என்ன காரணமா இருக்கும். ட்ரைலர்ல நைஜீரியாலாம் வருது இவ்ளோ செலவு பண்ற அளவுக்கு பெரிய நட்சத்திரங்களும் யாரும் இல்ல. IMDB ல 8.5 STARS வேற.


கேரளால பெருசா எந்த வருமானமும் இல்லாம சொந்தமா ஒரு FOOTBALL டீம நடத்திட்டு. சுத்து வட்டாரத்துல எங்க போட்டி நடந்தாலும் அதுல கலந்துகிட்டு, எப்பவும் கையுக்கும், வாய்க்கும் சரியா போயிட்டு இருக்கற முக்கிய பாத்திரம். சரியான எந்த வேலையும் இல்லாத பையனுக்கு எப்படி பொண்ணு அமையும்னு வருத்ததுல இருக்கும் அம்மா. இவங்க ரெண்டு பேரோடவும் சுத்தமா ஒட்டாம எப்பவும் ஒதுங்கியே இருக்கும் அப்பா பாத்திரம். இவங்க இல்லாம ரொம்ப முக்கிய பாத்திரத்துல ஒரு நைஜீரியாவ சேந்த பையன். அதும்போக அக்கம்பக்கத்து ஜனங்க. இவங்க மொத்தமும் சேந்து கொடுத்தது நிச்சயம் ஒரு நல்ல சினிமா.


எப்பவும் துணை பாத்திரத்துலயே வந்தாலும் பெரும்பாலும் அதிக பேருக்கு அறிமுகமான சௌபின் ஷாகிர்தான் அந்த FOOTBALL டீம நடத்தும் முக்கிய பாத்திரத்துல வராரு. ரொம்ப சாதரணமா இந்த இயல்பான கதைக்குள்ள இருக்கும் அத்தனை நெளிவு சுளிவுக்குள்ளும் எந்த வித்யாசமும் நமக்கு துளிகூட உறுத்தல் தெரியாம பொருந்தி போறாரு. அவரு மட்டுமில்லாம இதுல துணை பாத்திரங்களா வரும் அத்தனை பெரும் அப்படியே. அதுதான் இவங்க படம் பெரும்பாலும் ரொம்ப இயல்பா தெரிய மிக முக்கிய காரணம்.


நைஜீரியால நல்ல FOOTBALL ப்ளேயரா இருந்து இந்தியா வந்து. இங்க சௌபின் குழுவில் சேர்ந்து விளையாடி வராரு. அவரு நைஜீரியால இருந்து இங்க வந்ததுக்கான காரணமும். சௌபின் ஷாகிர் அவரோட அப்பாவ எங்கயும் கண்டுக்காம போறதுக்கான காரணமும்...                பெருசா எதும் இல்ல கில்லில விஜயோட தங்கச்சி கடைசிவரை அவர்கூட சண்டையே போட்டுட்டு இருக்கும். கடைசியா அவருக்காக அழுது நம்மளயும் கலங்கவைக்கும்ல அப்படியான அதே தாத்தா காலத்து பழைய ட்ரிக்தான். ஆனாலும் ஓடி ஓடி உலக சினிமா பாத்தாலும் நம்மாள இன்னும் மாயாண்டி குடும்பத்தார ஒதுக்க முடியல்ல. அப்படியான வகை கதையை இன்னும் ரொம்ப யதார்த்தமா, எளிமை அழகியலோட கொடுத்து இருக்காங்க.


அந்த நைஜீரியா பையன நம்பித்தான் அந்த டீமோட பொழப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு நாளு அவன் வழுக்கி விழுந்து கால்ல FRACTURE ஆகிடுது. அவன நம்ம டீம் ஓனர் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே கூட்டி வந்திடறார். ஏற்கனவே நிலையான வருமானம் இல்லாத நிலையில, இவனுக்கும் அடிபட. கூடவே அவனோட மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படும் சூழல்லதான் கதையோட மேலும் அதிகமா நாம் ஒன்றும் நிகழ்வுகள் வருது. சரியான வருமானம் இல்லாம இருக்கும் மகனை கண்டிக்காம, அவனோட வழியிலே விட்டு சற்று தொலைவில் இருந்து வருந்தும் அவனது அம்மாவின் பக்கங்களும். ஒரு பொருட்டாகவும் தனது தந்தையை அவன் நினைக்காததற்க்கான காரணங்களும். இதற்க்கெல்லாம் மேலாக நடக்க இயலாமல் தன் வீட்டிலுள்ள பையனுக்கும் அந்த குடும்பத்திற்குமான நெருக்கத்தை ரொம்ப யதார்த்தமா கொடுத்த விதத்துல படம் நின்னுடுச்சி.



படத்துல தனியா இந்த ஷாட் கேமரா வொர்க் சூப்பர். அந்த BGM அட்டகாசம். இடைவெளியின் போதான எடிட்டிங் ட்விஸ்ட் செம்மனு எதையும் பிரிச்சு சொல்ல முடியாம அனைத்து டெக்னிக்கள் சைடும் கதையோட கதைக்குள்ளவே இருக்கு. படத்தோட எந்த ஒரு ஷாட்லகூட வெளிய தெரியாம இருந்ததுதான் இந்த கதைக்கான மிகப்பெரிய பிளஸ். இவ்ளோ யதார்த்த கதைலயும் ரொம்ப தனியா தெரிஞ்சது படத்தோட வசனம். பணத்தேவைக்கு ரொம்ப குழப்பத்துல இருக்கும் நாயகனிடம் அவரோட நண்பர் சொல்லுவார்.

“இப்பவும் நம்ம டீமே விலைக்கு கொடுத்தா ஒரு ரெண்டரை டூ மூன்றரை லட்சம் வரை கிடைக்கும்னு.

அதுக்கு அந்த குழப்பத்துலயும் ரொம்ப தெளிவா நாயகன் பாத்திரம் சொல்ற வசனம்.

“ரொம்ப இக்கட்டான சூழல்ல நம்ம டீம் கண்டிப்பா தோத்துடும்ற நிலையிலயும் நம்ம என்ன நினைக்கறோம். “எப்படியாது ஒரே ஒரு கோல போட்டு மேட்ச டிரா பண்ணிடமாட்டாங்களானு. அந்த நிமிஷத்துக்குதான காத்துட்டு இருக்கோம். அப்படி இந்த பிரச்சனையில் இருந்தும் வெளிய வர முடியலைனாலும் டிரா பண்ணவாவது எதாவது வழி இருக்கும்னு சொல்லுவாரு.

https://www.youtube.com/watch?v=EHyaTJGmN4k

Wednesday, July 18, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 129.

நாயகன், கதை, திரைக்கதையை தாண்டி கொஞ்சம் கதைகளங்கள்தான் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும். அப்படியான கதைகளங்களில் ஒன்றுதான் சிறைச்சாலையை மையமாக கொண்ட படங்கள். அதும் அங்கமாலி டைரீஸ் போன்ற படைப்பாளியின் அசோசியேட் டைரக்டரின் படைப்பு. ANTONY (அங்கமாலி நாயகன்) மற்றும் விநாயகன் தவிர்த்து பெரும்பாலும் புதுமுகங்களை பயன்படுத்தி வெளிவரும் கதை. அதும் சிறைச்சாலையை மையமாக கொண்டதுனா? அந்த எதிர்பார்ப்பை இவங்க பூர்த்தி செஞ்சாங்களா..

மலையாள படங்களில் பெரும்பாலும் ஸ்பெஷல் எபெக்ட் சமாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. காரணம் கதையும் களமும் (அவங்க) எளிய மக்களை சார்ந்ததாகவே இருக்கும். இக்கதையும் அதைசார்ந்த களமும் அப்படியே. ஆனா உருவாக்கலில் கதையின் உயிர் எங்கும் சிதையாமல் டெக்னிக்கல் பக்கம் செம்மையா மிரட்டிருக்காங்க. டைட்டில் கார்டில் டெக்னிக்கல் டீம் பெயர்களை பார்த்தாலே தெரியும். குறிப்பா துவக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க ஒரு குழு எடுக்கும் முயற்சியை சொல்லலாம்.

சிறைன்னு சொன்னதும் இந்தியாவின் மிகப்பெரும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும் சிறைச்சாலையும், ஆயிரக்கணக்கான கைதிகளும் உள்ள மிகப்பெரும் பட்ஜெட் படங்களை நினைக்க வேணாம்.   ஒரு நாப்பது – ஐம்பது கைதிகள் மட்டுமே உள்ள மத்திய நகரின் ஒரு கிளை சிறைச்சாலையை களமாக கொண்ட கதையில் பிரமாண்ட கதைக்கு சமமான டெக்னிக்கல் சைடு வேலையை இதில் பயன்படுத்தியிருகாங்க. இது போல சிறைச்சாலையை மையமாக கொண்ட கதைகளில் முக்கிய பாத்திரம் அங்கிருந்து தப்பி செல்ல காரணம் ஒரு போர்ஷனா கதையில் வருவது வழக்கம். இதிலும் அவன் தப்பிசெல்ல பெரும்பான்மையான கதைகளில் வரும் காரணமான காதல்தான். அந்த குட்டி போர்ஷன அவ்ளோ இயல்பா கொண்டுபோனதுதான் இந்த கதையில அவங்க தப்பிக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் கண்டிப்பா அது நடந்தே ஆகணும்னு நம்மையும் நினக்க வெச்சிருக்கு.

இவனமாறியே இங்கிருந்து வெளிய போய்டனும்னு நெனப்புல இருக்கும் யாரையும் முதல்ல அவனால அங்க பிடிக்கமுடியாம போகவும், அங்கிருக்கும் தோதானவங்கள அவனே முளை சலவை பண்ணி அவங்கள இவன் இருக்கும் ரூமுக்கு மாத்த எடுக்கும் முயற்சியில் நம்ம நிமிர வெச்சிடறாங்க. அந்த எதிர்பார்ப்ப கடைசி வரை எங்குமே தோய்வில்லாம  கொண்டுபோய் முடிச்சிருக்காங்க. அந்த கதை முழுக்க இருக்கும் மழையின் ஈரத்தை, அந்த குளிரை அப்படியே நமக்கும் கடத்திருக்காங்க.  ஒவ்வொரு முறை காலை உணவுக்கு கைதி அறைகளில் இருந்து இவர்கள் வெளியேறும் காட்சியின் அடுத்தகட்டமாக இவர்கள் மூவ் என்னவாக இருக்குமென அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளார்கள்.

இவங்க படங்களை போலவே முக்கிய பாத்திரமான வினாயக்கும் ரொம்ப சாதாரணமாதான்  அறிமுகமாறாரு. ஆனா கதையின் விறுவிறுப்பிற்கு இவரது பாத்திரம் மிகமுக்கிய பங்கு வகிக்குது. இடைவேளையில் ஏற்படும் பெரிய திருப்பமும் இவர மையப்படுத்திதான் நகருது. பெரிய கிளாஸ் படமாகூட இந்த படத்த உருவாக்கியிருக்கலாம். ஆனா இந்த ஒரு ஆள் இந்த முழுபடத்தையும் பெரிய மாஸ் லுக்குக்கு கொண்டுபோறார். அதும் கிளைமாக்ஸ்க்கு முந்தின காட்சில இவரோட என்ட்ரி செம்ம்ம்ம. இவரில்லாம வேற ரொம்ப முக்கிய பாத்திரமா பெரும்பான்மையான கைதிகளின் கைகளிலும் வாயிலும் புகையும் பீடிகளே.    


முக்கிய பாத்திரமா வரும் எல்லாரும் பீடிபிடிக்கறாங்க. அதிலும் அவங்க அடுத்து என்ன பண்ணபோறாங்க, அவங்க மனநிலைய அவங்க புகைக்கும் லாவகத்த வெச்சே யூகிக்க வெச்சிருக்காங்க. முழுக்க ஆண்கள் மட்டுமே நிரம்பிய கதைகளில், வரும் ரெண்டே பெண் பாத்திரங்கள். அவர்களுக்காகவே இக்கதையில் நிகழும் அனைத்து திருப்புமுனைகளும். அவங்க வரும் குட்டி காட்சிகளில் கூட அவங்கள எதும் பண்ணசொல்லாம, அவங்க கண்களுக்கு மட்டும் பெரும்பான்மையான காட்சிகள் அமைத்ததே. கடைசிவரை இந்த மழை, அழுக்கான சிறைச்சாலை, இத்தனை ஆண்கள் மற்றும் இவ்ளோ பீடி புகைக்கு நடுவிலும் நாம அவங்கள மறக்காம இருக்க ரொம்ப முக்கிய காரணம். எடிட்டிங், காமெரா, BGM மூணும் கதையில எங்கயும் இவங்க லைன தாண்டாமயே வரும். அதிலும் சிறைச்சாலையோட துவக்க காட்சில வரும் ஆக்ஷன் ப்ளாக்ல இந்த மூணு டீமோட வொர்த் தெரியும்.  

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=_7tWbhAi4L8   












Friday, July 13, 2018




வாசித்ததில் வசீகரித்தவை - ௦௦1

நண்பர் சிவராஜோட ஏழு சிறுகதைகள் அடங்கிய புத்தகம். சினிமா பதிவுகளின் மூலம் அறிமுகமானவர். இப்புத்தகம் அச்சில் இருக்கும் சமயங்களிலேயே இவரின் சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது. கையில் கிடைக்கும் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை மட்டுமே வாசித்து, விகடனின் தீவிர வாசகனான பின் அதில்வரும் ஒரேகதையை மட்டும் படித்து பழகியவனுக்கு. வெறும் சிறுகதைகள் மட்டுமே அடங்கிய முழுபுத்தகம் புது அனுபவம். ஒவ்வொரு கதையும் வேறவேற களங்கள்ல இவரோட எழுத்தில் படிக்க புது அனுபவம். ஒரே மூச்சில் படிக்கவிடாமல் ஒவ்வொரு கதையிலிருந்தும் நாம் வெளியிலவந்து அடுத்த கதையை படிக்கவேண்டி இருப்பதே இவரோட எழுத்துக்கு ஒரு சான்று.
  1. கழுத்து மணி. – கலக்கம்.
பள்ளிசெல்லும் செல்லும் சிறுவனுக்கும், அவன் வீட்டுக்கு புது வரவாக வரும் ஆட்டுகுட்டிகுமான பந்தமே இக்கதை. அந்த ஆட்டுடன் பெரிய ஈர்ப்பு ஏதுமின்றி உள்ள சிறுவன். ஒருகட்டத்தில் அந்த ஆடு தொலைந்து போக, அதை தேடும் படலத்தில் துவங்கும் கதை. அத்தேடலுடன் அவன் வீட்டிற்கும் அந்த ஆட்டிற்குமான நினைவுகளில் அதன்மேல் ஏற்படும் ஈர்ப்பில் தீவிரமாக தேடி அந்த ஆட்டை கண்டடைகிறான். பின் அதனோடு நெருக்கமாக, இறுதியில் அந்த ஆட்டிற்கு நேர்ந்ததென்ன என்ற வழக்கமான கதைதான். ஆனால் இதில் அந்த ஆட்டின் கழுத்திலுள்ள சிறுமணி ஒன்றை ஒரு பாத்திரமாக கதைநெடுக உலவவிட்டுள்ளதே இதன் சிறப்பு. அந்த ஆட்டுடன் அவனுக்கு திடீர் ஈர்ப்பு வரவும் அந்த மணி முக்கியபங்கு வகிக்கும். இந்த கதையுடைய இறுதி வரியையும் அந்த மணியை கொண்டே முடித்ததும் மிக பொருத்தம். அடுத்தடுத்த கதைகளிலும் இந்த சுவாரசியம் தொடருமானு நம்மள நினைக்க வெச்சதே இந்த கதைக்கான சிறப்பு.    

2.PARADOX -  அசத்தல்.
முதல் கதைக்கு துளியும் தொடர்பில்லாத வேறொரு களத்தில் நகரும் கதை. பெரும் தொழில் அதிபர் தனது காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட காரணத்தை தேடி கால இயந்திரத்தில் பயணிக்கும் கதை. இந்த கதையோட சிறப்பே கடைசில இந்த தலைப்பிற்கான அர்த்தம் நமக்கு புரிபடும் இடம்தான்.

3.அய்யா -  கணம்.
ரொம்ப சில கதைகளை படிக்கும்போது மட்டும்தான் அந்த எழுத்தாளர் மேல உரிமையா கோவப்படவோ, சில கேள்விகளை அவரிடம் கேட்க்க தோணும். இது அப்படியான கதை. ரொம்ப செல்வாக்கா வாழ்ந்து சில வருசத்துக்கு முன்ன காணாம போன அய்யா. அவரை பார்த்ததா ஊர்காரங்க சொல்ற இடத்துக்கு தேடி செல்லும் மகன். அவன் தனது அய்யாவின் நினைவுடனே  பயணத்தை தொடர்ந்து அவரை சந்திக்கும் கதை. நம் மனதில் பல கேள்விகளை எழுப்பும் இதன் முடிவு.

4.மெல்ல தமிழினி – கலக்கம்.
ராஜேஷ்குமாரின் கதைகளில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத கதைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும். இந்த இரு கதைகளும் இணையும் புள்ளியில் கதையை முடிப்பார். இது கிட்டத்தட்ட அப்படியான வகையை சேர்ந்த கதை. ஆனா இந்த பாணி எளிய கதைகளை ஒரே நேர்கோட்டில் கூட இதே தரத்துடன் கொண்டு சென்று முடிக்கலாம். ஆனா மூணு – நான்கு கதைகளாக பிரித்து முடித்தது வாசிப்பாளர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை தரும்.   

5.ப்ளான்- A பழனி – சிரிப்பு.
சமீபமா கேரளால நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதை. அந்த சம்பவம் ஒரு திருட்டை பத்தியது. இதில் சூவரசியமே அந்த உண்மை சம்பவத்திலும் இந்த பழனியை போன்ற நபர் ஒருவன் கண்டிப்பா இருந்திருப்பானு நம்ம எல்லோரையும் நம்பவெச்சதுதான். சினிமாமாறியே எழுத்திலும் நகைச்சுவை படைப்பு அவ்ளோ சுலபம் இல்லை. இவருக்கு அதும் கைக்கூடி வந்திருப்பது மகிழ்ச்சியே.

6.தண்டனை – மனபாரம்.
செய்யாத குற்றத்திற்கு கிடைக்கும் தண்டனையின் வலியை காட்டிலும், அதிக வலிதருவது. நம்ம, தவறான நபர்மீது சுமத்தும் குற்றச்சாட்டும், உதிர்த்த வார்த்தைகளும். இவ்வளவு லேசான பாத்திரங்களை கொண்டே, இந்த கருவின் வீரியத்தை சிதைக்காமல் ஒரு கதை. எந்த கதையிலும் யூகிக்க முடியாத முடிவை கொடுத்தவர். இந்த கதையின் பாதியிலே நாம் யூகிக்கும்படி இல்லாமல் இருந்திருந்தால், இக்கதையால் நம் பாரம் இன்னும் சற்று கூடியிருக்கும் என்பது நிதர்சனம்.
இறுதியாக இப்புத்தகத்தின் தலைப்பில் உள்ள கதை. பெரும்பாலோருக்கு இக்கதையே தங்களுக்கு மிகப்பிடித்த கதையாக இருக்கும். மொத்தமாக இதன் ஒவ்வொரு கதையும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தும். நேரமிருப்போர் நிச்சயம் வாங்கி படிக்கவும்.

இப்புத்தகம் தேவைபடுவோர் :

9840967484 - KALAKKAL DREAMS

Search This Blog