Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, July 13, 2018

காரிச்சாமியும் செவலக்காளையும் – சிவராஜ் – கலக்கல் ட்ரீம்ஸ் – விலை:15௦/-




வாசித்ததில் வசீகரித்தவை - ௦௦1

நண்பர் சிவராஜோட ஏழு சிறுகதைகள் அடங்கிய புத்தகம். சினிமா பதிவுகளின் மூலம் அறிமுகமானவர். இப்புத்தகம் அச்சில் இருக்கும் சமயங்களிலேயே இவரின் சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது. கையில் கிடைக்கும் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை மட்டுமே வாசித்து, விகடனின் தீவிர வாசகனான பின் அதில்வரும் ஒரேகதையை மட்டும் படித்து பழகியவனுக்கு. வெறும் சிறுகதைகள் மட்டுமே அடங்கிய முழுபுத்தகம் புது அனுபவம். ஒவ்வொரு கதையும் வேறவேற களங்கள்ல இவரோட எழுத்தில் படிக்க புது அனுபவம். ஒரே மூச்சில் படிக்கவிடாமல் ஒவ்வொரு கதையிலிருந்தும் நாம் வெளியிலவந்து அடுத்த கதையை படிக்கவேண்டி இருப்பதே இவரோட எழுத்துக்கு ஒரு சான்று.
  1. கழுத்து மணி. – கலக்கம்.
பள்ளிசெல்லும் செல்லும் சிறுவனுக்கும், அவன் வீட்டுக்கு புது வரவாக வரும் ஆட்டுகுட்டிகுமான பந்தமே இக்கதை. அந்த ஆட்டுடன் பெரிய ஈர்ப்பு ஏதுமின்றி உள்ள சிறுவன். ஒருகட்டத்தில் அந்த ஆடு தொலைந்து போக, அதை தேடும் படலத்தில் துவங்கும் கதை. அத்தேடலுடன் அவன் வீட்டிற்கும் அந்த ஆட்டிற்குமான நினைவுகளில் அதன்மேல் ஏற்படும் ஈர்ப்பில் தீவிரமாக தேடி அந்த ஆட்டை கண்டடைகிறான். பின் அதனோடு நெருக்கமாக, இறுதியில் அந்த ஆட்டிற்கு நேர்ந்ததென்ன என்ற வழக்கமான கதைதான். ஆனால் இதில் அந்த ஆட்டின் கழுத்திலுள்ள சிறுமணி ஒன்றை ஒரு பாத்திரமாக கதைநெடுக உலவவிட்டுள்ளதே இதன் சிறப்பு. அந்த ஆட்டுடன் அவனுக்கு திடீர் ஈர்ப்பு வரவும் அந்த மணி முக்கியபங்கு வகிக்கும். இந்த கதையுடைய இறுதி வரியையும் அந்த மணியை கொண்டே முடித்ததும் மிக பொருத்தம். அடுத்தடுத்த கதைகளிலும் இந்த சுவாரசியம் தொடருமானு நம்மள நினைக்க வெச்சதே இந்த கதைக்கான சிறப்பு.    

2.PARADOX -  அசத்தல்.
முதல் கதைக்கு துளியும் தொடர்பில்லாத வேறொரு களத்தில் நகரும் கதை. பெரும் தொழில் அதிபர் தனது காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட காரணத்தை தேடி கால இயந்திரத்தில் பயணிக்கும் கதை. இந்த கதையோட சிறப்பே கடைசில இந்த தலைப்பிற்கான அர்த்தம் நமக்கு புரிபடும் இடம்தான்.

3.அய்யா -  கணம்.
ரொம்ப சில கதைகளை படிக்கும்போது மட்டும்தான் அந்த எழுத்தாளர் மேல உரிமையா கோவப்படவோ, சில கேள்விகளை அவரிடம் கேட்க்க தோணும். இது அப்படியான கதை. ரொம்ப செல்வாக்கா வாழ்ந்து சில வருசத்துக்கு முன்ன காணாம போன அய்யா. அவரை பார்த்ததா ஊர்காரங்க சொல்ற இடத்துக்கு தேடி செல்லும் மகன். அவன் தனது அய்யாவின் நினைவுடனே  பயணத்தை தொடர்ந்து அவரை சந்திக்கும் கதை. நம் மனதில் பல கேள்விகளை எழுப்பும் இதன் முடிவு.

4.மெல்ல தமிழினி – கலக்கம்.
ராஜேஷ்குமாரின் கதைகளில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத கதைகளை அடுத்தடுத்த அத்தியாயங்களில் வரும். இந்த இரு கதைகளும் இணையும் புள்ளியில் கதையை முடிப்பார். இது கிட்டத்தட்ட அப்படியான வகையை சேர்ந்த கதை. ஆனா இந்த பாணி எளிய கதைகளை ஒரே நேர்கோட்டில் கூட இதே தரத்துடன் கொண்டு சென்று முடிக்கலாம். ஆனா மூணு – நான்கு கதைகளாக பிரித்து முடித்தது வாசிப்பாளர்களுக்கு நிச்சயம் புது அனுபவத்தை தரும்.   

5.ப்ளான்- A பழனி – சிரிப்பு.
சமீபமா கேரளால நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதை. அந்த சம்பவம் ஒரு திருட்டை பத்தியது. இதில் சூவரசியமே அந்த உண்மை சம்பவத்திலும் இந்த பழனியை போன்ற நபர் ஒருவன் கண்டிப்பா இருந்திருப்பானு நம்ம எல்லோரையும் நம்பவெச்சதுதான். சினிமாமாறியே எழுத்திலும் நகைச்சுவை படைப்பு அவ்ளோ சுலபம் இல்லை. இவருக்கு அதும் கைக்கூடி வந்திருப்பது மகிழ்ச்சியே.

6.தண்டனை – மனபாரம்.
செய்யாத குற்றத்திற்கு கிடைக்கும் தண்டனையின் வலியை காட்டிலும், அதிக வலிதருவது. நம்ம, தவறான நபர்மீது சுமத்தும் குற்றச்சாட்டும், உதிர்த்த வார்த்தைகளும். இவ்வளவு லேசான பாத்திரங்களை கொண்டே, இந்த கருவின் வீரியத்தை சிதைக்காமல் ஒரு கதை. எந்த கதையிலும் யூகிக்க முடியாத முடிவை கொடுத்தவர். இந்த கதையின் பாதியிலே நாம் யூகிக்கும்படி இல்லாமல் இருந்திருந்தால், இக்கதையால் நம் பாரம் இன்னும் சற்று கூடியிருக்கும் என்பது நிதர்சனம்.
இறுதியாக இப்புத்தகத்தின் தலைப்பில் உள்ள கதை. பெரும்பாலோருக்கு இக்கதையே தங்களுக்கு மிகப்பிடித்த கதையாக இருக்கும். மொத்தமாக இதன் ஒவ்வொரு கதையும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தும். நேரமிருப்போர் நிச்சயம் வாங்கி படிக்கவும்.

இப்புத்தகம் தேவைபடுவோர் :

9840967484 - KALAKKAL DREAMS

No comments:

Post a Comment

Search This Blog