Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, May 29, 2017

Godhi Banna Sadharana Mykattu - ஒரு பார்வை



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 112.

அரிதாகி வரும் உயிரினங்களை போன்று நம்மால் பெரிதாக சிந்திக்க நேரம் இல்லாத அல்லது சிந்திக்க விரும்பாத வயதானவர்களின் உலதத்தை அவர்களின் வாழ்க்கை சூழலை எந்தவித வண்ண சாயங்களும் கொண்டு நிரப்பாமல் ஒரே பாத்திரத்தின் மூலம் அச்சு அசல் காட்டிய வகையில் பெரிதும் கவனம் ஈர்க்க செய்யும் அற்புத காவியம்.


இப்படம் மற்ற மொழிகளை காட்டிலும் (தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு) நாம் பெரிதும் கவனம் செலுத்தாத கன்னட சினிமாவிலிருந்து வந்தது (எனக்கு) மிகப்பெரும் ஆச்சர்யம்.
அவசர உலகத்தில் தனது யூஎஸ் கனவை எட்டிபிடிக்க பயணிக்கும் தாயை இழந்த நாயகன். தனது வயதான ஞாபகமறதி குறைபாடுடைய தந்தையை மருத்துவமனையில் சேர்த்து பராமரிக்கிறார். அவரது யூஎஸ் கனவு நனவாகவும் மிகமுக்கிய ப்ராஜெக்ட் சமயத்தில் வெளியே அழைத்து சென்று திரும்பும் வழியில் தனது தந்தையை தொலைக்கிறார்.  

  

  
இதுவரை மனதில் தான் உருவகப்படுத்தி வைத்திருந்த தந்தைக்கும், தற்பொழுது அவரின் நண்பர்கள், உறவினர்கள் என தொலைந்தவரை தேடி அலையும் சமயங்களில் அவர்கள் தரும் தகவல்கள் மூலம் தான் அறியும் அவரின் பண்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அவரை மீட்டு தன்னுடனே வைத்துகொள்ளும் வழக்கமான கதைதான். அனால் அதில் அவரின் கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை பார்வையாளர்களுக்கும் அச்சு அசல் உணர்த்திய வகையில் இப்படம் கவனிக்க படவேண்டிய பட வரிசையில் சேர்கிறது.


இக்கதைக்கான அச்சாணியாக திகழ்பவர் தந்தை பாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ANANT RAG ஆவார். உலகின் எந்த சிறிய துறையிலும் மிகப்பெரும் வல்லுனர்கள் (கலைஞர்கள்) நிச்சயம் இருப்பர் என்பதை உணர்த்தியவர். கேன்சர் மூலம் தனது மனைவியை இழந்து ஞாபகம் தப்பி ஒரு வார தாடி, சரியாக வாரப்படாத தலை, கொஞ்சம் தொல தொல முழுக்கை சட்டையில் ஒரு சராசரி குடும்ப தலைவனுக்கான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்.


தனது ப்ராஜெக்டுக்காக மும்பை செல்லும் அவசரத்தில், வழியில் தனது தந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தர அழைத்துசெல்லும் மகன் சிலபல அபீசியல் தொலைபேசி அழைப்புகளுக்கு பின் தந்தையின் பக்கம் கூட திரும்பாமல்

“நம்ம இப்ப உங்களுக்கு கொஞ்சம் துணி வாங்க போயிட்டு இருக்கோம்.” 

“எனக்கு எதுக்கு?… “அம்மாக்கு தான் கொஞ்சம் புடவைங்க வாங்கனும்னு (சில வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது நினைவில்லாமல்) சொல்றது. குறிப்பா இதன் பின் வரும் வசனங்களில் தன் மனைவியின் நிலையை தனது மகன் மூலமாகவே அறிந்து கொள்ளும் காட்சிகளில் அசரடித்து விடுவார்.


பின் மருத்துவமனையில் தனக்கும் தனது மனைவிக்குமான கல்லூரி காதல் கதையை மிக இயல்பாக ஒரே ஷாட்டில் விவரிக்கும் இடம் ஒன்று போதும். இந்திய அளவில் இந்த காட்சியை இதே தரத்தில் செய்ய தற்பொழுது ஒரு பத்து நடிகர்கள் மிஞ்சினால் அதிகம்.


அடுத்து நாயகன் மற்றும் நாயகி பாத்திரங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் படம் முழுக்க வரும் பாத்திரங்கள் இவர்களே. முழு கதையும் அப்பா பாத்திரத்தை சுற்றியே சுழலும் வகையில் அமைய பெற்றிருப்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட எந்த பெரிய ஷாட்ஸ் இல்லாத போதும் அனைத்து குட்டி குட்டி காட்சிகளிலும் அழகாக ஈர்க்கும் நாயகி. மிகசொர்ப்பமாக கல்லூரி காலம் முதல் தான் “தம்” அடிக்கும் கடைகாரர் மூலம் தனது தந்தையும் “தம்” அடிப்பதை அறிந்து ஆச்சர்யப்படுமிடம், தனக்காக தனது தந்தை கிட்னி தானம் அளித்துள்ளதை அறிந்து கொள்ளுமிடம் என சில இடங்களில் மிளிர்கிறார்.


இது போக ஆச்சர்யபடுத்தும் வில்லன் பாத்திரம். தமிழில் பெரிய நாயகர்களுக்கே எதிரான கனமான பாத்திரங்கள் கூட செய்ய தகுதியான உடல்மொழி அமையப்பெற்றிருப்பவர். பின்னணி இசையும் பாடல்களும் நிச்சயம் அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சர்யப்படுத்தும்.


பெரிய குறையாக இல்லாவிடினும் லேசா இது மாற்றிருக்கலாம் என தோன்றும் சமாச்சாரங்கள் மிகசில இடங்களில் நாயகனும், இளம் தென்றலை போன்ற கதையில் புகுத்தப்பட்ட க்ரைம் சமாச்சாரங்கள் மட்டுமே. ஆனால் வழிய புகுத்தியது போன்றில்லாமல் க்ரைம், கதையுடன் பயணிக்கும் படி அமைக்கபெற்ற உருவாக்கல் நன்று. இந்த இயக்குனரின் படங்களை தேடிபிடித்து பார்க்கும் ஆவல் நமக்கு தோன்ற வைத்ததே அவருக்கான மிகப்பெரும் வெற்றி.

No comments:

Post a Comment

Search This Blog