Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Wednesday, May 3, 2017

Them (2006) - ஒரு பார்வை



அம்மா, மகள் என இரு பாத்திரங்கள் இரவு நேரத்தில் அதிக போக்குவரத்து இல்லாத சாலையில் பயணம் மேற்கொள்கின்றனர். எதிர்பாராத வகையில் வண்டி மரத்தில் மோதி நகர்த்த முடியாத சூழல். முன்புற பானட்டை திறந்து சரி செய்ய சென்ற அம்மா பாத்திரமும் மாயமாகி விட, ஆள் ஆர்வமற்ற சாலையில், அடர் இருட்டில் தனித்து நிற்கும் மகள் பாத்திரம்.


இதே போன்ற ஆரம்ப காட்சிகள் கொண்ட (இறுதி காட்சி வரை என்ன நடக்கும் என நம்மால் சாதாரணமாக யூகிக்க கூடிய) மினிமம் இருவது படமேனும் கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் உறுதியாக இந்த தரத்தில், இந்த துல்லியத்தில், இந்த பின்னணி இசையில் இப்படி ஒரு பழகிய காட்சியமைப்பில் இவ்வளவு பயந்து பார்த்ததாக நினைவில்லை.
 






ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை, இந்த ஷாட்டில் இது நடந்தே தீரும் என நம்மால் யூகிக்க முடிந்த கதைகளத்தில், மிகசரியாக அவர்கள் நினைத்த அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களை நிமிர்ந்து அமரசெய்வதும், திகிலுற செய்வதும், அவசரகதியில் ரிமோட்ட தேடி படத்தை PAUSE பண்ணவைப்பதுனு உண்மையா மிரட்டிடாங்க.  


இது போன்ற திர்ல்லர், ஹாரர் வகையறா படங்கள் பின்னணி ஒலியை வைத்தே முழு கதைக்கும் நம்மை திகிலடைய செய்வது மரபு. ஆனால் இதில் அம்மா தொலைந்து மகள் இறக்கும் முதல் எட்டு நிமிட காட்சிக்கு பின்வரும் ஒரு மணி நேர படம் முழுக்கவே பியானோவின் மெலடி இசை மட்டுமே ஒலிக்கும். ஆனால் அந்த இசையை ஒரு நிமிடம்கூட நம்மை ரசிக்கவிடாமல் இக்கதையின்  பாத்திரங்கள் தங்களின் உயிரை காத்துகொள்ள நடத்தும் போராட்டத்தில் நம்மையும் இழுத்து சென்றுவிடுவர். அதைவிடவும் இதன் சிறப்பு அந்த மெலடி இசையும் நம்மை திகிலடைய செய்யும் வகையில் அமைக்க பெற்ற அற்புத உருவாக்கல் இக்கதைக்கான ஆகபெரும் பலம். 


அடுத்து எடிட்டிங் கடந்த பத்து வருட திரைப்படங்களில் “புதுயுக்தி” “செம கட்டிங்னு” சிலாகிப்பது போல எந்த ஜிகினாதனமும் இல்லாமல் இருக்கும். எடிட்டிங் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் கூட தங்கள் மூளையை சக்கையாக்கி டெக்னிகலா வேலை செய்திருக்க வேண்டிய கதையில் பாத்திரங்களை நிழலாக பின்தொடர்ந்து அவர்கள் சென்று சேர்ந்த இடத்தில் முடிவுறும்படியான, பார்வையாளனை தங்கள் பங்குக்கு சோதிக்க விரும்பாத அற்புத எடிட்டிங். 


முதல் எட்டு நிமிடங்களில் தங்களால் எத்துனை பிராயத்தனம் முடியுமோ செய்து பார்வையாளனை எங்கும் போகவிடாமல் தன்னுள் ஈர்த்துவிடுகின்றனர். பின் ஒரே வீடு, இரண்டே இரண்டு பாத்திரங்கள், ஒரு நாள் இரவில் நடக்கும் இந்த கதைக்கு நியாயமாக செய்யவேண்டிய அனைத்தையும் செய்துள்ளனர்.


நம்மை பெரிதும் ஈர்க்கும் பெண் பாத்திரம் "OLIVIA BONAMY" இவரை PRETTY DEVILS, READ MY LIPS னு சில படங்களில் பார்த்திருந்தாலும் இவரின் அடையாளம் இந்த படமே. உயிரை காத்துக்கொள்ள இவரின் முயற்சிகளை காட்டிலும், எந்த வினாடி உயிர் போகுமோ என்ற வேதனையை, தவிப்பை தனது கண்கள் முதல் உடலின் சகல பாகங்களிலும் வெளிப்படுத்தியது சாதாரண பார்வையாளனையும் கவரும்.


இவரின் பாத்திரத்திற்கு பின்னே பெரிதும் அலைந்து மூச்சு வாங்கிய கேமராதுறை சார்ந்த அனைவருக்கும் மிகப்பெரும் பாராட்டு. முதல் எட்டு நிமிட காட்சிகளை தவறவிட வேண்டாம். இது போன்ற திரில்லர் படங்களில் மனிதவேட்டையோ, பெண்களின் அவல குரலோ, ரத்த வெள்ளமோ இல்லாமல் நுனி சீட்டில் அமர வைத்த காரணம் ஒன்றே போதும் இப்பபடத்தை பார்க்க.

No comments:

Post a Comment

Search This Blog