பார்த்ததில் மிகவும் ரசித்தது : 098.
நமது புறச்சூழல் காரணமாக அல்லது வேறொரு நபரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து குறிப்பிட்ட ஹீரோ தானும் மீண்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுவதுதான் சினிமாக்களின் கருப்பொருள் என்பதான புரிதல் நமக்கு எப்பொழுதோ வந்துவிட்டது. இதனாலேயே நாம் பார்க்கும் படங்கள் முதல் யோசிக்கும் கதைகள் வரை இவ்வாறே உள்ளது.
நமது அகச்சூழல் குறித்த கதைகளையும், சினிமாக்களும் பெரும்பாலும் நாம் நிராகரிக்க கூறும் காரணம். அவை மிக மெதுவாக நகர்வது போன்ற நமது எண்ணம். பெரும்பாலும் தங்கள் சினிமாக்களில் அகச்சூழல் குறித்த கதைகளை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இயங்கும் சினிமா துறையிலிருந்து ஒரு படம் இப்பொழுது...
குடும்ப நண்பர்கள் (மூன்று ஜோடிகள்) தங்களது நண்பர் ஜெர்மனிலிருந்து தனக்கு பெண் பார்க்க வருபவரை, இவர்கள் பார்த்த பெண்ணோடு சேர்த்து வார விடுமுறையை கொண்டாட, ஒரு கடற்கரையை ஒட்டியுள்ள வில்லாவில் தங்குகிறார்கள். உடனே அங்கு ஒருவர் கொலை செய்யப்படுவார், அல்லது அந்த வில்லாவில் அமானுசிய சம்பவங்கள் நடைபெறும் போன்ற கற்பனை வருதுனா நேரா முதல் பத்திக்கு திரும்ப போய்டுங்க.
கடற்கரையில் விளையாடும் குழந்தை ஒன்றை காப்பாற்ற கடலில் குதிக்கும் அந்த எல்லி என்ற பெண் பாத்திரம் இறந்துவிடுகிறாள். இதன்பின் வரும் நடைமுறை சிக்கல்களை மட்டுமே முழுக்க முழுக்க அலசும் கதை.
முழுக்க அந்த கடற்கரையும், அதை ஒட்டியுள்ள அந்த பழைய வீட்டிலும் முழு இரண்டு மணிநேர கதையும் நிகழ்கிறது. வெறும் இவர்களது வாதங்களோடே கடந்தாலும், உள்ள சொற்ப பாத்திரங்களை கொண்டு எங்கும் நம்மை சோம்பல் முறிக்கவிடாமல் செய்த உருவாக்கல்.
கதையின் துவக்கம் முதல் இறுதிவரை நம்முடனே பயணிப்பது அந்த கடல் அலையின் ஒலி மட்டுமே. துவக்கத்தில் அவர்களது களிப்புகளுடன் அந்த அலைகள் சந்தோசமாகவும். கடலில் தொலைந்த எல்லியையும், அந்த குழந்தையையும் தேடும் கணங்களில் மிக பயங்கரமாகவும். எல்லியின் காதலனின் வருகைக்கு பின் அதே அலையின் ஒலி மிகத்துயரமாக நமக்கு கேட்கும்படியான (மோனோலிசா ஓவிய கோட்பாட்டின் படியான) உருவாக்கல்.
ஆண் பாத்திரங்களின் துயரம், ஏமாற்றம், அழுகைகளை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருந்தாலும். இறந்த காதலியை தேடி வரும் ஒரு ஆண் பாத்திரம். துளி கண்ணீரும் இல்லாமல் வெறும் சோகத்தை மட்டுமே சுமந்து வரும் அந்த முகம் நமக்குள் ஏற்ப்படுத்தும் துயரத்தை மறக்க பல நாட்கள் ஆகலாம். மேலும் #Sepideh எனும் பாத்திரத்தில் வரும் பேரழகியும்..
இதன் இயக்குனர் #Asghar_Farhadi இவரே தற்போது ஆஸ்கார் பரிந்துரையில் இறுதி சுற்றுவரை எட்டி உள்ள #The_Salesman படத்தின் இயக்குனர். மேலும் 2011-ல் “Best Foreign Language Film of the Year” #A_Separation படத்திற்கு ஆஸ்கர் வென்றவரும் இவரே.