Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, June 14, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 128


தலைப்பு ஏற்கனவே வந்த ஸ்பெஷல் 26யை ஞாபகபடுத்தினாலும், இதோட டிரைலர் இந்த படத்துமேல ஒருவித ஈர்ப்பு ஈர்ப்பை எற்படுத்தவும் பாத்தாச்சி.. வருமான வரி துறையை சேர்ந்த அதிகாரிகளா நடிச்சு வேற வேற மாநிலங்கள்ல பல ரெய்டுகள நடத்தி ரொம்ப சூவாரசியமாவும், நல்ல வேகமான திரைக்கதை மூலமா நம்மள ரொம்பவே ஈர்த்த அதே கதைதான்.


ஆனா இதுல ஒரே ரெய்டுதான். அதும் அந்த வீட்டுக்கு படம் ஆரமிச்ச இருவதாவது நிமிசத்திலேயே போய்டுவாங்க. படம் முடிய ஒரு பத்து நிமிஷம் இருக்கும் போதுதான் வெளிய வராங்க. அதுல கொஞ்சமும் தோய்வில்லாம ரொம்ப ரசிக்கும்படியா கொண்டுபோனதுல இருக்கு திரைக்கதைக்காக இவங்களோட உழைப்பு..


1981 ல LUCKNOW ல நடந்த ஒரு ரெயடுதான் அடுத்த இருவது வருசத்துக்கு வருமான வரித்துறை ல கிடச்ச பெரிய தொகையாம். அப்ப உண்மையா அந்த ரெய்ட முன்னின்று நடத்தியவருக்கு சம்பளமே 1500 தானாம். ஆனா அப்பவே அவர் பிடித்த பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு 400+ கோடிகளில் இருந்ததாம். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சிதான் இந்த படம் பண்ணிருக்காங்க. இதுல ரொம்ப சுவாரசியமான விசயமே அவங்க ரெய்டு போனதே மூணுமுறை MP யா இருந்தவரோட வீட்டுக்கு. அவர் அரசியல் செல்வாக்க பயன்படுத்தி அப்ப பிரதமரா இருந்த இந்திரா காந்தி வரைக்கும் போயிருக்கார். அப்ப தகவல் தொழில்நுட்பம் இந்தஅளவு இல்லாததால, அந்த ஆபீசர் நீங்க PMதான் பேசுறிங்களானு  எனக்கு உறுதியா தெரியாததால. நீங்க இந்த ரெய்டை நிறுத்த சொல்லி எங்க ஆபீஸ்க்கு உடனடியா தந்தி கொடுத்திடுங்கனு சொல்லியிருக்கார். அதும் போக நான் சட்டபடி தகுந்த ஆதாரத்தோடதான் இந்த சோதனை நடத்திட்டு இருக்கேனு வேற சொல்லிட்டாராம்.


அந்த ஆபீசர் இந்த ரெய்டை பத்தி முழுசா மூணு இரவு, நாலு பகல் அங்க நடந்தது பூராவும் புத்தகமா எழுதினாராம். எப்படிலாம் ஆதாரங்கள சேகரிச்சோம். யார் மூலமா வந்தது. அவர் வீட்ல சோதனை நடந்த நாட்கள்ல யார் யாரெல்லாம் அவர தடுத்தாங்க. எண்பதுகளின் காலகட்டத்துல 400+ கோடிகள் மதிப்புனா அதுல எவ்வளவு பணம், தங்கம், வெள்ளி, இவ்வளவையும் எத்தனை பொட்டில கொண்டுபோனாங்க. அத ரொம்ப அழகா செம விறுவிறுப்பா படத்துல கொண்டுவந்து இருக்காங்க. இந்திராகாந்தி அம்மா விஷயம் உட்பட.


கதையில் ஒரே பிரதான பாத்திரம். அது கொஞ்சமும் இதுக்கு முன்ன வந்த அக்ஷய்குமார ஞாபக படுத்தாம இருக்க ரொம்பவே உழைச்சிருக்காங்க. கிட்டத்தட்ட அக்ஷய் & அஜய் தேவ்கான் இருவருக்கான தோற்றம் ஒரே போலவே இருக்கும். உடை சமாச்சாரங்களும் ரெண்டு படத்துலயும் ஒரே ஸ்டைல். ரொம்பவே ஒரு ஒரு ஷாட்டும் பாத்து பாத்து இதுல நாயகன் பாத்திரத்த உருவாக்கி -இருக்காங்க. அவர் குணாதிசயம் முதற்கொண்டு அவர் நடை, பேசும் விதம்னு எல்லாமும் அக்ஷய் விட இதுல அஜய் தேவ்கான் ரொம்ப எளிமையா அதுலயும் ஒரு மிடுக்கோட பண்ணியிருக்கார். கம்பெனி படத்துக்கு அப்பறம் (நான் பாத்ததுல) செம பொருத்தமான பாத்திரம் இதுதான். அவரே திரைல பாத்து ரொம்ப ரசிச்சிருப்பாரு.


சினிமாவின் வழக்கமா இருந்த ஒரே விஷயம் இவர் மனைவி. இவங்களோட அந்யோனியம், பாடல் ஒன்னுனு அவ்ளோதான். ஆனா இந்த காட்சிகள்ல கூட ஒரு கணவனா, காதலனா இருப்பதைவிட ஒரு அதிகாரியாவே நம்மளையும் உணர வெச்சிருப்பாரு. இதெல்லாம் மொத்தமாவே படத்துல ஒரு 15 நிமிச்சதுகுள்ளதான் வரும். அந்த மனைவி பாத்திரத்துக்கு  இலியானா ரொம்ப அருமையா பொருந்திபோறாங்க. BARFIல இருந்தே அவங்களுக்கு இதே ரோல்தான் ஹிந்தில வருது.


அஜய் தேவ்கானுக்கு அப்பறம் ரொம்ப பெரிய பாத்திரம் அவங்க ரெய்டுக்கு  போற அந்த MP SAURABH SUKLA. ஹேராம்ல கமல்&ஷாருக் நண்பரா வருவாரே அவர்தான். ஓடாம, சத்தம்போடாம ஒரு 55+ வயதானவர் அவர் வீட்ல எப்படி இருப்பாரோ அப்படியே அந்த பாத்திரத்த ரொம்ப இயல்பா பண்ணிருக்கார். சோதனைல ஆரம்பத்துல எதும் கிடைக்காம இவங்க திணறும் போதும். பின்ன ஒவ்வொரு பொருளா சிக்கும்போதும் அந்த அதிகாரிகள என்ன பண்ண போராறோனு நமக்கும் பயத்த உண்டு பண்றாரு.  இயக்குனர் ராஜ்குமார் குப்தா NO ONE KILLED JESSICA பண்ணவர். 



இவரோட ரொம்ப பெரிய பலமே (நான் பாத்த இவரோட ரெண்டு படங்கள வெச்சி சொல்றேன்)  கதை எந்தஅளவு அழுத்தமானதா இருந்தாலும் பார்வையாளருக்கு அந்த முழு அழுத்தமும் கொடுத்து ரொம்ப சிரமபடுத்தாம கொண்டுபோறாரு நம்ம R.சுந்தர்ராஜன் படங்கள் மாறி. அதனாலேயே TECHNICAL TEAM மோட வேலை பெருசா வெளிய தெரியல. இசை, எடிட்டிங், கேமரானு யாருமே அவங்க அதிமேதாவித்தனம் சுத்தமா எங்கையும் வெளிப்படுத்தாம ஒரு பீரியட் கதைக்கு என்ன தேவையோ அதமட்டும் பண்ணியிருக்காங்க.  பெரும்பாலான காட்சிகள் அந்த வீட்டுக்குள்ளவேனாலும் அந்த காலத்துல பயன்படுத்திய லைட்டிங் மெத்தேட்ஸ மட்டுமே வெச்சே ரசிக்க வெச்சிருக்காங்க. 


https://www.youtube.com/watch?v=3h4thS-Hcrk

Sunday, June 10, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 127.

ஒரு கதையில் தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்தல் என்பதுகூட மிக பெரிய விசயமன்று. அதற்கான கதை மற்றும் அப்படியான ஒரு உருவாக்கல் அமைதல் என்பதே பெரும் வரம். அப்படியான வரம் கிடைத்த எந்த நடிகனும் தனது முழு ஈடுபாட்டை அந்த கதைக்காக அர்ப்பணிப்பதே நியாயம். கதைக்கான அச்சாணியே அந்த ஒரு பாத்திரம் என்கிறபோது. அதில் அதிசியமாக அந்த பாத்திரத்தின் அதிமேதாவிதனம் மட்டுமே பளிச்சிடுவது இல்லாமல், அவனது குழந்தைத்தனமும் இருக்க வேண்டும். இரண்டிலும் (அப்பாவி & அதிமேதாவித்தனம்) தனிதனியாகவே இந்த பாத்திரங்களில் பொருந்திபோக கூடிய ஒருவரின் கையில், இப்படியான ஒரு கதை சிக்கும்பட்சத்தில் மட்டுமே ஒரு சாதாரண குடும்பக்கதை அசாதாரணமான படமாக வரலாற்றில் பொறிக்கப்படும் மாயம் நிகழக்கூடும்.


90களில் இந்திய சினிமா மொத்தமும் சுத்தி சுழன்ற அதே குடும்பக்கதைதான். கணவன், மனைவி இரு பிள்ளைகள். தான் பணிபுரியும் இடம். தனது பிள்ளையின் பள்ளி. தனது சொந்த ஊர். தற்பொழுது குடியிருக்கும் பகுதி என மொத்தமாக அறிவுஜீவி, பொறுப்பாளி, நமது அனைத்து குழப்பங்களுக்குமான நிவாரணமாக அறியப்படும் நாயகன். தனது நிதானம், சிந்திக்கும் திறமை, மற்றும் தனது அபரிவிதமான  திறமையாலே மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பில் அவரது நடவடிக்கைகளில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு ஒருவாறு அவரது செயல்பாடுகள் வெகு சில காரியங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட சிறு குழந்தை மனநிலைக்கே சென்று விடுகிறது.


தன்னையே நம்பி உள்ள குடும்பம். பள்ளி இறுதி ஆண்டுக்கு பின் தன்னை போன்றே மகா புத்திசாலி மகனை IAS தேர்வுக்கு தயார்படுத்த ஆயுத்தமாகும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற நிலைகுழையும் குடும்பத்தின் நிலை. இந்த நாயகன் தனது குழப்பங்களில் இருந்து மீண்டு பழைய அறிவுஜீவி ஆனாரா? இந்த ஒரே வரிக்கதையில் இந்த ஒரு பாத்திரம் நிகழ்த்தும் மாயம் வெறும் வார்த்தைகளுக்கும் கண்களுக்குள் மட்டுமே உணர்ந்து வெளிபடுத்த கூடியதன்று. படத்தின் முதல் பாதியில் நாம் அவரை சராசரி மனிதன் என உரைத்தால் பார்வையாளன் நம் புத்தி சுவாதீனத்தை சந்தேகிக்க கூடும். இதே படத்தின் இரண்டாம் பாதியில் இதே நாயகனை நாம் அறிவுஜீவி என உரைத்தால் அப்பொழுதும் அவ்வாறே நினைக்ககூடும். இவ்வாறான இரு வேறு நிலைகளை ஒரே பாத்திரம் ஒரே கதையில் நிகழ்த்துவதென்பது உண்மையில் அசாத்தியம்.
தனது பள்ளி தோழியுடன் காபி ஷாப் சென்றுவிட்டு முதன்முறையாக தாமதமாக வீடு திரும்பும் மகன் குடும்பத்தார் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து குளிப்பதாக பாசாங்கு செய்து குளியலறையில் ஒளிந்து கொள்ள. பெரும் கருத்தாழமிக்க எந்த வசனமும் இல்லாமல், சமையல் அறையில் மனைவிக்கு உதவிகொண்டே தனது இளைய மகளுக்கு கதை கூறுவது போல், தனது பால்ய வயதில் தான் கூறிய பொய்யால் ஏற்பட்ட விளைவுகளை குளியல் அறையில் உள்ள மகனுக்கும் கேட்கும்படி நாயகன் உரைக்க, தானாக மகனே வந்து மன்னிப்பு கேட்க்கும்படியான பழைய காட்சிதான். ஆனால் இந்த நாயகன் பெரும் கூப்பாடு, அடித்தொண்டையில் உறும்பும் வசனங்கள் எதும் இல்லாமல் வெறும் உப்புமாவுக்கு பெறாத வசனத்தை பேசி மட்டுமே மகனை அழவைத்துவிடவில்லை. அந்த இரண்டு நிமிட காட்சியும் அதன் பின்வரும் ஒரு பாடல் காட்சி மட்டுமே போதும் இந்த நடிகனின் மகாதிறமையை பறைச்சாற்ற.


இவரை போன்ற பெரும் சரீரம் கொண்டோருக்கு வேண்டுமானால் தன் தோற்றம் மூலம் தன்னை புத்திசாலியாக எந்தவித பெரிய பாசாங்கும் செய்யாமல் நிருபித்துவிட இயலும். ஆனால் தன்னை மனநிலை சரிஇல்லாத பாத்திரத்திற்கு பொருந்திபோக செய்வது அத்துணை சுலபமன்று. ஏதேனும் ஒரு ஷாட்டில் அவரது நடிப்பின் அளவு சற்று கூடவோ அல்லது குறைவாகவோ வெளிப்படுத்திவிடின் அது பார்வையாளனுக்கு நகைப்பை வரவழைத்துவிடும். அவ்வாறு ஒரு காட்சியில் நிகழ்ந்தாலும் முழு படமும் வீண் என்பதே நிதர்சனம். இந்த நூலிழை அளவு வேறுபாட்டை இரண்டாம் பாதி முழுக்க எவ்வாறு ஒரே சீராக கொண்டு சென்றார் என்பதில் உள்ளது. இவருடைய திறமை அல்ல ஒவ்வொரு ஷாட்டும் அதே அளவான நடிப்பை மட்டுமே ஓகே செய்த இயக்குனர் (PRANAYAM) BLESSY-ன் திறன்.


இது போன்ற கதைகளில் வரும் துணைபாத்திரங்களுக்கு பெரிதும் காட்சிகளோ வசனங்களோ இல்லாததை போன்ற தோற்றம் பார்வையாளனுக்கு ஏற்படுவது இயல்பே. ஆனால் முதன்மை பாத்திரத்தின் அனைத்து அசைவுகளும் பார்வையாளனுக்கு கொடுக்கும் பூரண திருப்திக்கு பெரும் பங்கு இந்த துணைபாத்திரங்களின் மூலமே சாத்தியம். அவ்வாறு தனது பங்களிப்பை தனக்கான அனைத்து காட்சிகளிலும் முழுக்க வழங்கிய தந்தை பாத்திரத்தில் வரும் நெடுமுடிவேணு. லாலின் மாமனார் பாத்திரத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் நிறைவான பங்களிப்பை வழங்கிய இன்னொசென்ட்.


இவர்களைகாட்டிலும் மனைவியாக வரும் மீரா வாசுதேவன் பாத்திரமே இரண்டாம் பாதியில் லால் பாத்திரம் பார்வையாளனின் அடிமனதை வருட செய்த மயிலிறகு. குறிப்பாக இறுதி காட்சியில் பல வருடங்களுக்கு பின் தன் சுயஉணர்வுக்கு திரும்பி மின்சாரம் தடைபட்ட இரவில் மெழுகுவர்த்தியுடன் கணவனை தேடும் மீராவை லால் அழைக்கும் காட்சி. ஜன்னல் அருகில் கண்ணிருடன் அணைக்கும் காட்சியில் லாலின் வலப்புறமும், மீராவின் இடப்புறம் மட்டுமே மெழுகுவர்தியின் ஒளியில் தெரியும். அவர்கள் வாழ்வின் பாதியை மட்டுமே வாழ்ந்துள்ளதாக அர்த்தப்படுத்தும் வகையான உருவாக்கல் நம் மனதை விட்டு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். அனைத்து பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பில் சிறுகுறையும் வைக்கவில்லை எனினும் மோகன்லால் எனும் மலையையும்தாண்டி நம் மனதுள் நுழைந்த இந்த பாத்திரத்தின் பங்களிப்பு இக்கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

Wednesday, April 18, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 126.

உதிரி பூக்கள் படத்தில் ஒரு காட்சி. இரு குழந்தைக்கு பின் உடல்நிலையும், தன் கணவனின் தகாத செயல்களால் மனதளவிலும் ஒருசேர பாதிக்கப்பட்டு. கிட்டத்தட்ட தன் வாழ்வின் இறுதி நாட்களை படுக்கையில் கழிக்கும் அந்த பிரதான தாய் பாத்திரம். தனது இரு குழந்தைகளையும் அழைத்து பேசும் காட்சி. ஒரு ஏழு வயது மகனும், இரண்டு வயது பூர்த்தியான மகள் என வைத்துகொள்வோம். அக்காட்சியின் ஒலி அளவை முழுக்க மட்டுப்படுத்தி அந்த வசனங்களும், ராஜாவின் பின்னணியும் இல்லாமல் பார்த்தாலும் கூட நம்மை பெரிதும் நிலைகுலைய செய்யும்படியாக இயக்குனர் காட்சிபடுத்தி இருப்பார்.


வெறும் காட்சிவழி மட்டுமே அந்த யதார்த்த சூழலை நமக்கு முழுதும் கடத்த இயக்குனர் செய்ததில் மிகமுக்கியமானது அந்த இருவயது மகளுக்கு எந்த வசனங்களோ நிர்பந்தமோ அக்காட்சியில் இருக்காது. தனது தாயின் அப்பொழுதைய நிலையோ, தனது வருங்காலத்தை பற்றிய பயமோ சிறிதும் இல்லாமல் படுக்கையில் தனது தாயின் ஒடுங்கிய தேகத்தில், அவளின் கைகளில் துருத்தி கொண்டிருக்கும் வளையல்களில் தன் பிஞ்சி விரல்களால் தடவியபடியே இருக்கும். யதார்த்தமோ அல்லது திட்டமிட்டு இவ்வாறு அமைக்கப்பட்டதோ ஆனால் எந்தவித வன்முறையோ, முக்கிய பாத்திரங்களின் கோரமரணமோ ஏற்ப்படுத்தாத அனைவராலும் கைவிடப்பட்ட உணர்வை இந்த எளிய காட்சியின்வழி பார்வையாளனின் மனதில் விதைத்தது எளியவிசயமன்று. நீண்ட இடைவெளிக்கு பின் இவ்வாறான முயற்சியை தமது முதல் படைப்பின் மூலம் முயன்ற இயக்குனருக்கு மிகபெரும் பாராட்டுக்கள்.


சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது சொந்த மாநிலத்தை விட்டு கொல்கத்தா வரும் நடுத்தர வயது ஆண், உடன் சக்கர நாற்காலியில் நாட்களை கழிக்கும் அவனது வயதான தாய். மூன்றாவது தளத்தில் மொட்டை மாடியில் உள்ள ஒண்டு குடித்தனத்தில் குடியேறுகின்றனர். அதே குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் இளவயது மனைவிக்கும், இவனுக்குமான பலவித உணர்வுகளின் வெளிப்பாடே இப்படம். எந்தவித புரட்சிகர வசனங்களோ பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய இசை கோர்வைகளோ இல்லாமல் இவ்விருவரின் மன ஓட்டங்களை சராசரி பார்வையாளனும் காட்சிவழி உணரசெய்யும்  படைப்பிது. இதுபோன்ற கதைகள் நகரும் வேகம் பெரும்பாலான பார்வையாளனை சலிப்படைய செய்வதென்னவோ உண்மை. ஆனால் படம் துவங்கிய முதல் பதினைந்து நிமிடங்களிலேயே “இதுல என்னமோ இருக்கு” என்ற மனநிலைக்கு இயக்குனர் நம்மை தயார்படுத்தி விடுகிறார்.


சந்தர்ப்ப வசத்தால் தன் மாநிலத்தை விட்டு வெளியேறும் ஒரு நடுத்தரவயது ஆசாமியை,இயக்குனர் கற்பனையில் தொடுத்த அப்பாத்திரத்தின் செயல்பாடுகளும் அவனின் நடவடிக்கைகளையும் அதனினும் மேலாக மட்டுமே அப்பாத்திரத்தை ஏற்ற சேத்தன் செய்துள்ளார்.. மேலும் அவனின் கடந்த கால அசம்பாவிதங்களை இக்கதையில் ஒரு முக்கிய திருப்பம் நிகழும் சூழ்நிலையில் நம்மால் கிட்டத்தட்ட யூகிக்கும்படியே இயக்குனர் வடிவமைத்த திரைக்கதையும், படத்தின் துவக்கத்தில் அவர் வைத்த முதல் காட்சியும் உணர்த்துவது. இந்த படத்தில் ஏதோ கதைன்னு கொஞ்சமா இருந்தா அதுக்கு இந்த முக்கிய திருப்பமே காரணம். அதையும் இவ்வாறு எளிதாக நம்மால் யுகிக்கும்படி உருவாக்கியதற்கு மிக முக்கிய காரணம். அவர் பதார்த்தங்களின் மேல் தூவப்படும் சங்கதிகளை போல் கூடுதல் சுவைக்காக மட்டுமே இக்கதையை பயன்படுத்தியுள்ளார். 
      

மற்றபடி அவரின் முழுநம்பிக்கையும் அவரின் உருவாக்கலின் மேல் கொண்டு அதை மட்டுமே படைத்துள்ளார். இவ்வாறான கதையின் முதல் காட்சிலிருந்து இறுதிவரை ஒவ்வொரு ஷாட்டும் லைட்டிங் முதல் எடிட்டிங் வரை முன்பே முடிவுசெய்யப்பட்டு அவை மட்டுமே திரையை வந்து சேரவேண்டும். இடைசொறுகலாக எந்த ஒரு காட்சியை இணைத்தாலும் அவை கதையுடன் பொருந்தாமல் முழுகதையையும் சொதப்ப வாய்ப்பதிகம்.


கொல்கத்தா நடைபாதையில் சிறுபழைய புத்தககடை நடத்திவரும் நாயகன். பகல்பொழுதில் தன்வயதான தாயை பார்த்துகொள்வதற்கு ஆள் தேடும் சூழலில். கணவன் வேலைக்கு சென்றபின் தனிமையில் கழிப்பவள் வெளியூரில் நம் மொழி ஆட்களுக்கு செய்யும் உதவியாக தாமாக முன்வந்து சேத்தனின் தாயை கவனித்து கொள்கிறாள். தனிமையில் வசித்து வரும் நாயகன். ஏதோ யாருமில்லா உணர்வில் விரக்தியில் குடும்பவாழ்வை நகர்த்தும் அப்பெண்மணிக்கும் இடையேயான காதல் தாண்டிய காமம் சார்ந்த உணர்வுகளை, துளிஆபாசமும் இல்லாமல் சிறந்த கலைப்படைப்பாக கொடுக்க முயற்சித்த இயக்குனரும். அதற்க்கு முழுவடிவம் கொடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் காலத்திற்கும் மறக்காத படைப்பை வரும்காலங்களில் வழங்க வாழ்த்துக்கள்.

வார்த்தைபடுத்த இயலாத சிலவிசயங்களையும்  காட்சிபடுத்த இயலும் என்பதற்கு இதன் TRAILER யே மிகப்பெரும் சாட்சி

https://www.youtube.com/watch?v=gI8ctwsdh7k

Friday, March 30, 2018

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 124.

நம் கனவுகள் நோக்கிய பயணத்தில் ஏற்படும் பெரும் தடைகளும், சிரமங்களும் நம்மை அயர்ச்சியடைய செய்வதில்லை. காரணம் நாம் அனைவருமே நமக்கு விருப்பமான அப்பாதையில் பயணிக்கவே விரும்புகிறோம். ஆனால் அப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு வெகுசிலருக்கு   அமைவதே கடினம். மேலும் அதில் வெற்றி பெரும் வாய்ப்பு அதில் ஒரு சதவிகிதத்தினருக்கு கிடைப்பதே அரிது. இவ்வாறு அரிதிலும் அரிதாக அப்பயணத்தில் வெற்றி பெற்ற சிலரது கதைகளை மட்டுமே பார்த்து வரும் நமக்கு. அவ்வாரான பயணத்தில் தனது கனவுகளை இழந்து நிராதரவான பெரும்பாண்மையோரது கதைகள் வருவதுமில்லை. அவ்வாறு வந்தாலும் அவை நம் நினைவில் இருப்பதுமில்லை.

கடந்த திரைப்படத்தில் 2000+ கோடிகளை வசூலில் குவித்த நாயகனால் கூட வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே எடுக்கும் நிலையிருப்பின், சாமானிய படைப்பாளிகளின் நிலையை சொல்லவேண்டியதில்லை. அதற்க்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவது. நம் அனைவருக்கும் கனவுகள் இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு அதை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பு அமைவதில்லை. அவ்வாறு அமையப்பெற்ற பலராலும் தங்கள் கனவு வாழ்க்கையை அடையமுடிவதில்லை. ஆதலாலே வாழ்க்கை முழுக்க வெறும் நினைவுகளாக மட்டுமே நம் கனவுகளை சுமந்து திரியும் நம்மால் கதைகளில் கூட அக்கனவில் தோல்வியுற்றவனை காண விரும்புவதில்லை போலும்.

இக்கதையிலும் நடுத்தர வர்கத்தில் பிறந்து, குடும்பத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல், பலதரப்பட்ட இன்னல்களை கடந்து இறுதியில் வெற்றிபெறும் தீவிர இஸ்லாமியத்தை பின்பற்றும் குடும்பத்தின் பதினைந்து வயது மகளுடைய கதைதான். இப்பத்தியை படித்தவுடன் யூகங்களாக தாங்கள் நினைக்கும் பலகாட்சிகள், கிட்டத்தட்ட அதே வசனங்களுடனும் உள்ள திரைப்படமே இது.  இவ்வாறான கதைகளில் அந்த நபரது கனவு துறைசார்ந்த வேறுபாடுகள் தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகள், ஒருவாறே இருக்கும்படியான மனநிலையை மட்டுமே பார்வையாளர்களுக்கு கொடுக்கும். இவை இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, பெரும்பாண்மையான உலக திரைப்படங்களும் இதில் அடக்கம்.

இவ்வாறு இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிபெற காரணங்கள். வெற்றிபெற்ற பிரபலங்களின் உண்மை கதையை தழுவி எடுக்கும் திரைப்படங்கள், அந்த பிரபலங்களினால் வெற்றிபெறுவதும், மேலும் நம்மால் அடையயிலாத இவ்வாறான வெற்றியை திரையில் பார்க்கும் பார்வையாளன் அப்பாத்திரத்துடன் தன்னை பொருத்தி பார்ப்பதும் கூட ஒருவகையில் காரணமாக அமையலாம். புது காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மூலமே இவ்வாறான கதைகளில் பார்வையாளனுக்கு வித்தியாசத்தை உணர்த்த இயலும்.

இவ்வாறான நபர்கள் தங்கள் லட்சியத்திற்காக எதையும் இழக்க தயாராக இருப்பர். மேலும் தங்கள் நடவடிக்கைகள் தவிர்த்து மற்றவர்களின் மேல் பெரிய ஈடுபாடு இல்லாமல் கிட்டத்தட்ட சுயநலவாதிகள் போல. ஆனால் அதை மிகசரியாக பயன்படுத்திகொண்டது இந்த திரைப்படமே. மேலும் அப்பெண்ணின் கண்டிப்பான தந்தை மற்றும் மகளுக்காகவே உருகும் தாய் பாத்திரங்கள் என அனைத்தும் மிகசரியாக அமைந்த திரைப்படம்.  அப்பெண்ணின் பள்ளி பருவ கனவுகள், குழந்தைதன காதல், தனது பாடகி கனவிற்கான முயற்சிகள். எளிதில் மற்றவரை தவறாக யூகிக்கும் பண்பு, எதற்காகவும் தனது லட்சியத்தை இழக்க கூடாத திடம். தம் குடும்ப கட்டுபாடிற்க்காக தனது கனவையும் இழக்க துணியும் மனம். என பதினைந்து வயது பெண்ணிற்கான முழு வாழ்வையும் இன்சியா பாத்திரத்தில் வரும் ஜைராவசீம் வாழ்ந்துள்ளார். 

தனக்கான அனைத்து காட்சிகளிலும், தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தும் முழுக்கதை என்பதை உணர்ந்து தனது ஆகசிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அனைத்து பார்வையாளனையும் திருப்திபடுத்தும் இந்த வகை படங்கள் சற்று அபூர்வமாகவே வரும். தவறவிடக்கூடாத படவரிசையில் இதை சேர்த்துகொள்ளாவிடினும், எவரையும் அதிருப்திபடுத்தா வகையை சார்ந்த இப்படத்தை நம் எந்த மனநிலையிலும் காணயியலும்.

Friday, March 23, 2018

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.
இப்படியான கொலையாளியை தேடும் கதைகளில் பிரதான இருவகைகள் உண்டு. ஒன்று கொலையாளியை நமக்கும் அறிமுகபடுத்தி, அவன் இவ்வாறு இறுதிவரை விசாரணை வளையத்திற்குள் வராமலே தந்திரமாக செயல்படுகிறான் என்பது. மற்றொன்று கொலையாளியை யாரென்பதை நமக்கும் அறிமுகப்படுத்தாமல் இறுதில் கண்டடைவது. முதல்வகையில் திரைக்கதை மிகச்சரியாக அமைந்தால்  பார்வையாளனுக்கு மிகப்பெரும் சுவாரசிய திரைப்படமாக அமையும். காரணம் திரைக்கதையை எங்கும் வளைக்க இயலாது. நமக்கும் தெரிந்த கொலையாளியை சுற்றி மட்டுமே நகர்த்த இயலும். இதில் சூவாரசியமே கொலையாளி எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் தப்பித்து செல்கிறான் என்பதே.
இரண்டாம் வகையில் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்ல இயலும். கொலைக்கான காரணமாக ஒரு ஆவியை காரணம் காட்டியும் கதையை நிறைவு செய்ய இயலும். அல்லது அதுவரை கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவரை கொலைக்கு காரணகர்த்தாவாக்க இயலும். இப்படம் இரண்டாம் வகையை சேர்ந்ததாக இருப்பினும். திரைக்கதையில் முதல் வகையை சேர்ந்ததை போன்ற நேர்மையும். கதை துவக்கம் முதல் எங்கும் வளையாமல், பார்வையாளனை இறுதிவரை அந்த சம்பவத்திற்கு காரணகர்த்தா யார் என்ற ஒற்றை கேள்வியை நோக்கி மட்டுமே கொண்டுசென்று முடிவதுடன். பெரும் திருப்புமுனை என்ற பெயரில் கதைக்கு தொடர்பில்லாத எந்த பாத்திரங்களை கொண்டும் நிறைவு செய்யாமல் துவக்கம் முதல் கதையின் தொடர்பில் இருந்த பாத்திரத்தை கொண்டே முடித்ததும். அப்பாத்திரம் பார்வையாளன் யூகத்திற்க்குள் அதிக சதவிகிதம் வராதவகையில் கொண்ட திரைக்கதையும் இப்படத்திற்கான மிகபெரும் பலம்.
படம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இறந்த பெண் ஆயிஷா. அவர்  வீட்டின் பணிப்பெண் ரெமி பெர்னாண்டர்ஸ். அப்பெண்ணின் பெற்றோர்களான சச்சின் மற்றும் ஆர்த்தி. அவர்களது வீட்டின் மற்றொரு பணியாளர் சேட்டன். இறந்த பெண்ணின் காதலன் மற்றும் சேட்டனின் சகோதரர் சுதாகர் மிஸ்ரா. என்ற சொற்ப பாத்திரங்களை மட்டுமே வைத்து ஒரு நல்ல விசாரணை கதையை வழங்கியுள்ளனர் என்பதற்கு உதாரணமே விசாரணை வளையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி இறுதியில் ஒரே ஒருவர் என கொலையாளியை நெறிக்கையில் மட்டுமே நம்மால் உணர முடியும் மிக சாதாரணமாக யூகிக்க கூடிய ஒருவரை நாம் யூகிக்க தவறியதாக. அதற்க்கு மிகப்பெரும் காரணம் இந்த திரைக்கதை நம்மை எங்கும் தனித்து சிந்திக்க சில நிமிடங்களை கூட வழங்காமல் அவர்கள் போக்கிலேயே நம்மை முழுக்க இழுத்து சென்றதே அவர்களின் வெற்றி.
முதல்கட்ட விசாரணையில் இறந்த பெண்ணின் தந்தையே கொலைக்கான காரணகர்த்தா என கைது செய்யபடுகிறார். ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருக்கும் சூழலில். இறந்த மாணவி கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபடுகிறது. இதற்க்கு பின் நிகழ்பவை அனைத்தும் அவர்களின் பார்வையில் நாம் ஏதும் கணிக்கா வண்ணம். ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் விசாரணை மேலும் மேலும் சுவாரசிமாகிகொண்டே செல்லும். சம்பவத்திற்கு பின்னே மாயமான புது பணியாள் சேட்டன் மற்றும் அவரது சகோதரன் சுதாகர்மிஸ்ரா வரும் காட்சிகள்யாவும் நம்மை பெரிதும் படபடக்க செய்யும்.
விசாரணையில் இப்பாத்திரங்கள் மட்டுமே இல்லாமல் புதிதாக சேரும் இறந்த பெண்ணின் தந்தையின் நண்பர் மற்றும் அவர் மனைவி பாத்திரங்களும் நம்மை எங்கும் சலிப்பாக்காமல் கதையின் சுவாரசியத்திற்கு பெரிதும் துணை நிற்கின்றனர். அவர்களும் இக்கொலைக்கு ஏதோ ஒரு வகையில் தொர்பிருக்கும் படியான விசாரணையின் யூகமும் அதற்க்கான காட்சிகளும் இறுதியில் அவர்கள் இந்த வளையத்தில் இருந்து விடுபடும் காட்சிகள் என இவர்களின் பங்கு இக்கதையை மேலும் சுவாரசியமாக்க மிகப்பெரியது.
அப்பெண்ணின் தந்தை பாத்திரத்தில் ஆசிக்வித்யார்த்தி மற்றும் பணிபென்னின் பாத்திரத்தில் வரும் அஸ்வினிகல்சேகர் மட்டுமின்றி விசாரணை அதிகாரியாக வருபவர் இந்த மூன்று பாத்திரங்களும் இந்த தேர்ந்த நடிகர்களின்றி இக்கதை இந்த பரபரப்பை அடைய வாய்ப்பில்லை. மொத்தத்தில் த்ரில் கதை விரும்பிகள் தவறவிட கூடாத படமிது.

Saturday, February 17, 2018

















முதன்மை பாத்திரங்களின் கொடூர மரணமோ, உருகும் காதலில் நிரந்தர பிரிவோ அல்லது தானோ அல்லது தன்னை சார்ந்தவர்களின் பாதிப்பிற்கு ஆளாகியவனை கொடூரமாக வஞ்சிப்பதை போன்ற காட்சிகளை காட்டிலும். சந்தோஷ தருணங்களில் மென் சோகத்துடன் வெளிப்படும் கண்ணீரே பார்வையாளனின் மனதில் நெடுநாட்கள் நீடித்திருக்கும். நீண்ட இடைவெளிக்கு பின் இப்படியான ஒரு உணர்வை தனது படைப்பில் மீண்டும் கொண்டுவந்த பாலாவிற்கு ஆரத்தழுவல். 


எளிய மனிதர்களின் சிறு வெகுளிதனங்களையும் பெரும் சோகங்களையும் கிராமம் அல்லது சிறு நகரங்களின் பின்னணியில் கொடுத்து வந்தவர். இம்முறை தமது களமாக தேர்ந்தெடுத்தது சென்னையை. எடுத்த கதையும் இதுவரை அவர் தொடாத வகையை சார்ந்தது. மைனர் பெண் ஒருவரின் கர்பத்திற்கு காரணமானவனை பற்றிய தேடல் மட்டுமே இக்கதை. அதில் அவர்களின் காதலை மட்டுமே வைத்து இப்படத்தை மிகசிறந்த பொழுது போக்கு படைப்பாக சுமாரான எந்த இயக்குனனாலும் வழங்கயியலும்.


ஆனால் தான் சொல்ல நினைத்தது எதுவோ அதையும் அதனை சுற்றிய அவரின் கோர்வையாக மட்டுமே காதலை பயன்படுத்தியிருப்பது மட்டுமே இதில் அவர்பாணி. மற்ற எந்த பாலா சமாச்சாரங்களும் பெரிதும் காட்சிகளில் தெரியப்படுத்தாத இவரின் புதுமுயற்சி அபாரம். எப்பொழுதும் தனது கதைகளில் ஒற்றை பாத்திரத்தை சுற்றியே காட்சிகள் நகரும். இதிலும் ஜோதிகா பாத்திரம் அப்படிப்பட்டதே. ஆனால் கதையை படமாக்கையில் அவரின் பாத்திரத்தை மிஞ்சும் அல்லது நம் மனங்களை வெகுஎளிதில் வென்ற ஒரு புதுமுக பாத்திரம் ஒன்று உள்ளது.


தனது வெகுளி சிரிப்பில், போலி அதட்டலில், நாணிய நடையில், காதல் பார்வையில், பிரிவின் பரிதவிப்பில்  அப்பாத்திரம் வெகு எளிதில் ஜோ பாத்திரத்தை விஞ்சுகிறது. கதை முழுக்க தனக்கான காட்சிகள் அதிகமிருக்கும் கதைகளை காட்டிலும் தனக்கான காட்சிகளில் பளிச்சென நிருபிக்கும் வெகுசில நடிகர்களுக்கு இணையாக ஜோ.  பல வருடங்களுக்கு பின் ஒரு நடிகைக்கு அவ்வாறான பாத்திரம். அதில் பிரமாதபடுத்துவது வேறு. அப்பாத்திரத்தின் குணநலன்களுக்கு பொருந்தி போவது என்பது வேறு. ஜோ செய்தது இரண்டாம் வகை. இவரின்  உண்மையான குணநலனே இதுதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்.


தமது படங்களில் பிரதான பாத்திரங்களின் குணாதிசியத்தை அறிமுககாட்சிகளிலே வசனங்கள் ஏதுமின்றி பார்வையாளனுக்கு உணரவைப்பதில் வல்லவர். இதிலும் ஜோவிற்கு அப்படியான முதல் காட்சி. அதிலேயே அவரையும், அடுத்த பத்தாவது நிமிடம் கதையின் போக்கையும் யூகித்திட முடியும். பெரிதும் திரைக்கதையில் எந்த மர்ம முடிச்சிகள் இன்றி அக்கதை எதை நோக்கி பயனிக்கிறதோ. அதனுடன் மட்டுமே செல்பவர். இம்முறை ஒரு குட்டி சஷ்பண்ஸ் முழு கதையிலும் வரும்படியான திரைக்கதை. அதை முழுதும் அவ்வாறே கையாண்டு டிடக்டிவ் வகையான படமாக மாற்றி தனது முழு அடையாளத்தையும்  இழக்காமல். தனது பாணியில் இருந்தும் வேறுவகையான படைப்பாகவும் கொண்டு வர முயன்றுள்ளார். திரைகளில் அதிகம் பார்த்திராத சென்னையை தேடி பிடித்ததே. இக்கதை களம் ரொம்ப புதுசா பார்வையாளனை உணரவெச்சது.



இன்றைய நாயகர்கள் திருடன் பாத்திரத்தை ஏற்றாலும் ஏழைகளுக்கு உதவி செய்து தான் நல்லவன் என்ற பிம்பத்துடன் மட்டுமே நடித்துவரும் சூழல். ஆனால் அதற்க்கான எந்த பாசாங்கும் இல்லாத நான் இப்படிதான் நல்லவள்னு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்லுபடியான பாத்திரத்தை வெகு சாதாரணமாக கையாண்டுள்ளார். ஒரு காட்சியில் வசனமில்லாமல் வேகமாக சோபாவில் அமர்ந்து டீப்பாயின் மேல் கால்களை போடவேண்டும். உண்மையில் இந்த அசால்ட்டு கெத்து. பெரும்பான்மையான நடிகர்களுக்கு எத்தனை ரீடேக் போனாலும் வருவது கஷ்டம் சூர்யாவையும் சேர்த்து. ரெண்டே ஆண் பாத்திரங்களை மட்டுமே லேசாக தொட்டு பேசும் காட்சிகள். தனக்கு கீழ் பணிபுரியும் பாதிக்கபட்ட பெண்ணிற்காக வருந்தி புலம்பும் காவல்துறை அதிகாரியையும். இறுதி காட்சியில் ஜி.வி யையும் அந்த இருகாட்சிகள் போதும் மொத்த பெண்களின் சார்பாக இந்த முரட்டு மனுஷி மூலம் ஆண்களுக்கு கொடுக்கும் மரியாதை. ரொம்ப பெரிய பாலா படமும் இல்லாத வெகு சாதரணமா கடக்கவும் முடியாத ஒரு நல்ல படம். இளையராஜா டைட்டில் கார்ட் பார்த்தாலே போதும். முன்னணி இசையில் பல இடங்களில் கலங்கடிக்க முயல்கிறார். ஜி.விக்கு இதுவே அறிமுகபடம் இதைகொண்டு அவர் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கும் படங்கள் பொறுத்தே இனி அவருக்கான வருங்காலம்.

Saturday, January 27, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.


குடும்பம், பிள்ளைகள், ஏன் சொந்தமென்று கூட யாருமில்லாமல் தனிமையில் வசிக்கிறிர்கள். பேருக்கு உடன் பணிபுரியும் ஒரு தோழி. இப்படியான சூழலில் பணிபுரியுமிடத்தில் ஒரு பிராணி மிகவும் துன்புறுத்தபடுவதை தினமும் காண்கிறிர்கள். நிராதரவான உங்களுக்கு அதன் மீதும். தன்னையும் பாசத்துடன் அணுகும் ஒரே ஜீவனான உங்கள் மீது அதற்கும் பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அதை உங்கள் வசிப்பிடத்திற்கும் கொண்டுவந்து விடுகிறிர்கள். இப்பொழுது நீங்கள் இருப்பது 195௦களின் காலக்கட்டம் எனவும். பணிபுரிவது அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய ரகசிய அறிவியல் ஆய்வுகூடம் எனவும். நீங்கள் எடுத்து வந்த பிராணி மனித உருவில் கடலில் கண்டெடுத்த வேற்றுகிரகவாசியா என இன்னும் உறுதி செய்யபடாத ஜீவன் எனவும் கொண்டால் இதுவே THE SHAPE OF WATER திரைப்படம்.


STEVEN SPILBERG ன் E.T படத்தின் ஞாபகம் இப்பொழுது உங்களுக்கும் வருவது சரியே. ஆனால் மணிசார் இதன் சாயலின்றி அஞ்சலி எடுத்தது போலவே இப்படமும் ஒரு அசாதாரண முயற்சி. இவ்வாறாக பெரும்பாலும் தனிமையில் மட்டுமே வாழ்பவர்கள் எதிலும் தன்னை முன்னிலை படுத்திகொள்வதோ தானே பழகியவர்களிடம் கூட வழிய சென்று உரையாடுவதோ செய்ய மாட்டார்கள் . அவர்களின் முகம் பெரும்பாலும் ஒருவித இருக்கத்துடனே காணப்படும். அவர்களின் நடையில் ஒரு கம்பீரம் காணப்பட்டாலும் ஒருவித சோர்வான மனநிலையிலே காணப்படுவர். அதிலும் பேசயியலாத ஊமைபாத்திரம் வேறு. இவ்வாறாக ஒரு பாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் கதைகளில் வெகு நுணுக்கமாக அவர்களின் அனைத்து குணாதிசியங்களும் ஏதோ சிலகாட்சிகளுக்கு மட்டுமின்றி முழு படத்திலும் இயல்பிலே இப்பாத்திரத்தின் குணாதிசயம் இதுதானோ என நினைக்கும்படியான ஒரு வாழ்கையே வாழ்ந்துள்ளார் SALLY HAWKINS.


பெரிதாக எந்தவிதமான வசீகரமும் இல்லாத இவ்வாறான பெண்ணை முழு கதையும் அவர்களை சுற்றி மட்டுமே நடக்கும் கதையில் தேர்வு செய்ததன் காரணமே பாதிபடத்தின் பின்னேதான் பார்வையாளனால் உணரயியலும். அதுவரை அனைத்தும் பொருந்தி போகிற படத்தில் சற்று கூடுதல் அழகான பெண்ணை தேர்வு செய்திருக்கலாமோ என்ற சிறு குறைபாட்டையும் அப்பாத்திரத்தை கொண்டே இயக்குனர் சமன் செய்திருப்பார். தங்கள் ஆய்வுகூடத்தில் சோதனை என்ற பெயரில் அந்த உயிரினத்தின் மீது நடக்கும் கொடுமையிலிருந்து அதை காப்பாற்ற முடிவெடுக்கும் காட்சி. அதை தன் குடியிருப்பின் அருகில் வசிக்கும் எப்போதேனும் அவள் தனது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு வயதான ஓவியருடன் விவாதிக்கும் காட்சி. அதில் இப்பெண்ணிற் க்குள்ளும் இவ்வளவு உறுதியா என ஆச்சர்யபடுத்துபவர். தன் இருப்பிடத்திற்கே அதை கொண்டு வந்தபின் பேசயியலாத தான் சைகையின் மூலம் தன்னை பற்றி விளக்கும் காட்சியில் அவளுக்குள் உள்ள மென்மனதை தன் உடல் அசைவுகளின் மூலம் நமக்கும் உணரசெய்வார். இதற்க்கு பின்னான அந்த உயிரினத்தின் பால் காதலுறும் காட்சியில் அந்த கண்களும் இதழ்களும் நம்மையும் அவள்பால் ஈர்க்கசெய்யும். இதுதான் இவள் என்று நாம் நினைத்திருந்த அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி நம்மையும் அவளை நேசிக்க செய்யும் பேரனுபவம் நிகழும்.


கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம். எந்த கதையும் கடந்த காலத்தையோ, வருங்காலத்தையோ களமாக தீர்மானித்தது சரியா என  முடிவுசெய்வது அவர்கள் தேர்ந்தெடுத்த களத்தில் அவர்களின் சரியான உருவாக்கலே அதாவது (கதை 195௦களின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டது இக்கதைக்கான பெரும் பலம்.) என்ற பார்வையாளனின் கருத்தே தீர்மானிக்கும். அக்காலகட்டத்திற்கு பொருந்தாத இல்லாத விஷயங்கள் ஏதேனும் ஒரு காட்சியில் தென்ப்பட்டால் அதுவே அந்த மொத்த கதையையும் சிதைத்திடும். PACIFIC RIM, HELL BOY இயக்குனரிடமிருந்து இப்படியான படைப்பு பெரும் ஆச்சர்யம். அதிலும் அக்காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா அவர்களுக்கிடையேயான அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை அதன் சூத்திரங்களை தாங்கள் அறிந்துகொள்ளவோ அல்லது அதை அழிக்கவோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இக்கதைக்கு எந்தஅளவில் மட்டுமே தேவையோ அதை மட்டுமே கொடுத்த இத்திரைக்கதைக்குள் சேர்த்த அதிபுத்திசாலிதனம் கனகட்சிதம்.



பின்னணி இசை மட்டுமின்றி இவர்களிடையேயான ஈர்ப்பை உணர்த்தும் காட்சிகளில் ஒலிக்கும் பாடல்களும் அதியர்புதம். அடுத்து குறிப்பிட்டு சொல்லவேண்டியது படத்தின் CG மற்றும் CINEMATOGRAPHY. சிறந்த இயக்குனர் மற்றும் நடிகை உட்பட நான்கு GOLDEN GLOBE விருதை வென்றதுடன். இவ்வருட ஆஸ்கரில் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கபட்டுள்ளது இப்படம்.

இப்படத்திற்கான ட்ரைலர் லிங்க்:

https://www.youtube.com/watch?v=RQw9P8Fpyc4

Tuesday, January 16, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 122.

சினிமாவில் மற்ற துறையினரை காட்டிலும் நடிகர்கள் சினிமா தயாரிப்பில் ஈடுபடுவது சமீபமாக  அதிகரித்துள்ளது. தங்கள் சம்பளத்திற்கு பதில் படத்தின் வசூலில் வரும் லாப சதவிகிததிற்கே தயாரிப்பு நிறுவனம் நடத்தலாம். அல்லது தாங்கள் நடிக்க தேர்ந்தெடுக்கும் கதைகள் நினைத்த படி காட்சிகள் வெளிவர ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்களே தயாரிப்பாளர்களாகவும் இருப்பதே சரியெனவும் நினைத்திருக்கலாம். ஆனால் தாங்கள் பங்குபெறாத படங்களையும் தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ முன்வருவதற்கு இரண்டு பிரதான காரணங்களே இருக்க இயலும். ஒன்று அக்கதையின் மீது கொண்ட நம்பிக்கை. இரண்டு இவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த படங்களில் இணை இயக்குனராக அந்த நபர்களின் உருவாக்களின் மீது கொண்ட நம்பிக்கை. காரணங்கள் எதுவாவாக இருப்பினும் இது போன்ற சிறு முதலீட்டு படங்கள் வெளிவருவது சினிமாவிற்கு மிகப்பெரும் பலம். இப்படம் ஒரு பெரும் நடிகனின் வெளியீடு என்பதே இப்படத்தை பார்ப்பதற்கு போதுமான காரணமாக இருந்தது.


தமிழில் பாலசந்தர் முதல் கமல்ஹாசன் வரை பெரும் இயக்குனர்கள் ஏற்கனவே முயற்சித்த திரைக்கதைதான். ஒரு சம்பவம், இரு பாத்திரங்கள் அந்த சம்பவத்தை இருவேறு நிகழ்வுகளாக கூறும் யுக்தி. இதில் இரு கொலை அதில் இரண்டாவது கொலையை இவர்தான் செய்ததாக இரு நபர்களும் ஒரே சம்பவத்தை பற்றி இரு வேறு நிகழ்வுகளாக காவல்துறை வசம் விளக்குவது. அப்படியானால் முதல் கொலை?


தன் மனைவியை கொன்றதாக காவல்துறை ஒரு நபரை விரட்டுகிறது. அவன் ஓடிஒளியும் வீட்டில் உள்ள பெண்ணின் கணவர் இறந்துவிடுகிறார். அந்த கொலையை அப்பெண் இவன்தான் செய்ததாக கூற. அவனோ தான் அங்கு செல்லும் முன்னே அப்பெண் தன்கணவனை கொன்றதாகவும் மேலும் தன் மனைவியையும் தான் கொலை செய்யவில்லை எனவும் விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் இறந்த நேரம் தெரிந்துவிடுமே. இவ்வாறு பிரதானமாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு திரைக்கதை மூலம் நேர்மையான விளக்கமும் கொடுத்துள்ளனர்.

 
மேலும் ஒரே சம்பவத்தை இருவர் வெவ்வேறு நிகழ்வுகளாக விளக்க முற்படும் காட்சிகளில் வெறும் இரு பாத்திரங்கள் மட்டுமே பங்குபெறுவதில் பார்வையாளர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஆனால் துளியும் சலிப்பெற்படுத்தாமல் இறுதிவரை பெரும் எதிர்பார்ப்புடன் கொண்டு செல்லும் அதிவேக திரைக்கதை. இது போன்ற கதைகளில் CONTINUTY மிகமுக்கியம். உதாரணமாக முதல் கைகலப்பில் ஏதேனும் பொருள் சேதாரமடைந்தால். மற்ற கதைகளை போல் அடுத்த காட்சிகளில் அப்பொருட்கள் இல்லாமலோ அல்லது வேறு மாற்று பொருளை அதற்க்கு பதில் வைக்கஇயலாது.


காவல்துறையால் தேடப்படும் நபர் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ள வீட்டில் உள்ள பெண் மற்றும் குற்றவாளியாக கருதப்படும் நபர் என இருவர் மட்டுமே முழு கதையிலும் உள்ள நிலையில் நாமே தொடர்ச்சியற்ற காட்சிகளுக்கு சமாதான யூகங்கள் செய்துகொள்ள இயலாது. “அந்த பொண்ணே சுத்தம் பண்ணிருப்பா”. அவனே சட்டை கிழிஞ்சதால வேற சட்டை மாத்தியிருப்பானு”. என்ன காட்சியோ அதை முழுதாக காட்டவேண்டிய கதை. அதில் துளியும் பார்வையாளனை ஓரவஞ்சனை செய்யாத திரைக்கதை. முழு பாராட்டையும் இயக்குனரை மீறி எடிட்டர் மற்றும் கொலைகாரனிடம் வீட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண் பாத்திரத்தில் நடித்த SONAKSHI SINHAவும் தான் பெறுகிறார்கள்.


ஒரு சாதாரண பார்வையாளன் பார்வையில் ஒரு சுவாரசிய படத்தின் பின்னால் ஒளிந்துள்ள பெரும் உழைப்பிற்கு சொந்தகாரர்களை பற்றிய கவலை ஏதுமில்லை. அவர்கள் முழு படமும் திரைக்கதையில் எந்தவித எடஞ்சலும், சறுக்கல்களும் இல்லாமல் ஓடி முடியும் வேலையில் மிகசாதாரணமாக இந்த சூவாரசிய கதைக்கு காரணமாக தோன்றுவரை பற்றி மட்டுமே சிந்திக்கவோ, அடுத்தவர்களிடம் இப்படத்தை பற்றி பகிர்கையில் கூறுவர். இப்படத்தை பற்றி மற்றவரிடம் பகிர்ந்தவர்களில் பெரும்பாலோர் நிச்சயம் இந்த இருவரை பற்றியுமே பேசியிருப்பர். அந்த உருண்ட கண்களில் கலவரத்தை வெகு இயல்பாக காட்ட முடிவதால்கூட இருக்கலாம். இவருக்கு பின்னே நடிகர்களில் பார்வையாளன் பெரும்பாலோர் கண்கள் மொய்ப்பது விசாரணை அதிகாரியாக AKSHAY KHANNA மீதே.


இது போன்ற கதைகளில் வரும் அதிகாரிகளை அதிபுத்திசாலிகளாகவும் திறமையாளர்களாகவுமே பார்த்து பழகிய நமக்கு. ஒரு சராசரி அதிகாரியாக நம்மில் ஒருவர் போல் காட்சியளிக்கும் இவர் நம்மை  ஆட்கொண்டதில் பெரிய வியப்பேதும் இல்லை. கொலை நடந்த அபார்மெண்டின் செக்யூரிட்டிகளை காவல்நிலையத்தில் விசாரிக்கையில் கான்ஸ்டபிள் ஒருவர் மழையில் சேறு அப்பிய சூவுடன் உள்ளே வந்தவர்களை சத்தமிடுவார். அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தே குற்றவாளியை AKSHAYKHANNA இறுதியில் கண்டுகொள்வார். அதே போன்று வெகு சாதாரணமாக இந்த வழக்கை பற்றி தன் மனைவி கூறும் தனது அபிப்பிராயத்தின் மூலமே இறுதி முடிவெடுப்பார். இப்படியான கதைகளில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை சுற்றி மட்டுமே பிரதான கதை நிகழும் சூழலில் ஓரத்தில் அதிகாரியாக வளம்வரும் இவரின் பாத்திர வடிவமைப்பிற்க்கு இவர்களின் உழைப்பை கொண்டே நம்மால் யூகிக்கஇயலும் பிரதான சம்பவத்திற்கான திரைக்கதைக்கு இவர்கள் உழைப்பை. DIL CHATHA HAI, BORDER போன்ற படங்களில் கும்பலில் ஒருவராக நம்மை சற்று ஈர்த்திருந்தாலும். இப்பாத்திரம் பொருந்தியளவு இதற்கு முன் இவர் ஈர்த்ததில்லை.



இதே போன்ற கதைகளை பெரும்பாலான மொழிகளில் நாம் பார்த்திருந்தாலும். இத்திரைக்கதையில் ஒரு கூடுதல் இணைப்பை சிறிதாக சேர்த்தே பெரும் சுவாரசியத்தை கொடுத்துள்ளார் திரைக்கதையாளர் மற்றும் அறிமுக இயக்குனர் ABAYCHOPRA.

https://www.youtube.com/watch?v=mvfvoCdPrII

Monday, December 25, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 098.
நமது புறச்சூழல் காரணமாக அல்லது வேறொரு நபரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து குறிப்பிட்ட ஹீரோ தானும் மீண்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுவதுதான் சினிமாக்களின் கருப்பொருள் என்பதான புரிதல் நமக்கு எப்பொழுதோ வந்துவிட்டது. இதனாலேயே நாம் பார்க்கும் படங்கள் முதல் யோசிக்கும் கதைகள் வரை இவ்வாறே உள்ளது.
நமது அகச்சூழல் குறித்த கதைகளையும், சினிமாக்களும் பெரும்பாலும் நாம் நிராகரிக்க கூறும் காரணம். அவை மிக மெதுவாக நகர்வது போன்ற நமது எண்ணம். பெரும்பாலும் தங்கள் சினிமாக்களில் அகச்சூழல் குறித்த கதைகளை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இயங்கும் சினிமா துறையிலிருந்து ஒரு படம் இப்பொழுது...

குடும்ப நண்பர்கள் (மூன்று ஜோடிகள்) தங்களது நண்பர் ஜெர்மனிலிருந்து தனக்கு பெண் பார்க்க வருபவரை, இவர்கள் பார்த்த பெண்ணோடு சேர்த்து வார விடுமுறையை கொண்டாட, ஒரு கடற்கரையை ஒட்டியுள்ள வில்லாவில் தங்குகிறார்கள். உடனே அங்கு ஒருவர் கொலை செய்யப்படுவார், அல்லது அந்த வில்லாவில் அமானுசிய சம்பவங்கள் நடைபெறும் போன்ற கற்பனை வருதுனா நேரா முதல் பத்திக்கு திரும்ப போய்டுங்க.
கடற்கரையில் விளையாடும் குழந்தை ஒன்றை காப்பாற்ற கடலில் குதிக்கும் அந்த எல்லி என்ற பெண் பாத்திரம் இறந்துவிடுகிறாள். இதன்பின் வரும் நடைமுறை சிக்கல்களை மட்டுமே முழுக்க முழுக்க அலசும் கதை.
முழுக்க அந்த கடற்கரையும், அதை ஒட்டியுள்ள அந்த பழைய வீட்டிலும் முழு இரண்டு மணிநேர கதையும் நிகழ்கிறது. வெறும் இவர்களது வாதங்களோடே கடந்தாலும், உள்ள சொற்ப பாத்திரங்களை கொண்டு எங்கும் நம்மை சோம்பல் முறிக்கவிடாமல் செய்த உருவாக்கல்.
கதையின் துவக்கம் முதல் இறுதிவரை நம்முடனே பயணிப்பது அந்த கடல் அலையின் ஒலி மட்டுமே. துவக்கத்தில் அவர்களது களிப்புகளுடன் அந்த அலைகள் சந்தோசமாகவும். கடலில் தொலைந்த எல்லியையும், அந்த குழந்தையையும் தேடும் கணங்களில் மிக பயங்கரமாகவும். எல்லியின் காதலனின் வருகைக்கு பின் அதே அலையின் ஒலி மிகத்துயரமாக நமக்கு கேட்கும்படியான (மோனோலிசா ஓவிய கோட்பாட்டின் படியான) உருவாக்கல்.
ஆண் பாத்திரங்களின் துயரம், ஏமாற்றம், அழுகைகளை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருந்தாலும். இறந்த காதலியை தேடி வரும் ஒரு ஆண் பாத்திரம். துளி கண்ணீரும் இல்லாமல் வெறும் சோகத்தை மட்டுமே சுமந்து வரும் அந்த முகம் நமக்குள் ஏற்ப்படுத்தும் துயரத்தை மறக்க பல நாட்கள் ஆகலாம். மேலும் #Sepideh எனும் பாத்திரத்தில் வரும் பேரழகியும்..
இதன் இயக்குனர் #Asghar_Farhadi இவரே தற்போது ஆஸ்கார் பரிந்துரையில் இறுதி சுற்றுவரை எட்டி உள்ள #The_Salesman படத்தின் இயக்குனர். மேலும் 2011-ல் “Best Foreign Language Film of the Year” #A_Separation படத்திற்கு ஆஸ்கர் வென்றவரும் இவரே.

Thursday, December 21, 2017


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 121


முதல் மூன்று நிமிடம் இயற்கை எழில் கொஞ்சும் வனங்களும், பனி பொழியும் நீரோடை வழியாகவும். எந்த பின்னணி இசையோ, பறவைகளின் ஒலியோ, ஓடும் நீரின் சத்தமோ இல்லாமல் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் நமக்கு உணரவைத்தது ஒன்றைத்தான். அதாவது நாம் மிக ரசிக்கும் அனைத்தும் நம் அருகில் இருப்பினும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற வெறுமையை.  இப்படியான ஒரு கதைக்கும் அது தாங்கிவரும் இந்த கனத்த வெறுமையையும் துவக்கம் முதலே பார்வையாளனுக்கு பழக்க வறண்ட நிலத்தையோ, அழும் குழந்தயையோ படமாக்காமல், கதை நிகழும் களத்தை ஒட்டிய இயற்கை காட்சிகளை கொண்டே இந்த வெறுமையை நமக்குள் புகுத்திய இயக்குனரை இந்த மூன்று நிமிட காட்சிகளுக்குள்ளே புகழ்ந்திட எண்ணுவோர் எண்ணிவிடவும். ஏனெனில் இந்த நிமிடங்களுக்கு பின்னே இந்த கதையின் கனத்த வெறுமையை நமக்கும் கொடுத்து நம்மையும் இக்கதையின் பாத்திரங்களை போல் அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா வெறுமை நிலைக்கு ஆட்படுத்த இருக்கிறார்.


அந்த மூன்று நிமிடங்களுக்கு பின்னாக கதையின் துவக்கம். பள்ளியில் இருந்து வெளியேறும் சிறுவர் கூட்டம். இதில் எந்த சிறுவனின் பின்னால் கேமரா செல்லுமோ அவனே நமது அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான எஜமானன். அப்பொழுது தெரியாது அடுத்த நம் அடுத்த சில நாட்களையும் இச்சிறுவனும் அவனது வெறுமையும் ஆட்கொள்ள போகிறதென்று. ஒரு கணவன் & மனைவி சட்டப்படி விவாகரத்துக்கு காத்திருக்க அவர்களது பன்னிரண்டு வயது மகனின் நிலையை, உணர்வை, அவனது எதிர்காலம் பற்றிய பயத்தை பார்வையாளர் அனைவருக்கும் கடத்திய வகையில் கவனிக்க வேண்டிய சினிமா.


ஒருவரிடமிருந்து நாம் ஒதுங்க நினைக்கும் சூழலில், பிடிமானம் இல்லாத நமக்கு ஒரு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் நமது வெறுப்பின் அளவு அவர்களின் பால் சற்று அதிகமாகவே இருக்கும். நாம் ஒதுங்க நினைத்தது நம் கணவனிடமோ, மனைவிடமிருந்தோ எனில்? நமக்கென மற்றொரு இணையும் இருக்கும்பட்சத்தில். பரஸ்பரம் புரிதலுடன் விவாகரத்திற்கு காத்திருக்கும் இவர்களின் மிகப்பெரும் தலைவலி அவர்களது குழந்தை. அத்தலைவலிக்கான காரணத்தை ஆராயாமல், இவர்கள் இருவருக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய தினம் அச்சிறுவன் விட்டைவிட்டு வெளியேறுகிறான்.


உடனே அலைந்து திரிந்து அச்சிறுவனை கண்டடைந்து தங்களின் கீழ்மைநிலைக்கு வருந்தி கண்ணிருடன் மூவரும் இணையும் வழக்கமான கதையாக இல்லாமல், துவக்கம் முதலே அச்சிறுவனிடம் வெறுப்பை உமிழும் தாயாகவும். தன் மகன் மாயமானத்தின் பின் அவனை கண்டடைவதில் காட்டும் முனைப்பிலும். தற்போதும் அவன் மீதிருந்த அதே நிலையிலேயே அவனை தேட துவங்கும் இடங்களிலேயே இக்கதையும் அப்பெண் பாத்திரமும் தனிபெரும் கவனம் பெறுகிறது. கதையின் துவக்கத்தில் மாயமாகும் சிறுவன் பின் எந்த இடத்திலும் காட்சிகளில் தேவைபடாத கதை. ஆனால் கதை முழுக்க இல்லாத அந்த சிறுவனை பற்றியே.


மிக சரியாக இக்கதை துவங்கும் இடம் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலிருந்தே. அதற்கான காரணமாக இக்கதை சொல்வது அவன் பெற்றோர்கள் இடையேயான வாக்குவாதம் எனில். முழு கதைக்கும் அச்சாணியான அக்காட்சி பார்வையாளனுக்கும் அந்த தம்பதியரின்மேல் எவ்வாறான எண்ணத்தை விதைக்க வேண்டும். இக்காட்சி மட்டுமே அச்சிறுவனே அதற்க்கு பின் முழு கதையிலும் இல்லாவிடினும் அவனின் மேல் இறுதிவரை பச்சாதாபத்தை விதைக்க செய்யும் ஒரே காட்சி. இவ்வாறான காட்சிக்கு ஆழ்ந்த வசனங்களும் தேர்ந்த நடிகர்கள் மட்டுமே போதாது. வாதம் நடைபெறும் சூழல், நாம் பார்க்கும் கோணம் முதற்கொண்டு அவசியமாகிறது. அப்படியான ஒரு காட்சியும் அரங்கேறுகிறது.. அவர்களின் முழு வாதமும் நிறைவுறும் சூழல்வரை தென்படாத அச்சிறுவன் கழிவறையின் இருளில் நின்று ஒலி எழுப்பாமல் கதறுவது போன்ற ஒரு ஷாட் இரு வினாடிகள் மட்டுமே. ஆனால் அந்த இரு வினாடி பார்வையாளனுக்கு கொடுக்க போகும் வலி அவ்வளவு சுலபமாக வார்த்தைபடுத்த இயலாது.



இறுதியான  ஷாட் அத்துடன் படம் நிறைவடையும் அதன் பின்னே பார்வையாளன் அனைவருக்கும் படம் நெடுகிலும் எழுந்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அந்த ஒரே ஷாட்டில் உள்ளது. அதும்போக அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். வெறும் வார்த்தைகளுக்கான வீரியத்தை அந்த தம்பதியரின் வாதத்தில் கவனிக்கலாம். இறுதியில் TREAD MILL ல் ஓடும் தாய்பாத்திரம் வரும் ஷாட் சொல்லும் செய்தி. இவ்வளவு தேடலுக்கு பின்னும் தான் தனது நிலையிலிருந்து மாறாமல் அதே இடத்தில் நிற்ப்பது என முழுநீள படத்தின் இறுதி காட்சிவரை இயக்குனரின் தனி சாம்ராஜ்யமே.    


படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8

Search This Blog