Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, August 12, 2019





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 148.


திரைப்படங்கள் பார்க்கும் போது பொதுவா எந்த இடையூறும் இல்லாமல் தனியறையில் இரவு நேரங்களில் பார்ப்பது வழக்கம். சில Crime, Horror வகையறா கதைகளில் சட்டென எனக்கு பின்புறமும் யாரோ நிற்ப்பது போலவும், அறையின் வாசலில் நின்று யாரோ கண்காணிப்பது போலவும்  துணுக்குற்று சட்டென பதறி அறையின்  விளக்குளை ஒளிர  செய்தும்.  பின் அனைத்து அறைகளின் விளக்குகளையும் சமையலரை வரை ஏற்றி தண்ணீர் குடித்து. பின் சிறிது நேரம் கழித்து அந்த படத்தை தொடர்வதும் நிகழும். அதிக பயத்தில் அந்த இரவில் சத்தமாக குரல்எழுப்புவதும் அவ்வப்போது நிகழும். ஆனால் ஒருபோதும் அந்த படத்தை தொடர்ந்து பார்ப்பது நிகழாமல் இருந்ததில்லை. போர்வையை ஒரு கண் மட்டும் தெரியும் அளவில் முழுக்க போர்த்தி கொண்டேனும் மீதி படத்தை பார்த்ததும் உண்டு. ஆனால்  முதல் முறை ஒரு படத்தை அந்த குறிப்பிட்ட காட்சிக்கு பின் பார்க்கும் சக்தியின்றி நிறுத்தியது இந்த படத்திற்கு மட்டுமே. இரண்டு நாட்களுக்கு பின் மீதம் கதையை பகலில் பார்த்த அதிசயம் நிகழ்ந்தது இந்த படத்திற்கு மட்டுமே.


இதே கதையம்சம் கொண்ட பல படங்கள் இதற்க்கு முன் பார்த்திருபோம். படத்தின் முழுகதையையும் ஒருவாறு யூகமும் செய்திருப்போம். இதும் அச்சு அசல் அதே கதைதான். வெறும் திரைக்கதை இல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையை வெறும் வாய்ஸ் ஓவர்ல பாடம் எடுப்பதுபோல சொல்லாமல் கதையோட போக்கில் சொன்ன விதத்துலதான் பெரிய ஆச்சர்யத்த கொடுத்திருக்காங்க. நாயகி டாப்சீக்கு ஒரு முன்கதை  உண்டு. அதனாலதான் அவங்க இப்படி நடந்துக்கறாங்கனு மட்டும் நமக்கு தெரியும். ஆனா அந்த FLASHBACK என்னான்னு அதுக்கு தனியா ஒரு 30 நிமிசத்தை செலவுபண்ணி படத்தோட நீளத்தை அதிகபடுத்தாம. ரொம்ப சரியா ஒரு மணி நாப்பது நிமிசத்துல முழுபடமும் முடியுது.
ஆனாலும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தே அவரின் முன்கதையை நமக்கு உணர வெச்ச விதத்திலேயே  Ashwin Saravanan தனித்துவமா தெரியறார். இதுக்கு முன்னால அவர் படம் “மாயா”வ வெச்சே பாத்தாகூட அது நமக்கு தெரியும். இருட்டுக்கு பயப்படும் ஒரு பாத்திரம். அதுக்கான சரியான காரணத்தோட, இயல்பு நிலைக்கு திரும்ப குடும்பத்தை விட்டு ஒரு வேலைக்கார பெண்மணியோட தனியா வாசிக்கறாங்க. இயல்புநிலைக்கு திரும்பறதுக்கு முன்னமே தற்கொலைக்கு முயற்சி பண்ணி ரெண்டு காலிலும் எலும்பு முறிவோட சக்கர நாற்காலில இருக்காங்க. என்ன ஏதுன்னு எந்த காரணமும் இல்லாம தனியாக வசிக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் பாத்திரம். அவனோட பார்வை இவங்க மேலவிழுது. இவங்க சந்திக்கும் புள்ளி சரியா பாதி படத்துல. அதும் அவங்க வீட்டுக்கு உள்ளே. மீதி கிட்டத்தட்ட நாற்பது நிமிச கதை அந்த வீட்டுக்கு உள்ளேயே.


இதே போல ஏற்கனவே குறிப்பிட்ட மாறி பலபடங்கள் இருக்கு. ஆனா அதெல்லாமும் விட சிறந்ததா இத நினைக்க காரணம். அந்த படங்கள் முழுக்கவே கொலைகாரன் நெறைய சித்ரவதை பண்ணி கொலை செய்பவனா இருக்கும். இல்ல,  இந்த கொலைகளை ரொம்ப கலைநயமா ரசிச்சு பண்றவனா இருக்கும். அதும் இல்லனா இவன் ஏன் இதுபோல மாறினானு நம்ம அவன்மேல பரிதாபடும்படியான முன்கதை சுருக்கம் இருக்கும். இது எதும் இல்லாம அவன பெரிய புத்திசாலியா மட்டும் காட்டியதில் தனிச்சு தெரியுது இந்த படம்.  அதும் அவனோட கொலையில் ஒன்னே ஒன்னு மட்டும்தான் அதும் Titlecard லயே வந்திடும். பெருசா ரொம்ப நேரம்லாம் எடுத்துக்காம சட்டுன்னு முடிச்சிடுவான். ஆனா, ரொம்ப அழுத்தமா அத மனசுல பதியவெச்சிடுவார் இயக்குனர். ஏன்னா அடுத்த கொலை கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு பின்னால நாயகிய கொல்ல வரும்போதுதான் அந்த பாத்திரமும் கதைக்குள்ள திரும்பவரும்.



ஆனாலும் ஆரம்ப சம்பவத்துல அவர்கொடுத்த அழுத்தம் நமக்கு அப்படியே இருக்கும். “மாயா” மாறியே ஒரு அமானுஷ்ய கிளைகதையும் இந்த கதையோடவே பயணமாகும். ஆனா அந்த படம் அளவுக்கு இதுல முக்கியத்துவம் இருக்காது. அத ரொம்ப எளிமையா அவங்களோட Tatoo மூலமே நமக்கு புரியவெச்சிட்டாரு. இந்த  போல கதைகளுக்கு Sound Mixing, Editing & Camera எவ்ளோ முக்கியம் அப்படினு இந்த படத்துல ஒரு சாதாரண  பார்வையாளனும் அத Realize பண்ணிக்கற அளவு Technical பக்கம் அட்டகாசமா வொர்க் பண்ணிருக்காங்க. சின்ன சத்தங்கள் ஒரு சுமாரான திரையரங்கத்தில் பாக்கும் போதுகூட உணரும்படியா  இருந்தது. ரொம்ப பயங்கரமா ஆரமிக்கும் கதை எப்படியும் போக போக அந்த சுவாரசியம் எங்காவது தடையாகும். ஆனா கடைசிவரை அந்த திகிலோட மட்டுமில்லாம நெறைய சூவாரசியங்களோடவும் கொண்டு வந்து முடிச்சதில் ரொம்பவே கவனிக்கவெச்சிட்டார் Aswin Saravanan. சில இயக்குனர்களோட அடுத்த படம் எப்ப வரும்னு காத்திருப்போம்ல.  இனி அந்த பட்டியல்ல இவரோட பேரும் இருக்கும்.  

Saturday, August 3, 2019


வாசித்ததில் வசீகரித்தவை - ௦௦2.


“குறள் கதைகள்”ங்கற தலைப்புல தினமும் ஒரு குரள் பத்தி முகநூல்ல பதிவு வருதே கவனிச்சியானு?” நண்பர் ஒருவர் கேக்க. அதும் அவர் உனக்கு MUTUAL FRIENDனு காட்டுதும் சொன்னார். கலைஞர்ல இருந்து பாப்பையா வரை பெரிய பெரிய அறிஞர்கள் விளக்க உரைனு தனி புத்தகங்களே வெளியிட்டு இருக்காங்க. அவங்களாம் சொல்லாத என்ன சூவாரசியத்த இவர் சொல்லி இருக்க போறார். அவர் யாருன்னு தெரிஞ்சிக்கறத விட இதுதான் முதல்ல தோணின விஷயம். புத்தகம் வாசிப்பது மட்டும்தான் அவரோட ஒரே பொழுதுபோக்கு, பிடிச்ச விஷயம் எல்லாமே. அப்படிப்பட்டவரே சொல்றாறேனு ஆர்வமா பாத்தா அப்பத்தான் இவர் எழுத தொடங்கிய நேரம்.


முகநூல்ல நமக்கு பிடிச்ச துறைசார்ந்த பதிவிடறவங்கள நாம விரும்பி நம்ம நட்பு பட்டியல்ல இணைத்து கொள்வோம் இல்லையா?. அப்படி ஆரம்பகாலத்திலே இணைத்து கொண்டவரில் இவர் முக்கியமானவர். காரணம் இவர் ரசித்த சினிமா குறித்த பதிவுகள். பின் இவரது BLOG அறிமுகம். அதிலுள்ள இவரது கதைகள் இவரின் மேல் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. துரதிஷ்டவசமாக ஒருமுறை எங்களது சந்திப்பும் நிகழ்ந்தது தனிக்கதை.


நல்ல சிறுகதைகள் கிட்டத்தட்ட முப்பது கதைகளின் தொகுப்பு இப்புத்தகம். அது நம்ம சிறுவர்மலரில் படிக்கும் நீதிகதைகளை போல நமக்கு அறிவுரை மட்டுமே சொல்லாம. ஒரு நல்ல கதையாவும் இருந்ததுதான் இந்த பதிவுகள் புத்தகவடிவம் பெற ரொம்ப முக்கிய காரணமா இருக்கும். அதும் இருவருக்கு இடையேயான உரையாடலாவே பெரும்பாலான கதைகள் அமைஞ்சது நம்மாள ரொம்ப எளிமையா உள்வாங்கிக்கவும் முடிஞ்சது.


அந்த கதைகளை ரொம்ப சரியா அதோட முடிவுல ஒவ்வொரு குறளுக்குள்ளயும் பொருத்தும் அந்த லாவகம் கண்டிப்பா வெறும் சிறந்த முகநூல் பதிவர்கள் எல்லோருக்கும் கைகூடி வர விஷயம் இல்லைன்னு இதுல எந்த கதைய படிச்சாலும் உங்களால உணரமுடியும். ரொம்ப எளிமையான உரையாடல் வடிவத்துல மட்டுமே இந்த கதைகள் இருக்கறதால கண்டிப்பா ஒரு முறைல முழு புத்தகத்தையும் படிச்சு முடிச்சிட முடியும்.


வெறும் உரையாடல் வடிவ கதையா இருந்தாகூட அடுத்தடுத்த கதைகள்ள  முந்தின கதையோ. அந்த பாத்திரங்களின் பாதிப்போ நம்மாள கண்டிப்பா உணரமுடியாது. அதிலும் சமகால அரசியல், சினிமா வரை தொட்டு சென்றது உண்மையா இவரோட தனித்தன்மை. அதிலும் பலதரப்பட்ட மனிதர்களை கதையோட முதல் வரியிலேயே பேச்சு வழக்குலையோ, குணாதிசியத்திலோ நமக்கு எந்த உறுத்தலும் இல்லாம அவங்கள ஏத்துக்க வச்சிடறார். வெறும் நம்ம ஓய்வு நேரத்தை கழிக்க மட்டுமில்லாம அர்த்தமா நாம மத்தவங்களுக்கு பரிந்துரைக்கும் புத்தகமாவும் இது கண்டிப்பா இருக்கும்.


ஒரே அதிகாரம் சார்ந்த கதைகளே தொடர்ந்து வருவது மட்டுமே சிறு குறை.  

Saturday, July 13, 2019


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 147.

குடும்ப உறவுகளை மையபடுத்தி கதை சொல்லும் பாணி கருப்பு வெள்ளை காலத்திலேயே குறையதொடங்கி இருந்தாலும். அதற்க்கு  பின்னான ரஜினி, கமல் காலத்திலும் கூட கதையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு நூலிழை அளவேனும் அவர்களது குடும்ப உறவுகளை காரணமாக்கினர். உதாரணமாக தன் தந்தை முதல் காதலி வரை எதை இழந்தாலும் எந்தவகையிலும் நிதானத்தை இழக்காதவர். ஒரே நொடி நிதானத்தை இழந்ததால் சிறை செல்லும் சூழல். தன் அனைத்து மக்களின் கண்ணீருக்கு இடையில் கையில் விலங்குடன் சிறைசெல்ல அந்த சிறு கிராமத்தில் இருந்து ரயில் நிலையம் அழைத்து வரப்படுகிறார். தனது இந்த சூழலுக்காக சிறு கலக்கம் அவரிடம் இருந்தாலும். கதையின் முதல் முப்பது நிமிடம் அவரிடமிருந்த தெளிவு. இந்த இறுதி பத்து நிமிட காட்சிகளில் தென்படும். இந்த சூழலிலும் கம்பீரத்துடன் வரும் சக்திவேலை சில நொடி காட்சியென்றாலும் அசைத்து பார்த்தது கர்ப்பிணி பஞ்சவர்ணம். அதுவரை அந்த கிராம மக்களை போல் வெறும் வருத்தத்துடன் மட்டும் இருந்த மொத்த பார்வையாளனையும், தன் மனைவியின் கண்களை அவன் சந்திக்கும் நொடியில் கண்கலங்க வைக்கும். இதில் எங்கயும் தன் குடும்பத்தை இணைச்சு மேலதிக பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டிய சூழல் இல்லையென்றாலும் அந்த காட்சியோட நாம கொஞ்சம் கூடுதலா நம்ம ஒன்றவைக்க பயன்படுத்தி இருப்பாங்க.


இவங்க இத பயன்படுத்தி கொள்ளும் அளவுகோல் வேறுபட்டாலும் அந்தந்த காலத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தி இருக்காங்க. பயன்படுத்தறாங்க. இன்னுமொரு நூற்றாண்டு காலத்துக்கு பின்னும் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்ட கதைகளை இந்திய சினிமா பயன்படுத்தும். காரணம் நாயக்கரோட மரணத்தை விட அம்மாவோட சாவுக்கு நீங்கதான் காரணம்னு சொல்றாங்கனு அவர் பொண்ணு கேட்டதுதான் நமக்கு பெரிய பாதிப்ப கொடுக்கும்.
இப்ப இந்த JERSEY அப்படிங்கற இந்த தலைப்பே சொல்லிடும் இந்த படத்தோட கான்செப்ட்ட. உலகத்துல எந்த ZONAL கதையை எடுத்துகொண்டாலும் பொதுவான சில விசயங்களை தவிர்த்து மற்றதெல்லாம் புதுசா பண்ணுவாங்க அவங்க சாமர்த்தியத்தை பொறுத்து. ஆனா ஸ்போர்ட்ஸ் ZONAL படங்கள்ல மட்டும்தான் உலகம்பூரா ஒரே அடிப்படை. ரொம்ப ஏழ்மை பின்னணி. அவனது லட்சியத்திற்கு பெற்றோர் கூட ஆதரவா இல்லாமல் இருப்பது. நிச்சயம் அவன் காதலை கூட தன் லட்சியத்திற்காக தியாகம் பண்றதுன்னு இதுக்குள்ளவே மட்டும்தான் படம் பண்ணுவாங்க. கிட்டத்தட்ட இதே சாயல்ல சில வருசங்களுக்கு முன்ன வந்த 1983 மலையாள படத்துல மேல சொன்ன அத்தனையும் இருக்கும். இருந்தும் அது தனிச்சு தெரிஞ்சது. அவங்களுக்கே உண்டான அந்த யதார்த்த உருவாக்கள் மூலமா.


ஆனா இதுல வழக்காமான காட்சிகள் பூரா கூடுமானவரைக்கும் தவிர்த்து. புதுசானு சொல்லமுடியலனா கூட குட்டி குட்டியா நெறைய நெகிழ செய்யும் காட்சிகள் மூலமா கொஞ்சம் ஆழமாவே நம்மள திருப்திபடுத்தும் படம். இது நான் ஈ மூலம்தான் இவர் பெரும்பாலோருக்கு முதல் அறிமுகம். ஆனா இங்க TELUGUல AWE மாறி படங்களை கூட வெளியீடு பண்றஅளவு வளந்து இருக்கார். சில வருஷங்கள்ல எப்படி இந்த வளர்ச்சினு இந்த படத்த பாத்தா புரியும். முழுக்க இவர மட்டுமே சுத்தி சுழலும் கதை. அத ரொம்ப இயல்பா அசால்ட்டா பண்ணிருக்காரு. இந்த ஸ்போர்ட்ஸ் கதைகள்ல இறுதி காட்சியோட கடைசி ஷாட் வரைக்கும் வெறும் தோல்விகளை மட்டும்தான் நாயகன் பாத்து வந்திருப்பாங்க. முதல்ல இந்த அடிப்படைய ஓரளவு மீறிவந்த படம் இதுதான்.


நாணி, சாரதா ஸ்ரீநாத், அவங்க பையன் அப்பறம் அவரோட கிரிக்கெட் இதுதான் முழுபடமும். நானியையும், கிரிக்கெட்டையும் எடுத்துட்டா மீதம் இருக்கற ரெண்டுபேர்ல. அந்த பையன் அவன் எப்படி நடிச்சி இருந்தாலும் சின்ன பையங்கறதால அது நம்ம மனசு ஏத்துக்கும். மீதி இருக்கறது சாரதா ஸ்ரீநாத்தான். படத்தோட முதல் ஷாட்ல இருந்து கடைசி ஷாட்வரை நாயகனுக்கு சமமா இந்த கதையோட அத்தனை திருப்பத்துக்கும் முழு காரணகர்த்தாவா அவங்க பாத்திரத்த நானிக்கு சமமா கொண்டு போறவங்க இவங்கதான். சும்மா சொல்லகூடாது அடிச்சி விளையாண்டது இந்த கதைல இவங்கதான்.


ஜெர்சினு டைட்டில் கார்ட் வர அந்த ஷாட்லையே இவங்க மூணுபேரோட குடும்ப பின்னணிய புரியவெச்சி இருப்பாரு இயக்குனர். அந்த ஷாட்டே
சொல்லிடும் இது நாம பாக்க வேண்டிய படமா இல்லையான்னு. இயக்குனர் அப்பறம் TECHNICAL TEAMனு யாரையும் தெரியல. தெலுங்கு படம் அதிகம் அறிமுகமில்ல எனக்கு. ஆனா 1985, 1995, 2019 இந்த மூணு காலகட்டத்தையும் நமக்கு எந்த நெருடலும் வராம இவங்க PRESENT பன்னதுக்கே ரொம்ப பெருசா பாராட்டு தெரிவிக்கலாம்.

Friday, July 5, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 146.


த்ரில்லர் கதைகளின் சுவாரசியமே நடந்த சம்பவத்தின் மூலம் கிடைக்கும் துப்புகளை கொண்டு குற்றவாளியை எவ்வாறு நெருங்குகிறார்கள் என்பதில் ஒளிந்துள்ளது. மற்றொரு வகை குற்றவாளி தான் செய்த குற்றங்களில் இருந்து எந்தவகையில் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் என்பதில். பெரும்பாலான கதைகள் இந்த இருவகைகளுக்குள்ளே அடங்கும். சமீபமாக  இவ்வாறான படங்களில் வேறொரு கூடுதல் சுவாரசியத்தை கதைநெடுக பயணிக்க வைத்து. அதை முக்கிய இடங்களில் ஓப்பன் செய்து பார்வையாளரை மேலும் இந்த கதையுடனே ஒன்ற வைக்கும் யுக்தியை இத்தலைமுறை இயக்குனர்கள் கையாள்கின்றனர். இவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிலும் பெரும் மகிழ்ச்சி இவர் கன்னட இயக்குனர் என்பது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இறந்த சடலங்களின் எலும்புகள் தற்போது கண்டெடுக்கபடுகிறது. இறந்தவர்களின் வயது, பாலினம், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இதை மட்டுமே கொண்டு ரொம்ப விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கார். ரொம்ப பயங்கர சத்தமான பின்னணி இசை, இருட்டு வீட்டுக்குள்ள டார்ச் அடிச்சிட்டு போய் க்ளு ஏதாவது கிடைக்குமான்னு தேடும் காட்சிகள். இருட்டு உருவம் பின்தொடரும் காட்சிகள்னு. அதிகமா பார்வையாளன் பாத்து பாத்து புளித்துபோன எந்த காட்சியும் இதுல பயன்படுத்தாம ரொம்ப கவனமா தவிர்த்ததுக்கே ரொம்ப பாராட்டனும்.

பவன்குமார் (LUCIA, UTURN படங்களின் இயக்குனர்) புண்ணியத்துல கன்னடபடம் பாக்க ஆரமிச்சதுல பெரிய புண்ணியமே ஆனந் நாக் மாறி ஒரு அசாதாரண நடிகனோட சில படங்கள பாக்க முடிஞ்சதுதான். GODHI BANNA SADHARANA MYKATTU படத்துலகூட இதே சிலநாள் வெள்ளை தாடியும் வாராத தலைமுடியோட கண்ணுக்கு கீழ சுருக்கம்னு பாத்த உடனே பாவம் வயசானவர்னு சொல்ற தோற்றத்துல அவ்ளோ ஆச்சர்யபடுத்தினார். ஆனா இந்த படத்தோட களம், இவருக்கான பாத்திரம்னு எல்லாம் அப்படியே நேர்ரெதிர் இதுல. ஆனா கிட்டத்தட்ட அதே தோற்றத்துல அவ்ளோ ஈர்க்க வெச்சிடறார்.
அப்பறம் க்ரைம் போலீசா ஆகற கனவுல இருக்கும் டிராபிக் போலீஸ் வேடத்துல வரவர். இவர்தான் பெருசா யாருமே கண்டுக்காத இந்த அட்ரஸ் இல்லாத நாப்பது வருஷங்களுக்கு முந்தின எலும்பு கூடுகளுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கறார். நீங்க நெனச்சமாறியே UNOFFICIAL யாதான். அதும் எந்த க்ளுவும் இல்லாத வெறும் எலும்புகூடகளை வெச்சி கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ரொம்ப சூவாரசியமா கொண்டு போறாரு இயக்குனர்.

அதிலும் இவர்  டிராபிக் போலீஸ் வேலைமேல சுத்தமா விருப்பமே இல்லாம இருக்கறவறா வருவார். ஒரு காட்சில சேர்ல உக்காந்து சாக்ஸ் & சூ போட்ற மாறி ஷாட். சும்மா ஒரு பத்து வினாடி வரும். அதுல குதிங்காலுக்கு மேல அளவு கம்மியான சூ போட்டா கடிக்குமே சரியா அந்த இடத்துல பிளாஸ்டர் ஒட்டிட்டு சாக்ஸ் போடுவாரு. அந்த வேலை அவருக்கு பொருந்தாம அந்த சூ மாறி கடிக்குதுன்னு சொல்றமாரி அந்த ஷாட் ரொம்ப ரசிச்சு பாத்தது. படம் முழுக்க இப்படியான ஷாட்ஸ் நெறைய நம்மள ஆச்சர்யபடுத்துது.


TECHNICAL பக்கம் ரொம்ப ரசிக்க வெச்சது முன்னமே சொன்ன மாறி வழக்கமா THRILLER கதைகள்ல பயன்படுத்துன எந்த காட்சிகளையும் ரொம்ப கவனமா தவிர்த்தது. நாப்பது வருஷங்களுக்கு முந்தின காட்சிகளுக்கு பழைய பிலிம் ரோல் டைப் கலர் லைட்டிங் பயன்படுத்தினது. இந்த நிகழ்கால காட்சிகளுக்கும் ரொம்ப அதிக வெளிச்சத்தை பயன்படுத்தினா எடிட்டிங்ல காட்சிகள் முன்ன பின்னமாறி வரும் போது ஆடியன்ஷுக்கு லைட்டிங் அதிகமா கதையோட ஒன்ற சிரமமா இருக்கும்னு தவிர்த்தது. இதெல்லாம் பயன்படுத்தணும்னு நெனக்கறதுக்கு முன்னமே எதெல்லாம் பயன்படுத்த கூடாதுன்னு யோசிச்சி இருப்பாங்கனு நினைக்கறேன். யாருக்கும் தவறவிட வேண்டிய படைப்பா நிச்சயம் இது இருக்காது. 

Trailer Link: 

https://www.youtube.com/watch?v=5w1vgMoPMRA

Monday, April 1, 2019




WEB SERIES -002

நமக்கு பின்னால 15 வருஷம் கழிச்சுதான் சினிமாதுறைக்கு வந்து இருக்காங்க. இப்பவும் நம்மளவிட சரிபாதி எண்ணிக்கைக்கு கீழதான் இவங்க படங்கள் வெளியிடறாங்க. நம்மை போலவே ஆரம்பகட்டத்துல மட்டுமே இருக்கும் இந்த (ZOMBIE) வகை கதைகளில் (தொழில்நுட்பத்தில்) உச்சம் தொட இவங்களுக்கு மட்டும் சாத்தியமானது எப்படி? ஒவ்வொரு காலத்திலும் அறிமுகமாகுற தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கும் நாம, நம்மளயும் அறியாம நம்ம நேட்டிவிட்டியை மறந்து முழுக்க அது பின்னாளையே போறோமோ? ஏன்னா, இங்கயும் இந்த செலவுல இந்தமாறி கதைகள பண்றவங்க இருக்காங்க. ஆனா பிரதானமா இந்த ZOMBIE அதுக்கான MAKEUP, CG வொர்க், அதோட நடை, உடை, பாவனைனு முழு கவனத்தையும் செலுத்தி அட்டகாசமா ஒரு டீசர் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா படத்துல போய் பாத்தா ஆச்சர்யபட்ட விஷயம் மட்டும்தான் பிரதானமா இருக்கும். பிரதானமா இருக்கவேண்டிய திரைக்கதைல சொதப்பிடுவோம்.


ஏன்.. இவங்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தலையானு கேக்கலாம், பயன்படுத்தி இருக்காங்க. ஆனா, இந்த தொழில்நுட்பம் அவங்க கதையையும், திரைக்கதையையும் எங்கயும் சிதைக்காம எவ்ளோ அழகா ஸ்க்ரீன் ப்ரெசென்ட் பண்ணியிருக்காங்கன்னு பாத்திங்கனா தெரியும்.  இதுக்கும் கதை 1800 கள்ல நடக்குது. இப்ப மேக்கப் மட்டுமே தேவைப்படும் கம்மியளவு பாதிப்படஞ்ச ZOMBIE களுக்கு, வலுக்கட்டாயமா CG பயன்படுத்தினா அதுங்க (ZOMBIE) அதிகமா ஸ்க்ரீன்ல வரும்போது செயற்கைதனமா தெரியும். இவங்க ஒரு ஷாட்ல கூட அப்படியான அதிகப்படி வேலைங்க எதுமே பண்ணாம, ஆனா கதைக்கு தேவைப்படும் இடத்துல ரொம்ப சரியா அத பயன்படுத்தி இருக்காங்க.


ஒரு சீசன் மொத்தம் ஆறே எபிசோட்ஸ்தான். சரி ஆறு மணிநேரம் இருக்கேனு, இந்த         ZOMBIE ங்கள  அங்குட்டும் இங்குட்டும் சும்மாவே அலையைவிடாம அந்த கதை கேக்குற இடத்துல மட்டும் பயன்படுத்தின விதத்துலதான் ஆச்சர்யபடுத்தி இருக்காங்க. அதுங்க வரபோற காட்சிகள் எல்லாமே நமக்கும் மரணபீதிய கொடுத்து இருக்காங்க.
ரொம்ப பெரிய நிலபரப்ப ஆளும் ராஜா ZOMBIE வைரஸால பாதிக்கபடறாரு. அது வெளிய தெரியாம அவரோட (இரண்டாவது) மனைவி இன்னும் சில முக்கிய அதிகாரிகளும் அவங்க குடும்ப உறுப்பினர் உட்பட மறைச்சி அவருக்கு மருத்துவம் பாக்கறாங்க.   தன்னோட அப்பா விசயத்துல ஏதோ மர்மம் இருக்குனு சந்தேகபடும் அவரோட மகன். அப்பாவோட முன்னாள் ஆஸ்த்தான மருத்துவர தேடி போற பயணம்தான் இந்த முழு சீரீஸ்ம். அதுல இந்த வைரஸ் எப்படி முதல்ல ராஜாகிட்ட இருந்து அந்த மருத்துவர் மூலமா அவர் சொந்த கிராமத்துல நடத்திட்டு இருக்கற மருத்துவமனல இருக்கறவங்களுக்கு பரவுதுங்கற ஒரு புள்ளில துவங்குற பரபரப்ப இந்த ஆறு எபிசோட்ஸ்லயும் எங்கயுமே குறையாம, அடுத்த எபிசொட் எப்ப ரிலீஸ் பண்ணபோறாங்கனு ரொம்ப ஆர்வமா காக்க வெச்சிட்டாங்க.


ஒரு பக்கம் மருத்துவர தேடிபோற இளவரசன கொன்னுட்டு தனக்கு பிறக்க போற மகனை இளவரசனாக்க நினைக்கும் அவரின் இரண்டாவது மனைவி மற்றும் அவரின் தந்தை. இளவரசன் மருத்துவரோட சிதிலமடைஞ்ச வைத்தியசாலைய பாக்கும் சீன்ல உண்டாகற பரபரப்ப இந்த முழு சீசன்லயும் தக்க வெச்சிருக்காங்க. அந்த காட்சியும் முதல் எபிசோட்லையே வந்துடும். அதுலயும் த்ரில்லர் படங்கள் பாதில, நம்ம யூகிச்சி இருந்த விசயத்த வேறொரு மர்ம முடிச்சி கூட சேர்த்து கடைசியா அந்த மர்மத்த உடைக்கறமாறி. இந்த கதையோட பிரதானமா இருக்கும் ராஜாவோட கர்ப்பமா இருக்கும் இரண்டாம் மனைவி பத்தின மர்மத்த பெரிய முடிச்சா போட்டு முதல் சீசன முடிச்சிருக்காங்க.


ஒவ்வொரு எபிசோடும் சீன் பை சீனா நம்ம எழுதி அத படிச்சிட்டு பாத்தா கூட ஸ்க்ரீன்ல உங்களுக்கு அவ்ளோ ஆச்சர்யங்கள வெச்சிஇருக்காங்க. இதோட துணை கதைகளும் அதுல வரும் பாத்திரங்கள் கூட  நம்மள முழு சீசனும் பாக்க வெக்காம விடகூடாதுன்னு உழைச்சி இருக்காங்க. கண்டிப்பா ரொம்ப பெரிய ஆச்சர்யங்களும், பிரமிப்பையும் இந்த சீரீஸ் கொடுக்கும்.

Trailer Link:

https://www.youtube.com/watch?v=rIlDfChEqlc

Monday, February 25, 2019



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 145.


பள்ளி காலத்துல தமிழ் படங்களை தாண்டி ஆக்ஷன்ல நமக்கு பெரிய நிறைவை தந்ததுனா அது தெலுங்கு சினிமாக்கள்தான். முன்னணி நடிகர்களோட பெரும்பான்மையான படங்கள் இங்கு தமிழ் டப்பிங்கில் வெளியாகும். அது நம்ம பெரிய நடிகர்களோட படங்களுக்கு இணையாக வெற்றிகரமாகவும் ஓடும். 9௦களுக்கு பின்னான காலங்கள்ல கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களே பெரும்பாலும் இங்கு வெளியிட்டாங்க. . அதேசமயம் இங்க நமக்கு அதுக்கு மாற்றா அமைஞ்சது (ஷாருக் உச்சத்துக்கு போய்கிட்டு இருந்த சமயம்) நேரடி ஹிந்தி சினிமாக்கள். இந்த இணையத்தோட பயன்பாட்டுல பலமொழி படங்கள் பாக்கறது சாத்தியமானதும் முதல்ல நெனச்சது, இப்ப தெலுங்கு படம்லாம் எப்படி இருக்கும்னுதான். நண்பர்கள் பரிந்துரைத்த படங்களில் “மனம்” தவிர்த்து வேற படங்கள் பெருசா எந்த ஈர்ப்பும் ஏற்படுத்தல. அதில்லாம காதல் காட்சிகள்லகூட கணவன் மனைவி சண்டைல பேசற மாறி ரொம்ப வேகமா பேசறாங்க. ஓடி ஓடி சப்டைட்டில வேற படிக்கமுடியல.


இப்படியான சூழல்ல போன வருஷம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம இந்த படம் வெளியாகுது. நடிகர் நாணிதான் இந்த படத்த ரிலீஸ் பண்றாரு. பொதுவாவே சினிமால வேற துறைல குறிப்பா நடிகர்கள் தயாரிக்கற அல்லது வெளியிடும் படத்து மேல எப்பவும் எனக்கு ஒரு ஆர்வம். காரணம் அந்த படத்துல ஏதோ ஒன்னு இருக்கவும் தான, அவங்க சொந்த செலவுல அதவெளியிட்றாங்க அப்படின்னு. இத்தனவருசஷம் காத்திருந்ததுக்கும் சேத்துவெச்சி ஒரே படத்துல அவங்க நம்மளமாறியே, ஏன்! அதவிடவே முன்னால இருக்காங்கனு சொல்ற மாறி ஒருபடம்தான் இது.


இதுல ஆறு தனிதனி கதை. அந்த கதைங்க கடைசியா ஒரு புள்ளில முடியறமாறின்னு சராசரியா நெனச்சிடாதிங்க. இந்திய சினிமால இதுவரை யாரும் திரையில கொண்டுவர ரொம்ப யோசிக்கற, ஆனா நாம அத ரொம்ப பெருசா கொண்டாடற வகைய சேர்ந்த கதைங்க. எப்படினா?
ஒரு கணவன் மனைவி அவங்க பொண்ணு ஒரு ரெஸ்டாரென்ட்ல வெயிட் பண்றாங்க. அந்த பொண்ணு தான் காதலிக்கற நபர அவங்க பெத்தவங்களுக்கு அறிமுகபடுத்த அங்க வந்திருக்காங்க. அந்த நபர் இன்னும் வரல. அப்பாவேற ஒவ்வொரு கேள்வியா கேக்க ஆரமிக்கராரு. இவங்க பொத்தாம் பொதுவா பதில் சொல்லிட்டே, அந்த நபருக்கு மெசேஜ் பண்றாங்க. அவங்களும் டிராபிக்ல இருக்கறதாவும், வரேனும் சொல்றாங்க. இதுல அப்பாவோட தயக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டே, மௌன விரதம் இருக்கற அம்மா பேசாம கண்லயே எரிக்கற மாறி பாக்கறதலாம் சமாளிச்சுனு அந்த நபர் வரவரைக்குமான போர்ஷன் அவ்ளோ அழகா இருக்கும். இந்த பொண்ணு கொடுத்த பில்டப்ல கிட்டத்தட்ட அவங்க ரெண்டுபேருமே ஓகே சொல்லபோற நேரத்துலதான் மாப்பிள்ளை என்ட்ரி. சும்மா ஒரு டார்க் கலர் ஜீனும் ப்ளூ கலர் காட்டன் செக்ட் ஷர்ட்ல முதல் பட்டன் போடாம, கைல ஹெல்மெட்டோட செம்ம ஸ்டைலிஷா நம்ம ஹீரோ என்ட்ரி. யாருன்னு பாத்தா நம்ம “நித்யாமேனன்”. அந்த பொண்ணும் இவங்களதான் லவ் பண்றேன்னு சொல்லுது. இப்படி இதுல வர மிச்ச கதைகளும் நம்ம பெரும்பாலும் பாக்காத ஏதோ ஒரு சுவாரசியம் அந்த கதைகள்லயும் இருக்கறமாறியே பாத்து பண்ணதுதான் இந்த படத்தோட பெரிய வெற்றியே.



இப்படி ஒன்னுகொன்னு சம்பந்தம் இல்லாத கதைகளா அந்த ரெஸ்டாரெண்ட்ட சுத்தி நடக்குது. இதோட முடிவு இப்ப சமீபத்திய சினிமாக்கள்ல வரமாறி கடைசியா சம்பந்தமே இல்லாத ஒரு பாத்திரத்த அறிமுகப்படுத்தி இவங்கதான் இதுக்கு காரணம்னு சொல்றமாறி இல்லாம, படத்தோட துவக்கத்திலேயே இதோட முடிவு இதுதான்னு சொல்லிடுவாங்க. அதில்லாம ஒரு பாத்திரம் மட்டும் இந்த கதைல அதோட அடுத்தடுத்த மூவ்மெண்ட்ஸ் கிளைமாக்ஸ் நோக்கியே போகும். படத்தோட கதைகள் மாறியே டெக்னிகல் பக்கமும் ரொம்ப பெரிய உழைப்பை கொடுத்து இருக்காங்க. அதுலயும் எடிட்டிங்க்கும் காமெராவும் ஒரு பேய் வர போர்ஷன்ல அதகளமா இருக்கு. அந்த MAGICIAN வர கதைதான் இதுல என்னோட MOST FAVOURITE. நல்ல சினிமா விரும்பிகள் நிச்சயம் தவறவிட கூடாத படம்,

Trailer Link:
https://www.youtube.com/watch?v=YJeezU36l4M

Monday, February 18, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 144.

தன் கண்முன்னே அவனது தாய் கோரமாக கொல்லபடுகிறார்.    வேட்டையர்களில் ஒருவனால் இவனும் இவனது சகோதரனும் உயிர் பிழைகின்றனர். நிராதரவாக அந்த அடர்ந்த வனத்தில் அவர்கள் வளர்ந்துவரும் சூழலில், சில வருடங்களில் அவனது சகோதரனும் சில வேட்டையர்களால் கொல்லப்படுகிறான். தனித்து விடப்பட்டவன் வெறிகொண்ட வேங்கையாக மாறி அந்த வேட்டையர்களை எவ்வாறு பழிக்கு பழி வாங்கினான் என்பதே கதை. இதில் என்ன பெரிய சுவாரசியம், இதேபோல் பல கதைகள் பார்த்தாயிற்றே என தோன்றுவோருக்கு. இக்கதையின் நாயகனே வேட்டையர்களை காட்டிலும் அதிக தந்திரங்களை பயன்படுத்தி அவர்களிடமிருந்து தப்பித்து கொண்டிருக்கும் அசல் புலி என்பதே.சுவாரசியம்.


1935-ல் தென்கொரியாவின் ராணுவத்தில் MAJOR போன்ற உயர்பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவிகாலத்தில் எத்தனை புலிகளை வேட்டையாடி தங்கள் அலுவகத்தில் அவற்றை பாடம் செய்து வைத்துள்ளார்கள். என்பதை கொண்டே அவர்களின் மதிப்பு கணக்கில் எடுத்து கொள்ளபடுகிறது. எனவே தனக்கு முன்பிருந்தவர்களை காட்டிலும் நமது காலத்தில் அதிக புலிகளை வேட்டையாட படவேண்டும் என்பதையே அங்கு பதவிக்கு வரும் அனைத்து MAJOR GENERALகளின் விருப்பமாகவும் இருந்தது. எனவே அவர்கள் புலிகளை வேட்டையாட அக்காடுகளில் உள்ள ஆதிவாசிகளில் சிலரை பயன்படுத்தி வந்தனர்.


தற்போது புதிதாக வந்த MAJOR வேட்டையை மேலும் கடுமையாக்குகிறார். முன்பிருந்தவர்கள் வேட்டையாடிய எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல். அந்த காட்டில் உள்ள அனைத்து புலிகளையும் குட்டிகள் முதற்கொண்டு வேட்டையாட உத்தரவிடுகிறார். ஏற்கனவே புலிகளின் எண்ணிக்கை மிகசொற்ப்பமாக இருக்கும் சூழலில் இருக்கும் சிலபுலிகளும் வேட்டையாடபடுகிறது ஒரு புலியை தவிர. வேட்டையர்களின் எந்த முயற்சியும் பலன் அளிக்காத சூழலில். ராணுவ சிப்பாய்களுடன் இறுதி முயற்சியாக வேட்டைக்கு செல்கின்றனர். இதற்க்கு முன் தாங்கள் பயிற்சி பெற்ற பல தங்கள் குரு CHUN MAN DUK யை சந்திக்க செல்கின்றனர். அவருக்கும் அவரது 13 வயது மகனுக்கும் இடையேயான சிறு மனவேற்றுமையை பயன்படுத்தி அவருக்கு தெரியாமலே அவனையும் வேட்டைக்கு அழைத்து செல்கிறான் தற்போதைய வேட்டை குழுவின் தலைவன். அவர் இல்லாமல் பெரும் படையுடன் சென்றாலும் தங்களால் அப்புலியை வேட்டையாட முடியாது என்பதை உணர்திருந்தான். அதனாலே அவர் தன்மகனை தேடி அங்கு வருவார். அவரை வைத்து இந்த ஒற்றை புலியை வேட்டையாடிட திட்டமிடுகிறான்.


2.5 மணிநேர கதையில் மேலே குறிப்பிட்டது முதல் 3௦ நிமிட கதை மட்டுமே. இந்த முதல் 3௦ நிமிட கதை தெரிந்தே பார்த்தாலும் புலிகள் வேட்டையாடபடும் காட்சிகள் நமக்கு திகிலூட்டும்படியே காட்சிபடுத்தி இருப்பர். அதிலும் அந்த குரு மற்றும் தற்போது வேட்டையாடும் குழு அவர்களின் வேட்டைமுறையை கொண்டே இந்த இவர்களின் குணநலன்களை மதிப்பிடும்படி. படத்தின் துவக்கத்திலே இவர்கள் வேட்டையாடும் முறை தனித்தனியே காட்சிபடுத்தபட்டிருக்கும். மேலும் தன் காலம்முழுக்க பல புலிகளை வேட்டையாடிய குரு. தன் மகனை கண்டிப்பாக அந்த ஒற்றை புலியை வேட்டையாட அனுமதிக்காததன் காரணம். வேட்டைக்கு அவர்களுடன் சென்ற குரு மகனின் நிலை இந்த இரு இடங்களும் காட்சிகளாக விரியும் பகுதியே இந்த மொத்த கதைக்கான பற்றுதல். அவை நமக்கு பெரும் பதைபதைப்பையும் மனதை கூடுதல் இலகுவாக்கும் இடங்கள்.


கதைக்கு முக்கிய பாத்திரம் அந்த ஒற்றை புலி. கதையில் முதல் இருபுலியை வேட்டையாடிய பின்னே இந்த புலியை பற்றிய பேச்சு துவங்கும். அதிலும் அதன் இடது கண் கிடையாது என்ற தகவலுடன். அதிலிருந்து படம் முழுக்க இந்த ஒற்றை புலியை வேட்டையாடுதல் என்பதை நோக்கியே கதை செல்லும். ஆனால் முழுதாக இதன் உருவம் திரையில் காண்பிக்கப்படும் இடம் கிட்டத்தட்ட 75% படத்திற்கு பின்னே. அதுவரை அந்த புலி காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் நாமும் அந்த காட்டில் மாட்டிகொண்ட திகிலிலேயே இருக்கும். இது கிட்டத்தட்ட நம் விருப்ப நாயகர்களை திரையில் கண்டதும் ரசிகனுக்குக்கு ஏற்படும் பரவசநிலையை. ஒவ்வொரு முறை அப்புலியை திரையில் பார்க்கும் நமக்கும் ஏற்படும்படி அதன் இடபக்க முகம் சரியாக காட்டபடாமலே காட்சிபடுத்தபட்டிருக்கும்.


மேலும் குருவின் பாத்திரத்தில் வருபவர். இப்படத்தின் இயக்குனர். இதன் பின்னணி இசை. படத்தில் CG பயன்படுத்தப்பட்ட விதம் என இந்த படத்தை போலவே. அதன் உள்ளேயும் நிறைய சுவாரசியங்கள் புதைந்துள்ள படைப்பிது.

Trailer Link:
https://www.youtube.com/watch?v=uTYTKLVKXgc

Wednesday, January 30, 2019



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 143.

அக்கால மன்னர்கள் முதல் இக்கால அரசியல்தலைவர்கள் வரை பலவகையான அதிகார பிரயோகங்களை மக்கள் மீது செலுத்தியே வந்துள்ளனர். மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் காலங்களில் அந்த அடக்குமுறைகள் மிக அதிகமாக பிரயோகிக்கபட்டதாகவும். தற்போது அரசியல் தலைவர்கள் காலங்களில் அவை ஒரு குறிப்பிட்ட மக்கள் அல்லது அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் ஒரு சிலரின் மீது மட்டும் ஏவப்படுவதாக உணர்கிறோம். ஆனால் அக்காலம் முதல் தற்போது வரை இந்த அதிகார நபர்களிடம் பணிபுரியும் அதிகாரிகள் பற்றியோ அவர்களின் நிலை குறித்தோ பெரிதாக சிந்தித்ததில்லை. அவர்களை குறிப்பிட்டு சொல்ல காரணம் அவர்களும் நம்மில் ஒருவர்களே.


எந்த அரசு அதிகாரியும் அதிகாரம் படைத்த அன்றைய மன்னர்களுடனோ இன்றைய அரசியல்வாதிகளுடனோவோ இருந்துவிடுவதில்லை. அவர்களும் அவர்களது குடும்பங்களும் நம்முடனேதான் உள்ளது. சினிமாக்களில் கூட இவர்களையும் அந்த அதிகாரம் பொருந்தியவர்களுக்கு இணையாகவே தான் பார்த்து வந்துள்ளோம். முதல்முறை போலீஸ் அதிகாரிகள் அந்த அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறுவழியின்றி சமரசமாக, பாதிக்கபடும் மக்களுக்காக வருந்தும் சூழலையும். அவர்களும் நம்மை போல் குடும்ப சிக்கல்களால் பெரும் மனஉளைசலில் .தம் பணியில் கடமை தவறுவதையும் இந்த படத்தைவிட இந்த நுணுக்கத்தில் வேறு படங்களில் பார்த்ததாக நினைவில்லை.


சோனி எனும் காவல்துறையின் கடைநிலை பாத்திரம் ஒன்றும். அவரின் INSPECTOR கல்பனா இந்த இருவரின் அக மற்றும் புற எண்ண ஓட்டங்களே இந்த படம். அதிகாரத்தால் தம் கடமையை கூட நிறைவேற்ற முடியாத சோனியும். அவளை அதிகாரத்தால் இழக்க விரும்பாத கல்பனா பாத்திரங்களும் நமக்கு காவல்துறையினர் மீது மதிப்பை ஏற்படுத்துவதை விட அவர்களின் மேல் பெரும் அனுதாபம் கொள்ள செய்கிறது. குறிப்பாக இந்த இரண்டு முக்கிய பாத்திரங்களையும் பெண்களாக தேர்வு செய்ததும். அவர்களின் குடும்ப சூழலில் அவர்களே அனைத்து பணியும் செய்து. வயதானவர்களுக்கு பணிவிடை செய்து. குழந்தைகளை மேய்க்கும் எந்த சினிமாதன காட்சி அமைப்புகளும் இதில்இல்லை. குறிப்பாக இந்த இரு பெண் பாத்திரங்களுக்கும் குழந்தைகள்கூட கிடையாது.


அதில் மிக குறிப்பாக இன்ஸ்பெக்டர் கல்பனா. அவரின் கணவர் அதே துறையில் இவருக்கு உயரதிகாரியாக இருப்பார். தெரியாம ஒரே ஒரு சீன்ல கூட இவர்களுக்குள்ளான தாம்பத்தியம் குடும்ப விஷயங்கள் மற்றும் தங்களது எதிர்காலம் குறித்த எந்த சம்பாசனைகளுமே இருக்காது. ஒரு காட்சியில் அவர் மனைவியிடம் கூறுவார். உன்கூட வேலை பார்க்கும் யாரிடமும் அட்டாச்மென்ட்டா இருக்காதேனு. அதை அவர் சொன்ன இடமும். எந்த சூழல்ல இந்த கதைல அந்த காட்சிவரும்னு பார்த்தா அதுதான் இந்த மொத்த படமும்.


முதல் காட்சியில் அந்த சோனி மற்றும் இவரும் பணிமுடிந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்புகின்றனர். வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் கல்பனா பாத்திரம் அதுவரை பணியில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் முழு இரவுபணி முடிந்து வரும் சோர்வில் இருப்பவர். உள்ளே தனது கணவனின் குரல் கேட்டதும். அந்த முகத்தில் சிறிதாக அரும்பிய அந்த நாண புன்னகையுடனே உள்ளே நுழைவார். தொலைபேசியில் யாருடனோ பேசியவாறே அவர் இவர்பக்கம் திரும்பி ஒரு சிறு புன்னகையை உதிர்த்ததும். அதுவரை இருந்த அந்த சிறு புன்னகையும் பெருவெளிச்சமாக மாறி ஷோபாவில் அமர்ந்து தனது சூவை கழட்டியபடியே வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் சமையல் குறித்து   பேசிகொண்டிருப்பார். ஆனால் அவர் பார்வை அவர் மீதிருந்து திரும்பாது. அதற்க்கு பின்னான சில வினாடி காட்சிகள். இந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான காட்சியிலே இவரது குணாதிசியத்தை தெரியபடுத்தி இருப்பர். 
இதைக்கொண்டே இவர் சோனியை எவ்வாறு கையாளுவார். இவர்களுக்கிடையேயான குழப்பங்களுக்கு இதுதான் தீர்வாக இருக்கும் என்பதை நம்மால் ரொம்ப சரியாக தீர்மானிக்க இயலும்.



படத்தின் தலைப்பே SONI தானே அதை விடுத்து இந்த பெண்ணின் பாத்திரத்தை பற்றியே முழுக்க சொல்வதற்கு காரணம். வெறும் இந்த பாத்திர அறிமுகம் மட்டுமல்ல. முக்கிய பாத்திரத்துடன் பயணிக்க போகும் இவருக்கே இந்த DETAILING இருக்கும்போது. கதையின் முக்கிய பாத்திரத்திற்கான DETAILING எந்த அளவில் இருக்கும் என்பதற்கே. வெறும் படமாக பார்க்கவும் எந்த தோய்வும் இல்லாமல் உங்களை கூட்டி செல்லும். கூர்ந்து கவனிப்போருக்கு பாத்திரத்தன்மை முதல் அவர்கள் உறவுகளை எளிதில் எவ்வாறு கையாள்கிறார்கள் வரை உங்களை அதிசியிக்க வைக்கும் சினிமா.

TRAILER LINK:
https://www.youtube.com/watch?v=ySTPKPTBE-o

Saturday, January 26, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 142.

சில படங்கள் நம் மனதுக்கு மிக நெருக்கமாகி போனாலும். மிகஆழமாக நம்மை ஆட்கொண்டாலும் அவைபற்றி எழுதவோ நண்பர்களிடத்தில் பகிரவோ பெரிதும் ஆர்வமிருக்காது. அவை இந்த ANIMATION மற்றும் விலங்குகளை பிரதானமாக கொண்ட படங்கள். காரணம் இது குழந்தைகளுக்கான படைப்புகள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். முதல்முறை அவ்வகையை சார்ந்த ஒரு படத்தை பற்றி பகிர மிகமுக்கிய காரணம். இது குழந்தைகளை விட இப்படம் பேசும் சாரம் நம்மால் அதிகமாக உணரப்படும் என்பதாலே.

“BAILEY” எனும் இந்த நாயே இப்படத்தின் பிரதான பாத்திரம். மிகமுக்கியமானது இந்த BAILEY யின் பார்வையிலே முழுகதையும் நகரும். மேலும் BAiLEY மற்ற பாத்திரங்களுடன் சொல்லவோ, கேட்கவோ நினைப்பவை அதன் VOICE OVER ல் வரும். அது படத்தின் மற்ற பாத்திரங்களுக்கு கேட்க்காது. படத்தில் மிக அதிக வசனம் BAILEYக்கே. மேலும் இவ்வாறான கதைகளின் முடிவு நாம் பெரும்பாலும் பார்த்ததே. ஒன்று BAILEYயை அதன் உரிமையாளர் விரட்டிவிடுவர். அல்லது வயதாகி அவை கதையின் முடிவில் இறந்துவிடுவதாக முடிப்பர். அவை அக்கதையுடன் நெகிழ்ந்திருந்த நம்மை கலங்கவைத்திடும்.

ஆனால் இப்படத்தில் அவ்வாறான சங்கதிகள் இல்லை. எனினும் நம்மை நெகிழசெய்ய பல காட்சிகள் உண்டு. படம் முழுக்க BAILEYயின் VOICE OVER லே செல்வதால் மிக எளிதாக அதன் மேலே நம் கவனமும் செல்கிறது. ETHAN எனும் சிறுவன் அவனது குழந்தை பருவம் முதல் BAILEYயை  வளர்த்து வருகிறான். அவனும் சிறுவன் என்பதால் அவன் இதனுடன் பேசும் குழந்தைதன உரையாடல்களை BAILEY மிக அதிகமாக நம்மிடம் நக்கல் அடிக்கும். உதாரணமாக BAILEYக்கு துவக்கத்தில் ETHAN தான் சொல்லிதர நினைக்கும் விஷயங்கள்.
COME ON,  BAILEY.

BAILEY, SIT.

SIT.

ROLL OVER. ROLL OVER.

அம்மொழியும் ETHAN சொல்ல வரும் விஷயம் புரியாமல் BAILEY ஓடிகொண்டே இருக்க. ETHAN விடாமல் மேலும்
SHAKE YOUR PAW.
SHAKE YOUR PAW.
TURN AROUND. TURN AROUND.
அப்போது BAILEY இவ்வாறாக கூறும்
COME ON. WHAT HE SAYING? IT’S TOO MANY WORDS. COME ON OKAY? I AM DO THIS NOW. BUT ONE WORD GOT  SAID MORE THAN ANY OTHER. BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY . AFTER A WHILE,  I CAME TO UNDERSTAND  THE WORDS THAT MATTERED. I HAD A BOY, AND HIS NAME WAS ETHAN.  I GOT A NAME. MY NAME WAS  BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY, BAILEY.

இப்படியாக அதன் நையாண்டியும் வெகுளித்தனமும்  மட்டுமின்றி ETHAN மேற்படிப்பிற்கு வெளியூர் சென்று படிக்கும் ஒருகாட்சி வரும் அதில் BAILEY யின் வசனங்கள் நம்மை கலங்கடித்து விடும். அக்காட்சி நாம் நினைப்பது போல் கதையின் இறுதியில் வராது. நூறு நிமிட கதையில் அவை கிட்டத்தட்ட பாதியில் வரும். அதற்குள் ETHANனின் காதலியை அவனுக்கு அறிமுகம் செய்துவைப்பது. அக்காதல் நிறைவேறாமல் அவனின் இறுதிகாலத்தில் அவனது காதலியை கண்டடைந்து அவனுடன் சேர்த்து வைப்பது என கதை முழுக்க BAILEYயின் ராஜ்ஜியம் மட்டுமே.

பொதுவாக நாயின் ஆயுட்காலம் மிக குறைவாயிற்றே அது இவ்வாறு அவனது இறுதிகாலம் வரை அவனுடன் இருந்தது போன்ற கேள்விகளை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

TRAILER LINK:

https://www.youtube.com/watch?v=1jLOOCADTGs

Search This Blog