உலகம் முழுக்க சினிமாவில் அந்தந்த
காலகட்டத்திற்க்கு ஏற்றவாறு அனைத்து ஜானர்களிலும் கதை சொல்லும் விதங்களில் தங்களை
புதுபித்து கொண்டே செல்கிறார்கள். ஒரு ஜானரை தவிர. “ஸ்போர்ட்ஸ்” ஆம், ஒரு ஏழ்மை
குடும்ப பின்னணியில் இருந்து தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தன்னை ஓரளவு
அந்த விளையாட்டில் நிருபித்து. குறிப்பாக காதலை அல்லது தனது குடும்பத்தை தனது லட்சியத்திற்காக
தியாகம் செய்து. பின் ஒரு கட்டத்தில் தனது அனைத்தையும் இழந்தே வெற்றி பெறுவது. பெரும்பாலும்
இவை மட்டுமே ஸ்போர்ட்ஸ் ஜானர் கதைகளுக்கான விதிமுறைகள். இவை உண்மை கதைகளை தழுவியே பெரும்பாலும்
வருவது அந்த நபர் இங்கு எந்தளவு பிரபலமாக இருக்கிறார் என்பதை பொறுத்ததே.
ஆனாலும் இதில் உள்ள மிகபெரும்
சவால் இந்த வழக்கமான டெம்ப்ளட்க்கு உள்ளேயே திரைக்கதை செய்து அதை வெற்றி பெற
செய்வது. அவ்வாறு இந்த ஸ்போர்ட்ஸ் ஜானரில் சமீபத்தில் ரசிக்க வைத்தவை JERSEY
மற்றும் DANGAL படங்கள். இவ்விரண்டு கதைகளின் வெற்றிக்கு பின்னே உள்ள பொதுவான
அம்சம் அக்கதை அவர்களின் குடும்ப பின்னணியில் இருந்தே தொகுக்கபட்டிருக்கும். முன்னாள்
கிரிக்கெட் வீரனின் நிகழ்காலமும், முன்னாள் பயில்வான் தன் மகள்களை
அவ்விளையாட்டிற்க்கு தயார் செய்வதும் என்ற அவர்களின் குடும்ப பின்னணி சார்ந்த
திரைக்கதையே அப்படங்களுக்கான அச்சாணி.
இந்திய சினிமாக்களில் உலகெங்கும் பரவலாக அதிக
மக்களால் பார்க்கப்படும் ஹிந்தி சினிமாவில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம்
தரும் படைப்புகள் வெளிவர துவங்கியது. அவை ரசிகர்களால் பெரும் வரவேற்ப்பையும் பெறவே.
பெரும்பாலான இந்திய மொழிகளிலும் அவ்வாறான கதைகள் அங்காங்கே வெளிவந்து அவற்றில் பல
பெரும் வெற்றியும் பெற துவங்கியது. அதில் இங்கு குறிப்பிடதகுந்தவர்கள் அனுஷ்கா
மற்றும் நயன்தாரா.
இந்திய அளவில் வித்யாபாலன், கங்கனா, ஆலியா பட்,
சமீபமா டாப்ஷி. இந்த நால்வருமே தனித்துவமானவங்க. ஆனால் வித்யாபாலன் இப்ப பெரிய
எந்த படங்களிலும் வருவதில்லை. கிட்டத்தட்ட தனது கேரியரின் இறுதிகட்டத்தில்
இருக்கும் நாயகி. ஆனால் எப்பொழுது தனக்கான ஸ்கிரிப்ட் கிடைத்தாலும். உறுதியாக இந்த
பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்புள்ளவர். டாப்ஷி தான் தேர்ந்தெடுக்கும்
கதைகளுக்கு மட்டுமே பெரும் மெனக்கெடல் அவரிடம் உண்டு. அந்த பாத்திரத்திற்கான மெனக்கெடலில் அவரால் இவர்களை போல சோபிக்க இயலவில்லை
மீதமுள்ள ஆலியா மற்றும் கங்கனா இருவருமே தான் ஏற்கும் பாத்திரத்திற்காக எந்த
அளவிற்கும் தங்களை தயார்படுத்தி கொள்ள தயங்காதவர்கள்.
இவர்கள் எந்த ஒரு சிறுகாட்சிக்கும் தங்களது முழு
பங்களிப்பை வழங்குபவர்கள். இருவருமே ஒரே அளவில் விருப்ப நாயகிகள் ஆனாலும் ஆலியாவை
காட்டிலும் கங்கணா ஒரே ஒரு புள்ளி கூடுதலாக மிளிரும் சாமர்த்தியசாலி. உதாரணமாக இந்த
கதையையே எடுத்து கொள்ளலாம். தான் இந்திய கபடி அணியின் காப்டனாக இருக்கும் காலத்தில்
தாய்மை அடைகிறாள். குழந்தை பேறுக்கு பின் அணியில் சேரும் கனவில் இருப்பார். ஆனால் அக்குழந்தையின்
Immunity Level மிக குறைவாக உள்ளதால். கண்டிப்பாக உடனிருந்து பார்க்கும் சூழல்.
அக்காட்சியில் கண்களில் தாய்மை மிளிர நிறைந்த புன்னகையுடன் அக்குழந்தையை பார்பார்.
அதில் துளியும் அக்குழந்தைக்கான தன்னுடைய தியாகம், அந்த கண்களிலும், புன்னகையிலும்
இருக்காது. ஆலியாவால் நிறைவு செய்யகூடிய காட்சி சூழல்தான் எனினும் இந்த நிறைவை
நிச்சயம் அவரால் வழங்க இயலாது.
முழுக்க குடும்ப உறவுகளால் பின்னப்பட்ட கதை.
அதிலிருந்து தன்னுடைய கனவை நோக்கி செல்லும் ஒரு தாயின் கதை. கபடிதான் இக்கதையின்
நாயகன் எனினும் அதனினும் பார்வையாளனை எளிதில் தன்வசமாக்கும் தாய் என்ற அந்த பாத்திரத்தின்
அனைத்து விதங்களிலும் தன்னை முழுமையாக நிறைவு செய்துள்ளார். இந்த நார்மல்
சென்டிமென்டல் படங்களை கேலி செய்வோர் தவிர்த்து மற்ற அனைவரும் தவறவிட கூடாத
படைப்பிது. நிறைய இடங்களில் மிகஎளிதாக நம்மை கனக்க செய்திடுவார்.