Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, November 20, 2017

 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 082.

அலமாரியில் உள்ள புத்தாடையை அணியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள சிறார்களை போல், பெரும்பான்மை இரவுகள் தன்னால் கொடூரமாக கொலை செய்யப்படும் நபர்களை அறிய வெகு ஆவலுடன் காத்திருக்கும் இக்கதையின் பிரதான பாத்திரம்.


தானோ அல்லது தனது குடும்பத்தார், நண்பர்கள், காதலி இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டர்களோ அவர்களை ஆக்ரோசமாக பழிவாங்கும் அல்லது இறுதியில் அவர்களை மன்னித்து செல்லும் பாத்திரங்களை மட்டுமே பார்த்து மகிழ்ந்த நம்மை செவிட்டில் அறையும் சினிமா.


இலக்கே இல்லாமல் தன் மனதுக்குப்பட்ட, தனக்கு மிகப்பிடித்த நபர்களாக தேர்ந்தெடுத்து. சாதாரணமாக இல்லாமல் கொடூரமாக பெரும்பாலும் இரும்பு ராட்டில் அடித்தே கொல்வதை மிக இயல்பாக, ரசித்து மகிழும் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும். என எந்த வரைமுறையும் அற்று மிகச்சாதரணமாக நவசுதின். இந்த முறை அவர் தொட்டது உச்சம்.


அவரின் நடை, பாவனை, நக்கல் பேச்சின் லாவகம், போலீசாரிடம் சிகரட் கேட்க்கும் பாங்கு. முதல் கொலையில் தென்படும் பதற்றம், தனது இயல்பிலிருந்து சட்டென மாரும் நொடியில் கொலை புரிய துவங்குவது. கொல்ல யாருமற்று நடுஇரவில் சாலையில் செல்கையில் கடக்கும் தெருநாய் தன்னை கேலி செய்வதாக எண்ணி அதை விரட்டும் இடத்தில் தென்படும் கோபம்.  விரக்தியுடன் செல்லும் வழியில் கைக்குழந்தையுடன் வெட்ட வெளியில் சமைத்து கொண்டிருக்கும் பெண்ணை காணும் நொடியில் அவன் கண்களில் தென்படும் பரவசம். பெரும் ஆனந்தத்துடன் அவளை கொல்ல அவசரத்தில் ஒரு செங்கலை எடுத்து ஓடிவரும் வேலை, அங்கு பத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவருந்தி கொண்டிருப்பதை கண்ட வினாடி அவன் முகத்தில் சடாரென பரவும் வெறுமையும், ஏமாற்றத்தையும்.... என இவ்வளவு உணர்ச்சிகளையும் வார்க்கப்பட்டது போல நவசுதின்.


தனிமனிதனை மட்டுமே சுற்றி சுழல கூடிய கதையில் அகன்ற ஈர விழியும், உலர்ந்த உதட்டின் சொந்தக்காரி அசிஸ்டன்ட் கமிஷனர் காதலியும், தனது அண்ணனை சந்தித்த பதட்டத்தை உடலின் அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தி நம்மையும் தொற்றிக்கொள்ள வைத்த நவசுதினின் தங்கை பாத்திரமும், பெரும் சத்தத்தால் திடும்மென கதவை திறந்து பார்க்கையில், தனது கணவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க அருகில் பெரும் இரும்பு ஆயுதத்துடன் நிறுக்கும் கொலையாளியை காண்கையில் ஏற்ப்படும் மரண பீதியை நமக்கும் கடத்திய வேலைக்காரி பாத்திரம். இந்த கொடூர, இலக்கு ஏதுமற்ற, வரைமுறைக்கு சற்றும் ஒவ்வாத இந்த சினிமாவின் திருப்பங்களும், சுவாரசியமும் பெண்களை கொண்டே ....

https://www.youtube.com/watch?v=xq1cEmhVa68



 
பார்த்ததில் மிகவும் ரசித்தது : 076.

சவுண்ட் மிக்சிங்... நம்ம பக்கத்து மாநிலத்துல இருந்து ஆஸ்கார் வரை சென்று இந்த பிரிவில் விருது வாங்கியவர் கூட உண்டு. ஆனால், என(நம)க்கு இந்த துறை பற்றி பெரிய பரிட்சயமேதுமில்லை. சவுண்ட் மிக்சிங் ஒரு படத்தின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் துணை புரியும் அல்லது ஒரு படம் முழுமையடைய இந்த துறையின் பங்களிப்பு என்ன?


இந்திய அளவில்! ஏன் உலகளவில்!! வெற்றிபெற்ற பெரும் பட்ஜெட் படங்களில் கூட உணரமுடியாத இந்த துறையின் மதிப்பை. வெறும் நான்கு பாத்திரங்கள் அதிலும்.. இரு பாத்திரங்கள் மட்டுமே பெரும்பான்மை வகிக்கும் ஒரு ஒன்றரை மணிநேர கதையில் உணரமுடிந்தது. திரையில் மைக்ரோ செகண்ட் வந்து போகும் காட்சிகளில் கூட, இவர்களது உழைப்பும் நுண்ணிய செயல்பாடுகளும் பெரிதும் ஈர்த்தது.


திடும்... என பெரும் சப்தத்துடன் டைட்டில் கார்ட். ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த வனத்தின் உள்ள சிறிய வீட்டில் துவங்குகிறது. முதல் நான்கு நிமிட படம்... அடுத்த ஒன்றரை மணிநேர கதைக்கான அடித்தளம். காது கேளாத ஒரு பெண் எழுத்தாளர் தனது எழுத்து பணிக்காக தனிமை வேண்டி தங்கியுள்ள வீட்டில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் தனிமையில் சிக்கி கொள்கிறார்.
இதே பாணியில் ரத்தமும் சதையுமாக நிறைய கதைகளை பார்த்திருந்தாலும் எழுத்தாளர் & கொலைகாரன். என இரண்டே பாத்திரங்கள் மட்டுமே கொண்டு சிறிதும் பார்வையாளருக்கு சலிப்பும் ஏற்படுத்தாமல் பெரும் எதிர்பார்பையும் ஏற்படுத்தும் அதிவேக திரைக்கதை.


கதைக்களமாக ஓரே வீடு, பாத்திரங்களாக இருவர், காலம் ஓரே இரவு. என அனைத்தும் மிக எளிமையாக எடுத்துக்கொண்டு. மிக பிரமாண்டமான திரைக்கதையும், சுவாரசிய சம்பவங்களை கொண்டு காண்போரை சிறிதும் நகரா வண்ணம் அமைந்த செம்ம திர்ல்லர் வகையறா சினிமா.



https://www.youtube.com/watch?v=Q_P8WCbhC6s

பார்த்ததில் மிகவும் ரசித்தது : 083.

எளிய மனிதர்களின் வாழ்க்கையை அச்சு அசல் பிரதிபலிப்பவர்கள், அதர பழைய கதையை புது பாணியில் கொடுத்து அசத்துபவர்கள் இந்த முறை அதிரி புதிரியாக அசத்தியது கேங்ஸ்டர் களத்தில்.


கேங்ஸ்டர் கதை தான். ஆனால் கடுமையான வார்த்தை பிரயோகம் இல்லாமல். வெறி தீர துரத்தும் பழிவாங்கல் இல்லாமல்.சீறி பாயும் வாகனங்களின் பேரிரைச்சல் இல்லாமல். மிரட்டும் ஆயுதங்கள் ஏதுமில்லாமல் இவர்கள் தந்தது வழக்கத்தைவிட மிரட்டல் சினிமா.


மும்பை ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணன். ஒருநாள் தனது பால்ய நண்பன் கங்கா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறும் நொடியில் பெரும் சப்தத்துடன் அவரது அலைபேசி மறுமுனையில் விழுந்து நொறுங்குகிறது. நண்பனை தேடி தனது சொந்த ஊரான கம்மட்டிபாடதிற்கு கிளம்புகிறான் கிருஷ்ணன் தனது பால்ய நினைவுகளுடன்.


அங்கு ஆசான்தான் பெரிய மனிதர். அவர் நினைப்பதை செய்து முடிக்கும் எதுவாயினும் செய்து முடிப்பவன் பாலன். அவனுக்கு கீழ் அவனது தம்பி கங்கா, அவனது நண்பர்கள் கிருஷ்ணன் மற்றும் அவர்களது என சில பதின்பருவத்து பசங்க. பாலனோட சேந்து ஒரு பெருமைக்கு, கெத்து காட்ட கங்கா & கிருஷ்ணா நண்பர்கள் குழு செய்யும் சிறு சிறு தவறுகள் மேல் இவர்களுக்கு ஏற்படும் அதீத ஈடுபாட்டால் அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே.!!



குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டியது திரைக்கதை மட்டுமே. நிறைய பாத்திரங்கள் உள்ள கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தி சென்ற விதம் மகா துல்லியம். சுமாரான கதையை அசாத்திய பாத்திரங்களை கொண்டு அவர்களையும் மொக்கையாக்குவதும். அசாதரணமான கதையை சுமாரான பாத்திரங்களை கொண்டு அக்கதையையும் சுமாராக மாற்றுவது எல்லாம் நிறைய நாம் இங்கு பார்த்தது.


அனைவரின் பங்களிப்பும் நிறைவாக இருப்பினும் இக்கதையின் உயிர்நாடியான இந்த இரு பாத்திரங்களின் பங்களிப்பு.!!


ஒவ்வொரு பாத்திரதிற்க்கும் மூன்று மூன்று நடிகர்கள். குழந்தைபருவம், பதின்பருவம், 40+ வயதிற்கான பருவம் என இவர்களின் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு.!! இதுப்போல பத்து பொருத்தமும் கூடி வரும் ஜாதகத்தை மிக சமீபத்தில் பார்த்ததாக நிச்சயம் நினைவில் இல்லை.
1.இவர்கள் வாழ்க்கையில் ஜாலிக்கு தொடங்கி பணத்திற்காக இந்த அடிதடியை தொடரும் தருணம்.!!
2.படத்தின் துவக்கத்தில் இவர்கள் பயன்படுத்திய பாதையும் நிலஆக்ரமிப்புக்கு பின் மிககுறுகிய பாதையின் வழியே இவர்கள் பிணத்தை தூக்கி செல்லும் காட்சி .!!
வசனங்கள் ஏதுமற்று திரைக்கதையின் உழைப்பிற்கு இந்த இரு காட்சிகளே சான்று.


https://www.youtube.com/watch?v=B-m13AJMxW4

Saturday, November 18, 2017




எந்த விறுவிறுப்பான திரைக்கதையும் அதன் முடிவை நெருங்கும் வேளையில் கதையில் ஏற்படும் வேகம், அதற்க்கு முந்தைய காட்சிகளை விட சற்று கூடுதலாக இருக்கும். அவ்வாறான படங்களே அரிதான சூழலில் ஒரு கதை அதன் இடைவேளையிலேயே கிட்டத்தட்ட அதன் முடிவை நெருங்கிவிட. அதற்க்கு பின்னான இரண்டாம் பாதி கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் முழுக்க அந்த கூடுதல் வேகத்துடன் அதே வேகத்துடன் நகர்த்திசென்று முடிப்பது என்பது சாத்தியமா? அல்லது அவ்வாறான ஒரு தமிழ் படம் இறுதியாக எப்பொழுது பார்த்தோம் என நினைவில் உள்ளதா? எனக்கு நினைவிற்கு ஏதும் வரவில்லை. அவ்வாறான ஒரு அதிவேக திரைக்கதை அமையப்பெற்ற படம் தீரன்.

போலீஸ் படங்களை செய்து தங்களின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நாயகர்கள் வரிசையில், இந்த முறை நாயகனுடன் சேர்த்து மிகப்பெரும் உயர்விற்கு செல்லவிருப்பது இயக்குனர் வினோத்தும். இதுவரையான போலீஸ் கதைகளில் அவர்களின் துறைசார்ந்த டீடைலிங்கே இப்படம் அளவு சொல்லப்பட்டதில்லை என்பதே இப்படத்தை பார்க்கும் பெரும்பாலோருக்கு தோன்றும். அந்த கொள்ளையர்களை பற்றிய டீடைலிங்கை திரைக்கதையில் நிறுவிய வகையில் வினோத் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சார்ந்த அனைவரின் கவனத்திற்கும் உரியவராகிறார்.
இக்கதையில் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட ஹைவேக்களில் தனியாக உள்ள வீடுகளில் உள்ளவர்களை கொடூரமாக கொன்று. பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர்களையும். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய அவர்களின் துல்லிய வரலாற்றையும், மற்றும் துவக்க காட்சியிலே அவர்களின் மீதான பயத்தையும் வெறுப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்திய இடங்களிலே வினோத் கிட்டத்தட்ட பாதிக்குமேல் ஜெயித்துவிட்டார். அதன்பின்னான காவல்துறை ஒரு குற்றத்தை விசாரிக்கும் அவர்களின் போக்கை விரிவாகவும் குறிப்பாக இவ்வளவு துல்லியமாகவும் காட்டிய வகையில் தனது மீதி வெற்றியையும் தக்கவைத்து கொண்டார். அதும் 1995களில் எந்த தொழில் நுட்பமும் அரசாங்கதுறைகளை எட்டாத காலங்களில் வெறும் கைரேகைகளை கொண்டு இந்தியா முழுக்க பயணித்த நம் காவல்துறையினரையும், அதன் சாதக பாதகங்களை துளிபிசகாமல் மிக நேர்த்தியாக படைக்கப்பட்ட திரைக்கதையும் காலத்திற்கும் நிற்கும். இனி போலீஸ் சப்ஜெக்ட் தொட முயற்சிக்கும் எந்த இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இப்படம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியின் கதைக்களம் நிகழும் காட்சிகள் இடைவேளைக்கு முன்பான இருபது நிமிட சேஸிங்ஸ் அபாரம்.

சதுரங்க வேட்டை வினோத்தின் மிகப்பெரும் பலம் அவரது வசனங்கள். கார்த்தியை இந்த கொள்ளையர்களை தேடும் பணியிலிருந்து உயரதிகாரி நீக்கியபின் அவரிடம் இவர்கூறும் வசனம் காவல்துறையின் மீது அனைத்து பார்வையாளனுக்கும் மிகபெரும் மதிப்பை ஏற்ப்படுத்தும். அக்கொள்ளையர்களின் மீதான பயத்தை ஆரம்பகாட்சியிலே ஏற்படுத்திய ஒளிப்பதிவாளர் சத்யசூர்யன் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரின் உழைப்பு படம்நெடுகிலும் தனித்து தெரியும். குறிப்பாக வில்லனின் ஆரம்பகாட்சி பின்னணி இசை பட்டாசு. இது போன்ற கதைகளில் காதல் காட்சிகளை நீக்கியிருந்தால் படத்தின் நீளம் குறைந்து இன்னும் விறுவிறுப்பான படம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுபோன்ற பரவலாக அறியப்பட்ட நாயகர்களை முன்னிருத்தையில் இதுபோன்ற அட்ஜஸ்மென்ட் தவிர்க்கஇயலாதது. இல்லேன்னா ஒரு ரெண்டு சீன் சத்யனுக்கு கொடுக்கும் நிலையெல்லாம் வந்திருக்குமா?


எந்த வழக்கையும் காவல்துறை மிககண்ணியமாகவும், நேர்மையாகவும் கண்டிப்பாக அணுகும் என்று சொல்லப்படும் கதையில் அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பமே நேரடியாக பாதிக்கபடுவது போல் அமைக்கப்பட்ட மிகச்சில சமாச்சாரங்களை நீக்கிபார்த்தால் நீண்ட இடைவெளிக்கு பின்னான கெத்து போலீஸ் கதை. படம் பார்த்த அனைவருக்கும் காவல்துறையின் மேல் மிகப்பெரும் மதிப்பை ஏற்படுத்திய இயக்குனருக்கு ராயல் சல்யுட்.  

Search This Blog