பார்த்ததில் மிகவும் ரசித்தது – 174.
IL MARE 2000-ல் வந்த கொரியன் சினிமா. ஒரு பெண் கடற்கரையோர
வில்லா ஒன்றில் குடியேறுவாள். அந்த
வீட்டின் மெயில் பாக்ஸ்ல் ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டெடுப்பாள். அதில் சில முக்கிய
ஆவணங்கள் இருப்பதை பார்த்து, உரியவரின் முகவரிக்கு
அனுப்புவாள். நாம் எதிர்பார்த்தது போலவே நன்றி கடிதம் ஒன்று வரும். கிட்டத்தட்ட
முழுபடத்தின் கதையும் கூட இதுவே. ஆனால் அதில் விசேஷம் அந்த பெண் இன்றைய காலத்திலும், அவருக்கு
கடிதம் எழுதும் நபர் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலும் இருப்பதும்.
கதைக்கு பரபரப்பு ஏற்படுத்த இந்த இரண்டு காலங்களுக்கு இடையே பயணம், அதற்கான முயற்சி
இப்படியான எந்த ஆரவாரமும் இல்லாமல், வெறும் இருவருக்குமான கடித தொடர்பிலே
நம்மையும் அடுத்த கடிதம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்புடன் பயணபடவைக்கும். டைரி
எழுதும் வழக்கம் உள்ள அந்த பெண், இரண்டு வருடங்களுக்கு முன் இதே தேதியில், குறிப்பிட்ட
ரயில் நிறுத்தத்தில் தனது வாக்மேனை தவறவிட்டதாக ஒரு கடிதத்தில் குறிப்பிடுவாள்.
அதற்கு பதில் கடிதம் வருகையில், அதனுடன் அந்த வாக்மேனையும் சேர்த்து
அனுப்பிவைப்பான். அப்படியெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வசிக்கும்
இவன், அந்த குறிப்பிட்ட தேதியில் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்க வேண்டும். இவன்
அவளை சந்தித்து பேசினானா. அவ்வாறு பேசியிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னான
காலத்தில் உள்ள இவளுக்கு அவனின் ஞாபகங்கள் நிச்சயம் இருந்திருக்குமே. இப்படியான கேள்விகள்
அனைத்தும் பார்வையாளர்களுக்கு தானாகவே தோன்ற ஆரமிக்கும்.
இப்படியான ஒரு காட்சிக்கே இத்தனை கேள்விகளும், ஆர்வமும் நமக்கு வருகிறதென்றால்,
ஒரு படம் முழுக்க இப்படியான கேள்விகளுடன், பரபரப்பும் நம்மை தொற்றிக்கொள்ள செய்தால்,
அவ்வாறான படமே இந்த THE CALL.
இதிலும் இயற்கை சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டில் குடியேறும் ஒரு பெண். அங்குவரும்
தொலைபேசி அழைப்பில் பேசும் மற்றுமொரு பெண். அவள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பிந்தைய
காலகட்டத்தில் அதே வீட்டில் வசித்து வருபவள். இந்த இரண்டு பெண்களின் தந்தைகளும்
தொழில் முறையில் பழக்கம் உள்ளவர்கள். இதே 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் ஒரு
முறை இவள் சிறுமியாக தன் பெற்றோருடன் இந்த வீட்டிற்கு வருகிறாள். அதே சமயம் தொலைபேசியில்
இவர்கள் இருவரும் பேசிகொண்டிருக்க. தொலைபேசியில் தனது தந்தையின் குரலை கேட்டு
அழுகிறாள்.
இவள் காரணம் கேட்க, உங்கள் வீட்டிற்கு வந்த சில தினங்களில்தான், வீட்டில்
ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் தனது தந்தையை இழந்ததாக இவள் கூறுகிறாள். அவர் இறந்த அந்த
குறிப்பிட்ட தினத்தில் தான் அவரை காப்பாற்றுவதாக இவள் சமாதானம் கூற. நமக்கும் சேர்த்து
பரபரப்பு தொற்றிகொள்கிறது. இவள் தந்தையை அவள் காப்பாற்றினால் இந்த 20 வருடங்களில்
இவளிடம் என்னென்ன மாற்றங்கள் நிகழும். முன்பே பல சிக்கல்களில் உள்ள அந்த பெண்ணால்
அந்த வீட்டை விட்டு வெளியேறி இந்த பெண்ணின் தந்தையை காப்பாற்ற முடியுமா?
அவ்வாறு இவள் காப்பாற்றினாலும், பதிலுக்கு இவளின் அனைத்து பிரச்சனைகளுக்கும்
தீர்வை இவளிடம் தானே எதிர்பார்ப்பாள். இந்த காட்சியில் இருந்து இப்படி
அடுக்கடுக்கான பல கேள்விகள் நமக்கு படத்தின் இறுதிவரை எழுந்தபடியே இருக்கும். அந்தந்த
காட்சிகளிலே அதற்கு விடையும், அடுத்த காட்சிக்கான கேள்விகளுடனே படத்தின் இறுதி
ஷாட்வரை செல்லும். NETFLIX ல் காணகிடைக்கிறது.