Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, November 23, 2023

 



WEB SERIES 11.

காற்றிலே பரவும் அந்த விஷத்தை சுவாசித்தவுடனே மூச்சு திணறல், பார்வை கோளாறு, சில நிமிடங்களில் நுரையீரல் மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அந்த பகுதி முழுக்க மக்கள் இறந்து கொண்டிருக்கும் இரவில், அந்நகரத்தின் மிக முக்கிய ரயில்வே ஜங்க்ஷனான போபாலை கடந்து செல்லும் ரயில்களில் பயணம் செய்யும் ஆயிரகணக்கான மக்கள். குறுகிய நேரத்தில் நீண்ட தொலைவை கடந்து உயிர் பிழைக்க ரயில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், அதை நம்பி வரும் இந்நகரத்தின் நூற்றுக்கணக்கான மக்கள் என அந்த ஒரு இரவில் அந்த ரயில்வே ஜங்க்ஷனில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உயிர் பிழைத்த சொற்ப ஊழியர்களை கொண்டு எவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினார் என்பதே களம்.    

 

நம் மூளை ஏற்கமறுக்கும் கொடுமைகள் அரங்கேறிகொண்டே துவங்கும் கதை. அதிவேகமாக செல்லும் தொடரின் இடையிலும் இவை வெறும் பரபரப்பிற்காக மட்டுமே சேர்க்கப்பட்ட கதைகளாக நினைக்கும் மனம்.   ஆனால் இத்தொடர் முடிவில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர், அந்த ஸ்டேஷன் மாஸ்டர் என இந்த தொடரின் முக்கிய பாத்திரங்களின் உண்மையான நபர்களின் புகைப்படங்கள் மற்றும் அப்போது வெளியான உலகின் முக்கிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் வீடியோ கொண்டே இந்த தொடரை நிறைவு செய்ததும், கற்பனையை மீறிய இந்த அவலத்தின் உண்மை முகம் நம்மை நிலைகுலையசெய்யும்.

 

விஷவாய்வு கசியும் அந்த தொழிற்சாலை மற்றும் இந்த ரயில்வே ஜங்ஷன் இந்த கதையின் முழுபகுதியும் நடைபெறும் களம். காலகட்டம் 1980. அப்பொழுது பயன்படுத்தபட்ட ரயில்வே உபகரணங்கள் முதல் அந்த தொழிற்சாலை அமைப்பு, அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களின் உடைகள் வரை மிக நேர்த்தியாக கொண்டுவந்துள்ளார்கள். இக்கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் அவர்களின் பின்புலம் இந்நிகழ்வில் அவர்களது முடிவு. இவை நாம் இன்னும் அதிகமாக அந்த கதையினுள் ஒன்ற மிகமுக்கிய காரணம். 8-10 எபிசோட் வரையும் கொண்டு செல்ல நல்ல கதை இருந்தும் அதை மிக அழகாக நான்கு அத்யாயங்களுக்குள் முடித்தது கூடுதல் சிறப்பு. தவறவிட கூடாத மிகமுக்கிய தொடர்.

 

எடிட்டர் தவிர இதன் இயக்குனர், திரைக்கதையாளர், காமெரா, உடைவடிவமைப்பாளர் என அனைவருமே சரியான தொடரின் மூலம் அறிமுகமாகறாங்க. இவர்கள் பங்குபெறும் அடுத்தடுத்த படைப்புகள் நிச்சயம் பேசப்படும்.


Friday, November 17, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 177.

Gran Turismo 1997-ல் வெளியாகி உலகம் முழுக்க மிக பிரபலமான கார் ரேசிங் கேம். இந்த வீடியோ கேமை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட சரியான படம்.  விளையாட்டை மையபடுத்தி எடுக்கபடும் எந்த படத்திற்கும் அடிப்படை விதி ஒன்றுதான். இந்த விதிகளுக்குள் மட்டுமே எடுக்கபட்டிருந்தாலும் இந்த படம் நமக்கு தனித்து தெரியும்.  

ஒரு முக்கியமான பந்தயம் அதில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சர்வதேச ரேசருக்கான லைசன்ஸ் கிடைக்கும். என்னதான் வீடியோ கேம்ல இதே லேப்பில் பல நூறு முறை விளையாடி இருந்தாலும், நிஜத்தில் அவனால் பத்து இடங்களுக்குளே கண்டிப்பாக வரஇயலாத சூழலை சில நிமிடங்களில் பந்தயம் முடியும் முன்னமே உணர்கிறான். சிறுவயது முதல் தனக்கான மொத்த நேரத்தையும் அவன் செலவு செய்தது இந்த விளையாட்டில் மட்டுமே.


அதன் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து இன்று நிஜத்தில் உண்மையான வீரர்களுடன் பந்தய களத்தில் சென்று கொண்டிருக்கிறான். இதை தவறவிட்டால் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லை. தனக்கு மற்ற எந்த வேலையும் தெரியாது. வீட்டில் தனது தம்பியும் அப்பாவை போல கால்பந்து விளையாட்டில் சிறு சிறு போட்டிகளில் வென்று ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டான். இந்த நிலையில் தான் வீடு திரும்பி என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பார்க்ககூட முடியாத சூழல்.


 இத்தனை இக்கட்டிலும் தன்னை அரவணைத்தே வைத்திருக்கும் தாயும், சிறு சிறு புத்திமதிகளை தவிர்த்து வேறு ஏதுமே சொல்லாத தந்தையையும் நினைத்து ஒரே வினாடி கண்களை மூட அவனது அறையில் இதே பந்தயத்தை திரையில் ஆடும் கனத்தை நினைத்து பார்க்கிறான். தனது அறையை கடந்து செல்ல முற்படும் தந்தை சில வினாடிகள் கவனித்து இப்படி கேட்பார். 

நீ மட்டும் ஏன் உனது லைனை விட்டு வெளியே சென்றே விளையாடுகிறாய்?

அனைத்து வீரர்கள் தனது வாகனங்களை அவர்களது லைனிற்குள் செல்வதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த உரையாடல் நடைபெற்று கொண்டிருக்கும் கணமே பந்தய களத்தில் அவனது வாகனம் அனைத்து பாகங்களும் அப்படியே இங்கு அவனது அறையில் நாற்காலியில் விளையாடி கொண்டிருப்பவனுக்கு காரில் அமர்ந்து திரையை பார்த்து விளையாடுவதை போன்ற ஒரு CG வொர்க் வரும். அதுவரை எந்த நெருடலும் இல்லாமல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளனும், ஒரே நொடியில் இந்த கதைக்குள் தன்னை இழந்து விடுவான். ஒரு அட்டகாசமான யுக்தி, அதை ரொம்ப அருமையா கதைக்குள் ப்ளேஸ் பண்ணிருப்பாங்க.


டெனிக்கலா ரொம்ப மிரட்டலான படம். DONT MISS IT WITH FAMILY..!    


Friday, November 3, 2023

 

Web Series - 010

சின்னகவுண்டர் படத்தில் சுகன்யாவை முதல் பாதி முழுக்க விளையாட்டு தனமான பாத்திரமா காட்டிருப்பார் உதயகுமார். ஒரு காட்சியில் விஜயகாந்த் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மோட்டார் போட்டு குளித்துகொண்டிருப்பார்.  அப்போது விஜயகாந்தை பார்த்து தப்பிஓட, அவர் எட்டி பிடிக்கும்போது சுகன்யா கழுத்தில் இருந்த முத்துமாலை அறுந்து வாய்காலில் விழுந்து தண்ணீரில் அடித்து போகும். என் அம்மா ஞாபகமா என்கிட்டே இருந்தது இது ஒண்ணுதான். இப்படி பண்ணிடிங்களேனு வருத்தமா போய்டுவாங்க.


அதோட நமக்கும் அந்த காட்சி பெருசா ஞாபகம் இருக்காது. அடுத்த 30-40 நிமிஷத்துல அவங்க விஜய்காந்த்துக்கே மனைவி ஆகிடுவாங்க. அதுவரை அவரோடு கிண்டலான காட்சிகள் மட்டுமே இருக்கும். திருமணத்துக்கு பின்னே அவரோடான முதல் வசனமே ‘நான் கட்டிருக்கும் புடவை, நகை எல்லாமே உங்க ஆத்தா கொடுத்ததுதான். என் தாய் வீட்டு சீதனம்னு எதும் என்கிட்டே இல்லனு’ அவங்க சொல்லவரதுக்கு முன்னமே விஜயகாந்த் உன் தாய்வீட்டு சீதனம் ஏற்கனவே என்கிட்ட இருக்குனு சொல்லி கைல பொத்தி எடுத்து வந்து சுகன்யா முகத்துக்கு நேரா ஒரு முனையை பிடிச்சிகிட்டே தொங்க விடுவாரு. அவர் விட்ட வேகத்துக்கு அந்த மாலை ஆடுவதும், சுகன்யாவோட பூரிச்சிபோன முகதோட ஆரமிக்கும் அந்த ஷாட்டோட இரண்டாவது மைக்ரோ நொடியில அந்த பாடலோட இசை ஆரம்பமாகும். அவ்ளோ சிலிர்ப்பான காட்சி அது.


நல்லா பாத்திங்கனா அதுவரை பஞ்சாயத்து, சண்டை, ஊர் பெரியவர்னு  அவர் கைல இருந்த படம் சுகன்யா கைக்கு போய்டும். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரைக்கும் இவங்க & மனோரமா பாத்திரங்கள் மூலமாதான் அந்த கதை நகரும். இந்த படத்தோட பெரும் வெற்றிக்கு இந்த இரு பாத்திரங்களும் ரொம்ப பெரிய காரணம்.


இப்படி ரசிச்சி சொல்லவும், சிலாகிச்சி பேசவும், பெருமையா சொல்லிக்கவும் நிறைய நிறைய காட்சிகளும், சம்பவங்களும், பாத்திரங்களும் இந்த சீரீஸ்ல இருக்கு.எப்பவும் சொல்றதுதான் 2.30 மணிக்குள்ளான கதைகளிலே நிறைய விஷயங்கள் சொல்ல இருக்குனா. 4-8 மணிநேரங்கள் போகும் சீரீஸ்ஸில் எவ்ளோ பாத்திரங்கள், காட்சிகள், கதைக்கான களங்கள்னு நமக்கு காட்ட முடியும். இது எல்லாமே இந்த கதையில் முழுமை பண்ணிருக்காங்க. 


இந்த கதையில் 1-2 பிரதான பாத்திரங்கள் மட்டுமில்லாம எல்லோருக்கும் ஸ்கோப் இருக்கும்படியான கதை. குறிப்பா கதை நடக்கும் களம். அடுத்த சீசன் இப்பவே பார்க்க நினைக்கும் படியான முதல் சீசனின் முடிவுனு ஆச்சர்யமா பேசவும், நினைச்சிக்கவும், குறிப்பா குடும்பமா அத்தனை பெரும் ஒண்ணா பாக்கும்படியா, ரொம்ப காலத்துக்கு பின்ன அமைஞ்சி வந்திருக்கும் சீரிஸ். கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. தைரியமா யாருக்கு வேண்டுமானாலும் சஜ்ஜஸ் பண்ணுங்க.

Search This Blog