Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, October 18, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 137.


BIOGRAPHY அப்படின்னு தமிழ் சினிமால யோசிச்சா சில விநாடிகள்ல ஞாபகம் வர படம் நாயகன். அதுக்கு பின்னால ரொம்ப யோசிச்சா (கொஞ்சம் தயக்கமாவே) தவமா தவமிருந்துதான். ரெண்டுக்கும் நடுவுல கிட்டத்தட்ட இருவது வருஷம் தமிழ் சினிமாவும் இருந்திருக்கு. இதே BIOGRAPHY லையே ஒரு களத்தை பத்தின கதையை யோசிச்சா எதுமே இருந்ததா நினைவில் வரவேஇல்ல. ஏன்? “அதான் சுப்ரமணியபுரம் வந்ததேனு நண்பர்கள் சிலரும் வாதத்திற்கு வந்தனர்.’ அந்த களம் அந்த கதைக்கானது மட்டுமே. இங்குயாரும் தனியாக எந்த களத்தின் வரலாறையும் சினிமாவில் கொண்டு வந்ததாக நினைவில் இல்லை. இது வடசென்னை எனும் மீனவகிராமத்தின் வரலாறை, அதே உப்பு காற்றும், கருவாட்டு வாசனையும். அந்த முரட்டு மனிதர்களின் வாழ்வின் போராட்ட  பக்கங்களின் சரித்திரம்.

எனது பதிவுகளில் பெரும்பாலும் சொல்வது ஒரு கதைக்கு அவர்கள் தீர்மானிக்கும் களமே அந்த கதையின் உணமைதன்மையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிக்கும் என்பதே. காரணம் அவர்கள் தீர்மானிக்கும் களம் குறித்த ஆய்வை நிச்சயம் அந்த இயக்குனர் மேற்கொண்டே ஆகவேண்டும். அதை தனது கதையில் பொருத்துகையில் அவர்களின் பேச்சு வழக்கு, உடை, பின் அதே அந்த கதைக்கான உண்மைத்தன்மையை கொண்டுவந்து விடும். நமது அரசாங்கம் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மீனவ கிராமங்களை நகர விரிவாக்கம். தூய்மை இந்தியா இப்படி ஏதேனும் திட்டத்தின் கீழ் அவர்களை காலி செய்ய முயல்வதும். அவை இன்று வரை பெரும்பாலும் தோல்வியிலே இழுத்துகொண்டு செல்வதும் வரலாறு. இதை 1987 லில் ஒரு கொலையில் துவக்கி NON LINEAR முறையில் 2000 வரை திரைக்கதை வடித்துள்ளார் வெற்றிமாறன்.

ராஜன் (அமீர்), குணா (ச.கனி), செந்தில் (கிஷோர்), தம்பி (டேனியல்), வேலு (பவன் – பொல்லாதவன் அவுட்) சந்திரா (ஆண்ட்ரியா), பத்மா (ஐஸ்வர்யா ராஜேஷ்), முக்கிய கதாபாத்திரங்களில். மூன்று பாகங்களாக வரவிருக்கும் வரலாறு இந்த படம். தன் கதைக்கான பாத்திரங்களை வடிவமைப்பதில் இவரை அடித்துக்கொள்ள சமகாலத்தில் எந்த இயக்குனரும் கிடையாது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளத்தில் தான் பயன்படுத்திய பாத்திரங்கள்தான் பெரும்பாலும் எனினும் இதில் முற்றிலும் வேறு களம். வேறு பேச்சு மொழி, நடை, உடை என முற்றிலும் அனைத்தும் வேறு. அதை அப்பாத்திரங்கள் வெளிப்படுத்திய விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஆனால் அதை நீங்கள் அனைவரும் இந்த குப்பத்து மக்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி ஒரே வரிசையில் கொண்டுவந்த விதம்.

தனி ஒருவராக திரையில் யாருக்கும் எந்த காட்சியும் இல்லை. அனைத்து காட்சிகளிலும் குறைந்தது நான்கு முதல் பத்து நபர்கள் வரை. அந்த கூட்டத்திலும் குட்டி குட்டி பாத்திரங்களில் வரும் அன்புவின் மச்சினன், “என் உயிரை காப்பாத்தி கொடுத்து அண்ணனை யாரு போட்டாங்கனு சொல்ல முடியாம பண்ணிடியேடானு அழும் அன்புவின் ஜெயில் சிநேகிதன். செந்தில் உடன் ஜெயிலில் இருக்கும் திடகாத்திர நபர். குணாவோட இடது கழுத்து, தோள்பட்டை வழியே வலது மார்புவரை இருக்கும் வெட்டு தழும்புனு நெறைய நெறைய பேர் அந்த கூட்டத்திலும் நம் கவனத்தை ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து இழுத்து கொண்டே வருகின்றனர்.

நண்பர்கள் பலரின் பதிவுகளில் படித்ததுபோல் இந்த பாத்திரங்களை நினைவுபடுத்தி கொள்வதில் எந்த சிரமமோ, குழப்பங்களோ இல்லை. ஒரே நிமிடம் நம் மனதுள் நிதானித்து நிறுத்தினால் காலத்திற்கும் நம்முடன் பயணிக்க போகும் நபர்கள் இவர்கள். இப்பாத்திரங்களை உள்வாங்கி கொண்டால் மட்டுமே இக்கதையின் வீரியத்தை முழுதும் உங்களால் அனுபவிக்க எதுவாக இருப்பதால் முதல் முப்பது நிமிட படத்தை மட்டுமேனும் மொபைல் நோண்டல், பக்கத்து சீட்டு பல்லிளிப்பு ஏதும் இல்லாமல் சற்று கவனத்துடன் நோக்கினால். அதே உங்களுக்கு பழகிடும். முதல் மூன்று படங்களில் இருந்து இது வெற்றிமாறனுக்கு மட்டும் அசுர பாச்சல் இல்லை. வேல்முருகன் (கேமரா), SREESAN (SOUND DEPT), DHILIP SUBBURAAYAN க்கு மட்டுமில்லாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மிக முக்கிய இருநபர்கள் சந்தோஷ் நாராயணன், எடிட்டர் வெங்கடேஷ் அவர்கள்.

UNDERPLAY ல இன்றைய நடிகர்கள்ல அடிச்சிக்கவே முடியாத ஒரே நபர் அன்பு. அதை திரும்ப திரும்ப அவர் நிருபிச்சி மேல மேல போயிட்டே இருக்கார். அடுத்த பாகம் முழுக்க அன்புவின் எழுச்சியே பிரதானம் என்பதால் இப்பொழுதே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பும் படம் முடியும் நிமிடம் முதல் தானாக எழுந்துவிடுகிறது. ஒரே நபர மட்டும் இந்த மூணு பாகத்திலும் சேர்த்து குறிப்பிட வேண்டும் என்று சொன்னால் என்னுடைய ஒரே தேர்வு சந்திரா மட்டுமே. அமீரின் COOLERS எடுத்து கொண்டு அந்த அறையில் இருந்து வெளியில் வரும் ஒரே ஷாட் அவங்களுக்கு போதுமானது. வரும் மாதங்களில் அனைத்து பத்திரிகை, வார இதழ்களிலும் நிரப்பும் செய்தியாக மட்டும் இல்லாமல் இப்படமும், இதன் technical டீம் அனைவரும் செல்லவிருக்கும் உயரம் மிகப்பெரியது.


ஹோட்டலில் அந்த கொலைக்கு முன் அமீர் பேசும் அரசியல் வசனங்கள் இதுவரை தமிழ் சினிமா காணாதது. அது அடுத்தடுத்த பாகங்களில் மிக வீரியமாக வெளிப்படும் என்பதில் துளியும் ஐய்யமில்லை. காரணம் இக்கதை பேசும் களவரலாறு அவ்வாறானது .

Wednesday, October 17, 2018


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 136.

இந்திய சினிமாக்களில் NATIONAL SECRET FORCE, SECRET OPERATION இப்படியான MISSION IMPOSSIBLE வரையறா கதைகளில் அதே தேசத்தை காப்பது. அதற்க்கு எதிராக செயல்படும் இயக்கத்தை அழிப்பது. இந்த SECRET OPERATIONல் ஏதேனும் தவறு நடந்தால், அந்த இயக்கத்தின் மீது அரசாங்கமே நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்வது என இவை ஒரே பாணி JAMESBOND கதைகளே. இதில் சுவாரசியம் இதன் திரைகதையில் மட்டுமே ஒளிந்துள்ளது. இப்படியான கதைகளை இந்திய சினிமாக்களில் முயற்சிப்பதில் பெரும் சிக்கலே அவை பல ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் படி இருப்பதுவே.

இதும் அதே CBI ல் இணைந்து பணியாற்ற துடிக்கும் நாயகன். அவனை அவர்கள் தேர்ந்தெடுத்து. பயிற்சி கொடுக்கும் விதம் பல படங்களை நினைவூட்டினாலும் இந்த 3௦ நிமிட காட்சிகளை தவிர்த்து படத்தின் இறுதிவரை கதை எங்கையும் வேறு படங்களை நினைவுபடுத்தாததே இப்படத்திற்கான வெற்றி. ஒரு ஹெட். மார்சியல் ஆர்ட் கற்றுதரும் பெண், கம்ப்யூட்டர் ஹக்கிங் பயிற்சிதரும் நபர் என மொத்தம் மூன்றே நபர்கள் இந்த TRINETHRA எனும் இக்குழுவை வழிநடத்த. அனைவரும் பயிற்சி முடித்து ஒவ்வொரு துறைக்கு செல்கிறார்கள். பயிற்சியின் போதே தீவிரவாத இயக்கம் இவர்களை பின்தொடர. பயிற்சி முடித்த முதல் நாள்  நாயகன் TARGET செய்யபடுகிறான். அதும் சாதாரணமாக இல்லாமல் அவனுக்கும் அவன் குழுவுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்த அதன் நிறுவன தலைவரை தீர்த்துகட்டுதல் வாயிலாக.

அதும் அவரை கொன்றது நாயகன்தான் எனும் பக்கா ஆதாரங்களுடன் அக்கொலை அரங்கேறுகிறது. அவரை கொன்ற துப்பாக்கியில் நாயகனின் கைரேகை. கொன்றவர்கள் செல்லும் வாகனம் நாயகனின் அப்பார்ட்மென்ட் வருகிறது. இந்த சம்பவம் நடக்கும் நாளில் பாகிஸ்தானில் இருந்து அவனது வங்கி கணக்கிற்கு ருபாய் இரண்டு கோடி TRANSFER செய்யபடுகிறது. இதும் போக இந்த விழாவிற்கு வரும் நாயகன் தனது CHIEF ற்க்கு கொண்டுவரும் ஸ்காட்ச்ல் விஷம் கலக்கப்பட்டு அதை அருந்தி அவரும் உயிர் துறக்கிறார்.

நாயகன் இந்த கொலையை செய்யவில்லை என்பதற்கான ஒரே ஆதாரம் அந்த தாக்குதல் அரங்கேற இருக்கும் கடைசி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் மொபைல் அழைப்பு ஒன்றே. அவர்களும் இறந்துவிட மொத்த தேசத்தின் பார்வைக்கும் தீவிரவாதியாக அடையாளம் காட்டபடுகிறான். இதில் அந்த தாக்குதல் நடைபெறுவதை நாயகன் இறுதி நிமிடத்தில் எவ்வாறு கணித்தான் என்பதற்கு படத்தின் துவக்கம் முதல் சிறு சிறு காட்சிகளின் வாயிலாக க்ளு கிடைத்து கொண்டே வருவதும். தன் மீதும் தாக்குதல் நடக்கும் இறுதி நிமிடத்தில் அதை அறிந்து நாயகன் தெரிவிக்க அழைப்பதும் கூடுதல் சூவரசிய காட்சிகள்.

மேலும் இந்த துறையில் சேர எதற்காக இவ்வளவு வெறியாக உள்ளான் என்பதை கதையின் துவக்கத்திலே வரும் கதையும். இறுதி காட்சியில் வரும் திருப்பங்களும் இந்திய சினிமாவிற்காக என்றாலும், நிச்சயம் ரசிக்கும்படியான காட்சிகளே. மேலும் நாயகன் அனைத்து விதங்களிலும் குற்றவாளியாக்கப்பட்டது முதல் ஒரு மணிநேர படத்தில். அதற்க்கு பின்னான அதே குற்றவாளியை பின்தொடர்ந்து தான் நிரபராதி என நிருபிக்கும் கதையில் பரபர திரைக்கதை மூலம் நம்மை அசத்தயுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.


தெலுங்கு சினிமாவை பற்றி துளியும் தெரியாததால் இதன் TECHNICAL TEAM  DIRECTOR பற்றி எந்த வரலாறும் பதியபடவில்லை. மேலோட்டமான ஒரே காட்சியை பற்றிய பார்வையை பற்றி மட்டுமே பதிவிட்டு உள்ளேன். இதனுள் பல கிளைகதைகள் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வேறு சிந்திக்க விடாமல் முழு படத்தையும் ரசிக்க வைக்கும்.

TRALIER LINK:

https://www.youtube.com/watch?v=lysoF97MOMk

Saturday, October 6, 2018





பார்த்ததில் மிகவும் ரசித்தது: 135.

பொதுவாக இப்படிபட்ட பொண்ணு கிடைச்ச இவன் உண்மையிலே ரொம்ப அதிர்ஷ்டசாலிங்கற எண்ணத்தை தான் அதிக முறை உணர்ந்திருப்போம். அல்லது நண்பர்களிடம் சொல்லிக்கூட இருப்போம். ஆனால் இப்படியான ஒரு பையன் கிடைச்ச இந்த பொண்ணுதான்ப்பா ரொம்ப கொடுத்து வெச்சவனு சொல்லிகொள்ளும் படியான ஒரு பாத்திரப்படைப்பு பரியனுக்கு. அதுதான் இந்த கதைக்கான சாராம்சமும். சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு பரஸ்பர அறிமுகத்தில்
“உங்க பேரு..
அதான் அப்பவே சொன்னனே “ஜோதி மகாலக்ஷ்மி”
ஓ.. உங்களுக்கு ரெண்டு பேரா?
இல்ல.. மூணு பேரு. வீட்ல “ஜோ”/
ஜோ பாத்திரம் இத சொல்லிக்கொண்டே வகுப்பறையில் இருந்து வெளியேறும் போது. பரியன் சொல்லுவான். ஏங்க ஜோவா, ஜோதிகா பேருங்க. குஷி 19 தடவ பாத்திருக்கேன். ஜோதிகானா எனக்கு அவ்ளோ பிடிக்கும்னு அவன் சொல்லிமுடிக்கும் போது. ஜோ முழுக்க வகுப்பறைய விட்டு வெளியேறி அவங்க தலைகூட மறைஞ்சிருக்கும். அவன் சொன்னதமட்டும் மனசுல வாங்கிட்டே போனவங்க. தலைய மட்டும் உள்ள நீட்டி அதே புன்னகை முகத்துல கூடுதல் பிரகாசத்த மட்டும் பரியன்கிட்ட காமிச்சிட்டு மீண்டும் நடக்க ஆரமிப்பங்க அவங்களோட முழு வெக்கத்தையும் கொஞ்ச கொஞ்சமா முழுங்கிகொண்டே...

இதுவரை வெறும் பரியன் அப்படிங்கற ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பி போன அத்தனை பார்வையாளனையும் தன்னை கவனிக்க வெச்சிடும் இந்த ஜோ பாத்திரம். படம் துவங்கிய முதல் பதினைந்தாவது நிமிடத்தில் வரும் இப்பாத்திரமே நம்மை எந்த அசௌகர்யத்திற்கும் உட்படுத்தாமல் முதல்பாதி கதை முழுக்க மனநிறைவோடு கொண்டு செல்லும். தான் சொல்லும் எல்லா கதைகளிலும் தனது சொந்த எண்ண ஓட்டத்தை புகுத்தாமல். தன் கதை அது செல்லும் பாதையின் உள்ள அனைத்து கீழ் சாதி துவேசங்களையும் துளியும் மிச்சமில்லாமல் கதையின் வழியே நமக்கு குறியீடு போன்ற எந்த மேதாவிதனமும் இல்லாமல் மூலம் வெகு இயல்பாகவும். அதே வலியுடனும் காண்பித்த இயக்குனருக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள்.

வீட்டுபாடம், டீச்சர், BABL மேல ஒரு கொடுன்னு அதே தன் கிராமத்து பேச்சு வழக்கிலேயே ரொம்ப அப்பாவியான சட்டகல்லூரி மாணவன் பரியனனுக்கு. தன் சாதி .குறித்த சீண்டல்களை மட்டும் பொறுத்து கொள்ளாமல் கோவப்படுவதற்கான அனைத்து காரணங்களையும்  கதையில் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ரொம்ப அழுத்தமாக சொல்லபட்டிருக்கும். அதுவே அவனின் ஆக்ரோஷத்தை எந்த இடத்திலும் ஒரு பார்வையாளருக்கும் தவறாக நினைக்க தோன்றாது. ஜோ உள்ள பரியனின் ஆவேச காட்சிகளில் ஜோவை எத்தனை சதவிகிதத்தினர் கவனித்தனர் என்று தெரியாது. ஆனால் இயற்கையிலே அந்த பெரிய கண்களில் தோன்றும் கூடுதல் மிரட்சியும். அந்த ஒடிசல் தேகத்தில் ஏற்படும் நடுக்கமும் அவனின் மேல் உள்ள பிரியத்தின் மொத்த சாட்சி.

முதல் முறை அவனது கோவத்தை பார்த்து, பின் அவனிடம் ரொம்ப தயக்கமா.. ENGLISH சுத்தமா தெரியாம எப்படி 1௦, +2 லாம் பாஸ் பண்ணிங்கன்னு கேக்கும் போது.. அந்த கதை FLASHBACK போகும். (அத  அவ்ளோ சுவாரசியமா பண்ணிருப்பாங்க) போது ஜோ அந்த கதைய ரொம்ப சரியா ஒரு குறிப்பிட்ட இடத்துல பரியன DIVERT பண்ணி அடுத்த கதைக்கு கூட்டிபோய்டுவாங்க. அவனும் கதை சொல்ற சுவாரசியத்தில் அடுத்தடுத்து சொல்லி முடிச்சதும். ப்பா... நான்லாம் ஸ்கூல் பாஸ் பண்ணேன். அப்ப “லா” படிக்க சொன்னாரு படிக்கறேன் அவ்ளோதான். ஆனா உங்களுக்கு உள்ள இவ்ளோ கதைகளானு கேப்பாங்க.

இப்படி வாழ்கையில் தனக்கான கதைகள் இல்லாத மனிதர்கள் நிரம்ப அதிர்ஷடசாலிகள். அவர்களாலே வெறும் கதைகளோடு மட்டுமே அலையும் பரியன்களின் கதைகளை வெகு ஆர்வமாக ரசிக்க இயலும். ரொம்ப கணக்கும் இதயத்தோடு இறுதி காட்சியில் நாம் கிளம்பும் ஒரு 1.3௦ நிமிடங்களுக்கு முன்ன பரியன ஜோ அப்பா பாத்திரம் சந்திக்க வருவார். கிட்டத்தட்ட இரண்டாம் பாதி முழுக்க நாம ஜோவ மறந்தே போய் இருப்போம்.  பரியன் மட்டுமே ரொம்ப ஆழமா நமக்குள்ள இருப்பான். அந்த நேரத்துல அவங்க அப்பாவையும், பரியனையும் உக்கார வெச்ச்சிட்டு ஜோ ஏதாவது வாங்கிவர CANTEEN போவாங்க. அப்ப அவங்க அப்பாகிட்ட ஏதாவது பேசசொல்லி சைகை பண்ணுவாங்க. இந்த ஆனந்தி பொண்ணு இன்னும் இருவது வருஷம் இங்க இருந்தாலும் இப்படியான ஒரு காட்சி திரும்ப கிடைக்காது. ஆனா அதுக்கு அப்பறமும் அது எல்லார் மனசிலையும் நிக்கும்படி அந்த சில வினாடி காட்சிகளில் அவ்ளோ அட்டகாசபடுத்தி இருக்காங்க.

இந்த படம் காதல மட்டும் சொல்லையே. இது சொன்ன விசயமே வேற. ஆனா இந்த படம் அனைத்து பார்வையாளரும் ஏற்று வெற்றி படமானதுக்கு மிகபெரிய காரணம் அந்த பெரிய கண்ணும், ஒரே வெக்க சிரிப்பையே அனைத்து காட்சிக்கும் பொருந்திபோற போல கொடுத்த ஜோதான். தமிழ் சினிமா தொடாத பாத்திரபடைப்புகள் இந்த படத்தில் உண்டு. இப்படியான படங்களை பார்க்கும் போதுதான். பாவம் அவனும் எத்தனை கதைதான் எடுத்துட்டே இருக்கமுடியும். எல்லா கதையும்தான் சொல்லியாச்சேனு நாம அடிக்கடி சமாதானம் சொல்லிகிட்டது. எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நமக்கு தெரியும். இன்னும் சொல்லபடாத கதைகளும். அறிமுகபடுத்தபடாத பாத்திரங்களும் லட்சகணக்கில் நம்மள சுத்தி இருப்பது நமக்கே உரைக்கும். முதல் கதையில் இப்படியான எதிர்பார்ப்பை சமீபமா எந்த புது இயக்குனரும் ஏற்படுத்தல. தன்னோட முதல் படைப்பிலே இப்படியான வலியயும் யாரும் சமீபமா தரல. இந்த ஒரே படத்துக்கு மட்டும் தான் அடுத்து இன்னொரு பதிவும் எழுத தோணுது. இதே மாரிசெல்வத்துக்கு பெரிய வெற்றிதான!..

Search This Blog