Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, December 25, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 098.
நமது புறச்சூழல் காரணமாக அல்லது வேறொரு நபரால் ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து குறிப்பிட்ட ஹீரோ தானும் மீண்டு, தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுவதுதான் சினிமாக்களின் கருப்பொருள் என்பதான புரிதல் நமக்கு எப்பொழுதோ வந்துவிட்டது. இதனாலேயே நாம் பார்க்கும் படங்கள் முதல் யோசிக்கும் கதைகள் வரை இவ்வாறே உள்ளது.
நமது அகச்சூழல் குறித்த கதைகளையும், சினிமாக்களும் பெரும்பாலும் நாம் நிராகரிக்க கூறும் காரணம். அவை மிக மெதுவாக நகர்வது போன்ற நமது எண்ணம். பெரும்பாலும் தங்கள் சினிமாக்களில் அகச்சூழல் குறித்த கதைகளை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இயங்கும் சினிமா துறையிலிருந்து ஒரு படம் இப்பொழுது...

குடும்ப நண்பர்கள் (மூன்று ஜோடிகள்) தங்களது நண்பர் ஜெர்மனிலிருந்து தனக்கு பெண் பார்க்க வருபவரை, இவர்கள் பார்த்த பெண்ணோடு சேர்த்து வார விடுமுறையை கொண்டாட, ஒரு கடற்கரையை ஒட்டியுள்ள வில்லாவில் தங்குகிறார்கள். உடனே அங்கு ஒருவர் கொலை செய்யப்படுவார், அல்லது அந்த வில்லாவில் அமானுசிய சம்பவங்கள் நடைபெறும் போன்ற கற்பனை வருதுனா நேரா முதல் பத்திக்கு திரும்ப போய்டுங்க.
கடற்கரையில் விளையாடும் குழந்தை ஒன்றை காப்பாற்ற கடலில் குதிக்கும் அந்த எல்லி என்ற பெண் பாத்திரம் இறந்துவிடுகிறாள். இதன்பின் வரும் நடைமுறை சிக்கல்களை மட்டுமே முழுக்க முழுக்க அலசும் கதை.
முழுக்க அந்த கடற்கரையும், அதை ஒட்டியுள்ள அந்த பழைய வீட்டிலும் முழு இரண்டு மணிநேர கதையும் நிகழ்கிறது. வெறும் இவர்களது வாதங்களோடே கடந்தாலும், உள்ள சொற்ப பாத்திரங்களை கொண்டு எங்கும் நம்மை சோம்பல் முறிக்கவிடாமல் செய்த உருவாக்கல்.
கதையின் துவக்கம் முதல் இறுதிவரை நம்முடனே பயணிப்பது அந்த கடல் அலையின் ஒலி மட்டுமே. துவக்கத்தில் அவர்களது களிப்புகளுடன் அந்த அலைகள் சந்தோசமாகவும். கடலில் தொலைந்த எல்லியையும், அந்த குழந்தையையும் தேடும் கணங்களில் மிக பயங்கரமாகவும். எல்லியின் காதலனின் வருகைக்கு பின் அதே அலையின் ஒலி மிகத்துயரமாக நமக்கு கேட்கும்படியான (மோனோலிசா ஓவிய கோட்பாட்டின் படியான) உருவாக்கல்.
ஆண் பாத்திரங்களின் துயரம், ஏமாற்றம், அழுகைகளை எத்தனையோ படங்களில் நாம் பார்த்திருந்தாலும். இறந்த காதலியை தேடி வரும் ஒரு ஆண் பாத்திரம். துளி கண்ணீரும் இல்லாமல் வெறும் சோகத்தை மட்டுமே சுமந்து வரும் அந்த முகம் நமக்குள் ஏற்ப்படுத்தும் துயரத்தை மறக்க பல நாட்கள் ஆகலாம். மேலும் #Sepideh எனும் பாத்திரத்தில் வரும் பேரழகியும்..
இதன் இயக்குனர் #Asghar_Farhadi இவரே தற்போது ஆஸ்கார் பரிந்துரையில் இறுதி சுற்றுவரை எட்டி உள்ள #The_Salesman படத்தின் இயக்குனர். மேலும் 2011-ல் “Best Foreign Language Film of the Year” #A_Separation படத்திற்கு ஆஸ்கர் வென்றவரும் இவரே.

Thursday, December 21, 2017


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 121


முதல் மூன்று நிமிடம் இயற்கை எழில் கொஞ்சும் வனங்களும், பனி பொழியும் நீரோடை வழியாகவும். எந்த பின்னணி இசையோ, பறவைகளின் ஒலியோ, ஓடும் நீரின் சத்தமோ இல்லாமல் நம்மை அழைத்து செல்லும் இயக்குனர் நமக்கு உணரவைத்தது ஒன்றைத்தான். அதாவது நாம் மிக ரசிக்கும் அனைத்தும் நம் அருகில் இருப்பினும், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற வெறுமையை.  இப்படியான ஒரு கதைக்கும் அது தாங்கிவரும் இந்த கனத்த வெறுமையையும் துவக்கம் முதலே பார்வையாளனுக்கு பழக்க வறண்ட நிலத்தையோ, அழும் குழந்தயையோ படமாக்காமல், கதை நிகழும் களத்தை ஒட்டிய இயற்கை காட்சிகளை கொண்டே இந்த வெறுமையை நமக்குள் புகுத்திய இயக்குனரை இந்த மூன்று நிமிட காட்சிகளுக்குள்ளே புகழ்ந்திட எண்ணுவோர் எண்ணிவிடவும். ஏனெனில் இந்த நிமிடங்களுக்கு பின்னே இந்த கதையின் கனத்த வெறுமையை நமக்கும் கொடுத்து நம்மையும் இக்கதையின் பாத்திரங்களை போல் அனைத்தும் இருந்தும் ஏதுமில்லா வெறுமை நிலைக்கு ஆட்படுத்த இருக்கிறார்.


அந்த மூன்று நிமிடங்களுக்கு பின்னாக கதையின் துவக்கம். பள்ளியில் இருந்து வெளியேறும் சிறுவர் கூட்டம். இதில் எந்த சிறுவனின் பின்னால் கேமரா செல்லுமோ அவனே நமது அடுத்த இரண்டு மணி நேரத்திற்கான எஜமானன். அப்பொழுது தெரியாது அடுத்த நம் அடுத்த சில நாட்களையும் இச்சிறுவனும் அவனது வெறுமையும் ஆட்கொள்ள போகிறதென்று. ஒரு கணவன் & மனைவி சட்டப்படி விவாகரத்துக்கு காத்திருக்க அவர்களது பன்னிரண்டு வயது மகனின் நிலையை, உணர்வை, அவனது எதிர்காலம் பற்றிய பயத்தை பார்வையாளர் அனைவருக்கும் கடத்திய வகையில் கவனிக்க வேண்டிய சினிமா.


ஒருவரிடமிருந்து நாம் ஒதுங்க நினைக்கும் சூழலில், பிடிமானம் இல்லாத நமக்கு ஒரு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் நமது வெறுப்பின் அளவு அவர்களின் பால் சற்று அதிகமாகவே இருக்கும். நாம் ஒதுங்க நினைத்தது நம் கணவனிடமோ, மனைவிடமிருந்தோ எனில்? நமக்கென மற்றொரு இணையும் இருக்கும்பட்சத்தில். பரஸ்பரம் புரிதலுடன் விவாகரத்திற்கு காத்திருக்கும் இவர்களின் மிகப்பெரும் தலைவலி அவர்களது குழந்தை. அத்தலைவலிக்கான காரணத்தை ஆராயாமல், இவர்கள் இருவருக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய தினம் அச்சிறுவன் விட்டைவிட்டு வெளியேறுகிறான்.


உடனே அலைந்து திரிந்து அச்சிறுவனை கண்டடைந்து தங்களின் கீழ்மைநிலைக்கு வருந்தி கண்ணிருடன் மூவரும் இணையும் வழக்கமான கதையாக இல்லாமல், துவக்கம் முதலே அச்சிறுவனிடம் வெறுப்பை உமிழும் தாயாகவும். தன் மகன் மாயமானத்தின் பின் அவனை கண்டடைவதில் காட்டும் முனைப்பிலும். தற்போதும் அவன் மீதிருந்த அதே நிலையிலேயே அவனை தேட துவங்கும் இடங்களிலேயே இக்கதையும் அப்பெண் பாத்திரமும் தனிபெரும் கவனம் பெறுகிறது. கதையின் துவக்கத்தில் மாயமாகும் சிறுவன் பின் எந்த இடத்திலும் காட்சிகளில் தேவைபடாத கதை. ஆனால் கதை முழுக்க இல்லாத அந்த சிறுவனை பற்றியே.


மிக சரியாக இக்கதை துவங்கும் இடம் அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியிலிருந்தே. அதற்கான காரணமாக இக்கதை சொல்வது அவன் பெற்றோர்கள் இடையேயான வாக்குவாதம் எனில். முழு கதைக்கும் அச்சாணியான அக்காட்சி பார்வையாளனுக்கும் அந்த தம்பதியரின்மேல் எவ்வாறான எண்ணத்தை விதைக்க வேண்டும். இக்காட்சி மட்டுமே அச்சிறுவனே அதற்க்கு பின் முழு கதையிலும் இல்லாவிடினும் அவனின் மேல் இறுதிவரை பச்சாதாபத்தை விதைக்க செய்யும் ஒரே காட்சி. இவ்வாறான காட்சிக்கு ஆழ்ந்த வசனங்களும் தேர்ந்த நடிகர்கள் மட்டுமே போதாது. வாதம் நடைபெறும் சூழல், நாம் பார்க்கும் கோணம் முதற்கொண்டு அவசியமாகிறது. அப்படியான ஒரு காட்சியும் அரங்கேறுகிறது.. அவர்களின் முழு வாதமும் நிறைவுறும் சூழல்வரை தென்படாத அச்சிறுவன் கழிவறையின் இருளில் நின்று ஒலி எழுப்பாமல் கதறுவது போன்ற ஒரு ஷாட் இரு வினாடிகள் மட்டுமே. ஆனால் அந்த இரு வினாடி பார்வையாளனுக்கு கொடுக்க போகும் வலி அவ்வளவு சுலபமாக வார்த்தைபடுத்த இயலாது.



இறுதியான  ஷாட் அத்துடன் படம் நிறைவடையும் அதன் பின்னே பார்வையாளன் அனைவருக்கும் படம் நெடுகிலும் எழுந்த அனைத்து கேள்விகளுக்குமான விடை அந்த ஒரே ஷாட்டில் உள்ளது. அதும்போக அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள். வெறும் வார்த்தைகளுக்கான வீரியத்தை அந்த தம்பதியரின் வாதத்தில் கவனிக்கலாம். இறுதியில் TREAD MILL ல் ஓடும் தாய்பாத்திரம் வரும் ஷாட் சொல்லும் செய்தி. இவ்வளவு தேடலுக்கு பின்னும் தான் தனது நிலையிலிருந்து மாறாமல் அதே இடத்தில் நிற்ப்பது என முழுநீள படத்தின் இறுதி காட்சிவரை இயக்குனரின் தனி சாம்ராஜ்யமே.    


படத்தின் டிரைலர் லிங்க்:
https://www.youtube.com/watch?v=mLegoO4NdD8

Saturday, December 9, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 120.

COMPETING BEST FOREIGN LANGUAGE FILM - HUNGARY - OSCARS #1

ON BODY AND SOUL (2017) – HUNGARY  - நம் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

ஒரு படம் எத்தனை தூரம் பார்வையாளர் மனங்களை கவரும் என்பதற்கு மிகமுக்கிய பங்கு அக்கதை தேர்ந்தெடுக்கும் களத்திற்கும் உண்டு. வெறும் களங்களால் மட்டுமே காலத்திற்கும் நின்ற சாதாரண கதைகளும் உண்டு. இரு பாத்திரங்களுகிடையேயான நேசத்தை கதைப்படுத்த எத்தனையோ களங்களை கற்பனைகளில் பொருத்தி பார்க்கலாம். ஆனால் கதைபடுத்துதல் எளிதல்ல. காரணம் அது மொத்த படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டிலும் தனித்து தெரியாமல் கதையுடன் பொருந்தி போகவே வேண்டும். மேலும் அக்களம் அந்த கதையையும் அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அப்படியான உருவாக்கமே அக்களத்திற்கு அந்த படைப்பாளி கொடுக்ககூடிய அதிகபட்ச மரியாதை. தனிமையை  துணையாக கொண்ட இரு பாத்திரங்களுக்கிடையேயான வெறும் நேசம் கொண்ட சராசரி கதையை காலத்திற்கும் நிற்கும்படியான களத்தை பொருத்தி, கதைப்படுத்தி, அதையே காட்சியும்படுத்தி பார்வையாளர்களை பரவசம் தாண்டிய வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது.!!


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் உயர் பதவிவகிக்கும் தனக்கென யாருமற்ற ஆண் மற்றும் பெண் என்ற இந்த இரு பாத்திரங்களே இக்கதையின் பிரதானம். இந்த எளிய கதையை மட்டுமே குறைந்தது நூறு சினிமாக்களில் பல்வேறு தளங்களில், மொழிகளில் கண்டு ரசித்திருப்போம். நாம் இதற்க்கு முன் கண்டிராத எந்த வகையான களம் தெளிந்த நீரோடை போன்ற இந்த எளிய கதையில் கலக்கப்பட்டுள்ளது என்பதிலே இக்கதை கூடுதல் சிறப்பு பெறுகிறது.  


ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு துறைகளில் பணியில் இருப்பினும் மற்ற அனைவரிடமிருந்தும் தனித்து தெரியும் நாயகியின் பால் நாயகனுக்கு துவக்கம் முதலே சிறு ஈர்ப்பு இருக்கும். பின் ஒரு கட்டத்தில் தங்கள் இருவரின் கனவுகளும் (தூக்கத்தில் வருவது லட்சியமல்ல) ஒன்றே என தெரியவரும் கட்டத்தில் இவர்களுக்கிடையே துவங்கும் பழக்கம் தங்களது முதல் நாள் கனவுகளை பகிர்ந்து கொள்ளும் கட்டத்தில் சற்று நெருக்கம் ஏற்பட்டு அவர்களுள் அப்படின்னு எந்த வழக்கமான யூகங்களுக்கும் நம்மை கொண்டு செல்லாமல் அவர்கள் உறவு அங்கேயே சிறு முன்னேற்றம் அல்லது பின்னடைவுடளுடன் இருக்கும். அப்படினா படம் பூரா இவங்க மட்டுமே பேசி நம்மளை கொல்லபோறங்களா என்றால் கிட்டத்தட்ட சரிதான். ஆனால் இந்த அனுபவம் நிச்சயம் நம்மில் பெரும்பாலோர் எந்த திரைப்படங்களிலும் இதற்க்கு முன் அனுபவித்திடாதது.


தங்கள் கனவுகளை சோதித்து பார்க்க இருவரும் ஒரே அறையில் தங்க முடிவெடுப்பது. அவை கைகூடாமல் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயல்வது. இவ்வாறாக நம்மையும் அவர்களுடனே பயணப்பட வைத்து இறுதியில் இவர்கள் இருவரும் இணையும் இரவிற்கு அடுத்த பகலில் தங்களது கனவும் அந்த இரவுடனே முடிந்ததாக அவர்கள் அறிந்துகொள்ளும் நிமிடத்தில் நிறைவுறும் இந்த படம் சொல்லும் செய்தி என்ன.?


ஒரே கனவு இருவருக்கும் என்பதில் துவங்கும் நட்பின் அடுத்த கட்டமாக நாம் இருவரும் ஒரே அறையில் தூங்கி பார்க்கலாம் என்ற இடம் இக்கதையின் மிகமுக்கிய காட்சியாகும். அதுவரை தினமும் கனவு+உறக்கங்களுடன் இரவுகளை கழித்தவர்களுக்கு அன்று சாலையில் செல்லும் வாகனங்களின் இரைச்சல்.அடுத்த வீட்டு தொலைக்காட்சி ஓசை என அதுவரை இரவில் அவர்கள் உணர்ந்திடாத ஒலிகள். அவர்களை தூங்கவிடாமல் ஒரு அளவுக்கு மேல் பொறுக்காத நாயகி வீட்டிற்க்கே திரும்ப முடிவெடுப்பாள்.


ஒரே கனவு இருவருக்கு சாத்தியம் இல்லை. அதை இயக்குனரும் ஒரு காட்சியில் தெளிவுபடுத்தியிருப்பார். பின் இதில் கனவுகளாக சித்தரிக்கபடுபவை? அவர்களின் உணர்ச்சிகளையே கனவுகளாக சித்தரிக்க படுவதாலே இருவரும் ஒரே அறையில் ஒன்றான பின்னும் அங்கு நமது கனவுகளுக்கு இடமில்லாமல் போவது. இவ்வாறான ஒரே உணர்ச்சிகளில் உந்தப்படுவோரின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளதே இவர்கள் இருவரும் தற்கொலை முடிவு ஒரே நேரத்தில் எடுப்பதும் என முழு படத்தின் எந்த ஒரே ஒரு ஷாட்டும் இக்கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத வகையில் அமையபெற்றதே இவ்வாறான உளவியல் சார்ந்த திரைப்படங்களை நம்மில் பெரும்பாலோர் துணிந்து முழுதும் ரசிக்கமுடியும்.


கூடல் ஒன்றே மையகருவாக கொண்ட கதையின் ஒரே ஒரு காட்சியில் கூட நேரடியாக அது சம்பந்தமான எந்த ஒரு காட்சியும் இல்லாமல். கதையும் அந்த மையகருவை தாண்டி செல்லாமல் ஒரு படம். நீலபடமொன்றை நாயகி தொலைகாட்சியில் பார்க்கும் காட்சியில் அவள் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உணவருந்தி கொண்டே ஏதோ செய்திகள் பார்ப்பது போன்ற நிலையில் அமர்ந்திருப்பதும். பின்னொரு காட்சியில் ஒரு காதல் பாடலை கேட்க்க நேர்கையில் நிலை கொள்ளாமல் தவிப்பதும். காதல் இல்லாத வெறும் கூடல் எந்த வகையிலும் நமக்கு நிறைவை தராது என்ற வகையில் அமையபெற்ற காட்சி. இவ்வாறான முழு படமும் நம்மை இதேபோன்று ஏதோ ஒன்றுடன் பொருத்தி பார்க்க செய்யும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும்.
ஒருவர் மீது கொள்ளும் காதலே நாம் இறக்கும் தருணம் வரை நம்முடன் வரும் கூடல் ஒரு வயதிற்கு பின்னாக அத்யாவசியமாகாது என்பதாலே தான் தற்கொலை முடிவேடுத்தவள். அந்த காதல் பாடலை கேட்டுகொண்டே இறக்கலாம் என அப்பாடலை ஒலிக்கவிடுகிறாள். தனது மணிக்கட்டை அறுத்துகொண்டு பாத்டப்பில் படுத்திருப்பவள் முகத்தில் ஏற்ப்படும் மனநிறைவும். திடீரென ஏற்படும் கோளாறில் அப்பாடல் பாதியில் நின்றுவிட அவள் முகத்தில் ஏற்படும் சஞ்சலங்களையும் முழுக்க எழுத்து வடிவமாக்க சாத்தியமில்லை.


இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே இக்கதையின் உயிர்நாடி. ஏனெனில் இப்படம் முழுக்க நிறைவுறும் வரையில் ஒரு காட்சியில் கூட நாம் இந்த இசை மற்றும் எடிட்டிங்கை பற்றி நிச்சயம் தனித்து உணரமாட்டோம். அவை காட்சிகளுடனே அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும்.


காதல் செய்வோம்.

Search This Blog