OZHIVUDIVASATHE KALIi – இந்தியாவின்
மிகச்சிறந்த அரசியல் படம்.
ஒரு கதை அது தாங்கி வரும் கருவை முழுபடத்தில் ஒரு
ஷாட்கூட நேரடியாக கூறாமல் ஆங்காங்கே மறைமுகமாக மட்டுமே கூறி. அது
பார்வையாளர்களையும் சலிப்பேர்ப்படுத்தாமல் முழுதாக சென்று சேரும்படியான
மிகச்சரியான படைப்பு.
கிட்டதட்ட நாற்பது வயதிலுள்ள ஐந்து நண்பர்கள் அவர்கள்
மாநிலத்தின் தேர்தல் நடைபெறும் அன்று விடுமுறை தினமானமானதால் (வாக்காளர் கடமையை கூட
நிறைவேற்றாமல்) ஒன்றாக குடிக்க தங்களுக்கு சௌகர்ய இடம் ஒன்றுக்கு செல்கின்றனர்.
அங்கு அவர்கள் உதவிக்கு சமைத்து பரிமாற ஒரு ஆண் மற்றும் பெண் இருக்கிறார்கள். படம்
துவங்கி பதினைந்து நிமிடத்தில் அங்கு செல்லும் இந்த ஐந்து நண்பர்கள் மேலும் அந்த இரண்டு
பணியாளர்கள் இந்த ஏழு நபர்களின் அடுத்த ஒன்றரை மணிநேர வாழ்க்கையே இப்படம்.
நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடிப்பது.
அருகிலுள்ள குளத்தில் குளிப்பது. பலாபழம் பறிப்பது. அவர்கள் தங்களுக்குள்
நடத்தும் உரையாடல். அவர்களின் சந்தோசம்,
கோபம், வஞ்சம், காமம் இதை மட்டுமின்றி இவர்கள் நடவடிக்கையின் ஒவ்வொரு அசைவும்
நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அரசியல் பேசவேண்டும். ஒரே லொகேஷனில் ரசிகர்களுக்கு
சலிப்பு ஏற்ப்படுத்தாமல் சொன்னதில் உள்ளது இவர்களின் சிறப்பு.
அவர்களில் இருவர் அந்த பெண்ணிடம் தவறாக அணுக
முயற்சிக்கின்றனர். அதில் அதிக செல்வாக்கானவர் அப்பெண்மணியிடம் அரை வாங்குவது. மேலும்
இலவசமாக கிடைத்த பலாபழத்தை தங்களில் செல்வாக்கானவருக்கு அதிக பங்கும் அதில்
குறைந்தவருக்கு சிறு பங்கும் மற்றவருக்கு ஏதும் இல்லாமல் பாகம் பிரிப்பது. சமைக்க
கொண்டுவரும் கோழியை என்னால் கொல்ல இயலாது என சமைக்கும் பெண்மணி கூறுவதால்,
அவர்களில் மிக எளிமையானர் தலையில் அந்த பாவச்செயல் கட்டப்படுவது. பின்னால் அந்த
பாவமே அவரது தலையில் விடிவது.
அவர்களிடையிலான உரையாடல் வாக்குவாதமாகி அந்த வீட்டை
விட்டு வெளியேறும் நண்பர் ஒருவரை அதற்க்கு காரணமானவர் தவிர மற்றவர்கள் (குறிப்பாக
அந்த எளியவர்) சமாதானப்படுத்துவது. இறுதியில் அவர் மூலமே இவர் வாழ்க்கை முடிவது.
இக்கதையின் ஒவ்வொரு காட்சியும் நமக்கு வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்தியே
செல்லும்படியான திரைக்கதை அபாரம். மேலும் கதையின் அனைத்து காட்சிகளும் மறைமுகமாக
பேசும் உள்ளார்ந்த அரசியல் நிலையை பற்றி சிந்திக்காமல் மேலோட்டமாக பார்த்தாலும்
அந்த நண்பர்களிடயேயான இந்த ஒன்றரை மணிநேர கதை மிக சூவாரசியமாகவே செல்வதும் இதன்
சிறப்பம்சம். ஆதலால் பொழுதுபோக்கிற்கு படம் பார்க்கும் ரசிகர்களையும் இக்கதை
கவரும்.
இந்த நண்பர்கள் மற்றும் பணியாட்கள் மட்டுமின்றி மிக
முக்கிய கதாபாத்திரமாக மழை மற்றும் அவர்கள் தங்கியுள்ள வீட்டின் அருகிலுள்ள குளத்தின்
நீர் காற்றில் ஏற்ப்படுத்தும் சலனத்தையும் கதையின் போக்கோடு இணைத்து வைக்கப்பட்ட
அனைத்து ஷாட்ஸ்ம் அட்டகாசம். உதாரணமாக நண்பர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று ஒருவர்
வெளியேறி மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வரும் காட்சியில், அவர்கள் வாதத்தின் போது துவங்கும் மழை.
அவர்களின் வாதம் உச்சநிலையை அடைகையில் வலுபெருவதும். ஒருவர் வெளியேறி மற்ற
நண்பர்கள் சமாதானப்படுத்துகையில் மிதமாகி, பின் அவரை அறைக்கு அழைத்து வந்து
சமாதானபடுத்துகையில் தூறலாக மாறுவதும். அவரின் வெளியேற்றத்திற்கு காரணமானவரே வந்து
கட்டியணைத்து பேசுகையில் தூறலும் சுத்தமாக நின்றுவிடுவது என அற்புத உருவாக்கல்.
படத்தின் இறுதி காட்சிவரை இக்கதையை அரசியல் படமாக
எந்த சராசரி சினிமா ரசிகனாலும் உணர இயலாத வகையில் அமையப்பெற்ற நல்ல குதூகல படம்.
கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் கவரும். இதில் பணியாளர்களை பொதுமக்களாகவும், இலவசமாக கிடைத்த பலாவை
லஞ்ச பணமாகவும், நண்பர்கள் ஒவ்வொருவரையும் ஒரு அரசியல் கட்சியாகவும் (யார் எந்த
கட்சி என நீங்களே யூகித்துகொள்ளவும்). இறுதி காட்சிக்கு பின் தொலைகாட்சியில்
ஒலிக்கும் கம்யூனிசம் குறித்த வாதத்தை தவறவிட வேண்டாம். நமக்கு கேரள அரசியல் குறித்த
பார்வை எவ்வளவவு அதிகமோ அதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இப்படத்தை ரசிக்க இயலும்.