பார்த்ததில் மிகவும் ரசித்தது: 117.
ஒரு கதை அது ஒரு பாத்திரத்தின் மீது கொடுக்கும்
அழுத்தத்தை, நியாயமான சம்பவங்கள் அடங்கிய திரைக்கதை மற்றும் தேர்ந்த நடிகர்களை
கொண்டு உருவாக்கப்பட்ட முழுமையான திரைப்படம். 2௦14 ல்
இராக் யுத்தத்தில் அங்கு மாட்டிகொண்ட 2௦க்கு மேற்ப்பட்ட மலையாளி நர்ஸ்கள்
மீட்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு.
உண்மை சம்பவத்தை கொண்டு உருவாக்கப்படும் படைப்புகள்
எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக இருக்கவேண்டுமோ. அதே அளவு அந்த முக்கிய
பாத்திரத்தை சுற்றி புனையப்படும் கிளைகதைகள் உண்மையாக இல்லாவிடினும் சுவாரசிய
குறைவாக இருக்ககூடாது. நாம் எந்தளவு சுவாரசிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படைப்பை
எடுப்பினும் அதை சுற்றி பின்னப்படும் கதைகளில் சுவாரசிய குறைவாக இருப்பின் அந்த
படைப்பு நிச்சயம் பார்வையாளனுக்கு முழு திருப்தியை கொடுக்காது.
இக்கதை இராக்கில் துவங்குவதற்கு முன்னே அங்கு பணிக்கு
செல்லும் பெண்ணாக வரும் பார்வதியை சுற்றி பின்னப்பட்ட கிளைக்கதையை கொண்டே
உணர்வுபூர்வமான ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க இயலும். இந்த நாயகி தான்
ஏற்கும் பாத்திரங்களை தேர்வு செய்யும் முறையிலும் அதில் பார்வையாளர்களை பிரமிக்க
வைப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதை இம்முறையும் நிருபித்துள்ளார்.
தான் விரும்பி மணமுடிக்கும் கணவனிடம் தனது குடும்ப
சூழலை எடுத்து சொல்லி திருமணத்திற்கு பின்னும் பணிக்கு செல்ல சம்பந்தம் பெறுகிறார்
நாயகி சமீரா. கட்டுகோப்பான முஸ்லீம் குடும்பத்தில் அது சாத்தியப்படாததால் திருமணமான
சில வருடங்களில் விவாகரத்து பெறுகிறார். தனது பெற்றோர்களுக்காக தனது நான்கு வயது
மகனையும் பிரிகிறார். மேலும் மகனிடம் அவர்களது விவாகரத்தை பற்றி கூறாமல் தான்
வெளிநாட்டிற்கு பணிக்கு வந்துள்ளதாக தொலைபேசி வருகிறார். மேலும் தனது மகனை
தன்னிடமே அனுப்பிவிடும்படி தனது முன்னாள் கணவனையும் வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில்
இராக்கிற்கு பணிக்கு செல்லும் வாய்ப்பு வர தனது குடும்பத்திற்காக செல்ல
முடிவெடுக்கும் சூழலில் தனியாக அவரை வெளிநாடு அனுப்ப அவர் குடும்பம் தயங்க. சில
வருடங்களாக அவருடன் மருத்துவமனையில் உடன் பணிபுரியும் குஞ்சக்கோ போபனின் காதலை
ஏற்று மணமுடிக்கிறார்.
விசா வரும் வேளையில் கர்ப்பமுற்று தன் கணவனின் குடும்பத்தார்
வற்புறுத்தலால் மீண்டும் வெளிநாடு செல்ல தடை ஏற்படுகிறது. இவ்வாறான சூழலில் மூன்று
மாத கர்ப்பத்துடன் ஈராக் சென்று சேரும் சூழலில், தனது முன்னாள் கணவன் தனது
வியாபாரம் நலிவுற்று இவர்களது மகனை நிரந்தரமாக இவரிடமே ஒப்படைத்து செல்கிறார். தனது
கர்ப்பம் மற்றும் இந்நாள் கணவனை தனது பத்து வயது மகனிடமிருந்து மறைக்க முயன்று
வரும் சூழலில் தனது கணவனை உள்நாட்டு யுத்தத்தில் தொலைக்கிறார்.
இவ்வாறான எளிதில் எந்த தேர்ந்த நடிகர்களாலும் எளிதில்
சமாளிக்க இயலாத பாத்திரத்தை தனது ஆத்மார்த்தமான நடிப்பால் ஒவ்வோறு காட்சியிலும் பூர்த்தி
செய்கிறார்.
1. “விவாகரத்திற்கு பின்னே நானே மறுமணம் பண்ணிக்கல,
நீ அதுக்குள்ளே பண்ணிட்ட”. இந்த கேள்வியை தொலைபேசி வழியே எதிர்கொண்டாலும் நிலைகுலைந்து
அமர்கையில் நாயகியின் செய்கை.
2. உணவை தட்டிவிடும் மகனை கண்டிக்கும் தாயிடம், “நீ
இந்த மாமா கூட நீ இருப்பதாலதான் அப்பா உன்ன விட்டு போயிட்டாருனு” சொல்லும் பொழுது அதிர்ச்சியில்
நாயகியின் பார்வை.
3. மனைவி
மற்றும் அவரது மகனை பிரிந்து மருத்துவமனையில் இருந்து அந்நாட்டின் எல்லை மருத்துவ
முகாமிற்கு செல்லும் கணவனை சமாதானப்படுத்தும் நாயகியிடம் “அப்படியே இந்த
குழந்தையும் பார்த்துக்கோ” என்று அவளது வயிற்றை சுட்டிக்காட்டுகையில் நெகிழும் நாயகியின்
வெளிப்பாடு.
மேற்கூறிய காட்சிகள் மட்டுமின்றி படம் முழுக்க உணர்ச்சிமயமான
அனைத்து காட்சிகளிலும் நாயகியிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும்
பார்வையாளனை நிச்சயம் நிலைகுலைய செய்வதுடன். அவர்பால் நம்மையும் ஈர்க்கும் வல்லமை
பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நாயகர்களுக்கு சமமானது.
மேலும் இப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு உறுதுணையாக,
ஈராக் எம்பஸியில் பணிபுரியும் சிறு வேடத்தை ஏற்று நடித்து கொடுத்த பகத்பாசில்.
இந்த வேடத்தில் இதே நிறைவுடன் நடித்து கொடுக்க பல நாயகர்கள் உண்டு அங்கே. மேலும்
இதுபோன்ற சிறு வேடங்களில் நடிக்க இரண்டாம் நிலை நடிகர்கள் கூட தயாரில்லை இங்கே
என்பதே நிதர்சனம்.
மொத்தத்தில் முழு நிறைவான நம் அனைவருக்குமே பிடித்த திரைப்படம்
நமக்கு பக்கத்து ஊரிலிருந்து...
இப்படத்தின் ட்ரைலர்:
https://www.youtube.com/watch?v=vzYSKjxtKNg