Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, July 25, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 176. 

உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளிக்க கூடிய படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அனைத்து தொழில் நுட்பங்களும் கைவரபெற்றவர்கள்.  கதைக்கு தேவைபடாத எந்த தொழில் நுட்பங்களையும் அந்த படத்தின் விளம்பரங்களுக்காக பயன்படுத்தாதவர்கள். அதே தேவைபடும் பட்சத்தில் அதை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் படைப்பதில் வல்லவர்கள். பெரும்பாலும் இவர்களுடைய ஆக்சன் பேஸ் படங்களுக்கே உலகெங்கும் மிக அதிக பார்வையாளர்களை பெற்றிருந்தாலும், உணர்வுகளை வெண்மேகங்களை போல பரிசுத்தமாக நிறுவுவதில் கெட்டிக்காரர்கள்.

 

 1950 வருடம் வட மற்றும் தென் கொரியர்களுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடைபெற்ற போர் காலகட்டமே இப்படத்திற்கான களம். இதில் ஒரு குடும்பம், அதில் இளைய மகன் வலுகட்டாயமாக அப்போரில் பங்குபெற இழுத்து செல்லபட. அவனை அழைத்து வர சென்ற அண்ணனும் உடன் செல்லவேண்டிய சூழல். படம் துவங்கி கிட்டத்தட்ட இருவது நிமிடங்களுக்கு பின் வரும் இந்த காட்சிக்கு முந்தைய கணங்களே இப்படத்திற்கான  அச்சு.

 

அதில் இந்த குடும்பத்தினர் அவர்களுக்குள்ளான பிணைப்பு. அது இந்த கதை ரத்தம், துப்பாக்கி, உடல் அங்கங்களை இழந்து துடிக்கும் சக வீரர்களின் மரண ஓலங்கள். கூட்டம் கூட்டமாக கொல்லபடும் பொதுமக்கள், குண்டு மழை பொழியும் விமானங்கள் என அடுத்த இருவது நிமிடங்களில் கதை வேறொரு வண்ணத்திற்கு மாறினாலும் துவக்கத்தில் இவர்கள் பதித்த ஈரம் கதை நெடுக நம் மனதை அசைத்தபடியே அழைத்து செல்லும்.

 

இறுதி இருவது நிமிடங்கள் இந்த கதை முடிவுபெறுவதும் இந்த ஈரத்தில்தான். இடையே கிட்டத்தட்ட நூறு நிமிடங்கள் இந்த கதை பயணபடுவது போர்களத்தில் மட்டுமே. அதில் ஒரே பட்டாலியனில் சேர்ந்தே போரை எதிர்கொள்ளும் இந்த இருவருக்கிடையேயான மோதல், பிரிவு, வலி, மனக்குமுறல் என அனைத்து உணர்வுகளையும் அச்சு அசல் பிரதிபலித்த வகையில் இது தவிர்க்க இயலாத மிக முக்கிய படமாகிறது.

 

அதும் இன்றைய காலகட்டத்தில் கதையை துவக்கி பின்னோக்கி கதையை கொண்டுசென்ற பாணி பார்வையாளர்களை ஒரு எதிர்பார்ப்புடன் கதையுடன் பயணப்பட வைத்துள்ளது. வெறும் உணர்வுகளை பிரதானமாக கொண்ட கதை மட்டுமல்ல. கமெர்ஷியல் ரசிகர்களும் கொண்டாடி பார்க்க வேண்டிய படமிது.

 

முன்பே கூறியபடி (கதைக்கு தேவைப்படும் பட்சத்தில்) தொழில்நுட்பத்தில் உட்சம் தொட்டுள்ளனர்.  படம் வெளிவந்து இருவது வருடங்களுக்கு பின் இப்பொழுதும் இதன் பிரமாண்டம் நம்மை நிச்சயம் ஆச்சர்யபடுத்தும்.      


Saturday, July 15, 2023

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 175.

 

ஒரு சினிமா அது உங்களுக்குள்ள நிறைய கேள்விகளை கேக்கணும். இல்ல  நீங்களா உருவகப்படுத்தி  வெச்சிருக்கும் எந்த ஒரு பிம்பத்தையும் ஒன்னு உடைக்கணும் இல்லனா அட நம்ம நெனச்சதுக்கும் உண்மைக்கும் இவ்ளோ ஒற்றுமைகள் இருக்கானு நம்மளை பெருமைபட்டுக்கவாவது செய்யணும்.  எப்படினா?


நம்ம ஒரு படம் பாக்கறோம். அந்த கதை வடஇந்தியாவோட ஏதோ ஒரு கடைகோடி கிராமத்துல நடக்குதுன்னு வெச்சிக்குவோம். நம்ம  அந்த பக்கமே போனது இல்லனாலும் அந்த வட இந்திய கிராமம் அவங்க கலாசாரம் பத்தின ஒரு பிம்பம் நம்ம மனசுக்குள்ள இருக்கும் இல்லையா. அங்க ஜனங்க இப்படி தான் இருப்பாங்க. வீடுங்க பெரும்பாலும் இந்த அமைப்புலதான் இருக்கும் அப்படினு. அது நம்ம நிறைய படங்களில் பார்த்து பழகியதால், அந்த களம் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரிதான இருக்கும். அதால அந்த படமே ரொம்ப நல்லா இருந்தாலும் அந்த களம் அதிகமா பார்த்து பழகியதால பெருசா ஆச்சர்யபடுத்தாதுதான?


உதாரணமா Udta Punjabனு ஒரு ஹிந்தி படம். பஞ்சாபை களமாக கொண்ட கதை. நம்ம பஞ்சாபை மேப்பை தவிர வேற எங்கேயும் பாக்கவே இல்லனாலும், அவங்களை பத்தின ஒரு பிம்பம் நம்ம மனசுல இப்படிபட்டவங்கனு இருக்கும்ல. அதை முழுசா அடிச்சி ஒடச்சது இந்த படம். இப்படியான படங்கள் சில நிமிடங்களிலே கதையோடு நம்மை ஒன்றவெச்சிடும்.


அப்படிதான் இந்த ஈரானை கதைக்களமாக கொண்ட பெர்சியன் மொழி படமும். அரபு நாடுங்க அப்படினா நமக்கு ஒரு பிம்பம் இருக்கும். அங்க வீடுங்க இந்த அமைப்புல இருக்கும். சாலைகள் இப்படிதான் இருக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் உடையுடுத்தி இருப்பாங்கனு. இது எல்லாமும் படம் துவங்கிய முதல் நிமிடத்திலே தகர்த்த படம்.


ஒரு பெண் தனது குழந்தையை தூங்கவைத்து கொண்டிருக்கிறாள். அவளிடம் ஒரு பரபரப்பு ஏதோ ஒரு அவசரத்தில் இருந்தாலும் அந்த குழந்தையிடம் அதை காட்டிகொள்ளாமல் அதை அயர்ந்து உறங்க சென்றதும் கதவை பூட்டிவிட்டு பரபரப்புடன் சாலையை நோக்கி விரைகிறாள். அங்கே அவளுக்கு முன்பே நிற்கும் மற்ற மீறிய ஒப்பனைகளுடன் கூடிய  பெண்களுடன் இவளும் சேர, நமக்கு இவளின் நிலை தொழில் அனைத்தும் பிடிபடுகிறது.


அந்த ஒரு இரவிலேயே இரண்டு வாடிக்கையாளர்களை முடித்து மூன்றாவது நபருக்குக்காக முழுதும் உருகுலைந்து நிற்கும் போது, இதனுடன் மீண்டும் வீடு திரும்பிட அவளின் கால்கள் தடுமாறினாலும்,  இவளின் தேவை அடுத்த நபருக்காக இவளை காத்திருக்க செய்கிறது. அடுத்த வாடிக்கையாளரும் கிடைக்க அவனிடம் பணம் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொண்டு அவனது வாகனத்தில் செல்கிறாள்.


அவனுடைய வீட்டை அடைந்ததும் ஏதோ தவறாக தெரிய அங்கிருந்து கிளம்ப முற்படுபவளை கழுத்தை நெரித்து அவன் கொல்ல, கடைசிவரை போராடுபவள் இறுதி மூச்சில் தனக்கான ஒரு ஜீவன் அங்கு உறங்கிகொண்டிருப்பதை சொல்ல முற்பட்டு பாதியிலே பிணமாகிறாள். இப்படியாக 2000-2001 ஒரு ஆண்டுக்குள் கிட்டத்தட்ட பதினாறு பெண்கள் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.


ரொம்ப பிடிச்ச விஷயம் சீரியல் கில்லர் கதைனா இருக்கும் வேகமும் பரபரப்பும் படத்துல எங்கேயுமே இருக்காது. காரணம் அந்த கில்லரும் அவனது குடும்பமும் அவ்ளோ அழகு. அவனை போலவே நமக்கும் அந்த குடும்பத்தை ரொம்ப பிடிக்கும். அவனோட கேரக்டர் டிசைன் இந்த படத்துல ரொம்ப டீட்டைலா பண்ணிருக்காங்கனு சொல்றதை விட அழகா பண்ணிருக்காங்க.

Search This Blog