Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, August 14, 2020

 






பார்த்ததில் மிகவும் ரசித்தது – 169

OMERTA (2017) – HINDI – HANSAL MEHTA MOVIE.

ஒரு படைப்பாளனுக்கு அவன் நினைத்ததை திரையில் கிட்டத்தட்ட கொண்டுவரும் ஒரு கலைஞன் அமைவது அபூர்வம். கற்பனையில், காகிதத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் யூகித்தோ, எழுதியோ வைத்துகொள்ளலாம். அதை திரையில் அதே வடிவத்துடன் பார்வையாளனுக்கு கடத்துவது எளிதானது அல்லவே. ஹன்சல் மெஹ்தா இந்த படத்தின் இயக்குனர். இவருக்கு அப்படியான ஒரு தேர்ந்த கலைஞன் கிடைத்தான், அல்லது அவனை கலைஞனாக உருவாக்கினார் எப்படியும் பொருத்தி கொள்ளலாம்.

 

ஆம், இந்த தலைமுறையில் ஹிந்தி சினிமாவில் நிச்சயம் முன்னணியில் நிச்சயம் சோபிக்கபோகும்  முதல் மூன்று நபர்களில் ஒருவர். 2010-11 களில் சின்ன சின்ன வேடங்களில் பாலிவுட்டில் பணியாற்றி கொண்டிருந்த வேளையில் 2012ல் முதல் தனி நாயகன் திரைப்படத்தை இவருக்கு கொடுத்ததும் ஹன்சல் மெஹ்தாதான். ரொம்ப ஆழமான சமுதாய பிரச்சனை பற்றி அலசும் கதை. அதில் வழக்கமான வக்கீல் வேடத்திற்கான எந்த மிடுக்கும் இல்லாத சராசரியில் ஒருவராய் அந்த பாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு இருப்பார்.

 

அந்த கவனத்தின் பரிசாககூட சொல்லலாம்  kai po che,  queen என அடுத்த வருடத்திலே படங்கள் அமைய இந்திய அளவில் பரிச்சயமான நடிகராக துவங்கினார். விதவித வேடங்கள் கிடைத்தாலும், மீண்டும் அவருக்கு தனி கதாநாயக அந்தஸ்தை அதே ஹன்சல் மெஹ்தாதான் கொடுத்தார். இம்முறை ராஜஸ்தானில் இருந்து மனைவி மற்றும் மகளுடன் பஞ்சம் பிழைக்க மும்பை வரும் குடும்பஸ்தனின் கதை. முழுபடமும் இவரின் தோள்களில் அட்டகாசபடுத்தி இருப்பார்.

 

இந்த இயக்குனர் மற்றும் நடிகரின் காம்போவில் எனது விருப்பமான படம் இது. நம் கடைவீதிகளில் வடநாட்டவரின் கடைகளில் பணிபுரியும், பெரும் கேசத்தை படியவாறி காதுகளில் செம்பு உலோகத்தாலான அந்த நட்சத்திர வடிவ ஸ்டட் அணிந்துள்ளோரை பார்த்திருப்போமே. அப்படியே அதன் அச்சுபிரதி பாத்திரம் அவருக்கு. அப்படத்தை பற்றி வேறொரு முறை விரிவாக எழுத வேண்டும். அதற்க்குபிறகும் சொல்லிகொள்ளும்படியான பெரிய பாத்திரங்கள் அமையவில்லை.


 மீண்டும் 2015 ல் இதே இயக்குனரின் Aligarh படம். ஓரினசேர்க்கையாளர் பற்றிய படம். இந்த முறை நாயகனுக்கு மிகபெரும் சவால். இந்த படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்த Manoj Bajpayee யுடன் இவருக்கு நிறைய காட்சிகள். அவர் பாத்திரத்தின் தன்மை அறிந்து அவருக்கு இணையாக பிரமாதபடுத்தி இருப்பார். அடுத்தடுத்த வருடங்களில் Trapped, Newton என தனித்துவ கதைகள் அமைந்து இந்தியா சார்பில் Oscar க்கு (Newton)தேர்ந்தெடுக்கபட்டது. இப்படி இந்தியாதாண்டி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயபானவராக துவங்கிய காலகட்டத்தில் மீண்டும் இதே இயக்குனருடன் இவர் மீண்டும் இணைந்த படம் இது.


90களில் காட்மாண்டு டூ புதுடெல்லி வந்த விமானம் கடத்தப்பட்டது. அந்த பயணிகளை விடுவிக்க இந்தியாவசம் இருந்த மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. இதில் மூளையாக செயல்பட்ட லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞனின் கதை. இதே முறையை பின்பற்றிதான் பின்னாளில் அமெரிக்காவில் விமானம்மூலம் நடத்தபட்ட தாக்குதலும் நடந்தேறியது. 

அச்சு அசல் அந்த இளைஞனனின் பிரதிபலிப்பாக இதில் தெரிவார். இதற்கான அவரின் ஒத்திகையின் தீவிரம் திரையில் அந்த இளைஞனாக எவ்வளவு எளிதாக பிரதிபலித்துள்ளார் என்பதில் தெரியும். ZEE5 தளத்தில் காணகிடைக்கிறது. 

Saturday, August 8, 2020

 

WEB SERIES – 008


ASUR: WELCOME TO YOUR DARK SIDE (2020) – SEASON 01 – EPISODES 08 – மீண்டும் ஒரு கொலை

 

சமீபமாக நிகழ்ந்த இந்த லாக்டவுன் முதல் அதிகம் பரிந்துரைக்கப்படும் படங்கள் முதல் ஹிட் அடித்த தொடர்கள் வரை.  பெரும்பாலும் அவை ஒரு கொலை, அதை ஒட்டிய கதை இவ்வாறே அமைகின்றன. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சீரீஸ். தொடர் கொலைகள், அதை ஒட்டிய விசாரணை, அந்த கொலையாளியை தேடல் என்ற அதே பாணியில் அமைந்த ஒரு தொடர்.

அதே வழக்கமான கதையில் முதல் எபிசோடின் முதல் பத்து நிமிடங்களுக்கு உள்ளேயே ஒரு கொலை நிகழ்கிறது அது போதுமானதாக இருந்தது நம்மை இந்த தொடருடன் இணைத்துகொள்ள. கொலை செய்யப்படும் நபரிடம் எந்த வீண் வாதங்கள் மற்றும் அவர்களின் அழுகுரல். அவை நமக்கு ஏற்படுத்தும் மனஉளைச்சல். இப்படி ஏதும் இல்லாமல் அந்த நபர் சுதாரிப்பதற்குள் சட்டென ஒரு கொலை.

ஆனால் அதன் வீரியத்தை நமக்குள் ஆழமாக பதிக்கும்வண்ணம் அடுத்து அவனின் செயல்கள். முடித்து அந்த சடலத்தை அவன் காவல்துறைக்கு display செய்தவிதம். இந்த தொடரை அத்துடன் நிறுத்தாமல்  தொடர்ந்து பார்க்க மூலகாரணி. இந்த முழு தொடரின் எட்டு அத்தியாயங்களை ஒரே இரவில் முடிக்க மிகபெரும் காரணம் முதல் அத்தியாயம் முடித்த விதம்.

ராஜேஷ்குமார் நாவல்களில் பெரும்பாலும் ப்ரெசென்ட் கதை ஒரு அத்தியாயமும், பாஸ்ட் அல்லது முதல் அத்தியாய கதை சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களுடன் சம்பந்தம் அல்லாத வேறொரு கதை ஒரு அத்தியாயமாக வரும். அவ்விரண்டு கதைகளும் சேரும் அந்த லீடுடன் அல்லது ஒரு அத்தியாயத்துடன் அக்கதை நிறைவுறும். அப்படியாக இதிலும் டைட்டிலுக்கு முன் ஒரு நிமிட டீசர் போன்ற ஒரு பாஸ்ட் கதை சொல்லபடுகிறது.


தற்போது நிகழும் இந்த தொடர் கொலைக்கும், அந்த பாஸ்ட் கதைக்குமான தொடர்பை நாமே இணைத்திட  துவங்கிவிடுவோம். அதிலும் அந்த கதை மிக எளிதாக ஒரே லீட்டுடன் மட்டுமே பயன்படும். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இந்த ஒரு நிமிட கதையும், அதற்க்கு பின்னான டைட்டில் கார்டும் நிச்சயம் அந்த அத்தியாயத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

துவக்கத்தில் நமக்கு காண்பிக்கப்படும் அந்த கொலை, கதையில் நிகழும் மூன்றாவது கொலை ஆதலால் இந்த வழக்கு முன்பே சிபிஐ விசாரணையில் இருக்கும். இவ்வழக்கை விசாரிக்கும் குழுவில் திறமையில் கிட்டத்தட்ட சரிசமமான இருவர். உடன் அந்த இருவருக்குமான ஈகோ மோதல் போன்ற எந்த வளவளா சமாச்சாரங்களும் இல்லாமல். ஒரே நூல் பிடித்தது போன்ற நேர்கோட்டில் செல்லும் கதை.

இப்படியான திரைக்கதையில் எந்த பெரிய ஓட்டையும் இல்லாத கதைகள். நாம் எந்த மொழியில் பார்த்தாலும். அவை தமிழிலேயே பார்ப்பது போன்ற ஒரு நெருக்கமான உணர்வை தரும். சமீபமாக PAATAL LOK. கிட்டத்தட்ட அதற்க்கு இணையான ஒரு சீரீஸ் இது. ஆனால் அந்த நெருக்கம் இல்லாமல் வேற்றுமொழி படம் பார்க்கும் உணர்வை தர முக்கிய காரணம். ஹிந்து mythology அடிப்படையாக கொண்டு இயங்குவது.

திரைக்கதைபடி இந்த முறை சரியென்றாலும். அவை புரியாத பெரும்பாலோருக்கு இந்த கதையுடனான நெருக்கம் சற்று குறைவாகவே இருக்கும். முதல் சீசன் முடிவில்  அடுத்த சீசனுக்கான லீட் அட்டகாசமான எதிர்பார்ப்புடன் நிறைவு செய்திருக்கிறார்கள். VOOT ஆப்பில் காண கிடைக்கிறது.                     

 

 


Search This Blog