Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Thursday, June 14, 2018




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 128


தலைப்பு ஏற்கனவே வந்த ஸ்பெஷல் 26யை ஞாபகபடுத்தினாலும், இதோட டிரைலர் இந்த படத்துமேல ஒருவித ஈர்ப்பு ஈர்ப்பை எற்படுத்தவும் பாத்தாச்சி.. வருமான வரி துறையை சேர்ந்த அதிகாரிகளா நடிச்சு வேற வேற மாநிலங்கள்ல பல ரெய்டுகள நடத்தி ரொம்ப சூவாரசியமாவும், நல்ல வேகமான திரைக்கதை மூலமா நம்மள ரொம்பவே ஈர்த்த அதே கதைதான்.


ஆனா இதுல ஒரே ரெய்டுதான். அதும் அந்த வீட்டுக்கு படம் ஆரமிச்ச இருவதாவது நிமிசத்திலேயே போய்டுவாங்க. படம் முடிய ஒரு பத்து நிமிஷம் இருக்கும் போதுதான் வெளிய வராங்க. அதுல கொஞ்சமும் தோய்வில்லாம ரொம்ப ரசிக்கும்படியா கொண்டுபோனதுல இருக்கு திரைக்கதைக்காக இவங்களோட உழைப்பு..


1981 ல LUCKNOW ல நடந்த ஒரு ரெயடுதான் அடுத்த இருவது வருசத்துக்கு வருமான வரித்துறை ல கிடச்ச பெரிய தொகையாம். அப்ப உண்மையா அந்த ரெய்ட முன்னின்று நடத்தியவருக்கு சம்பளமே 1500 தானாம். ஆனா அப்பவே அவர் பிடித்த பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு 400+ கோடிகளில் இருந்ததாம். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையா வெச்சிதான் இந்த படம் பண்ணிருக்காங்க. இதுல ரொம்ப சுவாரசியமான விசயமே அவங்க ரெய்டு போனதே மூணுமுறை MP யா இருந்தவரோட வீட்டுக்கு. அவர் அரசியல் செல்வாக்க பயன்படுத்தி அப்ப பிரதமரா இருந்த இந்திரா காந்தி வரைக்கும் போயிருக்கார். அப்ப தகவல் தொழில்நுட்பம் இந்தஅளவு இல்லாததால, அந்த ஆபீசர் நீங்க PMதான் பேசுறிங்களானு  எனக்கு உறுதியா தெரியாததால. நீங்க இந்த ரெய்டை நிறுத்த சொல்லி எங்க ஆபீஸ்க்கு உடனடியா தந்தி கொடுத்திடுங்கனு சொல்லியிருக்கார். அதும் போக நான் சட்டபடி தகுந்த ஆதாரத்தோடதான் இந்த சோதனை நடத்திட்டு இருக்கேனு வேற சொல்லிட்டாராம்.


அந்த ஆபீசர் இந்த ரெய்டை பத்தி முழுசா மூணு இரவு, நாலு பகல் அங்க நடந்தது பூராவும் புத்தகமா எழுதினாராம். எப்படிலாம் ஆதாரங்கள சேகரிச்சோம். யார் மூலமா வந்தது. அவர் வீட்ல சோதனை நடந்த நாட்கள்ல யார் யாரெல்லாம் அவர தடுத்தாங்க. எண்பதுகளின் காலகட்டத்துல 400+ கோடிகள் மதிப்புனா அதுல எவ்வளவு பணம், தங்கம், வெள்ளி, இவ்வளவையும் எத்தனை பொட்டில கொண்டுபோனாங்க. அத ரொம்ப அழகா செம விறுவிறுப்பா படத்துல கொண்டுவந்து இருக்காங்க. இந்திராகாந்தி அம்மா விஷயம் உட்பட.


கதையில் ஒரே பிரதான பாத்திரம். அது கொஞ்சமும் இதுக்கு முன்ன வந்த அக்ஷய்குமார ஞாபக படுத்தாம இருக்க ரொம்பவே உழைச்சிருக்காங்க. கிட்டத்தட்ட அக்ஷய் & அஜய் தேவ்கான் இருவருக்கான தோற்றம் ஒரே போலவே இருக்கும். உடை சமாச்சாரங்களும் ரெண்டு படத்துலயும் ஒரே ஸ்டைல். ரொம்பவே ஒரு ஒரு ஷாட்டும் பாத்து பாத்து இதுல நாயகன் பாத்திரத்த உருவாக்கி -இருக்காங்க. அவர் குணாதிசயம் முதற்கொண்டு அவர் நடை, பேசும் விதம்னு எல்லாமும் அக்ஷய் விட இதுல அஜய் தேவ்கான் ரொம்ப எளிமையா அதுலயும் ஒரு மிடுக்கோட பண்ணியிருக்கார். கம்பெனி படத்துக்கு அப்பறம் (நான் பாத்ததுல) செம பொருத்தமான பாத்திரம் இதுதான். அவரே திரைல பாத்து ரொம்ப ரசிச்சிருப்பாரு.


சினிமாவின் வழக்கமா இருந்த ஒரே விஷயம் இவர் மனைவி. இவங்களோட அந்யோனியம், பாடல் ஒன்னுனு அவ்ளோதான். ஆனா இந்த காட்சிகள்ல கூட ஒரு கணவனா, காதலனா இருப்பதைவிட ஒரு அதிகாரியாவே நம்மளையும் உணர வெச்சிருப்பாரு. இதெல்லாம் மொத்தமாவே படத்துல ஒரு 15 நிமிச்சதுகுள்ளதான் வரும். அந்த மனைவி பாத்திரத்துக்கு  இலியானா ரொம்ப அருமையா பொருந்திபோறாங்க. BARFIல இருந்தே அவங்களுக்கு இதே ரோல்தான் ஹிந்தில வருது.


அஜய் தேவ்கானுக்கு அப்பறம் ரொம்ப பெரிய பாத்திரம் அவங்க ரெய்டுக்கு  போற அந்த MP SAURABH SUKLA. ஹேராம்ல கமல்&ஷாருக் நண்பரா வருவாரே அவர்தான். ஓடாம, சத்தம்போடாம ஒரு 55+ வயதானவர் அவர் வீட்ல எப்படி இருப்பாரோ அப்படியே அந்த பாத்திரத்த ரொம்ப இயல்பா பண்ணிருக்கார். சோதனைல ஆரம்பத்துல எதும் கிடைக்காம இவங்க திணறும் போதும். பின்ன ஒவ்வொரு பொருளா சிக்கும்போதும் அந்த அதிகாரிகள என்ன பண்ண போராறோனு நமக்கும் பயத்த உண்டு பண்றாரு.  இயக்குனர் ராஜ்குமார் குப்தா NO ONE KILLED JESSICA பண்ணவர். 



இவரோட ரொம்ப பெரிய பலமே (நான் பாத்த இவரோட ரெண்டு படங்கள வெச்சி சொல்றேன்)  கதை எந்தஅளவு அழுத்தமானதா இருந்தாலும் பார்வையாளருக்கு அந்த முழு அழுத்தமும் கொடுத்து ரொம்ப சிரமபடுத்தாம கொண்டுபோறாரு நம்ம R.சுந்தர்ராஜன் படங்கள் மாறி. அதனாலேயே TECHNICAL TEAM மோட வேலை பெருசா வெளிய தெரியல. இசை, எடிட்டிங், கேமரானு யாருமே அவங்க அதிமேதாவித்தனம் சுத்தமா எங்கையும் வெளிப்படுத்தாம ஒரு பீரியட் கதைக்கு என்ன தேவையோ அதமட்டும் பண்ணியிருக்காங்க.  பெரும்பாலான காட்சிகள் அந்த வீட்டுக்குள்ளவேனாலும் அந்த காலத்துல பயன்படுத்திய லைட்டிங் மெத்தேட்ஸ மட்டுமே வெச்சே ரசிக்க வெச்சிருக்காங்க. 


https://www.youtube.com/watch?v=3h4thS-Hcrk

Sunday, June 10, 2018



பார்த்ததில் மிகவும் ரசித்தது: 127.

ஒரு கதையில் தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்தல் என்பதுகூட மிக பெரிய விசயமன்று. அதற்கான கதை மற்றும் அப்படியான ஒரு உருவாக்கல் அமைதல் என்பதே பெரும் வரம். அப்படியான வரம் கிடைத்த எந்த நடிகனும் தனது முழு ஈடுபாட்டை அந்த கதைக்காக அர்ப்பணிப்பதே நியாயம். கதைக்கான அச்சாணியே அந்த ஒரு பாத்திரம் என்கிறபோது. அதில் அதிசியமாக அந்த பாத்திரத்தின் அதிமேதாவிதனம் மட்டுமே பளிச்சிடுவது இல்லாமல், அவனது குழந்தைத்தனமும் இருக்க வேண்டும். இரண்டிலும் (அப்பாவி & அதிமேதாவித்தனம்) தனிதனியாகவே இந்த பாத்திரங்களில் பொருந்திபோக கூடிய ஒருவரின் கையில், இப்படியான ஒரு கதை சிக்கும்பட்சத்தில் மட்டுமே ஒரு சாதாரண குடும்பக்கதை அசாதாரணமான படமாக வரலாற்றில் பொறிக்கப்படும் மாயம் நிகழக்கூடும்.


90களில் இந்திய சினிமா மொத்தமும் சுத்தி சுழன்ற அதே குடும்பக்கதைதான். கணவன், மனைவி இரு பிள்ளைகள். தான் பணிபுரியும் இடம். தனது பிள்ளையின் பள்ளி. தனது சொந்த ஊர். தற்பொழுது குடியிருக்கும் பகுதி என மொத்தமாக அறிவுஜீவி, பொறுப்பாளி, நமது அனைத்து குழப்பங்களுக்குமான நிவாரணமாக அறியப்படும் நாயகன். தனது நிதானம், சிந்திக்கும் திறமை, மற்றும் தனது அபரிவிதமான  திறமையாலே மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பில் அவரது நடவடிக்கைகளில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டு ஒருவாறு அவரது செயல்பாடுகள் வெகு சில காரியங்கள் தவிர்த்து கிட்டத்தட்ட சிறு குழந்தை மனநிலைக்கே சென்று விடுகிறது.


தன்னையே நம்பி உள்ள குடும்பம். பள்ளி இறுதி ஆண்டுக்கு பின் தன்னை போன்றே மகா புத்திசாலி மகனை IAS தேர்வுக்கு தயார்படுத்த ஆயுத்தமாகும் சூழலில் இந்த சம்பவம் நடைபெற நிலைகுழையும் குடும்பத்தின் நிலை. இந்த நாயகன் தனது குழப்பங்களில் இருந்து மீண்டு பழைய அறிவுஜீவி ஆனாரா? இந்த ஒரே வரிக்கதையில் இந்த ஒரு பாத்திரம் நிகழ்த்தும் மாயம் வெறும் வார்த்தைகளுக்கும் கண்களுக்குள் மட்டுமே உணர்ந்து வெளிபடுத்த கூடியதன்று. படத்தின் முதல் பாதியில் நாம் அவரை சராசரி மனிதன் என உரைத்தால் பார்வையாளன் நம் புத்தி சுவாதீனத்தை சந்தேகிக்க கூடும். இதே படத்தின் இரண்டாம் பாதியில் இதே நாயகனை நாம் அறிவுஜீவி என உரைத்தால் அப்பொழுதும் அவ்வாறே நினைக்ககூடும். இவ்வாறான இரு வேறு நிலைகளை ஒரே பாத்திரம் ஒரே கதையில் நிகழ்த்துவதென்பது உண்மையில் அசாத்தியம்.
தனது பள்ளி தோழியுடன் காபி ஷாப் சென்றுவிட்டு முதன்முறையாக தாமதமாக வீடு திரும்பும் மகன் குடும்பத்தார் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து குளிப்பதாக பாசாங்கு செய்து குளியலறையில் ஒளிந்து கொள்ள. பெரும் கருத்தாழமிக்க எந்த வசனமும் இல்லாமல், சமையல் அறையில் மனைவிக்கு உதவிகொண்டே தனது இளைய மகளுக்கு கதை கூறுவது போல், தனது பால்ய வயதில் தான் கூறிய பொய்யால் ஏற்பட்ட விளைவுகளை குளியல் அறையில் உள்ள மகனுக்கும் கேட்கும்படி நாயகன் உரைக்க, தானாக மகனே வந்து மன்னிப்பு கேட்க்கும்படியான பழைய காட்சிதான். ஆனால் இந்த நாயகன் பெரும் கூப்பாடு, அடித்தொண்டையில் உறும்பும் வசனங்கள் எதும் இல்லாமல் வெறும் உப்புமாவுக்கு பெறாத வசனத்தை பேசி மட்டுமே மகனை அழவைத்துவிடவில்லை. அந்த இரண்டு நிமிட காட்சியும் அதன் பின்வரும் ஒரு பாடல் காட்சி மட்டுமே போதும் இந்த நடிகனின் மகாதிறமையை பறைச்சாற்ற.


இவரை போன்ற பெரும் சரீரம் கொண்டோருக்கு வேண்டுமானால் தன் தோற்றம் மூலம் தன்னை புத்திசாலியாக எந்தவித பெரிய பாசாங்கும் செய்யாமல் நிருபித்துவிட இயலும். ஆனால் தன்னை மனநிலை சரிஇல்லாத பாத்திரத்திற்கு பொருந்திபோக செய்வது அத்துணை சுலபமன்று. ஏதேனும் ஒரு ஷாட்டில் அவரது நடிப்பின் அளவு சற்று கூடவோ அல்லது குறைவாகவோ வெளிப்படுத்திவிடின் அது பார்வையாளனுக்கு நகைப்பை வரவழைத்துவிடும். அவ்வாறு ஒரு காட்சியில் நிகழ்ந்தாலும் முழு படமும் வீண் என்பதே நிதர்சனம். இந்த நூலிழை அளவு வேறுபாட்டை இரண்டாம் பாதி முழுக்க எவ்வாறு ஒரே சீராக கொண்டு சென்றார் என்பதில் உள்ளது. இவருடைய திறமை அல்ல ஒவ்வொரு ஷாட்டும் அதே அளவான நடிப்பை மட்டுமே ஓகே செய்த இயக்குனர் (PRANAYAM) BLESSY-ன் திறன்.


இது போன்ற கதைகளில் வரும் துணைபாத்திரங்களுக்கு பெரிதும் காட்சிகளோ வசனங்களோ இல்லாததை போன்ற தோற்றம் பார்வையாளனுக்கு ஏற்படுவது இயல்பே. ஆனால் முதன்மை பாத்திரத்தின் அனைத்து அசைவுகளும் பார்வையாளனுக்கு கொடுக்கும் பூரண திருப்திக்கு பெரும் பங்கு இந்த துணைபாத்திரங்களின் மூலமே சாத்தியம். அவ்வாறு தனது பங்களிப்பை தனக்கான அனைத்து காட்சிகளிலும் முழுக்க வழங்கிய தந்தை பாத்திரத்தில் வரும் நெடுமுடிவேணு. லாலின் மாமனார் பாத்திரத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும் நிறைவான பங்களிப்பை வழங்கிய இன்னொசென்ட்.


இவர்களைகாட்டிலும் மனைவியாக வரும் மீரா வாசுதேவன் பாத்திரமே இரண்டாம் பாதியில் லால் பாத்திரம் பார்வையாளனின் அடிமனதை வருட செய்த மயிலிறகு. குறிப்பாக இறுதி காட்சியில் பல வருடங்களுக்கு பின் தன் சுயஉணர்வுக்கு திரும்பி மின்சாரம் தடைபட்ட இரவில் மெழுகுவர்த்தியுடன் கணவனை தேடும் மீராவை லால் அழைக்கும் காட்சி. ஜன்னல் அருகில் கண்ணிருடன் அணைக்கும் காட்சியில் லாலின் வலப்புறமும், மீராவின் இடப்புறம் மட்டுமே மெழுகுவர்தியின் ஒளியில் தெரியும். அவர்கள் வாழ்வின் பாதியை மட்டுமே வாழ்ந்துள்ளதாக அர்த்தப்படுத்தும் வகையான உருவாக்கல் நம் மனதை விட்டு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். அனைத்து பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பில் சிறுகுறையும் வைக்கவில்லை எனினும் மோகன்லால் எனும் மலையையும்தாண்டி நம் மனதுள் நுழைந்த இந்த பாத்திரத்தின் பங்களிப்பு இக்கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

Search This Blog