Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, March 30, 2018

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 124.

நம் கனவுகள் நோக்கிய பயணத்தில் ஏற்படும் பெரும் தடைகளும், சிரமங்களும் நம்மை அயர்ச்சியடைய செய்வதில்லை. காரணம் நாம் அனைவருமே நமக்கு விருப்பமான அப்பாதையில் பயணிக்கவே விரும்புகிறோம். ஆனால் அப்பாதையில் பயணிக்கும் வாய்ப்பு வெகுசிலருக்கு   அமைவதே கடினம். மேலும் அதில் வெற்றி பெரும் வாய்ப்பு அதில் ஒரு சதவிகிதத்தினருக்கு கிடைப்பதே அரிது. இவ்வாறு அரிதிலும் அரிதாக அப்பயணத்தில் வெற்றி பெற்ற சிலரது கதைகளை மட்டுமே பார்த்து வரும் நமக்கு. அவ்வாரான பயணத்தில் தனது கனவுகளை இழந்து நிராதரவான பெரும்பாண்மையோரது கதைகள் வருவதுமில்லை. அவ்வாறு வந்தாலும் அவை நம் நினைவில் இருப்பதுமில்லை.

கடந்த திரைப்படத்தில் 2000+ கோடிகளை வசூலில் குவித்த நாயகனால் கூட வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே எடுக்கும் நிலையிருப்பின், சாமானிய படைப்பாளிகளின் நிலையை சொல்லவேண்டியதில்லை. அதற்க்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவது. நம் அனைவருக்கும் கனவுகள் இருப்பினும், நம்மில் பெரும்பாலோருக்கு அதை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பு அமைவதில்லை. அவ்வாறு அமையப்பெற்ற பலராலும் தங்கள் கனவு வாழ்க்கையை அடையமுடிவதில்லை. ஆதலாலே வாழ்க்கை முழுக்க வெறும் நினைவுகளாக மட்டுமே நம் கனவுகளை சுமந்து திரியும் நம்மால் கதைகளில் கூட அக்கனவில் தோல்வியுற்றவனை காண விரும்புவதில்லை போலும்.

இக்கதையிலும் நடுத்தர வர்கத்தில் பிறந்து, குடும்பத்தின் ஒத்துழைப்பும் இல்லாமல், பலதரப்பட்ட இன்னல்களை கடந்து இறுதியில் வெற்றிபெறும் தீவிர இஸ்லாமியத்தை பின்பற்றும் குடும்பத்தின் பதினைந்து வயது மகளுடைய கதைதான். இப்பத்தியை படித்தவுடன் யூகங்களாக தாங்கள் நினைக்கும் பலகாட்சிகள், கிட்டத்தட்ட அதே வசனங்களுடனும் உள்ள திரைப்படமே இது.  இவ்வாறான கதைகளில் அந்த நபரது கனவு துறைசார்ந்த வேறுபாடுகள் தவிர்த்து பெரும்பான்மையான காட்சிகள், ஒருவாறே இருக்கும்படியான மனநிலையை மட்டுமே பார்வையாளர்களுக்கு கொடுக்கும். இவை இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, பெரும்பாண்மையான உலக திரைப்படங்களும் இதில் அடக்கம்.

இவ்வாறு இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிபெற காரணங்கள். வெற்றிபெற்ற பிரபலங்களின் உண்மை கதையை தழுவி எடுக்கும் திரைப்படங்கள், அந்த பிரபலங்களினால் வெற்றிபெறுவதும், மேலும் நம்மால் அடையயிலாத இவ்வாறான வெற்றியை திரையில் பார்க்கும் பார்வையாளன் அப்பாத்திரத்துடன் தன்னை பொருத்தி பார்ப்பதும் கூட ஒருவகையில் காரணமாக அமையலாம். புது காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மூலமே இவ்வாறான கதைகளில் பார்வையாளனுக்கு வித்தியாசத்தை உணர்த்த இயலும்.

இவ்வாறான நபர்கள் தங்கள் லட்சியத்திற்காக எதையும் இழக்க தயாராக இருப்பர். மேலும் தங்கள் நடவடிக்கைகள் தவிர்த்து மற்றவர்களின் மேல் பெரிய ஈடுபாடு இல்லாமல் கிட்டத்தட்ட சுயநலவாதிகள் போல. ஆனால் அதை மிகசரியாக பயன்படுத்திகொண்டது இந்த திரைப்படமே. மேலும் அப்பெண்ணின் கண்டிப்பான தந்தை மற்றும் மகளுக்காகவே உருகும் தாய் பாத்திரங்கள் என அனைத்தும் மிகசரியாக அமைந்த திரைப்படம்.  அப்பெண்ணின் பள்ளி பருவ கனவுகள், குழந்தைதன காதல், தனது பாடகி கனவிற்கான முயற்சிகள். எளிதில் மற்றவரை தவறாக யூகிக்கும் பண்பு, எதற்காகவும் தனது லட்சியத்தை இழக்க கூடாத திடம். தம் குடும்ப கட்டுபாடிற்க்காக தனது கனவையும் இழக்க துணியும் மனம். என பதினைந்து வயது பெண்ணிற்கான முழு வாழ்வையும் இன்சியா பாத்திரத்தில் வரும் ஜைராவசீம் வாழ்ந்துள்ளார். 

தனக்கான அனைத்து காட்சிகளிலும், தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தும் முழுக்கதை என்பதை உணர்ந்து தனது ஆகசிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். அனைத்து பார்வையாளனையும் திருப்திபடுத்தும் இந்த வகை படங்கள் சற்று அபூர்வமாகவே வரும். தவறவிடக்கூடாத படவரிசையில் இதை சேர்த்துகொள்ளாவிடினும், எவரையும் அதிருப்திபடுத்தா வகையை சார்ந்த இப்படத்தை நம் எந்த மனநிலையிலும் காணயியலும்.

Friday, March 23, 2018

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 123.
இப்படியான கொலையாளியை தேடும் கதைகளில் பிரதான இருவகைகள் உண்டு. ஒன்று கொலையாளியை நமக்கும் அறிமுகபடுத்தி, அவன் இவ்வாறு இறுதிவரை விசாரணை வளையத்திற்குள் வராமலே தந்திரமாக செயல்படுகிறான் என்பது. மற்றொன்று கொலையாளியை யாரென்பதை நமக்கும் அறிமுகப்படுத்தாமல் இறுதில் கண்டடைவது. முதல்வகையில் திரைக்கதை மிகச்சரியாக அமைந்தால்  பார்வையாளனுக்கு மிகப்பெரும் சுவாரசிய திரைப்படமாக அமையும். காரணம் திரைக்கதையை எங்கும் வளைக்க இயலாது. நமக்கும் தெரிந்த கொலையாளியை சுற்றி மட்டுமே நகர்த்த இயலும். இதில் சூவாரசியமே கொலையாளி எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் தப்பித்து செல்கிறான் என்பதே.
இரண்டாம் வகையில் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்ல இயலும். கொலைக்கான காரணமாக ஒரு ஆவியை காரணம் காட்டியும் கதையை நிறைவு செய்ய இயலும். அல்லது அதுவரை கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவரை கொலைக்கு காரணகர்த்தாவாக்க இயலும். இப்படம் இரண்டாம் வகையை சேர்ந்ததாக இருப்பினும். திரைக்கதையில் முதல் வகையை சேர்ந்ததை போன்ற நேர்மையும். கதை துவக்கம் முதல் எங்கும் வளையாமல், பார்வையாளனை இறுதிவரை அந்த சம்பவத்திற்கு காரணகர்த்தா யார் என்ற ஒற்றை கேள்வியை நோக்கி மட்டுமே கொண்டுசென்று முடிவதுடன். பெரும் திருப்புமுனை என்ற பெயரில் கதைக்கு தொடர்பில்லாத எந்த பாத்திரங்களை கொண்டும் நிறைவு செய்யாமல் துவக்கம் முதல் கதையின் தொடர்பில் இருந்த பாத்திரத்தை கொண்டே முடித்ததும். அப்பாத்திரம் பார்வையாளன் யூகத்திற்க்குள் அதிக சதவிகிதம் வராதவகையில் கொண்ட திரைக்கதையும் இப்படத்திற்கான மிகபெரும் பலம்.
படம் துவங்கிய முதல் நிமிடத்திலேயே ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இறந்த பெண் ஆயிஷா. அவர்  வீட்டின் பணிப்பெண் ரெமி பெர்னாண்டர்ஸ். அப்பெண்ணின் பெற்றோர்களான சச்சின் மற்றும் ஆர்த்தி. அவர்களது வீட்டின் மற்றொரு பணியாளர் சேட்டன். இறந்த பெண்ணின் காதலன் மற்றும் சேட்டனின் சகோதரர் சுதாகர் மிஸ்ரா. என்ற சொற்ப பாத்திரங்களை மட்டுமே வைத்து ஒரு நல்ல விசாரணை கதையை வழங்கியுள்ளனர் என்பதற்கு உதாரணமே விசாரணை வளையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி இறுதியில் ஒரே ஒருவர் என கொலையாளியை நெறிக்கையில் மட்டுமே நம்மால் உணர முடியும் மிக சாதாரணமாக யூகிக்க கூடிய ஒருவரை நாம் யூகிக்க தவறியதாக. அதற்க்கு மிகப்பெரும் காரணம் இந்த திரைக்கதை நம்மை எங்கும் தனித்து சிந்திக்க சில நிமிடங்களை கூட வழங்காமல் அவர்கள் போக்கிலேயே நம்மை முழுக்க இழுத்து சென்றதே அவர்களின் வெற்றி.
முதல்கட்ட விசாரணையில் இறந்த பெண்ணின் தந்தையே கொலைக்கான காரணகர்த்தா என கைது செய்யபடுகிறார். ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருக்கும் சூழலில். இறந்த மாணவி கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபடுகிறது. இதற்க்கு பின் நிகழ்பவை அனைத்தும் அவர்களின் பார்வையில் நாம் ஏதும் கணிக்கா வண்ணம். ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் விசாரணை மேலும் மேலும் சுவாரசிமாகிகொண்டே செல்லும். சம்பவத்திற்கு பின்னே மாயமான புது பணியாள் சேட்டன் மற்றும் அவரது சகோதரன் சுதாகர்மிஸ்ரா வரும் காட்சிகள்யாவும் நம்மை பெரிதும் படபடக்க செய்யும்.
விசாரணையில் இப்பாத்திரங்கள் மட்டுமே இல்லாமல் புதிதாக சேரும் இறந்த பெண்ணின் தந்தையின் நண்பர் மற்றும் அவர் மனைவி பாத்திரங்களும் நம்மை எங்கும் சலிப்பாக்காமல் கதையின் சுவாரசியத்திற்கு பெரிதும் துணை நிற்கின்றனர். அவர்களும் இக்கொலைக்கு ஏதோ ஒரு வகையில் தொர்பிருக்கும் படியான விசாரணையின் யூகமும் அதற்க்கான காட்சிகளும் இறுதியில் அவர்கள் இந்த வளையத்தில் இருந்து விடுபடும் காட்சிகள் என இவர்களின் பங்கு இக்கதையை மேலும் சுவாரசியமாக்க மிகப்பெரியது.
அப்பெண்ணின் தந்தை பாத்திரத்தில் ஆசிக்வித்யார்த்தி மற்றும் பணிபென்னின் பாத்திரத்தில் வரும் அஸ்வினிகல்சேகர் மட்டுமின்றி விசாரணை அதிகாரியாக வருபவர் இந்த மூன்று பாத்திரங்களும் இந்த தேர்ந்த நடிகர்களின்றி இக்கதை இந்த பரபரப்பை அடைய வாய்ப்பில்லை. மொத்தத்தில் த்ரில் கதை விரும்பிகள் தவறவிட கூடாத படமிது.

Search This Blog