பார்த்ததில் மிகவும் ரசித்தது: 126.
உதிரி பூக்கள் படத்தில் ஒரு காட்சி. இரு குழந்தைக்கு
பின் உடல்நிலையும், தன் கணவனின் தகாத செயல்களால் மனதளவிலும் ஒருசேர பாதிக்கப்பட்டு.
கிட்டத்தட்ட தன் வாழ்வின் இறுதி நாட்களை படுக்கையில் கழிக்கும் அந்த பிரதான தாய் பாத்திரம்.
தனது இரு குழந்தைகளையும் அழைத்து பேசும் காட்சி. ஒரு ஏழு வயது மகனும், இரண்டு வயது
பூர்த்தியான மகள் என வைத்துகொள்வோம். அக்காட்சியின் ஒலி அளவை முழுக்க
மட்டுப்படுத்தி அந்த வசனங்களும், ராஜாவின் பின்னணியும் இல்லாமல் பார்த்தாலும் கூட நம்மை
பெரிதும் நிலைகுலைய செய்யும்படியாக இயக்குனர் காட்சிபடுத்தி இருப்பார்.
வெறும் காட்சிவழி மட்டுமே அந்த யதார்த்த சூழலை
நமக்கு முழுதும் கடத்த இயக்குனர் செய்ததில் மிகமுக்கியமானது அந்த இருவயது மகளுக்கு
எந்த வசனங்களோ நிர்பந்தமோ அக்காட்சியில் இருக்காது. தனது தாயின் அப்பொழுதைய
நிலையோ, தனது வருங்காலத்தை பற்றிய பயமோ சிறிதும் இல்லாமல் படுக்கையில் தனது தாயின்
ஒடுங்கிய தேகத்தில், அவளின் கைகளில் துருத்தி கொண்டிருக்கும் வளையல்களில் தன்
பிஞ்சி விரல்களால் தடவியபடியே இருக்கும். யதார்த்தமோ அல்லது திட்டமிட்டு இவ்வாறு
அமைக்கப்பட்டதோ ஆனால் எந்தவித வன்முறையோ, முக்கிய பாத்திரங்களின் கோரமரணமோ
ஏற்ப்படுத்தாத அனைவராலும் கைவிடப்பட்ட உணர்வை இந்த எளிய காட்சியின்வழி
பார்வையாளனின் மனதில் விதைத்தது எளியவிசயமன்று. நீண்ட இடைவெளிக்கு பின் இவ்வாறான
முயற்சியை தமது முதல் படைப்பின் மூலம் முயன்ற இயக்குனருக்கு மிகபெரும்
பாராட்டுக்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது சொந்த மாநிலத்தை விட்டு
கொல்கத்தா வரும் நடுத்தர வயது ஆண், உடன் சக்கர நாற்காலியில் நாட்களை கழிக்கும்
அவனது வயதான தாய். மூன்றாவது தளத்தில் மொட்டை மாடியில் உள்ள ஒண்டு குடித்தனத்தில்
குடியேறுகின்றனர். அதே குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் வசிக்கும் ஒரு
குடும்பத்தின் இளவயது மனைவிக்கும், இவனுக்குமான பலவித உணர்வுகளின் வெளிப்பாடே
இப்படம். எந்தவித புரட்சிகர வசனங்களோ பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய இசை கோர்வைகளோ
இல்லாமல் இவ்விருவரின் மன ஓட்டங்களை சராசரி பார்வையாளனும் காட்சிவழி உணரசெய்யும் படைப்பிது. இதுபோன்ற கதைகள் நகரும் வேகம்
பெரும்பாலான பார்வையாளனை சலிப்படைய செய்வதென்னவோ உண்மை. ஆனால் படம் துவங்கிய முதல்
பதினைந்து நிமிடங்களிலேயே “இதுல என்னமோ இருக்கு” என்ற மனநிலைக்கு இயக்குனர் நம்மை
தயார்படுத்தி விடுகிறார்.
சந்தர்ப்ப வசத்தால் தன் மாநிலத்தை விட்டு வெளியேறும்
ஒரு நடுத்தரவயது ஆசாமியை,இயக்குனர் கற்பனையில் தொடுத்த அப்பாத்திரத்தின்
செயல்பாடுகளும் அவனின் நடவடிக்கைகளையும் அதனினும் மேலாக மட்டுமே அப்பாத்திரத்தை
ஏற்ற சேத்தன் செய்துள்ளார்.. மேலும் அவனின் கடந்த கால அசம்பாவிதங்களை இக்கதையில்
ஒரு முக்கிய திருப்பம் நிகழும் சூழ்நிலையில் நம்மால் கிட்டத்தட்ட யூகிக்கும்படியே
இயக்குனர் வடிவமைத்த திரைக்கதையும், படத்தின் துவக்கத்தில் அவர் வைத்த முதல்
காட்சியும் உணர்த்துவது. இந்த படத்தில் ஏதோ கதைன்னு கொஞ்சமா இருந்தா அதுக்கு இந்த
முக்கிய திருப்பமே காரணம். அதையும் இவ்வாறு எளிதாக நம்மால் யுகிக்கும்படி
உருவாக்கியதற்கு மிக முக்கிய காரணம். அவர் பதார்த்தங்களின் மேல் தூவப்படும் சங்கதிகளை
போல் கூடுதல் சுவைக்காக மட்டுமே இக்கதையை பயன்படுத்தியுள்ளார்.
மற்றபடி அவரின் முழுநம்பிக்கையும் அவரின்
உருவாக்கலின் மேல் கொண்டு அதை மட்டுமே படைத்துள்ளார். இவ்வாறான கதையின் முதல்
காட்சிலிருந்து இறுதிவரை ஒவ்வொரு ஷாட்டும் லைட்டிங் முதல் எடிட்டிங் வரை முன்பே
முடிவுசெய்யப்பட்டு அவை மட்டுமே திரையை வந்து சேரவேண்டும். இடைசொறுகலாக எந்த ஒரு
காட்சியை இணைத்தாலும் அவை கதையுடன் பொருந்தாமல் முழுகதையையும் சொதப்ப
வாய்ப்பதிகம்.
வார்த்தைபடுத்த இயலாத சிலவிசயங்களையும் காட்சிபடுத்த இயலும் என்பதற்கு இதன் TRAILER யே மிகப்பெரும் சாட்சி
https://www.youtube.com/watch?v=gI8ctwsdh7k