பார்த்ததில் மிகவும் ரசித்தது: 118.
தங்கள் மண்ணில் தங்களது பருவநிலைக்கு விளையும்
பண்டங்களை உண்டு வந்த மனிதன். வழிபோக்கர்கள் மூலம் அவர்களது பண்டங்களை பெற்று
தங்களது பண்டங்களை மாற்றிகொண்டனர். பின்னர் கி.மூ 300 களின்
துவக்கத்தில் தங்கள் வசதிக்காக வேண்டியதை வாங்கிக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டதே
நாணயங்கள். உலகின் அனைத்து விதிகளும் வழிமுறைகளும் சில காலங்களில் காலாவதியாகி
மாற்றம் பெற்றுவரும் சூழலில் கி.மூ 300களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மட்டும் பலவித
பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டாலும் இன்றும் உலகம் முழுக்க அத்தியாவசிய தேவையாகவே
இருந்து வருவதற்கு மிகமுக்கிய காரணம் வணிகர்கள் மட்டுமே.
வாடிக்கையாளர்களாகிய நமது தேவையை பூர்த்தி செய்ய
தோன்றிய இவர்களே இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஆடை வாகனம் முதல் அத்தியாவசிய தேவைகளான
உணவுவரை முடிவு செய்பவர்கள். சக்கரம் கூட பயன்பாட்டிற்கு வராத காலத்தில் கூட பல
ஆயிரம் மைல்கள் தங்களது பொருட்களை கொண்டு சேர்த்த அவர்களது ஈடுபாடு
குறைந்திருந்தால், அல்லது ஏதோ ஒரு வகையில் தடைபட்டிருந்தால் நாணயம் என்ற ஒன்று என்றோ
வழக்கொலிந்திருக்கும். ஆதலால் இவர்களே நமது மொத்த வரலாற்றின் மிக முக்கிய காரணி.
இவ்வாறு பல விதங்களில் பரிணாம வளர்ச்சி பெற்ற இந்த வணிகர்களின் இன்றைய நிலையை
தோலுரித்து காட்டும் படமே OKJA.
நம் ப்ராய்லர் கோழிகளை போல ஒரு
சர்வதேச நிறுவனம் பன்றியிலிருந்து வெறும் கறிக்காக உருவாக்கும் ஓக்ஜா எனும்
உயிரினம் உலகின் வெவ்வேறு சீதோசனை உள்ள 26 நாடுகளில் உள்ள குறுநில விவசாய்களிடம்
கொடுத்து வளர்க்கப்படுகிறது. இதன் வளர்ச்சி காலம் பத்து ஆண்டுகள். இந்த காலங்களில்
அதன் வளர்ச்சி குறித்த தகவல்களை அதன் காதில் பொருத்தி உள்ள ஹார்ட் டிஸ்க்கில்
மூலம் பெற்று செல்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு பின் இதில் எந்த ஓக்ஜா அதிக
வளர்ச்சி பெற்றுள்ளதோ அவர்களின் வளர்ப்பு முறையை பின்பற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்கிறது.
குழந்தை பருவம் முதல்
தன்னுடனே வளர்ந்த ஓக்ஜா பத்து ஆண்டுகளுக்கு பின் அந்த நிறுவனத்தாரால் அழைத்து
செல்லப்பட, அவர்களுடன் போராடி ஓக்ஜாவை அப்பெண் மீட்டாளா என்பதே மீதி கதையும்.
விக்ரமன் படம் பார்த்து அழுத நம்மள ஆக்சன் கதைகளிலே அதிகம் அழவெச்ச இந்த
கொரியகாரங்க குழந்தையும் ஓக்ஜாவையும்
வைத்து சும்மா இருப்பாங்களா!!...
ஆனால் கதையும் அதற்க்கு நேர்மையாக
பிடித்த காட்சி அமைப்புகளும் நம்மை இறுதி காட்சி தவிர்த்து அதிகம் சிந்திக்கவும்
வியக்கவும் வைப்பவை. இப்படி ஒரு கதையை அதிக பாடம் நடத்தியே அடித்தட்டு பார்வையாளர்
வரை நிறைய சமாசாரங்களை புரியவைக்க வேண்டும்.. ஆனால் அவ்வாறு இல்லாமல் ஓக்ஜா
குணநலன், உணவு பழக்கம், அதன் வளர்ப்பு முறை குறித்த அனைத்து சமாச்சாரங்களும்
சுவாரசிய காட்சிகள் மூலமே மிக எளிமையாக அனைத்து ரசிகர்களும் உணரும்படி அமைத்த
உருவாக்கல் அட்டகாசம்.
உதாரணமாக மலையில் இருந்து தவறி
விழும் ஒரு முப்பது கிலோ எடை கூட இல்லாத அந்த பாப்பாவை கிட்டத்தட்ட நூறு கிலோ எடை
கொண்ட ஓக்ஜாவால் அந்த கயிறை இழுத்து காப்பாற்ற முடியாதது. ஒரு நாளைக்கு ஒன்று
இரண்டு பழங்களுக்கு மேல் அந்த பெண் கொடுக்கும் காட்சியில் உண்ணாமல் திரும்பி
கொள்ளும் காட்சி (குறைந்த நீரில் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை
போல) அதிக செலவில்லாமல் பெரும் எடை கொண்டதாக வளரும் விதம். என்னதான்
செயற்கையாக வளர வைக்கப்பட்டாலும் கறிக்காக வளர்க்கப்படும் விலங்குகளின் அவலநிலை பட்டவர்த்தனமாக
இறுதி காட்சிகளில் அப்படியே காட்டிய விதம். அவர்களை சட்டப்படி நம்மால் எதுவுமே
செய்ய முடியாத சூழலையும் சொன்ன விதம் மனமுறுக்கும்.
ஓக்ஜாவை தேடி அந்த பெண்
அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு செல்கையில் வரவேற்ப்பரையில் வைக்கப்பட்டுள்ள மரம்
மற்றும் அங்குள்ள பெண் நடந்துகொள்ளும் செயற்கைதன செயல்பாடுகள் மூலம் அந்த பகுதி
எவ்வளவு போலியானது என சொல்லி செல்லும் இடம். படத்தின் டைட்டில் கார்டிலே கதையை
துவக்கி விடுவது. அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவில் என இந்த ஓக்ஜா வளரும்
ரம்மியமான மலை பிரதேசத்தில் கதையை துவக்கும் இடம், இறுதி காட்சியில் தொலைவில்
கேட்க்கும் கன்ஷாட்ஸ் என படம் முழுக்க இயக்குனரின் முத்திரை மனதை நிரப்பி
செல்கிறது.
இயக்குனர் அளவிற்கு மிகபெரும்
பங்கு CG. கண்டிப்பாக வெறும் ஹாலிவுட் தரத்தில் என கூறி செல்லாவகையில் அவர்களுக்கு
சவால் விடும் வகையான துல்லியம். ஓக்ஜாவின் சிறுசிறு அசைவிலும் பிரமிக்கவைத்துள்ளனர். அந்த மலைபிரதேசத்தை நம்
கண்களும் மனமும் நிரம்பி வழியும் கொள்ளை அழகுடன் அளித்த ஒளிப்பதிவு. பிற்பாதி
வறண்ட கதையின் வழியே பயணிக்கையில் அதன் வெறுமையையும் நம் மனம் உணர்வதை மறுக்க
இயலவில்லை.
மொத்தத்தில் அரசியல்வாதி ஆயிரம்
மற்றும் ஐநூறு கோடிகளில் ஊழல் என செய்திகளில் பார்க்கையில் “இதுக்குமேலவாது
எங்களுக்கும் ஏதாவது செய்ங்கப்பா. இன்னும் சேர்த்து என்ன பண்ண போறீங்கனு”
நினைக்கும் மனது. இவர்களை விட அதிக வலிமையும், வாய்ப்பையும் நிரம்ப பெற்ற இந்த
முதலாளிகளை பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்களுக்கும் சில அளவீடுகளும், சில
சட்டதிருத்தங்களும் அவசியம் தேவைப்படும் சூழலில் நின்று கொண்டிருக்கிறோம்.
இக்கதையின் பிரமாண்டத்தை அறிந்து கொள்ள:
https://www.youtube.com/watch?v=AjCebKn4iic
இக்கதையின் பிரமாண்டத்தை அறிந்து கொள்ள:
https://www.youtube.com/watch?v=AjCebKn4iic