Mohanprabu (மோகன் பிரபு)

Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, January 7, 2024

WEB SERIES 12.


பெரிய ஆச்சர்யம் SCAM 1992னு இவங்க ஹர்ஷத் மேத்தா பத்தி பண்ண நெடுந்தொடர் இந்திய அளவில் பெரிய ஹிட். இவர்களால் மிக எளிதாக பிரபலமான ஒரு ஹீரோவை இந்த கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனா எங்கோ சிறு பாத்திரங்களில் வந்த இவருக்கு ஏன் லீட் ரோல்ல கொடுக்கப்பட்டது.  இந்த ஊழலோட உண்மை காரணகர்த்தாவின் புகைப்படத்தை பாத்தால் புரியவரும். பெரிய சீன் கம்போசிங் இந்த கதைக்கு தேவையே இருக்காது. ஏனெனில் அவ்ளோ பரபர சம்பவங்கள் நிறைஞ்சி இருக்கும் கதை இது. இதை எந்த சராசரி இயக்குனர் எடுத்தாலும் சுமாராக  போககூட வாய்பில்லாத உண்மை கதை.

அரசாங்கத்துக்கு இந்த ஸ்டாம்ப் பேப்பர் மூலம் வரும் வருவாய். அவை எங்கெல்லாம் அச்சிடபடுகிறது. அங்கு பணியாற்றும் தலைமை அதிகாரி. அவரின் அதிகார வரம்பு. இந்தியா முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யபடுகிறது. இதன் விற்பனையாளர் ஆக என்ன தகுதி. இந்த பேப்பரை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள். அவர்களின் கொள்முதல் மதிப்பு என   பெரிய டேட்டா பேஸ் தயாரிச்சி, இதில் எங்கிருந்து இந்த தாளை கையகபடுத்த முடியும். ஏனெனில் போலியாக எத்தனை முயற்சித்தும் இந்த தரத்தில் ஸ்டாம்ப் பேப்பர் அச்சடிக்க முடியாத சூழல்.

இவை தயாரிக்கும் தலைமை அதிகாரியையும் இணக்கமாக்க இயலா. முதலில் இந்த தாள் பயணபடும் வழிகளை எல்லாம் கண்டறிந்து சிறிய அளவில் தொழிலை துவங்கி. இதன் அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஆகி. தனது தொழில் மெல்ல விரிவடைய, அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் அறிமுகம் ஆக ஆக. தனக்கான டிமாண்ட் அதிகரிக்க இந்த தாளை சொந்தமாக அச்சடிக்க இவர் கையாண்ட வழிமுறைகள். தனது விற்பனையால் வந்து குவியும் ரூபாய் நோட்டுக்களை வைக்க நாடு முழுக்க குடோன்களை வாடகைக்கு எவ்வாறு தேர்ந்தெடுத்தார்.

கிட்டத்தட்ட ஒரு அரசாங்கத்தை நிர்வகிக்க கூடிய அளவிலான பண இருப்பும். உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தொடர்பும் கிடைத்ததும் அடுத்த கட்டமாக இவரின் நகர்வு எவ்வாறு இருந்தது. அதனினும் கூடுதல் சுவாரசியம் எவ்வாறு இவரின் கவனம் ஸ்டாம்ப் பேப்பர் மீது விழுந்தது. அதன் முக்கிய காரணி. இவருடன் இணைந்து பணியாற்றிய நபர்கள். இவரின் குடும்பம் என இவரது வாழ்வின் மொத்த நாட்களையும் காமேராவில் அச்செடுத்து கொடுத்திருக்கும் தொடர் இது. சோனி லைவ்ல இருக்கு.         


Wednesday, December 20, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 179.


தன் காதலியோடு சேர்ந்து மனைவியை கொலை செய்ய திட்டமிடும் கணவன். ஓரளவு சுமாரா வந்திருந்தா கூட படம் பாக்க நல்லாவே இருக்கும்னு நினைக்கும் படியான கான்சப்ட். கொலைக்கான காறிய காரணம் நமக்கு தேவையே இல்லனாகூட கதையோட வசனங்கள்ல வந்திடும். அவன் காதலி ஒரு பல் மருத்துவர், இவன் ஒரு நல்ல வளமான தொழில் அதிபர். ரொம்ப சாதாரணமான திட்டம். எந்த பெரிய வரலாற்று சம்பவங்கள் கூட ஒரு சின்ன செயல்ல இருந்துதான் ஆரம்பமாகும்னு சொல்லுவாங்கல அப்படி.


இவரு சம்பவம் பண்ண கூடிய நாள்ல அந்த டென்டிஸ்ட்ட அவரோட PA மூலமா அப்பாயிண்ட்மெண்ட் சொல்ல சொல்றது. அங்க அவங்க ரூம்லையே புட் டெலிவரி பண்ற டிரஸ் மாத்தி பேக்யோட ஜன்னல் வழியா கிளம்பி. அந்த கட்டிடத்தோட பின் பக்கம் ஹெல்மெட்யோட இவங்க தயார் பண்ணி வெச்சிருக்கும் நம்பர் ப்ளேட் இல்லாத வண்டில அவரோட வீட்டுக்கு போறது.  புட் டெலிவரி வேஷம் எதுக்குனா அவங்க மட்டும்தா இவங்க ஏரியா செக்யூரிட்டி லெட்ஜர்ல கையேழுத்து போடும் வேலை இருக்காது.


இதுக்கு அப்பறம்தா சுவாரசியமே, அங்க இவரு ரெண்டு துப்பாக்கியோட போய் அவங்க ரெண்டு பேருமே தற்கொலை பண்ணிக்கறது. அதுல இவன் யூஸ் பண்றது டம்மி துப்பாக்கி இதான் கான்செப்ட். ஆனா அவன்   மனைவியை தற்கொலைக்கு எப்படி சம்மதிக்க வெக்கறது. தொழில்ல பயங்கர நஷ்டம். நிறைய கடன். அதுபோக வீட்டில் எல்லா பொருளும் ஜப்தி பண்ண போறாங்க. இந்த இவ்ளோ பொய்ல கொஞ்சம் உண்மையும் வரணும்னு. இவரே வீட்ல இருக்கும் எல்லா பொருளும் மாத்தி புதுசா வேணும்னு ஒரு பெரிய கடையை அணுகி அவங்க இந்த சம்பவம் நடக்கும் தேதி காலையே வந்து பொருளை பூரா எடுத்துட்டு போய்டுவாங்க. (அவர் மனைவியோட மாலை வந்து புது பர்னிச்சர்ஸ் செலக்ட் பண்ணி வாங்கிக்கறோம் அவரையும் கரைக்ட் பண்ணியாச்சு.)    

 

ஆனா கோர்ட் ஜப்திய நம்பவைக்க அவனே போலியா ஒரு காபி ரெடி பண்ணி அதை அவரோட வீட்டு கதவுல ஒட்டவும் செய்யறாரு. அவங்களுக்கு குழந்தைங்களும் இல்ல. அதால அவங்க மனைவியை கொஞ்சம் சுலபமாவே தற்கொலைக்கு தயார் பண்ணிடறாரு. ஒரே சிக்கல் ஜன்னல் வழியா போய் மனைவியோடு தற்கொலை நாடகம் முடிச்சி சரியா அம்பது நிமிஷத்துல இவர் திரும்ப வந்து பல் மட்டும் ஒரு பத்து நிமிஷம் சுத்தம் பண்ணிட்டா சரியா ஒரு மணிநேரம். அடுத்த பேஷண்ட் உள்ள வர சரியா இருக்கும். இவங்க ஹாஸ்பிட்டல் அதிக பிஸியா இருக்கும் நேரத்துல பண்ணாதான் இங்க இருக்கறவங்க கவனம் இவங்க மேல இருக்காதுனு சரியான திட்டம்.


அதை செயல்படுத்தும் நாள்ல இருந்துதா இந்த கதை ஆரமிக்கும். மேலே சொன்ன காட்சிகள்லா ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும். பெரிய சர்ப்ரைஸ் நம்ம எல்லோருக்குமே இந்த கதைல இருக்கு. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்தா.

Tuesday, December 5, 2023

 பார்த்ததில் மிகவும் ரசித்தது – 178


ஹாரர் படங்களோட வெற்றியே அவங்க நம்மை அந்த திகிலோடவே படம் துவக்கத்தில் இருந்து இறுதிவரை வெச்சி இருக்காங்களா அப்படிங்கறது மட்டும்தான். லாஜிக் கதையோட ஓரளவு பொருந்தி வந்தாகூட போதும். இங்க இந்த போஸ்டர்ல மணிக்கட்டோடு பைபரில் செய்யப்பட்ட அந்த கைதான் கதையோட முக்கிய பாத்திரம்.


வீக்எண்ட்ல் நண்பர்கள் ஒன்று கூடும் சந்தோஷ தருணங்களில் அவங்களோட முக்கிய விளையாட்டே இந்த கையை வெச்சிதான். ஒரு டேபிளில் அந்த கையை நிறுத்திவெச்சி எதிரில் அமர்ந்திருக்கும் நபர் இந்த கையோடு அவரோட கையை பொருத்தி சொல்ல வேண்டியது “டாக் டூ மீ” மட்டுமே. பின்னால நடப்பது எல்லாமே அதகளம்தான்.


ஒரு சில நிமிட அந்த எக்ஸ்சைட்மெண்ட்டுகாக வரிசையா அந்த கேங்ல இருக்கும் எல்லோருமே விளையாட போக, இறுதியா கதையோட முக்கிய பாத்திரத்தோட தம்பியை வெச்சி முயற்சி பண்றாங்க. அங்க அடுத்த கட்டத்துக்கு போற கதை கடைசி வரை கொஞ்சம் திகில்லயே நம்மள வெச்சி இருக்காங்க. இதோட முக்கிய விதியே அதிகபட்சம் 90 வினாடிகளுக்கு உள்ள அந்த கையை பிடிச்சி இருக்கறவங்களை விடுவிச்சிடனும் அவ்ளோதான்.


ஏன்னா, அந்த கையை பிடிச்சவங்க அவங்களா தானா அதை விடுவிக்க முடியாது. இந்த வகையறா கதைகள் நம்மை கட்டிபோட பெரிய காரணமே படத்தோட டெக்னிகல் பக்கம்தான். ரொம்ப சரியா எதுமட்டும் வேணுமோ அதுல ஒரு ப்ரேம் கூட அதிகமா இல்லாத எடிட்டிங். அப்பறம் சவுண்ட் டிசைன் பேசும் தோணி அதுக்கான வால்யூம் முதல் பொருட்களோட அசைவுகள் வரை அட்டகாச அவுட்புட் கொடுத்து இருக்காங்க.   


தெரிஞ்சே ஜெயின்ட் வீல், ரோலர் கோஸ்டர்ல போறது இல்லையா, அப்படி நம்மள ஓரளவு பதைபதைப்புலையே வெச்சிருக்குற படம். கண்டிப்பா தனியா பாக்க முயற்சி பண்ணுங்க. ப்ரைம்ல இருக்கு.

Thursday, November 23, 2023

 



WEB SERIES 11.

காற்றிலே பரவும் அந்த விஷத்தை சுவாசித்தவுடனே மூச்சு திணறல், பார்வை கோளாறு, சில நிமிடங்களில் நுரையீரல் மற்றும் இதயம் செயலிழப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அந்த பகுதி முழுக்க மக்கள் இறந்து கொண்டிருக்கும் இரவில், அந்நகரத்தின் மிக முக்கிய ரயில்வே ஜங்க்ஷனான போபாலை கடந்து செல்லும் ரயில்களில் பயணம் செய்யும் ஆயிரகணக்கான மக்கள். குறுகிய நேரத்தில் நீண்ட தொலைவை கடந்து உயிர் பிழைக்க ரயில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், அதை நம்பி வரும் இந்நகரத்தின் நூற்றுக்கணக்கான மக்கள் என அந்த ஒரு இரவில் அந்த ரயில்வே ஜங்க்ஷனில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் உயிர் பிழைத்த சொற்ப ஊழியர்களை கொண்டு எவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினார் என்பதே களம்.    

 

நம் மூளை ஏற்கமறுக்கும் கொடுமைகள் அரங்கேறிகொண்டே துவங்கும் கதை. அதிவேகமாக செல்லும் தொடரின் இடையிலும் இவை வெறும் பரபரப்பிற்காக மட்டுமே சேர்க்கப்பட்ட கதைகளாக நினைக்கும் மனம்.   ஆனால் இத்தொடர் முடிவில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர், அந்த ஸ்டேஷன் மாஸ்டர் என இந்த தொடரின் முக்கிய பாத்திரங்களின் உண்மையான நபர்களின் புகைப்படங்கள் மற்றும் அப்போது வெளியான உலகின் முக்கிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் வீடியோ கொண்டே இந்த தொடரை நிறைவு செய்ததும், கற்பனையை மீறிய இந்த அவலத்தின் உண்மை முகம் நம்மை நிலைகுலையசெய்யும்.

 

விஷவாய்வு கசியும் அந்த தொழிற்சாலை மற்றும் இந்த ரயில்வே ஜங்ஷன் இந்த கதையின் முழுபகுதியும் நடைபெறும் களம். காலகட்டம் 1980. அப்பொழுது பயன்படுத்தபட்ட ரயில்வே உபகரணங்கள் முதல் அந்த தொழிற்சாலை அமைப்பு, அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களின் உடைகள் வரை மிக நேர்த்தியாக கொண்டுவந்துள்ளார்கள். இக்கதையில் வரும் முக்கிய பாத்திரங்கள் அவர்களின் பின்புலம் இந்நிகழ்வில் அவர்களது முடிவு. இவை நாம் இன்னும் அதிகமாக அந்த கதையினுள் ஒன்ற மிகமுக்கிய காரணம். 8-10 எபிசோட் வரையும் கொண்டு செல்ல நல்ல கதை இருந்தும் அதை மிக அழகாக நான்கு அத்யாயங்களுக்குள் முடித்தது கூடுதல் சிறப்பு. தவறவிட கூடாத மிகமுக்கிய தொடர்.

 

எடிட்டர் தவிர இதன் இயக்குனர், திரைக்கதையாளர், காமெரா, உடைவடிவமைப்பாளர் என அனைவருமே சரியான தொடரின் மூலம் அறிமுகமாகறாங்க. இவர்கள் பங்குபெறும் அடுத்தடுத்த படைப்புகள் நிச்சயம் பேசப்படும்.


Friday, November 17, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 177.

Gran Turismo 1997-ல் வெளியாகி உலகம் முழுக்க மிக பிரபலமான கார் ரேசிங் கேம். இந்த வீடியோ கேமை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட சரியான படம்.  விளையாட்டை மையபடுத்தி எடுக்கபடும் எந்த படத்திற்கும் அடிப்படை விதி ஒன்றுதான். இந்த விதிகளுக்குள் மட்டுமே எடுக்கபட்டிருந்தாலும் இந்த படம் நமக்கு தனித்து தெரியும்.  

ஒரு முக்கியமான பந்தயம் அதில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சர்வதேச ரேசருக்கான லைசன்ஸ் கிடைக்கும். என்னதான் வீடியோ கேம்ல இதே லேப்பில் பல நூறு முறை விளையாடி இருந்தாலும், நிஜத்தில் அவனால் பத்து இடங்களுக்குளே கண்டிப்பாக வரஇயலாத சூழலை சில நிமிடங்களில் பந்தயம் முடியும் முன்னமே உணர்கிறான். சிறுவயது முதல் தனக்கான மொத்த நேரத்தையும் அவன் செலவு செய்தது இந்த விளையாட்டில் மட்டுமே.


அதன் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து இன்று நிஜத்தில் உண்மையான வீரர்களுடன் பந்தய களத்தில் சென்று கொண்டிருக்கிறான். இதை தவறவிட்டால் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லை. தனக்கு மற்ற எந்த வேலையும் தெரியாது. வீட்டில் தனது தம்பியும் அப்பாவை போல கால்பந்து விளையாட்டில் சிறு சிறு போட்டிகளில் வென்று ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டான். இந்த நிலையில் தான் வீடு திரும்பி என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து பார்க்ககூட முடியாத சூழல்.


 இத்தனை இக்கட்டிலும் தன்னை அரவணைத்தே வைத்திருக்கும் தாயும், சிறு சிறு புத்திமதிகளை தவிர்த்து வேறு ஏதுமே சொல்லாத தந்தையையும் நினைத்து ஒரே வினாடி கண்களை மூட அவனது அறையில் இதே பந்தயத்தை திரையில் ஆடும் கனத்தை நினைத்து பார்க்கிறான். தனது அறையை கடந்து செல்ல முற்படும் தந்தை சில வினாடிகள் கவனித்து இப்படி கேட்பார். 

நீ மட்டும் ஏன் உனது லைனை விட்டு வெளியே சென்றே விளையாடுகிறாய்?

அனைத்து வீரர்கள் தனது வாகனங்களை அவர்களது லைனிற்குள் செல்வதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த உரையாடல் நடைபெற்று கொண்டிருக்கும் கணமே பந்தய களத்தில் அவனது வாகனம் அனைத்து பாகங்களும் அப்படியே இங்கு அவனது அறையில் நாற்காலியில் விளையாடி கொண்டிருப்பவனுக்கு காரில் அமர்ந்து திரையை பார்த்து விளையாடுவதை போன்ற ஒரு CG வொர்க் வரும். அதுவரை எந்த நெருடலும் இல்லாமல் சாதாரணமாக இந்த படத்தை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளனும், ஒரே நொடியில் இந்த கதைக்குள் தன்னை இழந்து விடுவான். ஒரு அட்டகாசமான யுக்தி, அதை ரொம்ப அருமையா கதைக்குள் ப்ளேஸ் பண்ணிருப்பாங்க.


டெனிக்கலா ரொம்ப மிரட்டலான படம். DONT MISS IT WITH FAMILY..!    


Friday, November 3, 2023

 

Web Series - 010

சின்னகவுண்டர் படத்தில் சுகன்யாவை முதல் பாதி முழுக்க விளையாட்டு தனமான பாத்திரமா காட்டிருப்பார் உதயகுமார். ஒரு காட்சியில் விஜயகாந்த் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மோட்டார் போட்டு குளித்துகொண்டிருப்பார்.  அப்போது விஜயகாந்தை பார்த்து தப்பிஓட, அவர் எட்டி பிடிக்கும்போது சுகன்யா கழுத்தில் இருந்த முத்துமாலை அறுந்து வாய்காலில் விழுந்து தண்ணீரில் அடித்து போகும். என் அம்மா ஞாபகமா என்கிட்டே இருந்தது இது ஒண்ணுதான். இப்படி பண்ணிடிங்களேனு வருத்தமா போய்டுவாங்க.


அதோட நமக்கும் அந்த காட்சி பெருசா ஞாபகம் இருக்காது. அடுத்த 30-40 நிமிஷத்துல அவங்க விஜய்காந்த்துக்கே மனைவி ஆகிடுவாங்க. அதுவரை அவரோடு கிண்டலான காட்சிகள் மட்டுமே இருக்கும். திருமணத்துக்கு பின்னே அவரோடான முதல் வசனமே ‘நான் கட்டிருக்கும் புடவை, நகை எல்லாமே உங்க ஆத்தா கொடுத்ததுதான். என் தாய் வீட்டு சீதனம்னு எதும் என்கிட்டே இல்லனு’ அவங்க சொல்லவரதுக்கு முன்னமே விஜயகாந்த் உன் தாய்வீட்டு சீதனம் ஏற்கனவே என்கிட்ட இருக்குனு சொல்லி கைல பொத்தி எடுத்து வந்து சுகன்யா முகத்துக்கு நேரா ஒரு முனையை பிடிச்சிகிட்டே தொங்க விடுவாரு. அவர் விட்ட வேகத்துக்கு அந்த மாலை ஆடுவதும், சுகன்யாவோட பூரிச்சிபோன முகதோட ஆரமிக்கும் அந்த ஷாட்டோட இரண்டாவது மைக்ரோ நொடியில அந்த பாடலோட இசை ஆரம்பமாகும். அவ்ளோ சிலிர்ப்பான காட்சி அது.


நல்லா பாத்திங்கனா அதுவரை பஞ்சாயத்து, சண்டை, ஊர் பெரியவர்னு  அவர் கைல இருந்த படம் சுகன்யா கைக்கு போய்டும். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரைக்கும் இவங்க & மனோரமா பாத்திரங்கள் மூலமாதான் அந்த கதை நகரும். இந்த படத்தோட பெரும் வெற்றிக்கு இந்த இரு பாத்திரங்களும் ரொம்ப பெரிய காரணம்.


இப்படி ரசிச்சி சொல்லவும், சிலாகிச்சி பேசவும், பெருமையா சொல்லிக்கவும் நிறைய நிறைய காட்சிகளும், சம்பவங்களும், பாத்திரங்களும் இந்த சீரீஸ்ல இருக்கு.எப்பவும் சொல்றதுதான் 2.30 மணிக்குள்ளான கதைகளிலே நிறைய விஷயங்கள் சொல்ல இருக்குனா. 4-8 மணிநேரங்கள் போகும் சீரீஸ்ஸில் எவ்ளோ பாத்திரங்கள், காட்சிகள், கதைக்கான களங்கள்னு நமக்கு காட்ட முடியும். இது எல்லாமே இந்த கதையில் முழுமை பண்ணிருக்காங்க. 


இந்த கதையில் 1-2 பிரதான பாத்திரங்கள் மட்டுமில்லாம எல்லோருக்கும் ஸ்கோப் இருக்கும்படியான கதை. குறிப்பா கதை நடக்கும் களம். அடுத்த சீசன் இப்பவே பார்க்க நினைக்கும் படியான முதல் சீசனின் முடிவுனு ஆச்சர்யமா பேசவும், நினைச்சிக்கவும், குறிப்பா குடும்பமா அத்தனை பெரும் ஒண்ணா பாக்கும்படியா, ரொம்ப காலத்துக்கு பின்ன அமைஞ்சி வந்திருக்கும் சீரிஸ். கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. தைரியமா யாருக்கு வேண்டுமானாலும் சஜ்ஜஸ் பண்ணுங்க.

Tuesday, July 25, 2023

 

பார்த்ததில் மிகவும் ரசித்தது – 176. 

உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளிக்க கூடிய படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள். அனைத்து தொழில் நுட்பங்களும் கைவரபெற்றவர்கள்.  கதைக்கு தேவைபடாத எந்த தொழில் நுட்பங்களையும் அந்த படத்தின் விளம்பரங்களுக்காக பயன்படுத்தாதவர்கள். அதே தேவைபடும் பட்சத்தில் அதை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் படைப்பதில் வல்லவர்கள். பெரும்பாலும் இவர்களுடைய ஆக்சன் பேஸ் படங்களுக்கே உலகெங்கும் மிக அதிக பார்வையாளர்களை பெற்றிருந்தாலும், உணர்வுகளை வெண்மேகங்களை போல பரிசுத்தமாக நிறுவுவதில் கெட்டிக்காரர்கள்.

 

 1950 வருடம் வட மற்றும் தென் கொரியர்களுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடைபெற்ற போர் காலகட்டமே இப்படத்திற்கான களம். இதில் ஒரு குடும்பம், அதில் இளைய மகன் வலுகட்டாயமாக அப்போரில் பங்குபெற இழுத்து செல்லபட. அவனை அழைத்து வர சென்ற அண்ணனும் உடன் செல்லவேண்டிய சூழல். படம் துவங்கி கிட்டத்தட்ட இருவது நிமிடங்களுக்கு பின் வரும் இந்த காட்சிக்கு முந்தைய கணங்களே இப்படத்திற்கான  அச்சு.

 

அதில் இந்த குடும்பத்தினர் அவர்களுக்குள்ளான பிணைப்பு. அது இந்த கதை ரத்தம், துப்பாக்கி, உடல் அங்கங்களை இழந்து துடிக்கும் சக வீரர்களின் மரண ஓலங்கள். கூட்டம் கூட்டமாக கொல்லபடும் பொதுமக்கள், குண்டு மழை பொழியும் விமானங்கள் என அடுத்த இருவது நிமிடங்களில் கதை வேறொரு வண்ணத்திற்கு மாறினாலும் துவக்கத்தில் இவர்கள் பதித்த ஈரம் கதை நெடுக நம் மனதை அசைத்தபடியே அழைத்து செல்லும்.

 

இறுதி இருவது நிமிடங்கள் இந்த கதை முடிவுபெறுவதும் இந்த ஈரத்தில்தான். இடையே கிட்டத்தட்ட நூறு நிமிடங்கள் இந்த கதை பயணபடுவது போர்களத்தில் மட்டுமே. அதில் ஒரே பட்டாலியனில் சேர்ந்தே போரை எதிர்கொள்ளும் இந்த இருவருக்கிடையேயான மோதல், பிரிவு, வலி, மனக்குமுறல் என அனைத்து உணர்வுகளையும் அச்சு அசல் பிரதிபலித்த வகையில் இது தவிர்க்க இயலாத மிக முக்கிய படமாகிறது.

 

அதும் இன்றைய காலகட்டத்தில் கதையை துவக்கி பின்னோக்கி கதையை கொண்டுசென்ற பாணி பார்வையாளர்களை ஒரு எதிர்பார்ப்புடன் கதையுடன் பயணப்பட வைத்துள்ளது. வெறும் உணர்வுகளை பிரதானமாக கொண்ட கதை மட்டுமல்ல. கமெர்ஷியல் ரசிகர்களும் கொண்டாடி பார்க்க வேண்டிய படமிது.

 

முன்பே கூறியபடி (கதைக்கு தேவைப்படும் பட்சத்தில்) தொழில்நுட்பத்தில் உட்சம் தொட்டுள்ளனர்.  படம் வெளிவந்து இருவது வருடங்களுக்கு பின் இப்பொழுதும் இதன் பிரமாண்டம் நம்மை நிச்சயம் ஆச்சர்யபடுத்தும்.      


Saturday, July 15, 2023

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 175.

 

ஒரு சினிமா அது உங்களுக்குள்ள நிறைய கேள்விகளை கேக்கணும். இல்ல  நீங்களா உருவகப்படுத்தி  வெச்சிருக்கும் எந்த ஒரு பிம்பத்தையும் ஒன்னு உடைக்கணும் இல்லனா அட நம்ம நெனச்சதுக்கும் உண்மைக்கும் இவ்ளோ ஒற்றுமைகள் இருக்கானு நம்மளை பெருமைபட்டுக்கவாவது செய்யணும்.  எப்படினா?


நம்ம ஒரு படம் பாக்கறோம். அந்த கதை வடஇந்தியாவோட ஏதோ ஒரு கடைகோடி கிராமத்துல நடக்குதுன்னு வெச்சிக்குவோம். நம்ம  அந்த பக்கமே போனது இல்லனாலும் அந்த வட இந்திய கிராமம் அவங்க கலாசாரம் பத்தின ஒரு பிம்பம் நம்ம மனசுக்குள்ள இருக்கும் இல்லையா. அங்க ஜனங்க இப்படி தான் இருப்பாங்க. வீடுங்க பெரும்பாலும் இந்த அமைப்புலதான் இருக்கும் அப்படினு. அது நம்ம நிறைய படங்களில் பார்த்து பழகியதால், அந்த களம் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரிதான இருக்கும். அதால அந்த படமே ரொம்ப நல்லா இருந்தாலும் அந்த களம் அதிகமா பார்த்து பழகியதால பெருசா ஆச்சர்யபடுத்தாதுதான?


உதாரணமா Udta Punjabனு ஒரு ஹிந்தி படம். பஞ்சாபை களமாக கொண்ட கதை. நம்ம பஞ்சாபை மேப்பை தவிர வேற எங்கேயும் பாக்கவே இல்லனாலும், அவங்களை பத்தின ஒரு பிம்பம் நம்ம மனசுல இப்படிபட்டவங்கனு இருக்கும்ல. அதை முழுசா அடிச்சி ஒடச்சது இந்த படம். இப்படியான படங்கள் சில நிமிடங்களிலே கதையோடு நம்மை ஒன்றவெச்சிடும்.


அப்படிதான் இந்த ஈரானை கதைக்களமாக கொண்ட பெர்சியன் மொழி படமும். அரபு நாடுங்க அப்படினா நமக்கு ஒரு பிம்பம் இருக்கும். அங்க வீடுங்க இந்த அமைப்புல இருக்கும். சாலைகள் இப்படிதான் இருக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் உடையுடுத்தி இருப்பாங்கனு. இது எல்லாமும் படம் துவங்கிய முதல் நிமிடத்திலே தகர்த்த படம்.


ஒரு பெண் தனது குழந்தையை தூங்கவைத்து கொண்டிருக்கிறாள். அவளிடம் ஒரு பரபரப்பு ஏதோ ஒரு அவசரத்தில் இருந்தாலும் அந்த குழந்தையிடம் அதை காட்டிகொள்ளாமல் அதை அயர்ந்து உறங்க சென்றதும் கதவை பூட்டிவிட்டு பரபரப்புடன் சாலையை நோக்கி விரைகிறாள். அங்கே அவளுக்கு முன்பே நிற்கும் மற்ற மீறிய ஒப்பனைகளுடன் கூடிய  பெண்களுடன் இவளும் சேர, நமக்கு இவளின் நிலை தொழில் அனைத்தும் பிடிபடுகிறது.


அந்த ஒரு இரவிலேயே இரண்டு வாடிக்கையாளர்களை முடித்து மூன்றாவது நபருக்குக்காக முழுதும் உருகுலைந்து நிற்கும் போது, இதனுடன் மீண்டும் வீடு திரும்பிட அவளின் கால்கள் தடுமாறினாலும்,  இவளின் தேவை அடுத்த நபருக்காக இவளை காத்திருக்க செய்கிறது. அடுத்த வாடிக்கையாளரும் கிடைக்க அவனிடம் பணம் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொண்டு அவனது வாகனத்தில் செல்கிறாள்.


அவனுடைய வீட்டை அடைந்ததும் ஏதோ தவறாக தெரிய அங்கிருந்து கிளம்ப முற்படுபவளை கழுத்தை நெரித்து அவன் கொல்ல, கடைசிவரை போராடுபவள் இறுதி மூச்சில் தனக்கான ஒரு ஜீவன் அங்கு உறங்கிகொண்டிருப்பதை சொல்ல முற்பட்டு பாதியிலே பிணமாகிறாள். இப்படியாக 2000-2001 ஒரு ஆண்டுக்குள் கிட்டத்தட்ட பதினாறு பெண்கள் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.


ரொம்ப பிடிச்ச விஷயம் சீரியல் கில்லர் கதைனா இருக்கும் வேகமும் பரபரப்பும் படத்துல எங்கேயுமே இருக்காது. காரணம் அந்த கில்லரும் அவனது குடும்பமும் அவ்ளோ அழகு. அவனை போலவே நமக்கும் அந்த குடும்பத்தை ரொம்ப பிடிக்கும். அவனோட கேரக்டர் டிசைன் இந்த படத்துல ரொம்ப டீட்டைலா பண்ணிருக்காங்கனு சொல்றதை விட அழகா பண்ணிருக்காங்க.

Tuesday, December 1, 2020

 


பார்த்ததில் மிகவும் ரசித்தது – 174.

IL MARE 2000-ல் வந்த கொரியன் சினிமா. ஒரு பெண் கடற்கரையோர வில்லா ஒன்றில் குடியேறுவாள்.  அந்த வீட்டின் மெயில் பாக்ஸ்ல் ஒரு பழைய கடிதம் ஒன்றை கண்டெடுப்பாள். அதில் சில முக்கிய ஆவணங்கள் இருப்பதை பார்த்து, உரியவரின்  முகவரிக்கு அனுப்புவாள். நாம் எதிர்பார்த்தது போலவே நன்றி கடிதம் ஒன்று வரும். கிட்டத்தட்ட முழுபடத்தின் கதையும் கூட இதுவே. ஆனால் அதில் விசேஷம் அந்த பெண் இன்றைய காலத்திலும், அவருக்கு கடிதம் எழுதும் நபர் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலும் இருப்பதும்.

கதைக்கு பரபரப்பு ஏற்படுத்த இந்த இரண்டு காலங்களுக்கு இடையே பயணம், அதற்கான முயற்சி இப்படியான எந்த ஆரவாரமும் இல்லாமல், வெறும் இருவருக்குமான கடித தொடர்பிலே நம்மையும் அடுத்த கடிதம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்புடன் பயணபடவைக்கும். டைரி எழுதும் வழக்கம் உள்ள அந்த பெண், இரண்டு வருடங்களுக்கு முன் இதே தேதியில், குறிப்பிட்ட ரயில் நிறுத்தத்தில் தனது வாக்மேனை தவறவிட்டதாக ஒரு கடிதத்தில் குறிப்பிடுவாள்.

அதற்கு பதில் கடிதம் வருகையில், அதனுடன் அந்த வாக்மேனையும் சேர்த்து அனுப்பிவைப்பான். அப்படியெனில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வசிக்கும் இவன், அந்த குறிப்பிட்ட தேதியில் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்க வேண்டும். இவன் அவளை சந்தித்து பேசினானா. அவ்வாறு பேசியிருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னான காலத்தில் உள்ள இவளுக்கு அவனின் ஞாபகங்கள் நிச்சயம் இருந்திருக்குமே. இப்படியான கேள்விகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தானாகவே தோன்ற ஆரமிக்கும்.

இப்படியான ஒரு காட்சிக்கே இத்தனை கேள்விகளும், ஆர்வமும் நமக்கு வருகிறதென்றால், ஒரு படம் முழுக்க இப்படியான கேள்விகளுடன், பரபரப்பும் நம்மை தொற்றிக்கொள்ள செய்தால், அவ்வாறான படமே இந்த THE CALL.

இதிலும் இயற்கை சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டில் குடியேறும் ஒரு பெண். அங்குவரும் தொலைபேசி அழைப்பில் பேசும் மற்றுமொரு பெண். அவள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பிந்தைய காலகட்டத்தில் அதே வீட்டில் வசித்து வருபவள். இந்த இரண்டு பெண்களின் தந்தைகளும் தொழில் முறையில் பழக்கம் உள்ளவர்கள். இதே 20 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் ஒரு முறை இவள் சிறுமியாக தன் பெற்றோருடன் இந்த வீட்டிற்கு வருகிறாள். அதே சமயம் தொலைபேசியில் இவர்கள் இருவரும் பேசிகொண்டிருக்க. தொலைபேசியில் தனது தந்தையின் குரலை கேட்டு அழுகிறாள்.

இவள் காரணம் கேட்க, உங்கள் வீட்டிற்கு வந்த சில தினங்களில்தான், வீட்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் தனது தந்தையை இழந்ததாக இவள் கூறுகிறாள். அவர் இறந்த அந்த குறிப்பிட்ட தினத்தில் தான் அவரை காப்பாற்றுவதாக இவள் சமாதானம் கூற. நமக்கும் சேர்த்து பரபரப்பு தொற்றிகொள்கிறது. இவள் தந்தையை அவள் காப்பாற்றினால் இந்த 20 வருடங்களில் இவளிடம் என்னென்ன மாற்றங்கள் நிகழும். முன்பே பல சிக்கல்களில் உள்ள அந்த பெண்ணால் அந்த வீட்டை விட்டு வெளியேறி இந்த பெண்ணின் தந்தையை காப்பாற்ற  முடியுமா?

அவ்வாறு இவள் காப்பாற்றினாலும், பதிலுக்கு இவளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை இவளிடம் தானே எதிர்பார்ப்பாள். இந்த காட்சியில் இருந்து இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகள் நமக்கு படத்தின் இறுதிவரை எழுந்தபடியே இருக்கும். அந்தந்த காட்சிகளிலே அதற்கு விடையும், அடுத்த காட்சிக்கான கேள்விகளுடனே படத்தின் இறுதி ஷாட்வரை செல்லும். NETFLIX ல் காணகிடைக்கிறது.            


Sunday, November 22, 2020

 


WEB SERIES – 009.

HIGH (2020) – TAMIL DUB - SEASON 01 – EPISODES 09 – விறுவிறுப்பு

ராஜேஷ்குமார் நாவல்களில் முதல் அத்தியாயம் ஒரு கதையும், அதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத மற்றுமொரு கதை என அடுத்தடுத்த அத்தியாயங்கள் வரும். இறுதி அல்லது அதற்கு முந்தைய அத்தியாயங்களில் இந்த இருவேறு கதைகளும் சேரும். இந்த வகை திரைக்கதைகள் கொண்ட படங்களோ, நெடுந்தொடரோ கூடுதல் சூவாரசியங்கள் கொண்டவை. காரணம், இந்த இருவேறு கதைகளும் எந்த வகையில் சேரும் என்பதை அந்தந்த பாத்திரங்களை கொண்டு கதையின் துவக்கத்தில் இருந்தே கணிக்க துவங்கிவிடுவோம். அதுவே அந்த கதையின் மீது நமக்கு கூடுதல் ஈடுபாடு ஏற்பட முக்கிய காரணமாகிறது.


இந்த கதையும் அந்த வகையான திரைக்கதையை கொண்டதே. ஒவ்வொரு அத்தியாத்தின் துவக்கத்திலும் 1970களில் காடுகளில் எதையோ தேடி அலையும் மருத்துவ நண்பர்களின் கதையும்,  அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத இன்றைய மும்பையின் போதை மாஃபியா பற்றிய கதையும் வருகிறது. முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த பழைய கதையும், அதற்கு பின்னே டைட்டில் கார்ட் மற்றும் இன்றைய கதையும். முதல் இரண்டு அத்தியாயங்களிலே இந்த இருவேறு கதைகளும் சம்பந்தபடும் முடிச்சு புலனாகிவிடுகிறது.


ஆனால், அந்த மைய முடிச்சின் மர்மத்தின் பின்னே உள்ள கிளைகதைகள் அனைத்தும் வெகு சுவாரசியம் நிறைந்ததால். அந்த பாத்திரங்களுடனே எந்த தொய்வும் இல்லாமல் நம்மால் பயணப்படமுடிகிறது.   அதிலும் ஷிவ்மதூராக வரும் அந்த முதன்மை பாத்திரம், முழுக்க போதைக்கு  அடிமை + அதிலிருந்து மீண்டுவந்த பின்னான அவரின் தோற்றம், மீண்டுவந்ததற்கான காரணம், அவை 1970களில் வந்த முன்கதையுடனான தொடர்பு என இந்த ஒரு பாத்திரத்தை சுற்றி மட்டுமே அடுக்கடுக்கான பல ஆச்சர்யங்கள் பின்னப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முதல் சீசனில் இவரின் முன்கதையும், காதல் அத்தியாயங்களும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக சொல்லப்பட்டதால், அடுத்த சீசனின் மீது இப்பொழுதே ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுவது மட்டுமின்றி. அதில் அறிமுகமாகும் மற்ற பாத்திரங்களை பற்றிய அறிமுகம் எப்படி என்பதும். காரணம் இந்த முதல் சீசனில் அறிமுகபடுத்திய அனைத்து கதாபாத்திரங்களின் அறிமுகமும் அமர்க்களம்.

எந்தவித அலட்டலும் இல்லாமல் மூலகதையை BREAKING BAD ல் இருந்து எடுத்தாலும்,  அதற்கு பெரும் சிரத்தையுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்கள். MX PLAYER ல் காணகிடைக்கிறது.


Search This Blog