Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, May 29, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 112.

அரிதாகி வரும் உயிரினங்களை போன்று நம்மால் பெரிதாக சிந்திக்க நேரம் இல்லாத அல்லது சிந்திக்க விரும்பாத வயதானவர்களின் உலதத்தை அவர்களின் வாழ்க்கை சூழலை எந்தவித வண்ண சாயங்களும் கொண்டு நிரப்பாமல் ஒரே பாத்திரத்தின் மூலம் அச்சு அசல் காட்டிய வகையில் பெரிதும் கவனம் ஈர்க்க செய்யும் அற்புத காவியம்.


இப்படம் மற்ற மொழிகளை காட்டிலும் (தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு) நாம் பெரிதும் கவனம் செலுத்தாத கன்னட சினிமாவிலிருந்து வந்தது (எனக்கு) மிகப்பெரும் ஆச்சர்யம்.
அவசர உலகத்தில் தனது யூஎஸ் கனவை எட்டிபிடிக்க பயணிக்கும் தாயை இழந்த நாயகன். தனது வயதான ஞாபகமறதி குறைபாடுடைய தந்தையை மருத்துவமனையில் சேர்த்து பராமரிக்கிறார். அவரது யூஎஸ் கனவு நனவாகவும் மிகமுக்கிய ப்ராஜெக்ட் சமயத்தில் வெளியே அழைத்து சென்று திரும்பும் வழியில் தனது தந்தையை தொலைக்கிறார்.  

  

  
இதுவரை மனதில் தான் உருவகப்படுத்தி வைத்திருந்த தந்தைக்கும், தற்பொழுது அவரின் நண்பர்கள், உறவினர்கள் என தொலைந்தவரை தேடி அலையும் சமயங்களில் அவர்கள் தரும் தகவல்கள் மூலம் தான் அறியும் அவரின் பண்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அவரை மீட்டு தன்னுடனே வைத்துகொள்ளும் வழக்கமான கதைதான். அனால் அதில் அவரின் கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை பார்வையாளர்களுக்கும் அச்சு அசல் உணர்த்திய வகையில் இப்படம் கவனிக்க படவேண்டிய பட வரிசையில் சேர்கிறது.


இக்கதைக்கான அச்சாணியாக திகழ்பவர் தந்தை பாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ANANT RAG ஆவார். உலகின் எந்த சிறிய துறையிலும் மிகப்பெரும் வல்லுனர்கள் (கலைஞர்கள்) நிச்சயம் இருப்பர் என்பதை உணர்த்தியவர். கேன்சர் மூலம் தனது மனைவியை இழந்து ஞாபகம் தப்பி ஒரு வார தாடி, சரியாக வாரப்படாத தலை, கொஞ்சம் தொல தொல முழுக்கை சட்டையில் ஒரு சராசரி குடும்ப தலைவனுக்கான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்.


தனது ப்ராஜெக்டுக்காக மும்பை செல்லும் அவசரத்தில், வழியில் தனது தந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தர அழைத்துசெல்லும் மகன் சிலபல அபீசியல் தொலைபேசி அழைப்புகளுக்கு பின் தந்தையின் பக்கம் கூட திரும்பாமல்

“நம்ம இப்ப உங்களுக்கு கொஞ்சம் துணி வாங்க போயிட்டு இருக்கோம்.” 

“எனக்கு எதுக்கு?… “அம்மாக்கு தான் கொஞ்சம் புடவைங்க வாங்கனும்னு (சில வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது நினைவில்லாமல்) சொல்றது. குறிப்பா இதன் பின் வரும் வசனங்களில் தன் மனைவியின் நிலையை தனது மகன் மூலமாகவே அறிந்து கொள்ளும் காட்சிகளில் அசரடித்து விடுவார்.


பின் மருத்துவமனையில் தனக்கும் தனது மனைவிக்குமான கல்லூரி காதல் கதையை மிக இயல்பாக ஒரே ஷாட்டில் விவரிக்கும் இடம் ஒன்று போதும். இந்திய அளவில் இந்த காட்சியை இதே தரத்தில் செய்ய தற்பொழுது ஒரு பத்து நடிகர்கள் மிஞ்சினால் அதிகம்.


அடுத்து நாயகன் மற்றும் நாயகி பாத்திரங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் படம் முழுக்க வரும் பாத்திரங்கள் இவர்களே. முழு கதையும் அப்பா பாத்திரத்தை சுற்றியே சுழலும் வகையில் அமைய பெற்றிருப்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட எந்த பெரிய ஷாட்ஸ் இல்லாத போதும் அனைத்து குட்டி குட்டி காட்சிகளிலும் அழகாக ஈர்க்கும் நாயகி. மிகசொர்ப்பமாக கல்லூரி காலம் முதல் தான் “தம்” அடிக்கும் கடைகாரர் மூலம் தனது தந்தையும் “தம்” அடிப்பதை அறிந்து ஆச்சர்யப்படுமிடம், தனக்காக தனது தந்தை கிட்னி தானம் அளித்துள்ளதை அறிந்து கொள்ளுமிடம் என சில இடங்களில் மிளிர்கிறார்.


இது போக ஆச்சர்யபடுத்தும் வில்லன் பாத்திரம். தமிழில் பெரிய நாயகர்களுக்கே எதிரான கனமான பாத்திரங்கள் கூட செய்ய தகுதியான உடல்மொழி அமையப்பெற்றிருப்பவர். பின்னணி இசையும் பாடல்களும் நிச்சயம் அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சர்யப்படுத்தும்.


பெரிய குறையாக இல்லாவிடினும் லேசா இது மாற்றிருக்கலாம் என தோன்றும் சமாச்சாரங்கள் மிகசில இடங்களில் நாயகனும், இளம் தென்றலை போன்ற கதையில் புகுத்தப்பட்ட க்ரைம் சமாச்சாரங்கள் மட்டுமே. ஆனால் வழிய புகுத்தியது போன்றில்லாமல் க்ரைம், கதையுடன் பயணிக்கும் படி அமைக்கபெற்ற உருவாக்கல் நன்று. இந்த இயக்குனரின் படங்களை தேடிபிடித்து பார்க்கும் ஆவல் நமக்கு தோன்ற வைத்ததே அவருக்கான மிகப்பெரும் வெற்றி.

Monday, May 22, 2017




பூர்ணா மலாவத், நிசாமாபாத் மாவட்டம், தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர்தான் மிக இளம்வயதில் (13 வயதில்) மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண். 25 மே 2014 வருடம் இந்த சாதனையை புரிந்தார். இவரது சாதனை மட்டுமின்றி இந்த 13 வருட வாழ்வில் மிக முக்கிய தருணங்களை கோர்வையாக பூச்சரம் போல் மிக அழகாக பதிவு செய்த வகையில் மிக முக்கிய சினிமா.  

     
இது போன்ற பயோகிராப்பிக் வகையறா கதைகள் பொதுவாக மிகபெரிய வெற்றியையோ, ரசிகனுக்கு பூர்ண திருப்தியை தராததற்கு முக்கிய காரணம். எந்த மிகபெரும் திருப்பங்களும், மயிர் கூச்சொறியும் சமாச்சாரங்கள் அவர்கள் வாழ்வினுள் இருந்தாலும் பார்வையாளன் பெரும்பாலானோர் அந்த நபரை பற்றியும், அவரது சாதனைகளை பற்றியும், ஏதோ ஒரு வகையில் துளியேனும் அறிந்துவைத்திருப்பதே அந்த சுவாரசிய குறைவுக்கு காரணம்.



அனால் இப்படத்தை பொறுத்தவரை பதிமூன்று வயதில் பெண்பிள்ளை இமயமலை அடைந்தது மிகபெரும் சாதனையாக நாமே நினைப்பதும், மலையேற்றம் பற்றிய கதைகள் இந்திய சினிமாவிற்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாததும். அதற்கான உண்மையான வழிமுறைகள், சட்டதிட்டங்கள், அராசாங்கத்தின் பங்கு என நூறு சதவீகித டீடைலிங்கை, அந்த குழந்தையின் தெளிந்த நீரோடை போன்ற வாழ்கையில் துளி கலங்களும் ஏற்படுத்தாமல் கலக்கும் படிஅமைத்த திரைக்கதை.  எந்த இடத்திலும் பார்வையாளனுக்கு CLIFF HANGER, VERTICAL LIMIT போன்ற சாகசங்களை ஏற்படுத்தாது. அனால் பூரண திருப்தியையும், மனமகிழ்வையும் தரும் என்பதில் ஐயமில்லை.


RAGUL BOSE (விஸ்வரூபத்தில் ஓமர் பாத்திரத்தில் நம்மை மிரட்டியவர்). இப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளது இந்த படத்திற்கு மேலும் சிறப்பு. இவர் வெறுமனே கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி டப்பாவை நிரப்பிகொள்ளும் சராசரி நடிகனல்ல. தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு மிகநேர்மையாக தனது பங்களிப்பை செய்ய கூடியவர். பெங்கால் மொழி படங்கள், ஆங்கில மேடை நாடகங்கள், சமூக சார்ந்த பல விடயங்களிலும் தனது பவுண்டேசன் மூலமாக பலவகைகளில் இயங்கிவருபவர்.

அதற்காக 2008 ல் IBN-ன் EMINENT CITIZEN JOURNALIST, 

2009 ல் YOUTH ICON AWARD FOR SOCIAL JUSTICE AND WELFARE,

2010  ல் GREEN GLOBE FOUNDATION AWARD for EXTRAORDINARY WORK BY A PUBLIC FIGURE, 

2012 ல்  Lt. GOVERNOR’S COMMENDATION AWARD FOR SERVICE TO ANDAMAN & NICOBAR ISLANDS. போன்ற விருதுகள் மட்டுமின்றி, 

1998ல் முதன்முதலாக INDIAN NATIONAL RUGBY TEAM TO PLAY IN AN INTERNATIONAL EVENT & THE ASIAN RUGBY FOOTBALL UNION CHAMPIONSHIP
இதன் இரண்டு வரலாற்று நிகழ்வுகளிலும் பங்குபெற்ற ஒரே வீரர். (பொதுவாக எந்த கலைஞனின் தனிப்பட்ட விசயங்களின் மேல் எனக்கு ஆர்வம் இருந்ததோ, அவ்வாறு தெரிந்த விசயங்களை பகிர்ந்ததோ கிடையாது. இவரை பிடிக்கும் என்பதை தாண்டி சமூகவிஷயங்களில் அவரது ஈடுபாடும், அவர் பெற்ற விருதுகளும் என்னை போலவே தங்களையும் ஆச்சர்யபடுத்தும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.)


நிஜ பூர்ணா மலாவத் இன்றும் வசிக்கும் அதே கிராமத்தில், அவள் ஆடு மேய்த்து கொன்றிருக்கும் வெளிகளில், இன்றும் +2 அவள் படித்து கொண்டிருக்கும் பள்ளிகளில் இப்படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகனை மேலும் கதையினுள் ஈர்த்துகொள்ள கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து இந்திய சினிமாக்களிலும் பயன்படுத்தப்படும் யுக்தி. இதிலும் எடிட்டிங், கேமரா என அனைத்து தொழில் நுட்பங்களிலும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு பார்வையாளனுக்கு மனதிற்கு அருகில் உணரசெய்துள்ளது.


வெறும் எவரெஸ்ட் மலையேற விரும்பும் அனைவரையும் அனுமதிக்கும் விசயமல்ல. அதற்கென தனியாக ஒரே துறையே செயல்படுவதும். எந்த மாநிலத்தவர் பங்குபெற அதற்கான தகுதியுடன்  சென்றாலும், அம்மாநில முதல்வரின் தனிப்பட்ட ஒப்புதல் கடிதம்  மற்றும் அந்த நபரின் குடும்பத்தாரின் ஒப்புதல் கடிதம் பெற்றபின்னே அனுமதிக்கப்படுவர். டார்ஜிலிங்கில் இதற்கான ஒரு மாத பயிற்சி. மலையேறும் ஒவ்வொரு 45 பவுண்ட் எடையுள்ள உபகரணங்கள் கூடவே சுமந்து செல்லவேண்டும். அதற்காக அந்த ஒரு மாத பயிற்சி நேரம் முழுவதும் அதே எடையுள்ள உபகரணங்களை சுமந்தே இருக்க வேண்டும். செல்பவர் எந்த மாநிலத்தவராக இருப்பினும் ஒவ்வொருவரும் ருபாய் 34 லட்சத்திற்கான காசோலையை இந்த துறைக்கு செலுத்திய பின்னே அனுமதிக்கப்படுவர். விபத்து, பணி சரிவு என ஏதேனும் ஒரு வகையில் செல்பவர் மரணமடைந்தால் அவர்களது உடல் கண்டிப்பாக அவர்கள் குடும்பத்திற்கோ, அவர்களது மாநில அரசாங்கத்திற்கோ ஒப்படைக்க படமாட்டாது. வெளிநாட்டவராயினும் இதே விதிமுறையே. இப்படி படம் முழுக்க நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் கொட்டிகிடக்கும் தகவல் கருவூலம் இப்படம்.  




ராகுல் போஸ் அனைத்து பாத்திரங்களுக்கும் தேர்வு செய்த நடிகர்களும், மற்றும் அவர்களிடத்தில் இவர் வெளிகொண்டு வந்த OUT PUT ம் அந்த நடிகர்களின் மற்ற படங்களை வைத்து ஒப்பீடு செய்து பார்த்தால் இயக்குனராகவும் இவரின் மேல் நமக்கு மிகபெரும் மதிப்பு உண்டாகும் என்பதில் மாற்று கருத்தில்லை.   

Wednesday, May 10, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 110.

கிட்டத்தட்ட திருமணத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு பின் குடும்பம் குழந்தைகள், வேலை என்றிருக்கும் ஒரு நாற்பத்தைந்து வயது குடும்பத்தலைவன். எதன்மீதும் ஈடுபாடில்லாமல் தன்னுள் முழுக்க பரவியுள்ள வெறுமையும், திடிரென வேறொரு பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பும். தான் எந்த புள்ளியிலிருந்து இவ்வாறு மாற தொடங்கினேன் + இதற்கான மாற்று என்ன என்பதற்கான அவனது உளவியல் ரீதியான தேடலே இப்படம்.






உளவியல்னு சொன்னவுடன், அய்யோ!! “பேசியே சாகடிப்பாங்கனு பயந்து ஓடிடாதிங்க. அவரோட மாற்றங்கள குட்டி குட்டி காட்சிவழியாவும், அழகழகான வசனங்களின் மூலமாவும் அருமையா கொண்டுபோயிறுக்காங்க. 


இதே போன்ற குடும்ப உறவுகளை மையமாக கொண்ட படத்தில் சமீபமா நிவின் & துல்கர் இருவருமே நடிச்சிருந்தாங்க. பிரமாதமான ஒரு படத்தை  இழுத்துகொண்டு செல்வது (நல்ல படத்தை எந்த நாயகனும் இழுக்கவே தேவையில்லை விட்டு பாருங்க அதே போகும்.) மட்டும் ஒரு நாயகனோட கடமை இல்லை. இதுபோன்ற மிக எளிய   கதையை ஒரு மிகபெரும் அனுபவமா பார்வையாளர்களுக்கு மாற்றிதர இந்த நாயகன் எப்படி முயற்சி பண்ணிருக்கார்னு பாருங்க.


அவரது பிள்ளைகளிடமே பெரிதாக எந்த பேச்சுவார்த்தையும் வைத்து கொள்ளாமல் இருப்பது. மனைவி (மீனா) எந்த நேரமும் தொலைக்காட்சியில் மட்டுமே நேரம் செலவிடுவதாக குத்திகாட்டியே பேசுவது. “யார கேட்டு என் சரக்கில் சோடா கலந்திங்கன்னு” கீழே ஊற்றுவது என நண்பர்களிடம் கூட சிடுசிடுக்கும் பாத்திரத்தில் வழக்கம் போல் மோகன்லால் மிக இயல்பா பொருந்திபோகிறார்.


“உன்னோட முடி மட்டும் நரைச்சு போகல, நீயும்தான்! – இது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின் கல்லுரி FRIENDS MEET இல் சந்திக்கும் லாலின் முன்னால் காதலி கூறும் வசனம்.

“இவ்வளவு நாள் இந்த வீட்ல தனிமைல இந்த வாழ்க்கை நரகம்னுதான் நெனச்சேன்.” ஆனா, இங்க பக்கத்துலதான் சொர்கமே இருப்பது தெரியாம இருந்திருக்கேன். – இது லால் மனம்மாறியபின் அவர் தோளில் சாய்ந்து அவர் மனைவி கூறுவது.

“எங்க அப்பா உனக்கு யார் மேலாவது விருப்பம், காதல் இதுபோல ஏதாவது இருக்கானு கேட்டிருக்கார்.” ஆனா, இல்லன்னு அப்ப போய் சொல்லிட்டேன். இப்ப அந்த பொய்ய உண்மையாக்க வந்திருக்கேன்னு. – இது லால் மகள் அவரை விரும்புவனிடம் கூறுவது.

“நீ சந்தோசமா இருக்கியானு? ஒரு முறை கூட என் கணவர் என்னிடம் கேட்டதேயில்லை.” நீங்களாவது உங்க மனைவியிடம் கேட்டு இருக்கிங்களா? – இது லால் அவரை பெரிதும் ஈர்த்த பெண் அவரிடம் கேட்பது. 

இதும் போக உம்மணா மூஞ்சி டூ சமத்து பையனு லால் அனைவரிடமும் பழகும் விதத்தில் வேறுபாடு காட்டினாலும், உடன் பணிபுரியும் அவர் மீது காதலுடனே சுற்றும் ஒரு பெண் பாத்திரம். வசனங்களே இல்லாமல் வெறும் முகபாவத்திலே நம்மை கொல்லும்  ஒரு ப்ளாக் பாரெஸ்ட் கேக். இப்படி முழுக்க ஈர்க்கும் பெண்களாலும்,  அழகழகான வசனங்களாலும் நம்மை கதையுடன் வெகுஇயல்பாக லயிக்க வைக்கும் படம். 

இந்த பெண் பாத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு லால் கூறும் பதிலே இந்த கதைக்கான உயிர்நாடி. தனக்கான அனைத்து வசனங்களை மட்டுமின்றி, இந்த கதைக்காக தனியே ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துள்ளார்.



லாலின் நண்பர்கள், அவர்கள் குடும்ப உறுபினர்களுக்கிடையேயான பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்வதெல்லாம் குட்டி குட்டி கதையா அழகா, நகைச்சுவையா பண்ணிருக்காங்க.     

Search This Blog